Wednesday, February 27, 2013

பட்ஜெட் என்ற யானையின் மணி ஓசை



ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன் பொருளாதார கணக்கெடுப்பு அறிக்கை ஒன்றை மத்திய அரசு மக்களவையில் தாக்கல் செய்யும். பட்ஜெட்டில் என்னென்ன இடம்பெறப்போகிறது என்பதற்கான முன்னோட்டமாகவும் அதைக் கருதலாம். நாளை ( 28.02.2013) பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் பொருளாதார அறிக்கையை மத்திய அரசு இன்று தாக்கல் செய்திருக்கிறது. மானியங்களைப் பெருமளவுக்கு குறைக்கவேண்டும் என்ற ஆலோசனையை அந்த அறிக்கை வலியுறுத்தியிருக்கிறது.இது புதிய விஷயமல்ல . ஏற்கனவே எரிபொருள் மானியம் குறைக்கப்பட்டு வருகிறது. அதனால் பெட்ரோல் டீசல் விலை அவ்வப்போது ஏறிக்கொண்டே இருப்பதைப் பார்க்கிறோம். அதன் காரணமாக அத்தியாவசியப் பண்டங்களின் விலை அதிகரித்து பணவீக்கம் கூடிக்கொண்டிருக்கிறது.இந்த நிலையில் மானியங்களை மேலும் குறைக்கவேண்டும் என்ற ஆலோசனை எங்கு போய்  முடியுமோ என்ற அச்சத்தைத்தான் ஏற்படுத்துகிறது.

" பொருளாதார வளர்ச்சி என்பது முக்கியம்தான் என்றாலும் அது தன்னளவில் முடிந்துபோகும் ஒன்றல்ல" எனக் குறிப்பிட்டிருக்கும் பொருளாதாரக் கணக்கெடுப்பு அறிக்கை ' துரிதமான, தொடர்ச்சியான , அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய வளர்ச்சியாக ' அது இருக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டியிருக்கிறது. சமூக சேவைகளுக்கு ஒதுக்கப்படும் நிதி கணிசமாக அதிகரிக்கப்பட்டு வருவதை அந்த அறிக்கை 'பெருமிதத்தோடு' சுட்டிக்காட்டுகிறது. குறிப்பாக கல்விக்கும், சுகாதாரத்துக்கும் அதிக நிதி ஒதுக்கப்படுகிறதென அது குறிப்பிடுகிறது. மொத்த ஜி.டி .பி யில் 2007-08 ஆம் ஆண்டில் 5.9% ஆக இருந்த இந்த ஒதுக்கீடு 201-13 இல் 7.1% ஆக உயர்ந்திருக்கிறதாம். இந்த அறிக்கையின் மோசடித்தனத்துக்கு இதுவே ஒரு உதாரணம். சுகாதாரத் துறைக்கு ஜி.டி .பி யில் 2% ஒதுக்கவேண்டும் என்று பலகாலமாக கோரிக்கைவிடப்பட்டு வருகிறது. 2011-12 ஆண்டு பட்ஜெட்டில்  அது 0.29% ஆக மட்டுமே இருந்தது. உலகிலேயே சுகாதாரத் துறைக்கு மிகக்குறைவாக நிதி ஒதுக்கும்  நாடு இந்தியாதான் . ஒரு நபருக்கு இரண்டாயிரம் ரூபாய் என்ற அளவில்தான் நிதி ஒதுக்கப்படுகிறது. நாம் மிகவும் விமர்சிக்கிற இலங்கை சுமார் ஐந்தாயிரம் ஒதுக்குகிறது. நாம் போட்டியாகக் கருதுகிற சீனாவோ சுமார் வ்ட்டாயிரம் ரூபாய் ஒதுக்குகிறது. தாய்லாந்தில் அது 13 ஆயிரமாக இருக்கிறது. இந்தக் கேவலமான நிலையில் நாம் சமூக சேவைப் பிரிவுக்கு அதிக நிதி ஒதுக்கியிருப்பதாகச் சொல்வது எத்தனை பெரிய பொய்!

கல்வியைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். கல்விக்காக மத்திய வரிகளில் விதிக்கப்படும் மூன்று சதவீத கூடுதல் வரியை ஒழுங்காக செலவிட்டாலே போதும்  எவ்வளவோ முன்னேற்றம் நடந்திருக்கும். அந்தப் பணமெல்லாம் எங்கு போகிறது என்பது அமைச்சர் சிதம்பரத்துக்கே வெளிச்சம். கல்விக்கு ஜி.டி .பி யில் குறைந்தபட்சம் 6%ஆவது ஒதுக்கவேண்டும் எனக் கேட்கப்பட்டுவந்தாலும் இதுவரை 4% கூட ஒதுக்கவில்லை. மத்திய அரசின் சர்வ சிக்ஷா அபியான் திட்டம் மிகப்பெரிய தோல்வி என்பதை எந்தவொரு பள்ளிக்குச் சென்று பார்த்தாலும் தெரிந்துகொள்ள முடியும்.ஆண்டுதோறும் வெளியாகும் ASER அறிக்கைகள் இதற்கான சான்றுகள்

ஏழ்மை குறித்து இந்த அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் விஷயமும் விவாதத்துக்குரியது. டெண்டுல்கர் கமிட்டி பரிந்துரைத்த அளவுகொகோல்களின்படி 2004-05 இல் நாட்டின் மக்கள் தொகையில் 37.2% பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்கிறார்கள் என மதிப்பிடப்பட்டது. அது 2009-10 இல் 29.8% ஆகக் குறைந்துவிட்டதாம். அதாவது சுமார் ஐந்தேகால் கோடி பேர் வறுமையிலிருந்து விடுபட்டுவிட்டார்களாம் .என்னவொரு மாஜிக் இது! ஐந்து வருடங்களில் ஐந்து கோடி பேர் வறுமையிலிருந்து விடுபடுவதேன்றால் ஆண்டுக்கு ஒருகோடி பேர் எனக் கணக்கு வருகிறது. இந்த கணக்கின்படியே பார்த்தாலும்கூட வறுமையை முற்றாக ஒழிக்க இன்னும் முப்பது வருடங்களுக்கு மேல்  ஆகும்.
   
 உணவுப் பொருட்களின் விலை உயர்வின் காரணமாக பணவீக்கம் அதிகரித்துவருவதாக இந்த அறிக்கை சொல்கிறது. இந்த ஆண்டு நாட்டின் பல மாநிலங்களையும் கடுமையான வறட்சி பாதித்திருக்கிறது. அதனால்  பெருமளவு  தெரிகிறது எனவே இந்த பணவீக்கம் மேலும் அதிகரிக்கவே செய்யும். அது மேலும் விளைஎற்றத்திலும் வறுமையிலும் சென்றே முடியும். இத்தகைய சூழலில் மானியங்களைக் குறைக்கலாம் எனச் சொல்வது  இந்தியாவில் இருக்கும் ஏழை எளிய மக்களை மேலும் இக்கட்டில் ஆழ்த்தவே வகைசெய்யும்.

நேற்று(26.02.2013) டெல்லியிலிருந்து அவுட்லுக் பத்திரிகையின் நிருபர் என்னைத் தொடர்புகொண்டு பேசினார். ப.சிதம்பரம் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டால் அதை நீங்கள் ஏற்பீர்களா என்று அபிப்ராயம் கேட்டார். " தமிழ்நாட்டிலிருந்து எவர் ஒருவர் பிரதமராக வந்தாலும் அதை நான் வரவேற்பேன். ஏனென்றால் பிரதமர் சார்ந்திருக்கும் மாநிலத்துக்குக் கூடுதலாக நிதி ஒதுக்கீடு கிடைக்கும் என்ற நிலை உள்ளது . திரு ப.சிதம்பரம் அவர்கள் தமிழ்நாட்டில் இருக்கும் காங்கிரஸ் தலைவர்களில் சிறந்தவர், திறமையானவர்.நல்ல பேச்சாளர் . அவர் நிதி அமைச்சராக எப்படி செயல்பட்டார் எனக் கேட்டால், அவரது அணுகுமுறை  மத்தியதர வர்க்கத்தைப் பிழிந்தெடுப்பதாக இருந்தது,  அடித்தட்டு மக்களை மேலும் எழைகளாக்கியது.மேல்தட்டு வர்க்கத்துக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் உதவி செய்தது" என்று நான் சொன்னேன்.ஐக்கிய முற்போக்கு கூட்டணி-2 அரசில்  நிதி அமைச்சராக திரு ப.சிதம்பரம் சமர்ப்பிக்கும் முழுமையான கடைசி பட்ஜெட் இது. அவரது பட்ஜெட் எந்தவிதத்திலும் மக்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கப்போவதில்லை என்பதற்கான மூன்று  முன்னறிவிப்புகள் வந்துவிட்டன: ஓன்று, குடியரசுத் தலைவர் உரை, இரண்டு ரயில்வே பட்ஜெட், மூன்றாவது , பொருளாதார கணக்கெடுப்பு அறிக்கை.

No comments:

Post a Comment