பெரு நிலம்:
மண்ணடுக்குகள் பற்றிய அறிமுகம்
பூண்டும் புராணிகமும்
நீரும் இல்லும் சேர்த்துப்
பொத்தப்பட்ட
பெரு நகரத்திற்குக் கீழே
பகலிரா ஓயா
தெருக்களும் கிளைகளும் மொய்த்துப்
பரவி
சனங்கள் நெரிந்து
வாகனங்கள் விரையுமொரு நிலப்பரப்பிற்கு
இன்னும் கீழே
கீழிறங்கிப் போனால்
சாம்பரால் ஆன வெம்மையடங்காவொரு
புயற்பரப்பு
நீங்கி
மேலும் நடந்து கீழிறங்கிப்போனால்
அழுகையும், கதறலும் பரவியொட்டிய
ஒலியடுக்கு
அதற்கும் கீழே
முடிவடையாத குருதியால் ஒரு
திரவப் படுக்கை
அதற்கும் கீழே
கெட்டிபட்டு முள்ளடர்ந்து மண்டிய
நினைவடுக்கு
அதற்குக் கீழே
மரங்களின் வேர்களும் முட்டாதவொரு
மௌனப்பரப்பு
நீங்கி இன்னும் மேல்
நடந்து
கீழிறங்கினால்
ஒரு முதிய பெண்
காலங்களை விரித்தெறிந்த தோலாசனத்தின்
மீதொரு
துறவிப் பெண்
பங்குனி 2010
No comments:
Post a Comment