20.02.2013 அன்று காலை 10 மணி- வீரப்பன் கூட்டாளிகள் எனக் குற்றம்சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு தமிழர்களின் வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரப்போவது பற்றியே சிந்தனையாக இருந்தது. பீப்பிள்ஸ் வாட்ச் நிறுவனத்தின் இயக்குனர் ஹென்றி திபேன் அவர்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு விசாரித்தேன். தற்காலிகமாக விதிக்கப்பட்டிருக்கும் தடையை இன்று உச்சநீதிமன்றம் நீட்டிக்கும் என உறுதியாகக் கூறினார்.
தூக்கு தண்டனையால் பயமுறுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் அந்த நான்கு தமிழர்களை விடுதலை செய்யவேண்டுமென்பதற்காகவும், ஐ.நா.மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக இந்தியாவே தீர்மானம் கொண்டுவரவேண்டும் என்பதற்காகவும் எங்களது கட்சி சார்பில் சென்னை,வள்ளுவர் கோட்டம் அருகில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்காக நான் சென்னைக்குப் போயிருந்தேன். வேளச்சேரியில் இருக்கும் எங்களது கட்சி அலுவலகத்துக்குள் நுழைந்தபோது அங்கு பலர் எங்கள் கட்சியின் தலைவரைச் சந்திப்பதற்காக வந்திருந்தனர். அந்தக் கூட்டத்தில் சிலர் தனியே ஒரு குழுவாக நின்றிருந்தனர்.அவர்களை கறுப்பு சட்டை அணிந்த ஒருவர் அழைத்து வந்திருந்தார். அவர் தன்னை ஜூலியஸ் என்று அறிமுகப்படுத்திக்கொண்டார்.அவரோடு வந்திருந்த பெண்கள் அனைவரும் வீரப்பன் கூட்டாளிகள் என குற்றம் சாட்டப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் அந்த நான்கு தமிழர்களின் மனைவி, மக்கள் எனத் தெரிந்தது.
வீரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரில் தமிழ்ப் பெண்களுக்கு தமிழக, கர்னாடக காவல்துறையினர் செய்த கொடுமைகளை அவர்கள் விவரித்தபோது இலங்கையில் நடந்த கொடுமைகளே நினைவுக்கு வந்தன. ஒர்க்ஷாப் என்ற பெயரில் இருந்த வதைக்கூடத்தில் பெண்களின் பிறப்புறுப்பில் வயரை இணைத்து மின் அதிர்ச்சி கொடுக்கப்பட்டதையும், மகளை தகப்பனைவிட்டும், தாயை மகனைவிட்டும் புணரச்செய்து காவல்துறையினர் பார்த்து ரசித்த கொடுமைகளையும் தமிழ்ச் சமூகம் வசதியாக மறந்துவிட்டது. இங்கே நடந்த அநியாயங்களைப் பார்த்தும் பாராதிருந்த தமிழர்கள் ஈழத் தமிழர்களுக்காகக் கண்ணீர்வடிப்பதைப் பார்க்கும்போது ஊடகங்களின் மாயவித்தை புரிகிறது. தமிழ்நாட்டில் தமிழர்களைக் கொன்று,தமிழ்ப் பெண்களை சீரழித்த காவலர்களுக்குப் பதவி உயர்வு கொடுக்கப்பட்டது.படு பாதகம் செய்தவர்களைக் கௌரவித்தவர்கள் ஈழத் தமிழர்களுக்கு எந்தவகையில் உதவப்போகிறார்கள்?
No comments:
Post a Comment