Tuesday, February 19, 2013

நான்கு தமிழர்களின் தூக்கு : கர்நாடக அரசு நினைத்தால் காப்பாற்றலாம்





வீரப்பனின் கூட்டாளிகள் என்ற குற்றச்சாட்டின் பேரில் மரணதண்டனை விதிக்கப்பட்ட நான்கு தமிழர்கள் இப்போது கர்நாடக மாநிலம் பெல்காமில் இருக்கும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களது தூக்கு தண்டனையை உச்ச நீதி மன்றம் புதன் கிழமை வரை ( 20.02.2013) தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறது. தங்களது உயிர் எப்போது பறிபோகுமோ என்ற அச்சத்தில் அவர்கள் பரிதவிக்கிறார்கள்.

கால தாமதம் என்ற காரணத்தை உச்ச நீதிமன்றம் ஏற்குமெ ன்றால் அது ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்படிருப்பவர்களுக்கும் பொருந்தும். பஞ்சாப் முதல்வராயிருந்த பியந்த் சிங் கொலைக் குற்றவாளிகளுக்கும் பொருந்தும். மரணக் கொட்டடியில் காத்திருக்கும் இன்னும் பலருக்கும்கூடப் பொருந்தக்கூடும். 

உச்ச நீதிமன்றம் ஒருவேளை தடையை நாளை நீக்குவதுபோல இருந்தால் மனுவைப் பின்வாங்கிக்கொண்டு உயர்நீதிமன்றத்தில் புதிதாக மனு செய்வதுதான்  ஒரே வழி. இதனிடையில் இன்னொரு வழியையும் முயற்சித்துப் பார்க்கலாம். கர்நாடக மாநில அரசு நினைத்தால் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மரணதண்டனையை குறைக்கும்படி மாநில ஆளுநருக்குப் பரிந்துரைக்க முடியும். அதன அடிப்படையில் ஆளுநர் மரண தண்ட னையை ரத்து செய்ய முடியும். எனவே , மரண தண்ட னையை ரத்து செய்யவேண்டும் என்ற  கோரிக்கையை முன்வைத்து கர்நாடக அரசை அணுகலாம். மரணதண்டனை விதிக்கப்பட்டு பாகிஸ்தான் சிறையில் இருக்கும் இந்திய கைதியின் தண்டனையைக் குறைக்கவேண்டும் என நாம் பாகிஸ்தான் அரசைக் கேட்கும்போது கர்நாடக மாநில அரசிடம் முறையிடுவதில் தவறில்லை. 

அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 72 மற்றும் 161 ஆகியவற்றின்கீழ் மரணதண்டனையை ரத்து செய்வதற்கான அதிகாரம் மாநில ஆளுநருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. " ஒரு மாநில ஆளுநர், எந்தக் குற்றத்துக்காகவும்  ஒருவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யவோ, குறைக்கவோ,நிறுத்தி வைக்கவோ  அதிகாரம் படைத்தவராவார். " என அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 161 தெளிவாகக் கூறுகிறது. 


அந்த அதிகாரத்தை அரசாங்க ஆணைகளோ , அரசுகள் இயற்றும் சட்டங்களோ கட்டுப்படுத்த முடியாது என உச்சநீதிமன்றம் 2003 ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பு ஒன்றில் தெளிவுபடுத்தியிருக்கிறது. (Supreme Court in `State (Govt. of NCT Delhi) v Premraj (2003(7) SCC 121). அதற்கு முன் 1990 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பில்  (State of Punjab v Joginder Singh, 1990 (2) SCC 661. ) சட்டத்தினால்கூட இந்த அதிகாரத்தைத் தடுக்க முடியாது எனக் கூறப்பட்டிருக்கிறது. 


அரசியலமைப்புச் சட்டம்  மட்டுமின்றி இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 54 ம், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 433 ம் கூட மரண தண்டனையைக் குறைக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கியுள்ளன. இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி கர்நாடக மாநில அரசு நான்கு தமிழர்களின் மரண தண்டனையை ரத்து செய்யவேண்டும். இந்தக் கோரிக்கையைத் தமிழ்நாட்டில் இருக்கும் அரசியல் கட்சிகளும் தமிழ்த் தேசிய அமைப்புகளும் எழுப்புவதற்கு முன்வரவேண்டும். 

No comments:

Post a Comment