Friday, February 8, 2013

உளுவை உயிர்





தை மாத மண்தரையாய்
குளிர்ந்திருந்த என்னுயிரில்
கொள்ளிக் கண்ணாலே
கொதிப்பேற்றிப் போய்விட்டாய்

எலிவளையின் தானியமாய்
இப்போதும் உன் நினைப்பு
புதுசாய் இருக்கிறது
பொங்கல்வைக்க அள்ளிப்போ

கழுவிய பின்னாலும்
கையில் படிந்திருக்கும்
ரசத்தின் வாசனைபோல் 
மணக்கிறது உன் நினைவு

மல்லியும் புதினாவும்
வாசிக்கும் என்றறிவேன்
வார்த்தை கமகமக்கும்
வரத்தை நீ எங்கு பெற்றாய்?

நிலவு குளிக்கையிலே
நீரெல்லாம் தகதகக்கும்
நினைவு விழுந்ததனால்
முகமெங்கும் ஒளி கசியும்

உளுவை பிடிப்பதற்கு
தூண்டில்கள் தேவையில்லை
உனக்காகத் தவித்திருக்கும்
உயிருனக்குத் தெரியலையா? 

- ரவிக்குமார்

No comments:

Post a Comment