ஆசிட் தாக்குதலுக்கு ஆளான வித்யா இறந்த செய்தியை இன்று காலை ஆறு மணிக்கு ஊடக நண்பர் ஒருவரின் குறுந்தகவல் சொல்லியது. சில நாட்களுக்கு முன்னர் இப்படியான தாக்குதலில் உயிரிழந்த வினோதினியை நினைத்துக்கொண்டேன். அவருக்குக் கிடைத்த ஊடக கவனம் வித்யாவுக்குக் கிடைக்கவில்லை. வர்மா கமிட்டி அறிக்கை ஏற்படுத்தியிருந்த தாக்கம் இப்போது குறைந்துவிட்டது என்பது ஒரு காரணம். அதைவிடவும் முதன்மையான காரணம் வித்யா ஒரு தலித்.
வினோதினி வழக்கில் பாதிக்கப்பட்டவரும் குற்றமிழைத்தவரும் ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள். வித்யா வழக்கில் அப்படி அல்ல. வித்யா தலித், ஆசிட் வீசிய இளைஞர் வன்னியர். அதனால்தான் ஊடகங்கள்கூட இதில் அவ்வளவாக அக்கறை செலுத்தவில்லையோ என்று எண்ணத்தோன்றுகிறது.
வித்யா வன்னியராக இருந்து ஆசிட் ஊற்றியவர் தலித்தாக இருந்திருந்தால் மீடியா இப்படி மௌனம் காத்திருக்குமா? என்ற கேள்வியை நமக்கு நாமே கேட்டுக்கொள்ளவேண்டும்.
எல்லா கட்சிகளும் மகளிர் அமைப்புகளை வைத்திருந்தாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பான அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மட்டும்தான் தீவிரமாக செயல்படும் அமைப்பாக இருக்கிறது. தலித் பெண்களுக்கான பிரச்சனைகள் வேறுபட்டவை அவர்களுக்கென தனியே அமைப்பு தேவை என நீண்டகாலமாக பேசப்படுகிறது. ஆனால் குறிப்பிடும்படியான தலித் மகளிர் அமைப்பு எதுவும் இல்லை.
வித்யாவின் மரணம் ஆற்றல் மிக்க தலித் மகளிர் அமைப்பின் தேவையை வலியுறுத்துகிறது, கருத்தியல் தளத்தில் அதற்கான விவாதம் நடத்தப்படவேண்டும் என்பதை சுட்டிக்காட்டுகிறது.
No comments:
Post a Comment