Thursday, March 14, 2013

ஈழப் பிரச்சனை: இந்தியாவின் துரோகத்துக்கு இன்னுமொரு சான்று


இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமைப் பேரவையில் கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்தின் மூன்றாவது வரைவு வெளியாகியிருக்கிறது. சுயேச்சையான சர்வதேச விசாரணை குறித்து அதில் ஒரு வார்த்தையும் இடம்பெறவில்லை.இந்தத் தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்தது மட்டுமின்றி  அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலின் 25 ஆவது கூட்டத்தில் இலங்கை குறித்த சிறப்பு விவாதம் நடத்தப்படவேண்டும் என்ற வாசகமும்கூட சீனா,ரஷ்யா,க்யூபா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் நிர்பந்தத்தால் நீக்கப்பட்டிருக்கிறது. தற்போது வெளியாகியிருக்கும் தீர்மானம் இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களைப் பற்றியும் பேசவில்லை, சர்வதேச விசாரணை குறித்தும் பேசவில்லை. மொத்தத்தில் இலங்கைக்கு மேலும் கால அவகாசம் தருவதாகவே அது அமைந்திருக்கிறது.

இந்த வரைவுத் தீர்மானத்தின்மீது விவாதம் நடைபெற்றபோது அங்கு இந்தியப் பிரதிநிதி இருந்தாலும் அவர் வாய் திறக்கவில்லை. நாடாளுமன்றத்தில் இந்தியப் பிரதமர் வாய் கிழியப் பேசிய 13 ஆவது திருத்தம் தொடர்பாகவோ, அரசியல் தீர்வு குறித்தோ கூட இந்தியப் பிரதிநிதி எந்தவொரு கருத்தையும் சொல்லவில்லை. பிரதமரும் காங்கிரஸ்காரர்களும் பேசுகிற பேச்சுகள் நம்மை ஏமாற்றுவதற்குத்தான் என்பது அம்பலப்பட்டுப் போயிருக்கிறது. இலங்கையைக் காப்பாற்ற இந்திய அரசு இம்முறையும் கியூபாவைப் பயன் படுத்திக் கொண்டிருக்கிறது என்றே கருதவேண்டியிருக்கிறது.

அமெரிக்க தீர்மானத்தை இந்தியா  ஆதரிக்கவேண்டும் என்று முன்னர் கூறினோம். முதல் வரைவு வெளியானதும் அதன் நீர்த்துப்போன தன்மையைப் புரிந்துகொண்டு அமெரிக்க தீர்மானத்தில் இந்தியா திருத்தம் கொண்டுவந்து நிறைவேற்றவேண்டும் என்று குரல் கொடுத்தோம். ஆனால் , எதுவும் நடக்கவில்லை. இப்போது வெளியாகியிருக்கும் எந்தவொரு பிரயோஜனமும் இல்லாத நீர்த்துப்போன தீர்மானத்தை ஆதரிப்பதில் இந்தியாவுக்கு எந்த சிக்கலும் இருக்கப்போவதில்லை. அது தனது ஆதரவை அறிவிக்கக்கூடும். 'ஆதரிக்கச் சொன்னீர்கள், ஆதரித்துவிட்டோம் ' என்ற விதத்தில் காங்கிரஸ்காரர்களும் வாதிடக்கூடும்.அது எல்லாமே அவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு வைத்திருந்த  நாடகம்தான் .

ஈழப் பிரச்சனையில் இந்தியாவின் துரோகத்துக்கு இன்னுமொரு சான்றுதான் இந்தத் தீர்மானம். ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலின் கூட்டம் மார்ச் 22 ஆம் தேதி முடியப்போகிறது. சர்வதேச அளவில் இந்தப் பிரச்சனை குறித்து உருவான கவனம் அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவிடும். 2013 நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டை அங்கே நடத்தக்கூடாது என்ற பிரச்சாரம் அதன்பின் சூடுபிடிக்கக்கூடும். தற்போதே அதுகுறித்துப் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் கருத்து தெரிவித்து வருகின்றன. வழக்கம்போல இந்தியா மௌனம் காத்துவருகிறது.

No comments:

Post a Comment