Monday, March 4, 2013

ஜெனீவா மாநாடு : அமெரிக்க தீர்மானத்தின் வரைவு





( ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐநா மனித உரிமைகள் குழுவின் மாநாட்டில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா சமர்ப்பிக்கவுள்ள தீர்மானத்தின்  வரைவு - http://www.srilankabrief.org/2013/02/first-draft-of-us-resolution-promoting.html?m=1 என்ற 
இணையதள முகவரியில் வெளியிடப்பட்டிருக்கும் ஆங்கில வரைவின் தமிழாக்கம் : ரவிக்குமார் ) 



ஐ.நா மனித உரிமைக் குழு

ஐ.நா பேரவையின் அறிக்கையின் வழிகாட்டுதலின்படியும்,சர்வதேச மனித உரிமைகள் குறித்த அதன் பிரேரணைக்கு ஏற்பவும், அது தொடர்பிலான இன்னபிற சர்வதேச ஒப்பந்தங்களுக்கேற்பவும்,

இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்பேற்றலுக்கான ஐநா மனித உரிமைகள் குழுவின் தீர்மானம் 19/2 ஐ நினைவுகூர்ந்து , தனது குடிமக்களின் சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதும் உத்தரவாதப்படுத்துவதும்  இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பு என்ற நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தி ,

இலங்கை அரசின் தேசிய செயல் திட்டம் மற்றும் எல்.எல்.ஆர்.சி பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பான அதன் வாக்குறுதிகளை கவனத்தில்கொண்டு,

தேசிய செயல் திட்டம் என்பது எல்.எல்.ஆர்.சியின் எல்லாவிதமான பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்துவதில் போதிய அக்கறைகாட்டவில்லை என்பதைக் கவலையோடு சுட்டிக்காட்டி,

சட்டத்துக்கு விரோதமான கொலைகள், திட்டமிட்ட முறையிலான ஆள் கடத்தல்கள் முதலானவை குறித்த நம்பகமான விசாரணையை மேற்கொள்ளுதல்; இலங்கையின்  வடக்குப் பிரதேசத்திலிருந்து ராணுவத்தை முற்றாக விலக்கிக்கொள்வது; நிலங்கள் தொடர்பிலான புகார்கள் குறித்த நடுநிலையான விசாரணையை மேற்கொள்வது; தடுப்புக்காவல் சட்டங்கள் குறித்து மீளாய்வுசெய்வது; முன்னர் சுதந்திரமானவையாக இருந்த சிவில் நிர்வாக அமைப்புகளை பலப்படுத்துவது; மாகாணங்களுக்கு அதிகாஅரங்களைப் பகிர்ந்தளிப்பதற்கன அரசியல் தீர்வைக் காண்பது; அனைத்துத் தரப்பினருக்கும் பேச்சுரிமை உள்ளிட்ட அனைத்து அடிப்படை உரிமைகளையும் பாதுகாப்பதற்கான சட்டங்களை வலுப்படுத்துவது உள்ளிட்ட எல்.எல்.ஆர்.சி அறிக்கையில் இடம்பெற்றிருக்கும்  உருப்படியான பரிந்துரைகளைக் கவனப்படுத்தி,

அதேசமயத்தில் தேசிய செயல் திட்டமோ எல்.எல்.ஆர்.சி யோ இலங்கையில் சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டன என்ற குற்றச்சாட்டு குறித்துப் போதுமான அளவில் அக்கறைகாட்டவில்லை என்பதைக் கவலையோடு சுட்டிக்காட்டி,
இலங்கையில்  மனித உரிமைகள் மீறப்படுவது தொடர்பாகவும், சட்டத்தின் ஆட்சிக்கும், நீதித்துறையின் சுதந்திரத்துக்கும் ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல் தொடர்பாகவும், மாகாணங்களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை இலங்கை அரசு தொடர்ந்து மீறிவருவது தொடர்பாகவும்  தொடர்ந்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளைப் பற்றிக் கவலை தெரிவித்து,

1) ஐ.நா. மனிதவுரிமைகள் குழுவின் ஆனையர் அளித்திருக்கும் இலங்கை தொடர்பான அறிக்கையை இந்தத் தீர்மானம் வரவேற்கிறது.

2) எல்.எல்.ஆர்.சி யின் உருப்படியான பரிந்துரைகளை விரைவாகச் செயற்படுத்துதல், இலங்கையின் அனைத்துக் குடிமக்களுக்கும் நீதி, சமத்துவம், நல்லிணக்கம், பொறுப்பேற்பு ஆகியவற்றை உறுதிசெய்வதற்கான சட்டரீதியான நடைமுறைகளை ஏற்படுத்துதல் தொடர்பாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட நிலைப்பாட்ட இத்தீர்மானம் மறுபடியும் வலியுறுத்துகிறது.

3) மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள்,பேச்சுரிமை,கூடுவதற்கான உரிமை,சட்டவிரோதமான தன்னிச்சையான கொலைகள், திட்டமிட்டமுறையிலான ஆள்கடத்தல்  ஆகியவை தொடர்பான ஐ. நா குழுக்களின் சிறப்பு அலுவலர்கள் இலங்கைக்குத் தடையின்றி  வந்து ஆய்வுகளை நடத்த இலங்கை அரசு அனுமதிக்கவேண்டும் என இத்தீர்மானம் வலியுறுத்துகிறது

4) மேற்சொன்ன பரிந்துரைகளை நிறைவேற்றுவதில் இலங்கை அரசோடு கலந்தாலோசனை செய்து அதன் ஒப்புதல் பெற்று ஐ.நா  மனித உரிமைகள் ஆணையர் மற்றும் அவரையொத்த அதிகாரம் கொண்ட பிற அமைப்பினர் இலங்கை அரசுக்கு உதவிட வேண்டும் என இத்தீர்மானம் வலியுறுத்துகிறது.  

5) ஐ.நா மனித உரிமைகள் குழுவின் ஆணையர் மற்றும் அவரையொத்த அதிகாரம் கொண்ட பிற அமைப்பினர்,  இலங்கையில் சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டிருப்பது தொடர்பாகவும், நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் குறித்து இலங்கை அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஐ.நா மனித உரிமைகள் குழுவின் இருபத்தைந்தாவது கூட்டத்தில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவேண்டும் என இத்தீர்மானம் வலியுறுத்துகிறது.






No comments:

Post a Comment