இந்தியாவின் அடுத்த பிரதமர் வேட்பாளர் என அவரது ஆதரவு ஊடகங்களால் முன்னிறுத்தப்படும் நரேந்திர மோடியின் ஆட்சியில் குஜராத்தில் பாலாறும் தேனாறும் ஓடுகிறது என ஒரு மாயை கட்டியமைக்கப்பட்டுவருகிறது. இந்துத்துவத்தைத் தனது போலி மதச் சார்பின்மை அணுகுமுறையால் எதிர்கொள்ள முடியாத காங்கிரசும் அந்தப் பிரச்சாரத்தை எதிர்கொள்ளமுடியாமல் கை பிசைந்து நிற்கிறது.
காங்கிரஸ் அடுத்த ஆட்சியை பா.ஜ.கவுக்கு விட்டுக்கொடுக்க முடிவுசெய்துவிட்டதோ என்ற ஐயம் நமக்கு எழுகிறதில்லையா ? அடுத்தமுறை பிரதமர் வாய்ப்பு வரப்போவதில்லை என்பது உறுதியாகத் தெரிந்துவிட்ட நிலையில் மன்மோகன் சிங்கும் தனது எஜமானர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலேயே கவனமாக இருக்கிறார். அவர் பா.ஜ.க வை எதிர்த்துப் பேசக்கூடிய அரசியல் உறுதி உள்ளவர் அல்ல.அண்மையில் இந்துத்துவ பயங்கரவாதம் என உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே பேசியதும் அதன்பின் சமரசம் செய்துகொண்டதும் காங்கிரசின் பலவீனமான நிலைக்கு உதாரணங்கள்.
பா.ஜ.கவில் மட்டுமல்ல பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும் நரேந்திர மோடியை முன்னிறுத்துவதற்குக் கடுமையான எதிர்ப்பு இருப்பதைப் பார்க்கிறோம். பீகார் முதலமைச்சர் நித்திஷ்குமார் மோடிமீதான தனது வெறுப்பை வெளிப்படையாகவே காட்டிவருகிறார். ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவரும் தே .ஜ.கூ வின் அமைப்பாளருமான சரத் யாதவ் கூட மோடியைப் பிரதமர் வேட்பாளராக ஏற்கமுடியாது என்பதையே மறைமுகமாகத் தெரிவித்துவருகிறார். புதிய கூட்டணிக் கட்சிகள் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை, இருக்கிற கட்சிகளும் பிரிந்து போய்விடக்கூடும் என்ற நிலைதான் பா .ஜ.க வுக்கு இருக்கிறது. ஆட்சியைப் பிடிப்பதற்கான எந்தவித அறிகுறியும் தென்படாத நிலையில் காங்கிரசின் பலவீனம் ஒன்றையே நம்பி பா.ஜ.க அரசியல் செய்துவருகிறது. ஊடகங்களால் தூக்கிப் பிடிக்கப்படும் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதன்மூலம் நடுத்தரவர்க்க ஆதரவைப் பெறமுடியும் என்ற எண்ணம் அதற்கு வந்திருப்பதையே அண்மைக்கால நிகழ்வுகள் காட்டுகின்றன.
நரேந்திர மோடி அவரது ஆதரவு ஊடகங்கள் சிலவற்றால் முன்மொழியப்படுவதுபோல நாட்டை முன்னேற்றப் பாதையில் செலுத்தும் திறன் கொண்டவர்தானா என்ற கேள்வி நமக்கு எழும்.ஜனநாயக நெறிமுறைகளை மதிக்காமல் அதிகாரத்துவத்தால் எதையும் செய்துவிடலாம் என்ற அணு குமுறை கொண்ட நரேந்திர மோடியின் அரசாங்கம் குஜராத்தில் எப்படி செயல்படுகிறது என்பதற்கு ஒரே ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். மோடியின் பா.ஜ.க அரசாங்கம் தற்போது குஜராத் சட்டப்பேரவையில் ஒரு சட்டத்தை நிறைவேற்றியுள்ளது இனிமேல் விவசாயிகள் தமது நிலத்தில் கிணறு மூலமாகவோ, பைப் மூலமாகவோ விவசாயத்துக்குத் தண்ணீர் எடுக்கவேண்டுமென்றால் அதற்கு அரசாங்கத்திடம் லைசென்ஸ் பெற வேண்டும்.அப்படி லைசென்ஸ் பெறாமல் தண்ணீர் எடுத்து விவசாயம் செய்தால் அவர்களது நிலத்தை அரசாங்கம் பறிமுதல் செய்ய இந்த சட்டத்தில் வழிசெய்யப்பட்டிருக்கிறது. இதுமட்டுமின்றி ஒரு விவசாயி தனது நிலத்தில் எவ்வளவு தண்ணீர் எடுக்கலாம் என்பதை நீர்ப் பாசனத் துறை வரையறுக்கும். அதற்குமேல் தண்ணீர் எடுத்தால் அந்த விவசாயி கைது செய்யப்படுவார்.
இந்தப் புதிய சட்டத்தின்படி குஜராத் மாநில விவசாயிகள் அனைவரும் தமது நிலத்தில் இருக்கும் கிணறுகள் எத்தனை பம்ப்செட்டுகள் எத்தனை என்கிற விவரத்தை உடனடியாக அரசாங்கத்திடம் தெரிவிக்கவேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.
எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தாலும் குஜராத் சட்டசபையில் பெரும்பான்மை பலம் இருப்பதால் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
குஜராத் ஃ பார்முலாவைப் பயன்படுத்தி இந்தியாவை முன்னேற்றிவிடுவார் என்று நரேந்திர மோடியைப் பாராட்டுகிறவர்கள் சொல்கிறார்கள். இப்போது குஜராத்தில் நிறைவேற்றப்பட்டிருப்பதைப் போல ஒரு சட்டம் இந்தியா முழுமைக்கும் வரும் என்பதுதான் அதற்கு அர்த்தம். இதை இந்தியாவெங்கும் இருக்கும் விவசாயிகள் ஏற்றுக்கொள்வார்களா ?
ஆயிரக்கணக்கான முஸ்லிம்களைக் கொன்றொழித்த ரத்தக்கறையை மோடி யின் அரசாங்கம் ஒருபோதும் தனது கையிலிருந்து துடைத்துவிட முடியாது.இனப்படுகொலை என ஐ.நா அவை வரையறுத்திருக்கும் விளக்கம் குஜராத்தில் நடந்த படுகொலைகளுக்கு அப்படியே பொருந்தும். இந்திய அளவில் கணிசமான மக்கள் தொகையினராக இருந்தபோதிலும் ஒருங்கிணைந்த அரசியல் சக்தியாக இல்லாத காரணத்தால் முஸ்லிம்கள் இந்தப் பிரச்னையை ஒரு அளவுக்குமேல் எழுப்ப முடியாமல் போய்விட்டது. குஜராத்தில் இருக்கும் முஸ்லிம்கள் மோடிக்கு வாக்களிக்கிறார்களே எனச் சிலர் சொல்கிறார்கள். இலங்கையில் ராஜபக்சே அரசாங்கத்துக்குக் கூடத்தான் தமிழர்கள் வாக்களித்திருக்கிறார்கள். அதனால் ராஜபக்சே நல்லவர் என்று அர்த்தமா ?
பா.ஜ.க வின் கூட்டத்தில் நரேந்திர மோடிக்கு அமோக ஆதரவு கிடைத்ததாக பா.ஜ.க ஆதரவு ஊடகங்கள் புளகாங்கிதம் அடைந்துகொண்டிருக்கும் வேளையில் குஜராத்தில் கொண்டுவரப்பட்டிருக்கும் சட்டம் குறித்த இந்த செய்தி வெளியாகி இருக்கிறது. ஆனால் இதை ஒரு அரசியல் பிரச்சனையாக மாற்றும் அரசியல் உறுதி காங்கிரசுக்குக் கிடையாது. மதச் சார்பின்மை என்ற விஷயத்தில் ஒப்பீட்டளவில் சமரசம் செய்துகொள்ளாமல் உறுதியோடிருக்கும் இடதுசாரிக் கட்சிகள்தான் இந்த விஷயத்தை முன்னெடுத்துச் சென்று மோடியின் மக்கள் விரோத அணுகுமுறையை அம்பலப்படுத்தவேண்டும். அவர்களோடு முஸ்லிம் அமைப்புகள் இணைந்து நின்றால் நிச்சயம் மோடியின் பிரதமர் கனவைத் தகர்த்தெறிய முடியும்
No comments:
Post a Comment