மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு அதைப்பற்றி ஒரு அறிக்கை வெளியிட்டதோடு தமது கடமை முடிந்தது என அரசியல் தலைவர்கள் வேறு அறிக்கை தயாரிக்கப் போய்விட்டார்கள். இந்த பட்ஜெட்டில் எஸ் சி/ எஸ் டி பிரிவினருக்கு உரிய நிதி ஒதுக்கப்படவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்திருந்தது. வேறு எந்தக் கட்சியும் அப்படிக் கேட்டதாகத் தெரியவில்லை.
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட அன்று நான் ராஜ் நியூஸ் தொலைக்காட்சியிலும் சன் நியூஸ் தொலைக்காட்சியிலும் நேரடி ஒளி பரப்புகளில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தேன். அப்போது இந்த மத்திய பட்ஜெட்டில் எஸ் சி பிரிவினருக்கும் எஸ் டி பிரிவினருக்கும் அவர்களுக்கு ஒதுக்கவேண்டிய தொகையில் பாதி அளவுகூட ஒதுக்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினேன்.
பட்ஜெட்டில் பழங்குடி மக்களுக்காக அவர்களது மக்கள் தொகைக்கேற்ப நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என்ற நடைமுறை 5 ஆவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. எஸ் சி பிரிவினருக்கு அப்படி ஒதுக்க வேண்டும் என 6 ஆவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் முடிவு செய்தார்கள். பட்ஜெட் நிதி ஒதுக்கீடுகள் இந்த மக்களை எட்டவில்லை என்ற உண்மையை அறிந்தபின்னர் செய்யப்பட சிறப்பு ஏற்பாடு இது. அந்த மக்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப பட்ஜெட்டின் திட்ட ஒதுக்கீட்டில் நிதி ஒதுக்க வேண்டும், அந்தத் தொகையை எவ்வாறு செலவு செய்யவேண்டும் என்றெல்லாம் தெளிவான விதிகள் வகுக்கப்பட்டன. ஆனால் அவை எந்தவொரு அரசாலும் நடைமுறைப் படுத்தப்படவில்லை. மத்திய அரசும் அதை மதிக்கவில்லை, மாநில அரசுகளும் மதிக்கவில்லை. இப்போது 12 ஆவது ஐந்தாண்டுத் திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. இப்போதும் அந்த கதி தான்.
திருமதி சோனியா காந்தி அவர்களின் தலைமையில் இருக்கும் தேசிய ஆலோசனைக் குழு இதற்காக ஒரு துணைக் குழுவை நியமித்து எஸ் சி துணைத் திட்டம் மற்றும் எஸ் டி துணைத் திட்டம் ஆகியவற்றை ஆராய்ந்தது. அந்தத் துணைக்குழு தனது பரிந்துரைகளை 2011 டிசம்பரிலேயே மத்திய அரசிடம் அழித்துவிட்டது. அதற்குப் பிறகு இரண்டு மத்திய பட்ஜெட்டுகள் தாக்கல் செய்யப்பட்டுவிட்டன .ஆனால் அந்தப் பரிந்துரைகளில் ஒன்றுகூட நடைமுறைக்கு வரவில்லை. மக்களவையிலும் மாநிலங்கள் அவையிலும் எஸ் சி எஸ் டி உறுப்பினர்கள் நூறு பேருக்குமேல் இருக்கின்றனர். ஆனால் இந்தப் பிரச்னையை அவர்கள் எழுப்பியதாகத் தெரியவில்லை. கடந்த கூட்டத் தொடரின்போது பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா விவாதத்துக்கு வந்தது. அதை முலாயம் சிங்கின் அடியாட்கள் தடுத்து நிறுத்திவிட்டனர். இந்தக் கூட்டத் தொடரில் அதைப் பற்றி விவாதிப்பார்களா அல்லது எதிர்க்கட்சிகள் ஏதாவது ஒரு ஊழல் புகாரை எழுப்பி அதை விவாதிக்கவிடாமல் தடுப்பார்களா என்பது தெரியவில்லை.
தலித் பிரச்சனை பாராளுமன்றத்தில் பெரிய அளவில் எழுப்பப்படாத நிலையில் காங்கிரஸ் கட்சியோ பா.ஜ.கவோ அதை விவாதிக்கும் என நாம் எதிர்பார்க்க முடியாது. தமிழக பட்ஜெட் தயாராகிக்கொண்டு இருக்கிறது. அதில் எஸ் சி எஸ் டி மக்களுக்கான நிதி ஒதுக்கீடு சரியாக செய்யப்படவேண்டும் என இப்போதே வலியுறுத்தவேண்டும்.
நான் கடந்த முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது பட்ஜெட் சமயங்களில் இந்தப் பிரச்சனையைத் தொடர்ந்து எழுப்பி வந்தேன். ஜூனியர் விகடன் பத்திரிகையில் கட்டுரையாக எழுதியும், எங்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டங்களை நடத்தியும், மற்ற அரசியல் கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ க்களை அழைத்து விவாதித்தும் அதைப் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கினேன். அதன்காரணமாக பல திட்டங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் இன்று அப்படிச் செய்வதற்கு ஒருத்தரும் இல்லையென்பதை நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது.
No comments:
Post a Comment