ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கை குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது தொடர்பாக புதிய தலைமுறை தொலைக்காட்சியிலும், சன் நியூஸ் தொலைக்காட்சியிலும் விவாதங்களில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தேன். நான் கூறிய கருத்துகளின் சுருக்கம் :
1. அமெரிக்க தீர்மானத்தின்மீது திருத்தம் எதையும் இந்தியா கொண்டுவராது என்பது உலகளாவிய காலமுறை அறிக்கைமீது இந்தியா தெரிவித்த கருத்துகளின்மூலம் வெளிப்பட்டுவிட்டது. எனினும் நாம் இந்திய அரசை வலியுறுத்தியது அதை அம்பலப்படுத்துவதற்கே.
2.நாம் அண்டை மாநிலப் பிரச்சனைகள் பற்றி அக்கறைகாட்டாமல் இருக்கும்போது அவர்கள் நம் பிரச்சனையையும் அலட்சியப்படுத்தவே செய்வார்கள். தெலுங்கானா சிக்கல் குறித்தோ, வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறும் போராட்டங்கள் குறித்தோ,காஷ்மீரில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்தோ நாம் அக்கறைகாட்டாமல் இருப்பது தவறு. அனமைக்காலமாக நதிநீர்ப் பிரச்சனை காரணமாக நாம் அண்டை மாநிலங்களை எதிரிகளாகப் பார்க்கத் தொடங்கியிருப்பதும் சரியல்ல.
3. சர்வதேச அளவில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கென கொண்டுவரப்பட்ட ஐ.நா தீர்மானங்களில் இந்தியா கையெழுத்திடவில்லை. போர்க்குற்ற விசாரணை குறித்து நாம் பேசுகிறோம்.அந்த விசாரணையை நடத்தவேண்டிய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அமைக்கப்பட்டதை இன்னும் இந்தியா ஏற்கவில்லை. அதற்கு அடிப்படையாக அமைந்த ரோம் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை. அதுமட்டுமின்றி சித்திரவதைக்கு எதிரான ஒப்பந்தத்திலும், அகதிகள் குறித்த ஒப்பந்தங்களிலும் இந்தியா கையெழுத்திடவில்லை. அந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திடச் சொல்லி நாம் வலியுறுத்தவேண்டும்.
4.ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 23 ஆவது கூட்டம் செப்டம்பரில் நடக்கும்போது இப்போதைய தீர்மானத்தை நிறைவேற்றுவதி இலங்கை எடுத்திருக்கும் நடவடிக்கை குறித்து வாய்மொழி அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஐ.நா மனித உரிமை ஆணையரை இத் தீர்மானம் பணித்திருக்கிறது. காமன்வெல்த் நாடுகளின் அடுத்த மாநாட்டை, தான் பிறந்த ஹம்பந்தோட்டாவில் நடத்த ராஜபக்ச ஏற்பாடு செய்து வருகிறார். இலங்கையில் அந்த மாநாட்டை நடத்தக்கூடாது என பல்வேறு நாடுகளும் குரலெழுப்பி வருகின்றன. தற்போது போராடிவரும் மாணவர்களும் போதுமக்க்களும்ம் அரசியல் கட்சிகளும் இந்த இரண்டு விஷயங்களையும் கவனத்தில்கொண்டு தமது போராட்டங்களைத் தீவிரப்படுத்தவேண்டும்.
No comments:
Post a Comment