Sunday, March 10, 2013

இலங்கை ஈராக்கும் அல்ல, ராஜபக்சே சதாமும் அல்ல.



தற்போது நடைபெற்றுவரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கைக்கு எதிராக சுயேச்சையான சர்வதேச போர்க்குற்ற விசாரணை ஒன்று வேண்டுமெனத் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தித் தமிழகத்தில் போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன. அண்மையில் இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழகத்தைச் சேர்ந்த கட்சிகளின் உறுப்பினர்கள் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கட்சிகளின் உறுப்பினர்களும், தேசியக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் மிகவும் பொறுப்போடும் ஆதாரபூர்வமாகவும் இந்தப் பிரச்சனையைப் பற்றிப் பேசியதைக் கேட்டபோது நமக்கும் கூட நம்பிக்கையின் ஒளிக்கீற்று கண்ணில் தெரிந்தது. இன்றுவரை அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரிப்பதுபற்றி இந்திய அரசு வாய்திறக்கவில்லை என்றபோதிலும் அது தனது நிலையை ஓரிரு நாட்களில் தெளிவுபடுத்திவிடும். தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்ப்படும்போது இந்தியாவின் மௌனம் கலைந்துதான் ஆகவேண்டும் .

தமிழ்நாட்டிலும் உலகநாடுகளிலும் இருக்கிற தமிழர்கள் இந்தப் பிரச்சனைகுறித்து ஒன்றுபட்டுக் குரல் எழுப்பவில்லை என்ற போதிலும் ஒரே நிலைப்பாட்டை மேற்கொண்டிருக்கின்றனர் எனக் கூறலாம். அவர்கள் முனவைக்கும் கோரிக்கைகளை இரண்டு தலைப்புகளில் அடக்கலாம்:

1. இலங்கை அரசின் போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கு சுயேச்சையான சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும்.
2.ஈழத் தமிழர்களின் ரசியல் எதிர்காலம் எப்படி இருக்கவேண்டும் என்பதைப்பற்றி உலகமெங்கும் பரவி வாழும் புலம்பெயர்ந்த தமிழர்களை உள்ளடக்கி ஈழத்தில் இருக்கும் தமிழ்மக்களிடமும் ஐ.நா.மேற்பார்வையில் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும்.

ஐ.நா மனித உரிமைக் கவுன்சிலுக்கு இவற்றைச் செய்வதற்கான அதிகாரம் இருக்கிறதா என்பது முதல் கேள்வி. ஒரு நாட்டின்மீது போர்க்குற்ற விசாரணைக்கு உத்தரவிடும் அதிகாரம் ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சிலுக்குத்தான் இருக்கிறது.யூகோஸ்லேவியா, ருவாண்டா ஆகிய நாடுகளின்மீது அத்தகைய விசாரணைகள் நடத்தப்பட்டிருக்கின்றன. ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில்  இடம்பெற்றிருக்கும் அமெரிக்கா அப்படியொரு விசாரணைக்கு உத்தரவிடும் தீர்மானத்தை ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலில் கொண்டுவரலாம். அப்படி அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தால் அதை தமது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி ரஷ்யாவும் சீனாவும் தோற்கடித்துவிடும்.எனவே ஐ.நா பாதுகாப்புக் கவுன்சில் வழியாக இலங்கைமீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வாய்ப்பு இல்லை.

போர்க்குற்ற விசாரணையை நடத்தும் அதிகாரம் கொண்ட இன்னொரு அமைப்பு இருக்கிறது. அதுதான் இன்டர்நேஷனல் கிரிமினல் கோர்ட் . அந்த நீதிமன்றத்தில் ஒரு நாட்டின்மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்படவேண்டுமெனில் குற்றம் சாட்டப்படும் நாடு அந்த சர்வதேச கிரிமினல் கோர்ட்டை உருவாக்குவதற்கு அடிப்படையாக அமைந்த ரோம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கவேண்டும். அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாட்டையும்கூட அந்த கோர்ட் விசாரிக்க முடியும். ஆனால், அதற்கு ஐ.நா பாதுகாப்புக் கவுன்சில் அந்த நாட்டின்மீது புகார் அளித்திருக்கவேண்டும். அந்த நீதிமன்றமேகூட தானாக முன்வந்து விசாரணைக்கு உத்தரவிடலாம். ஆனால் அதற்கு அந்த நாடு ரோம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கவேண்டியது அவசியம். இலங்கை ரோம் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. எனவே ஐ.நா பாதுகாப்புக் கவுன்சில் புகார் அளித்தால் மட்டுமே இலங்கைமீது போர்க்குற்ற  விசாரணை  நடத்த முடியும்.

ஐ.நா மனித உரிமைக் கவுன்சிலுக்கு வேறு என்ன அதிகாரம்தான் இருக்கிறது ? என்ற கேள்வி நமக்கு எழலாம். அது ஒரு விசாரணைக் குழுவை அமைக்கலாம். அந்தக் குழு போர்க்குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களை சேகரித்து அறிக்கை அளிக்கும். அதன்பின்னர் மீண்டும் ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலுக்குத்தான் செல்லவேண்டும். இப்போது சிரியா விவகாரத்தில் அதுதான் நடந்துகொண்டிருக்கிறது. 2011 ஆம் ஆண்டு அங்கு எழுந்த வெகுசனக் கிளர்ச்சியின்போது சுமார் எழுபதாயிரம்பேர் கொல்லப்பட்டிருப்பதாக ஐ.நா மனித உரிமைகள் விசாரணைக் குழு கண்டறிந்திருக்கிறது. போர்க்குற்றங்கள் நடந்திருக்கின்றன என்பதை  அக்குழு கண்டறிந்திருக்கிறது என்றாலும் அக்குற்றத்தைச் செய்தவர்களைத் தண்டிப்பதற்கு அவர்களுக்கு அதிகாரமில்லை. எனவே அந்த வழக்கை ஐ.நா பாதுகாப்புக் கவுன்சில் உறுப்பு நாடுகள் இன்டர்நேஷனல் கிரிமினல் கோர்ட்டுக்கு அனுப்ப ஆவன செய்யவேண்டும் என்று இப்போது அந்த விசாரணைக்குழு கோரிக்கைவிடுத்துக் கொண்டிருக்கிறது.

இவற்றையெல்லாம் தொகுத்துப் பார்க்கும்போது இலங்கையின் இனப்படுகொலை செய்த ராஜபக்சேவை தண்டிப்பதற்கு நாம் நீண்டகாலம் காத்திருக்கவேண்டும் என்ற செய்திதான் நமக்குக் கிடைக்கிறது. ஆனால் அமெரிக்கா நினைத்தால் அவர்களை வெகு விரைவாகத் தண்டிக்கலாம். ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலுக்கு செல்லவேண்டிய தேவையே இல்லை. சதாமைத் தண்டித்த அதே வழியில் ராஜபக்சேவைத் தண்டிக்கலாம். முதலில் ஆட்சி மாற்றம், அதன்பிறகு அந்த நாட்டு நீதிமன்றத்தை வைத்தே விசாரித்து தீர்ப்பு வழங்குவது. அமெரிக்கா அந்த வழிதான் என முடிவுசெய்துவிட்டால் அதன் திட்டத்துக்கு உதவ ரணிலும், சரத் பொன்சேகாவும் காத்திருக்கிறார்கள். ஆனால் அமெரிக்க அந்த நிலையை எடுக்க இலங்கை எண்ணை  வளம் கொண்ட ஈராக்கும் அல்ல, ராஜபக்சே அமெரிக்க டாலர் மதிப்பைக் குறைப்பதற்கு முயற்சித்த சதாமும் அல்ல.

பாதிக்கப்பட்ட தரப்பு தனக்கான நீதியை வழங்குங்கள் என்று கையேந்திக்கொண்டிருந்தால் அதற்கு ஒருபோதும் நியாயம் கிடைக்காது. "குற்றம் செய்தவரூக்கும் பாதிக்கப்பட்டவருக்கும் இடையில் மூன்றாவது தரப்பாக ஏன் நீதிமன்றத்தை நாம் அனுமதிக்க வேண்டும் ? பாதிக்கப்பட்டவருக்குத்தான் நீதி வழங்கும் அதிகாரம் இருக்கிறது, அதுதான் வெகுஜன நீதி. அது காலதாமதம் அற்றது" என்றார் மிஷெல் ஃ பூக்கோ . ஈழத்தமிழர் பிரச்சனையில் வெகுஜன நீதி குறித்து ஃ பூக்கோ சொன்னதுதான் பொருத்தமாக இருக்கும்போலத் தெரிகிறது.

No comments:

Post a Comment