Friday, March 15, 2013

மாணவர் போராட்டத்தை முடக்கும் தமிழக அரசு


  தமிழகம் முழுவதும் எழுச்சி பெற்றுவரும் மாணவர் போராட்டத்தை முடக்கும்விதமாக தமிழக  அரசு கல்லூரிகளுக்கு காலவரம்பற்ற விடுமுறையை அறிவித்துள்ளது.மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கும் விதமாகத்தான் மாணவர்கள் போராடுகிறார்கள். அவர்கள் தமிழக அரசுக்கு எதிராக ஒரு வார்த்தையையும் பேசவில்லை. மாணவர்களின் உணர்வுதான் தமிழக அரசின் உணர்வு, அதை மத்திய அரசுக்கு உரிய விதத்தில் தமிழக அரசு வெளிப்படுத்தும் என முதல்வர் அறிவித்திருக்கலாம். போராடும் மாணவர்களைச் சந்தித்து அவர்களை சமாதானப்படுத்தி போராட்டங்களை முடித்துக்கொள்ளும்படி அமைச்சர்களை விட்டுப் பேச வைத்திருக்கலாம். தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்கப் போகிறது. அதில் இதற்காகத் தீர்மானம் நிறைவேற்றுகிறோம் என அறிவித்திருக்கலாம். அதையெல்லாம் செய்யாமல் மாணவர் போராட்டத்தை முடக்கும் விதமாக கல்லூரிகளையும் பல்கலைக் கழகங்களையும் காலவரம்பின்றி மூடுவது மத்திய அரசைக் காப்பாற்ற தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கையாகவே தெரிகிறது. தமிழக முதல்வர் தமக்குக் கிடைத்த நல்ல வாய்ப்பு ஒன்றைத் தவறவிட்டுவிட்டார்.

 ஐ.நா மனித  உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்படும் தீர்மானத்தை நீர்த்துப்போகச் செய்வதற்கு இந்திய அரசு தன்னாலான முயற்சிகள் அனைத்தையும் செய்துவருகிறது. முல்லிவாய்க்கால் படுகொலை முடிந்தவுடன் கூட்டப்பட்ட ஐ.நா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் கியூபாவை வைத்து இலங்கை அரசைப் பாராட்டித் தீர்மானம் கொண்டுவரச் செய்த இந்தியா அந்தத் தீர்மானத்தை ஆதரித்தது என்பதை நாம் அறிவோம். 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற கூட்டத்தில் அமேரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தின்மீது வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்பு அந்தத் தீர்மானத்தில் இலங்கை அரசின் அனுமதி பெற்றே ஐ.நா உயர் அலுபளர்கள் இலங்கைக்குச் செல்லவேண்டும் என்ற திருத்தத்தைச் செய்து இலங்கையைக் காப்பாற்றியது இந்திய அரசு. கடந்த ஓராண்டில் இலங்கையில் நடைபெற்ற சிங்களக் குடியேற்றங்கள், தமிழர்கள் மீதான தாக்குதல்கள் , தமிழ்ப் பெண்கள்மீதான் பாலியல் வன்முறைகள் , தமிழ் மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்ட கொடுஞ் செயல்கள் அனைத்துக்கும் இந்தியா செய்த அந்தத் திருத்தமே காரணமாக அமைந்து இலங்கைக்கு ஊக்கம் கொடுத்தது. இப்போது மீண்டும் அதே வேலையை இந்தியா செய்கிறது.

அமேரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தின் முதல் வரைவில் நம்பிக்கைக்குரிய அம்சங்கள் எதுவும் இல்லை. அந்த வரைவின்மீது ஐரோப்பிய நாடுகள் செய்த சற்றே சாதகமான திருத்தங்களால் இரண்டாவது வரைவு கொஞ்சம் நம்பிக்கை அளிப்பதாக இருந்தது. சர்வதேச விசாரணை ஒன்றுக்கு உத்தரவிடப்படலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது. நவநீதம் பிள்ளை அவர்களின் அறிக்கையை அந்த வரைவு கவனத்தில் எடுத்துக்கொண்டு மேம்படுத்தப்பட்டிருன்தது. ஆனால்  அதை முழுவதுமாக  நீர்த்துப்போகச செய்துவிட்டார்கள். தற்போது வெளியாகியிருக்கும் மூன்றாவது வரைவு அப்படி நாசமாக்கப்பட்டதற்கு ரஷ்யா,பாகிஸ்தான், சீனா, கியூபா ஆகிய நாடுகள் முன்மொழிந்த திருத்தங்களே காரணம் எனத் தெரிகிறது. அந்த வரைவை மேலும் கடுமையானதாக்கவேண்டும் என்று ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்தியும்கூட இந்த கொடுமை நிகழ்ந்துவிட்டது. அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட இந்தியப் பிரதிநிதி மௌனமாக இருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த முறையும் கியூபாவைப் பயன்படுத்தித் தனது நோக்கத்தை இந்தியா நிறைவேற்றிக்கொண்டிருக்கலாம் என்றே நாம் நினைக்கவேண்டி இருக்கிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் இருக்கும் அரசியல் கட்சிகள் யாவும் ஒன்றிணைந்து போராடவிட்டாலும் ஒரே குரலிலாவது மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக போராடியிருக்கவேண்டும். ஆனால் அதைச் செய்யாமல் சேற்றை வாரி இறைக்கும் வேலை யிலேயே சில  கட்சிகள் கவனமாக இருக்கின்றன.அத்தகைய அரசியல் கட்சிகளின் குறுகிய பார்வையைத் தாண்டி  மாணவர் போராட்டங்கள்தான் மத்திய அரசுக்கு மிகப்பெரிய அழுத்தத்தைக் கொடுப்பதாக இருக்கின்றன. அந்தப் போராட்டங்களையும் தமிழக அரசு முடக்க நினைப்பது ஏன் ?

ஈழப் பிரச்சனையில் மத்திய அரசின் நிலையை அமபலப்படுத்தவேண்டும் , ஐ நா மனித உரிமைகள் பேரவையில் நடைபெறும் விவாதத்தின்போது இலங்கைக்கு எதிராக இந்தியாவைப் பேசவைக்கவேண்டும் , அங்கு நிறைவேற்றப்படவிருக்கும் தீர்மானத்தில் சர்வதேச விசாரணைக்கான திருத்தத்தை இந்தியா முன்மொழியும்படி நிர்ப்பந்திக்கவேண்டும் என்பதுதான் தமிழக அரசின் நிலைபாடாக இருக்குமேயானால் மாணவர் போராட்டங்களை இப்படி அது முடக்காது தமிழக அரசின் நடவடிக்கை சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றுவதற்குத்தான் என எண்ண  முடியவில்லை. ஏனெனில் போராடுகிற மாணவர்கள் சட்டம் ஒழுங்கைப் பாதிக்கும் விதமாக எதையும் செய்யவில்லை. கல்லூரிகளை மூடுவதால் மாணவர் போராட்டம் ஓய்ந்துவிடாது. அது தீவிரம் அடையவே செய்யும். இதைத் தமிழக அரசு புரிந்துகொள்ளவேண்டும்.

தி.மு.க மத்திய அரசிலிருந்து வெளியேறுவதற்கான முடிவை எடுக்கப்போகிறது என்பதற்கான அறிகுறிகள் தென்படும் வேளையில் தமிழக  அரசின் இந்த நடவடிக்கை அது மத்திய அரசோடு இணக்கமாகப் போக விரும்புகிறதா என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. அப்படிப் பார்க்கத் தேவையில்லை அத்தகைய தவறை தமிழக அரசு செய்யாது எனச் சொன்னால் பட்ஜெட் கூட்டத் தொடரில் ஈழத் தமிழர் பிரச்சனை குறித்த தீர்மானம் ஒன்றை தமிழக அரசு நிறைவேற்றவேண்டும் . அது நடக்கிறதா எனப் பார்ப்போம்.

No comments:

Post a Comment