சூடாமணி சிறுகதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்ட நிகழ்வில் அதன் மொழிபெயர்ப்பாளர் பிரபா ஶ்ரீதேவன் பேசியது நெகிழவைத்தது. அந்தக் கதைகளின்மீது மட்டுமல்ல இலக்கியத்தின்மீது அவருக்கு இருக்கும் வேட்கையை அந்தப் பேச்சில் உணரமுடிந்தது. அவர் பேசியவிதம் அவரே ஒரு படைப்பாளியாகவும் இருப்பார் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.
வாதம் என்ற பெயரில் அடுக்கப்படும் வறண்டுபோன வார்த்தைகளை மட்டுமே கேட்டுக் கொண்டிருக்கும்படி சபிக்கப்பட்ட நீதிபதி பதவியில் இருந்தவர், அவரிடமிருந்து ஈரம் மாறாத சொற்கள் நிதானமாக ஒவ்வொன்றாய் வந்து விழுந்தபோது அந்த மேடையில் திரு கே.சந்துரு அவர்கள் சிரத்தையோடு கொண்டுவந்து அலங்கரித்திருந்த நாகலிங்கம் பூக்களின் குளிர்ச்சியும் மணமும் நினைவுக்கு வந்தன.
பிரபா ஶ்ரீதேவன் அவர்களின் தீர்ப்புகள் சிலவற்றைப் படித்திருக்கிறேன். குறிப்பாக பஞ்சமி நிலம் குறித்த தீர்ப்பைச் சொல்லவேண்டும். தனது தீர்ப்புகளில் கே.சந்துருவைப்போலவே இவரும் இலக்கிய மேற்கோள்களைப் பயன்படுத்தக்கூடியவர், அவரைப்போலவே மனிதநேய அணுகுமுறை இவரிடமும் தென்படக் கண்டிருக்கிறேன்.
பட்டப் படிப்பில் ஆங்கில இலக்கியத்தைப் படித்தவர் என அறிமுகப்படுத்தும்போது சொன்னார்கள். அவர் பேசியதைக் கேட்டபோது அவருக்குப் பிடித்த இலக்கிய வடிவம் கவிதையாகத்தான் இருக்கும் எனத் தோன்றியது.
Seeing in the Dark நூலில் அவர் எழுதியிருக்கும் மொழிபெயர்ப்பாளர் குறிப்பு முக்கியமானது. சூடாமணியின் கதைகள் அவை எழுதப்பட்ட காலத்தோடு எப்படி பிணைக்கப்பட்டிருக்கின்றன என்பதை சுட்டிக்காட்டும் அதே நேரத்தில் அந்தக் கதைகள் எப்படி உலகளாவிய தன்மையைக் கொண்டிருக்கின்றன என்பதையும் சொல்லியிருக்கிறார்.
தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கும் பலரோடு ஒப்பிட பிரபா ஶ்ரீதேவனின் மொழிபெயர்ப்பு உயிர்த்துடிப்போடும் மூலப் பிரதிக்கு விசுவாசமாகவும் இருக்கிறது.
நீதியும் இலக்கியமும் ஒருவிதத்தில் ஒற்றுமைகொண்டவை. மனிதகுலத்தின் சுதந்திரத்தை விரிவுபடுத்துபவை. பிரபா ஶ்ரீதேவன் நீதித்துறையில் விட்ட பணியை இலக்கியத் துறையில் தொடர வாழ்த்துகிறேன்.
No comments:
Post a Comment