கலப்பு விசாரணை நீதிமன்றம் அமைக்கலாம் என்னும் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் அறிக்கை ஏமாற்றம் அளிக்கிறது!
தொல்.திருமாவளவன் அறிக்கை
============
ஐ.நா.மனித உரிமை கவுன்சில் அறிக்கை இலங்கை இனப்படுகொலை குறித்து
சரியான தீர்வை முன்மொழியும் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருந்து
வந்தது. ஆனால், அதைத் தகர்க்கும் வகையில் சர்வதேச வல்லுநர்களும்
இலங்கையைச் சேர்ந்தவர்களும் இணைந்த நீதிமன்றம் அமைத்து போர்க் குற்றங்களை
விசாரிக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் அறிக்கையில்
குறிப்பிடப்பட்டிருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.
உள்ளக விசாரணையே போதும் என அமெரிக்கா முன்மொழியப் போவதாகக் கூறப்படும் தீர்மானத்துக்கு இந்த அறிக்கை முன்னோட்டமாக உள்ளதோ என்கிற ஐயம்
ஏற்படுகிறது.இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்களை மனித உரிமை கவுன்சில் அறிக்கை உறுதிப்படுத்தி யிருக்கிறது; அதற்குப் பொறுப்பானவர்களை உடனடியாக பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது; இலங்கையின் உள்நாட்டு விசாரணை அறிக்கைகள் எதுவும் சுதந்திரமானவையாக இல்லை என்று
விமர்சித்திருக்கிறது; புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் அரசும் முழுமையான
நம்பிக்கையைத் தரவில்லை என குறை கூறியிருக்கிறது என்ற போதிலும் இந்த
அறிக்கையில் இனப்படுகொலை நடைபெற்றதாக ஓரிடத்திலும் குறிப்பிடப்படவில்லை.
அது மட்டுமின்றி, இலங்கையில் தற்போதிருக்கும் விசாரணை கமிசன் சட்டத்தின் கீழ் அல்லாமல் புதிய சட்டம் ஒன்றின் அடிப்படையில் விசாரணை அமைப்புஉருவாக்கப்பட வேண்டும் எனக் கூறியிருப்பது இந்தக் கலப்பு விசாரணை
நீதிமன்றம் இலங்கையில்தான் அமைக்கப்பட வேண்டும், அதுவும் இலங்கையின்
சட்டத்தின்கீழ்தான் அமைக்கப்பட வேண்டும் என ஐ.நா. மனித உரிமை கவுன்சில்
கருதுகிறது என்பதையே உணர்த்துகிறது.
இது இனப்படுகொலைக்காளான தமிழர்களின்நம்பிக்கையைத் தவிடுபொடியாக்கும் வகையில் உள்ளது.
இலங்கையில் தற்போதிருக்கும் சட்டங்களும் இலங்கை அரசும் நடுநிலையான
விசாரணையை மேற்கொள்வதற்கோ, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்குவதற்கோபோதுமானவை அல்ல என்று ஐ.நா. மனித உரிமை கவுன்சிலே தெரிவித்திருக்கும் நிலையில் கலப்பு நீதிமன்றம் என்ற ஆலோசனை எவ்விதத்திலும் நீதியை
வழங்குவதற்குப் பயன்படாது. எனவே, ஏற்கனவே ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில்
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் சுதந்திரமான, சர்வதேச
விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்
சார்பில் வலியுறுத்துகிறோம்.
இன்று மகத்தான தீர்மானம் ஒன்றை சட்டப் பேரவையில் நிறைவேற்றிய தமிழக
அரசும் அதற்கு ஒரு மனதாக ஆதரவு அளித்த அரசியல் கட்சிகளும் ஐ.நா. மனித
உரிமை கவுன்சில் அறிக்கையில் முன்மொழியப்பட்டிருக்கும் கலப்பு நீதிமன்றம்
என்ற ஆலோசனையை நிராகரிக்குமாறும், சுதந்திரமான சர்வதேச விசாரணையை
வலியுறுத்துமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment