நான் ஓர் அமைதி விரும்பி
எதன்பொருட்டும் அதை இழக்கமாட்டேன்
நான் ஒரு பூனை வளர்த்தேன்
ஒரு கோழியும் வளர்த்தேன்
பூனைக்கு நானே பால் ஊற்றி வைப்பேன்
கோழி தன் தீனியைத் தானே தேடும்
இரண்டின்மீதும் அன்பு எனக்கு
நான் சாப்பிடும்போது பூனை உரசும்
கவளம் ஒன்று வைக்காதுபோனால்
கத்திக் கத்தி கவனத்தை ஈர்க்கும்
கோழிக் கூண்டைக் காலையில் திறந்தால் தானே வந்து இரவில் அடையும்
இரண்டின்மீதும் சம அன்பு எனக்கு
முட்டை வைத்து அடை காத்து
குஞ்சு பொரித்தது கோழி
பாலைக் குடித்து சோற்றைத் தின்று கொழுகொழுவென்றிருந்தது பூனை
நள்ளிரவொன்றில் சப்தம் கேட்டு
தூக்கம் கலைந்து துடித்து எழுந்தேன்
கோழிக்கூண்டில்தான் ஒரே களேபரம்
குஞ்சுகளையும் கோழியையும் அடித்துத் தின்ன துரத்துது பூனை
வந்தது கோபம்
தடியை எடுத்தேன் போட்டேன் ஒன்று
குறி தவறி கோழி சுருண்டது
மதிலுக்கு அப்பால் பூனை பாய்ந்தது
குய்யோ முறையோவெனக் குஞ்சுகள் சத்தம்
ஒண்ணு ரெண்டு மூணு நாலு
போட்ட போடில் எல்லாம் காலி
அமைதி திரும்பியது
தூக்கம் சுழற்றியது
நானோ அமைதி விரும்பி
எதன்பொருட்டும் அதை இழக்கவே மாட்டேன்
No comments:
Post a Comment