Wednesday, September 2, 2015

கூனல் பிறை நூலுக்கு விருது!

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் 2014 ஆம் ஆண்டில் வெளியான சிறந்த சிறுகதைத் தொகுப்பாக தேன்மொழி எழுதி மணற்கேணி பதிப்பகம் வெளியிட்ட  ' கூனல் பிறை' தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் செய்தியை தோழர் ச. தமிழ்ச்செல்வன் சற்றுமுன்னர் தெரிவித்தார். நூலைத் தேர்வுசெய்த நடுவர்களுக்கும், தமுஎகச தோழர்களுக்கும் நன்றி. 

கூனல் பிறை நூலை தற்போது நடைபெற்றுவரும் மதுரைப்புத்தகக் கண்காட்சியில் பாரதி புத்தகாலயம், அன்னம் ஆகிய ஸ்டால்களில் வாங்கலாம்.
======
கூனல் பிறை நூலுக்கு அம்பை எழுதியிருக்கும் பின் அட்டைக் குறிப்பு:
=====
" உணர்வுகள், உறவுகள், அகம், புறம், மனிதர்கள், மிருகங்கள், உயிருள்ளவை, உயிரற்றவை இவை அனைத்தும் ஒன்றிப் பிணைந்து வாழ்க்கையுடன் கலக்கும் மாயம் தேன்மொழியின் எழுத்தில் இருக்கிறது. பாம்புகள், ஓவியங்கள், நாணல் காடுகள், பாலைவனங்கள், குதிரைகள், பூக்கள், பழங்கள், பேய்கள் கூட எளிதாக உருமாறி நம் அருகே வருகின்றன. அன்பைத் தருகின்றன; அன்பை யாசிக்கின்றன. உடல் நலிவுற்று மகளுடன் தங்கி பாசத்தையும் தொல்லையையும் தரும் அப்பா, கதை சொல்லும் ஆத்தாக்கள், சோறு பொங்காமல் பனிரெண்டு வயதுப் பெண்ணிடம் ‘போய் வாரேன், பத்திரமா இரு’ என்று கூறி வீட்டை விட்டுப் போய்விடும் கோபக்கார அம்மாக்கள், சைக்கிள் ஓட்டத் தெரியா கணவனுடன் டபுள்ஸ் போய் வாழ்க்கை எல்லாம் விழுந்து எழுந்தும், பாதுகாப்புத் தரும் நாணல் காடாய் அவனை உருவகித்து அவனைக் காதலிக்கும் மனைவி, மனைவிக்கு எந்த ஊறும் நேராதபடி சாராயம் காய்ச்சும் கணவனை இழந்தபின் மகன்களும் பேரன்களும் அவளைச் சாராய வழக்கில் மாட்டிவிட்டதும் ஊமத்தைக் காய்களை இடுப்பில் கட்டிக்கொண்டு தனி நடை போகும் கிழவி, உறவாட வரும் பேய்கள் என்று அலை பொங்குவது போல எளிதாக மேலே ஓங்கிஓங்கி எழும் கதைகள் இவை. மெத்தென்று சில சமயத்திலும் அசுர வலியுடன் சில சமயங்களிலும் மனத்தை முட்டும் கதைகள். இக்கதைகள் உருவாக்கும் உலகை விட்டு வெளியே வந்த பிறகும் அது இதமாயும் இம்சை தந்தபடியும் நம்மைத் தொடருகிறது."



No comments:

Post a Comment