Friday, September 4, 2015

அரசியல் தீண்டாமையெனும் ஆபத்து -ரவிக்குமார்



அம்பேத்கரின் 125 ஆவது பிறந்தநாள் நிகழ்ச்சியில் பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி " அம்பேத்கர் தான் வாழ்ந்த காலத்தில் சமூகத் தீண்டாமைக்கு ஆட்பட்டார், மறைந்த பின்னர் அரசியல் தீண்டாமைக்குப் பலியாக்கப்பட்டார்" என்று குறிப்பிட்டார். மத்தியில் ஆண்ட காங்கிரஸ் கட்சி அம்பேத்கர் சர்வதேச மையத்தை அமைப்பதற்கு கடந்த இருபது ஆண்டுகளாகக் காலந்தாழ்த்தி வந்ததையே பிரதமர் அப்படி சாடினார். அரசியல் தீண்டாமை என்றால் என்ன? பிரதமர் மோடி குறிப்பிட்ட புறக்கணிப்பு என்பது அதன் ஒரு அங்கம் மட்டும்தான். 

இன்று ஊடகங்களிலும் சமூக வலைத் தளங்களிலும் சிரிய நாட்டைச் சேர்ந்த அகதிகள் பிரச்சனை அதிகம் விவாதிக்கப்பட்டது. துருக்கிக் கடற்கரையில் சடலமாகக் கரை ஒதுங்கிய மூன்று வயது சிரிய நாட்டுக் குழந்தையொன்றின் புகைப்படம் அந்த விவாதத்தின் மையமாக இருந்தது. அந்தப் புகைப்படம் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக மேலும் சில ஆயிரம் சிரிய அகதிகளைத் தமது நாட்டுக்குள் அனுமதிக்கப்போவதாக பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் இன்று அறிவித்துள்ளார். 

கொல்லப்பட்ட ஒரு தலித் குழந்தையின் புகைப்படம் இப்படியான தாக்கத்தை இந்தியர்களின் மனதில் ஏற்படுத்துமா? வெண்மணியில் கரிக்கட்டைகளாகக் கிடந்த தலித் குழந்தைகளைப் பார்த்து எத்தனை இதயங்கள் இளகின? அன்றைய ஆட்சியாளர்கள் என்ன செய்தார்கள்? அரசியல் கட்சிகள் என்ன செய்தன? அதுகுறித்த விவாதம் சட்டப் பேரவையில் எப்படி நீர்த்துப்போகச் செய்யப்பட்டது என்பதை அந்த ஆவணங்களைப் பார்த்தால் தெரிந்துகொள்ளலாம். அது அரசியல் தீண்டாமையின் அடையாளம்! 

'அரசியல் தீண்டாமை'க்கு அம்பேத்கர் மட்டுமல்ல தலித்துகள் ஒவ்வொருவரும்  பலியிடப்படுகிறார்கள். தலித் வரலாறு இருட்டடிப்புச் செய்யப்படுவதும் , தலித் தலைவர்கள் வரலாற்றிலிருந்து மறைக்கப்படுவதும்கூட அரசியல் தீண்டாமையின் அடையாளங்கள்தான். 

தமிழ்நாட்டில் 'அரசியல் தீண்டாமை' முன்னிலும் வெளிப்படையாகத் தனது கோர முகத்தைக் காட்டத் தொடங்கியுள்ளது. ஆட்சியைப் பிடிக்க நினைக்கும் அரசியல் கட்சிகள் சாதித் தமிழர்களின் ஓட்டு கிடைத்தால் போதும் அதை வைத்தே ஆட்சி அமைத்துவிடலாம் எனக் கருதுவது அதன் அடையாளம் தான். எல்லா வாக்குகளுக்குமே பணம் கொடுக்கிறார்கள் என்றாலும் சாதித் தமிழர்களின் வாக்குகளுக்கு இருப்பதாகக் கருதப்படும் சமூக மதிப்பு தலித் வாக்குகளுக்கும் இருக்கிறது என அரசியல் கட்சிகள் நினைக்கவில்லை. பணம் கொடுத்து வாங்கப்பட்டாலும் பிற சாதிகளுக்கு அரசியல் பிரதிநிதித்துவமும் அதிகாரமும் வழங்கப்படுகிறது. அரசியல் ஓர்மையற்ற தலித் வாக்குகள் பண்டங்களாக மட்டுமே கருதப்படுகின்றன. 
மாநிலத்தின் மக்கள் தொகையில் இருபது சதவீதத்துக்குக் கூடுதலாக இருக்கும் தலித்துகளை இத்தனை கேவலமாகக் கருதும் நிலை இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. 

தற்போது வலுப்பெற்றுவரும் அரசியல் தீண்டாமை தலித் மக்களுக்கு 'பாதிக்கப்பட்டவர்கள் (victims) என்ற அடையாளத்தைக்கூடத் தருவதில்லை. அதனால்தான் தலித்துகளின்மீது இரக்கம்கூட வருவதில்லை. அரசியல் தீண்டாமை 'ஒரு மனிதனுக்கு ஒரு வாக்கு; எல்லா வாக்குக்கும் ஒரே மதிப்பு' என்ற அடிப்படையில் அரசியலமைப்புச் சட்டத்தின்மூலம் அம்பேத்கர் உத்தரவாதப்படுத்தியிருக்கும் அரசியல் சமத்துவத்தையும் அழித்துவிடும். இது சமூகத் தீண்டாமையைவிடக் கொடுமையானது. 

அரசியல் தீண்டாமையை அகற்றுவது ஜனநாயக சக்திகளின் கடமையென்றாலும் அதற்கான முன்முயற்சிகளை எடுக்கவேண்டிய பொறுப்பு தலித் இயக்கங்களையே சாரும். 

No comments:

Post a Comment