Tuesday, November 2, 2010

கிரந்த எழுத்துகளோடு தமிழ் எழுத்துகளைச் சேர்க்கலாமா ? - ரவிக்குமார்-

                                          திரு வரத தேசிகன் அவர்களோடு ரவிக்குமார்


கிரந்த எழுத்துகளோடு ஐந்து தமிழ் எழுத்துகளைச் சேர்க்கும் மத்திய அரசின் தகவல் தொழில் நுட்பத் துறை சார்பிலான முன்மொழிவுக்கு சில தமிழ் ஆய்வாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துவருவதை தமிழ் மன்றம்  மடல்குழுவில் தொடர்ந்து வெளிவரும் மடல்கள் மூலம் நாம் அறிவோம். நண்பர்கள் மணி. மணிவண்ணன் மற்றும் தில்லை. குமரன் ஆகியோர் என்னை மின்னஞ்சல் மூலமாகவும் தொலைபேசி வாயிலாகவும் தொடர்புகொண்டு இந்தப் பிரச்சனையில் தலையிட்டு தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்குமாறு கேட்டுக்கொண்டனர். கடந்த மூன்று தினங்களாக இதுகுறித்து எமது கட்சியின் தலைவர் . தொல்.திருமாவளவன் அவர்களிடமும் , மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி அவர்களிடமும் தொடர்புகொண்டு இந்தப் பிரச்சனையின் தீவிரம் மற்றும் அவசரம் குறித்துப் பேசினேன். திரு. ழான் லுக் செவ்வியார் அவர்களின் கருத்துகளையும் கேட்டு அறிந்துகொண்டேன்.
இன்று எமது தலைவர் இதற்கென பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தலாம் எனத் தெரிவித்திருந்தார். எனினும் மேலதிகத் தெளிவு வேண்டி நான் இன்று பாண்டிச்சேரியில் இருக்கும் EFEO நிறுவனத்துக்குச் சென்று திரு.செவ்வியார் அவர்களைச் சந்தித்து அவரிடம் பல்வேறு ஐயங்களையும் எழுப்பி விளக்கங்களைப் பெற்றேன். அங்கு பணியாற்றும் சமஸ்கிருத அறிஞர் திரு. வரத தேசிகன் அவர்களைப் பார்த்துப் பேசியது ஒரு அபூர்வமான நிகழ்வு. ஏறத்தாழ தொண்ணூறு வயதை நெருங்கிக்கொண்டிருக்கும் அவர் தமிழ், சமஸ்கிருதம், கிரந்தம், ஆங்கிலம் என நான்கு மொழிகளில் ஆழ்ந்த புலமை கொண்டவர். கிரந்த ஏட்டுச்சுவடிகளை படிக்கத் தெரிந்த மிகச்சிலரில் ஒருவர். திரு. செவ்வியாரின் உதவியால் அவரது பணிகள் குறித்துக் கேட்டு அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
கிரந்த எழுத்துகள் கலந்து எழுதப்பட்ட ஓலைச் சுவடிகளை அவர் என்னிடம் படித்துக் காட்டினார். 
                                        கிரந்த எழுத்துகளைக் கொண்ட ஓலைச் சுவடி


சுவடிகளில் இருப்பவற்றை இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் அச்சில் வெளிக்கொண்டுவந்தபோது கிரந்த எழுத்துகளோடுதான் அச்சிட்டிருக்கிறார்கள். அப்படி 1910 ஆம் ஆண்டில் பதிப்பிக்கப்பட்ட நாலாயிரத் திவ்வியப் பிரபந்த நூலை நான் அவரிடம் பார்த்தேன். அதுபோன்ற நூல்களைப்  பின்னர் பதிப்பித்தபோது கிரந்த எழுத்துகள் இருந்த இடங்களில் எல்லாம் தேவநாகரி எழுத்துகள்கொண்டு அச்சிடப்பட்டிருக்கிறது. அப்படியான நூல்களையும் அங்கு பார்க்க முடிந்தது. இப்படி தேவநாகரி கலந்து அச்சிடுவதைவிட கிரந்த எழுத்துகளைக்கொண்டு அச்சிடுவதே சிறந்தது என திரு. ஜார்ஜ் ஹார்ட் அவர்கள் எழுதியிருப்பது நினைவுக்கு வந்தது.
தற்போது நடைபெற்றுவரும் சர்ச்சை குறித்து திரு. வரத தேசிகன் அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை. அவர் தானுண்டு தன் பணியுண்டு என இருக்கிறார்.அவர் தனது தந்தையிடமிருந்து கிரந்தம் படிக்கக் கற்றுக்கொண்டாராம். அவரிடம் அதைக் கற்றுக்கொள்ள எவரும் முன்வரவில்லையாம். அவரது அறிவுச்செல்வம் தொடர்ச்சியின்றி அழியப்போவதை எண்ணி வருத்தமாக இருந்தது.
கிரந்த எழுத்து சர்ச்சை தொடர்பான மின்னஞ்சல்கள் , ஆவணங்கள் முதலியவற்றைப் படித்தும் , திரு. தில்லை.குமரன், மணி.மணிவண்ணன் , ழான் லுக் செவ்வியார் , முதலானவர்களிடம் பேசியும் நான் புரிந்துகொண்ட கருத்துகளை இன்று மாலை மீண்டும் கனிமொழி அவர்களிடம் பகிர்ந்துகொண்டேன். இந்தப் பிரச்சனையில் தமிழக அரசு தலையிடாவிட்டால் வீண்பழி வந்து சேரும் என்பதையும் அவரிடம் தெரிவித்தேன். இது குறித்து விவாதிக்க ஒரு கூட்டத்தைக் கூட்டினால் என்ன ? என்று அவர் கேட்டார். ‘ கூட்டவேண்டும். அதுவும் உடனடியாக நாளை (03.11.2010) கூட்டுவது உத்தமம்’ என்று அவரிடம் சொன்னேன். அதன்பின் மாண்பமை தமிழ்ப் பல்கலைகழகத் துணைவேந்தர் திரு. மா.இராசேந்திரன் அவர்களிடம் தொடர்புகொண்டு பேசினேன். இந்தப் பிரச்ச்னையை முன்வைத்துவரும் நண்பர்களோடு அவர் ஏற்கனவே தொடர்பில் இருந்தார். உடனடியாகத் தனது அலைபேசியில் திரு. கவியரசன் அவர்களை அழைத்து என்னோடு பேசச் சொன்னார். மூவருமாக விவாதித்த பிறகு இதற்கான கூட்டத்தை தானே கூட்டுவதாகவும் நாளையே அதை செம்மொழி அலுவலகத்தில் கூட்டலாம் என்றும் தெரிவித்தார்கள்.
பிரச்சனையின் அவசரத்தை உணர்ந்து துரிதமாக நடவடிக்கை எடுத்திருக்கும் துணைவேந்தர் அவர்களுக்குத் தமிழ் அறிவுலகம் நன்றி சொல்லவேண்டும்.
இந்தக் கூட்டத்தில் இருதரப்பு வாதங்களையும் கேட்கும் விதமாக திரு. ஷர்மா , திரு.கணேசன், திரு. குடால் , திரு. செவ்வியார், திரு. மணி.மணிவண்ணன், திரு. நக்கீரன், திரு. அனந்த கிருட்டிணன் உள்ளிட்டோரை அழைக்கலாம் எனத் துணைவேந்தர் முடிவு செய்திருக்கின்றார். மாண்பமை. துணைவேந்தர் அவர்களின் அறிவுறுத்தலின்படி நான் இது தொடர்பாக திரு. செவ்வியார் அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். திரு. ஷர்மா அவர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொள்வது அவசியம். மற்ற அறிஞர் பெருமக்களும் கலந்துகொண்டால் கூட்டத்தின் நோக்கம் நிறைவுபெறும்.
இத்தகைய பிரச்சனைகள் அரசியல் பரிமாணம் கொண்டவைதான் என்றபோதிலும் இவற்றை உணர்ச்சி நிலையில் நின்று பார்க்காமல் அறிவுபூர்வமாக நாம் அணுகியாகவேண்டும். என்னைப்பொருத்தவரை, கிரந்த எழுத்துகளோடு ஐந்து தமிழ் எழுத்துகளைச் சேர்த்தால் அது எதிர்காலத்தில் தமிழையே அழித்துவிடும் என்ற வாதம் கொஞ்சம் மிகையாகவே படுகிறது. இப்படியான யூகங்களை அடிப்படையாகக்கொண்டு ஒரு திட்டத்தைத் தடுத்து நிறுத்துவது சரியா? என்ற வினா எழுகிறது. திரு. மணி.மணிவண்ணனிடம் பேசும்போது , இப்பிரச்சனை தொடர்பாக திரு. ஜார்ஜ் ஹார்ட் மற்றும் திருவாட்டி. வி.எஸ்.ராஜம் ஆகியோரின் கருத்துகளை  நாம் கேட்டுப் பெறவேண்டும் என வலியுறுத்தினேன். இந்த சர்ச்சை ஆரம்பித்த நேரத்தில் ‘ நாம் மணிப்பிரவாளத்தில் எழுதப்பட்ட இலக்கிய செல்வங்களை இழந்துவிடக்கூடாது’ என்ற பொருளில் ராஜம் அவர்கள் எழுதியதாக நினைவு. திரு. ஜார்ஜ் ஹார்ட் அவர்களின் பதிவு விரிவுபடுத்தப்பட்ட தமிழ் ஒருங்குறி பற்றியதாகவே இருந்தது. பிரத்யேகமாக இந்தப் பிரச்சனை குறித்து அவர் என்ன நினைக்கிறார் எனத் தெரியவில்லை.
ஒரு மொழியின் எதிர்காலப் பயன்பாடு குறித்து முக்கியமான முடிவை எடுப்பதற்கான நடவடிக்கை இது. ஆனால்,  இப்பிரச்சனை குறித்து முறைப்படி தமிழக அரசை மத்திய அரசு கலந்தாலோசித்ததாகத் தெரியவில்லை.
எவருக்கும் தெரியாமலேயே இந்தப் பிரச்சனை முடிந்து போயிருக்கும். இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய அனைவருக்கும் நன்றி. நாளை நடைபெறும் கூட்டம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துவதென்பது அதில் பங்கேற்கும் அறிஞர்களைப் பொருத்தது. 
அழைக்கப்பட்ட அனைவரும் பங்கேற்பார்கள் என நம்புவோம்.7 comments:

 1. அன்பின் ரவிக்குமார்,
  தங்கள் முயற்சி, அதுவும் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியின் இசைவுடன் இந்தக் கிரந்த எழுத்துத் தொடர்பான கருத்தரங்கைக் கூட்ட முனைந்தது மிகவும் பாராட்டற்குரியது.
  நானும் திரு வரத தேசிகன் போல இந்த விவாதங்கள் பற்றி அறியாமலே தனிப்பட்ட நிலையிலேயே என் பணியைத் தொடர்ந்துகொண்டிருக்கிறேன். எந்தக் குறிப்பிட்ட குழுவினர்பாலும் எனக்குச் சார்பில்லை -- தமிழ் இலக்கிய இலக்கணங்களே என் குழுவை எனக்கு ஆக்கித் தருகின்றன.
  தமிழ் இலக்கிய, இலக்கணப் பயனாளி என்ற முறையில் மட்டுமே இந்தக் குறுகிய காலத்தில் என்னால் பங்கு பெற முடியும். அந்த வகையில் நான் முன்பு தெரிவித்த அதே கருத்தை மீண்டும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்:
  "நம் பழைய இலக்கியங்களை, மணிப்பிரவாளத்தில் எழுதப்பட்ட இலக்கிய செல்வங்களையும் சேர்த்துத்தான், நாம் இழந்துவிடக்கூடாது."
  இதுவரை மக்கள் செய்திருக்கும் கணினிக் கிரந்த எழுத்துக்களின் செய்முறை நுணுக்கம் (technical details) பற்றி ஒட்டியோ வெட்டியோ பேசி, தேவையான தெரிவுகள் தர இப்போது எனக்கு வசதி இல்லை. பொறுத்தருளவேண்டும்.
  அன்புடன்,
  ராஜம்

  ReplyDelete
 2. Tamil and Manipravalam are mutually exclusive. If one is there other is dead! And thats history too!
  Tamils in general pay greater amount of interest in protecting others' at the expense of their own.
  Nature of Tamils!

  No school taught me that Manipravalam is mine!
  Instead it belongs to Manipravalamites!

  When Manipravalam was official, Tamilnadu was allowed to educate less than 1% of the population.
  I dont know what they miss to reach over 80% ;
  And I honestly do not know what would I miss if I dont shoulder Manipravalam.
  We are Retrieving the "Symbol of Shame"!

  God bless Tamil !!

  Regards
  naaga elangovan

  ReplyDelete
 3. Dear Ravikumar

  Thanks

  In short

  As a Technical person, with knowledge of Tamil& Tamil Grantha "We should only encode missing grantha characters in a new extended grantha block"

  If a character is encoded in Tamil or Malayalam block there is no reason to encode them again in a new extended block, that adds many technical issues in the matured Tamil Unicode implementation.

  anbudan
  .kavi.

  ReplyDelete
 4. அன்பின் ரவி:
  இதோ நமது உற்ற நண்பரும் ஆய்வாளருமான ஒருவரின் கருத்து: Since he wants write an article, do not circulate this but use the info:

  I agree with the [George Hart's]views.

  The Tamil alphabet and phonemes as specified by Tholkaapiyam should not be mixed with Granta designed to write Sanskrit. In the meantime, the Granta alphabet evolved by Tamils to write Sanskrit is also a heritage of Tamils. The influence of this heritage could be seen in the Sinhala alphabet and also in all the Southeast Asian alphabets.

  As the writer has said one should not allow the Granta script to disappear altogether, just because the Indian government has adopted Devanagari as the standard script. Until recent times Sanskrit texts were published in Jaffna in Granta alphabet. To my knowledge, Sri Lanka Book Depot Press and Sothida Vilaasa Press had Granta font to publish books.

  இதனையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
  சேரன்
  Dr.R.Cheran

  ReplyDelete
 5. அன்பிற்கினிய சகோ...

  வணக்கம். தங்களின் விடா முயற்சியும் ஆர்வமும் மகிழ்ச்சியைத் தருகிறது. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. தமிழகத்தில் பலருக்கு அடிப்படை கிரந்தம் தெரியும். பல வேத பாடசாலைகளில் கிரந்தம் உண்டு.
  பல வேத விற்பன்னர்களுக்கு கிரந்த வேத புத்தகம் படிக்கும் திறமை இன்றும் உண்டு. எனவே வரததேசிகன் சொல்வது போல அவருக்கு பின் கிரந்த மொழி அழிந்து விடும் என்பது தவறு.

  இன்றும் வேதங்களை படிக்க(ஸ்வரத்ஹுடன், ஏற்ற இறக்கங்களுடன்) படிக்க கிரந்தமே சிறந்தது.

  கிரந்தம் தனியான ஒரு மொழியாக இருக்கலாம். படிப்பதும், படிக்காமல் இருப்பதும் அவர் அவர் விருப்பம்.

  ReplyDelete
 7. As it already has been stated in the local veda palli archakarkal read and write in grantha. So there won’t be any dearth of grantha learners as long as our Hindu gods are going to be worshipped in tamizhnadu. All these hypes about grantha comes only from taminadubrahmins.!! Other Sanskrit sholars are quite content in writing and reading Sanskrit with devnagiri and now they have added a vedic block there is no constrain in writing Sanskrit using devanagiri. I don’t understand why people some are still insist on writing Sanskrit with grantha.
  Giving grantha a separate block is good suggestion But hearsay says that these guys are adamant to enter tamil block( . that is why we think there is conspiracy behind this move. Another point is will Unicode consortium allow two kinds of character sets to write the same language I wonder.
  Another concern that we are going to lose hosts of literature written in manipiravalam?
  1.There are ways to represent grantha letters by tamizh characters
  2, Grantha characters can still be learned by those who are interested in the obsolete manipiraalam
  3. As thiru naga Elangovan said Tamizh and manipiravalamare two different things
  And why we are so keen to destroy our own language to protect our own I wonder.
  The best thing is to remove the remnants of grantha characters removed from the tamizh once for all. Otherwise we are going to be engaged in this controversy forever.
  Anbudan
  Philip

  ReplyDelete