Saturday, December 25, 2010

ஹரிஜன்கள் அல்ல தலித்துகள்
தமிழகத்துக்கு ராகுல் காந்தி வந்துசென்றதைப்பற்றி ஊடகங்கள் பரபரப்போடு  செய்திகளை வெளியிட்டுவருகின்றன.இங்குவந்தவர் காங்கிரஸில் இருக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நிர்வாகிகளைத் தனியே அழைத்துப் பேசியதாகச் செய்திகள் வந்தன. அதுகுறித்து என்னிடம் குமுதம் ரிப்போர்ட்டர் இதழின் நிருபர் ஒருவர் கருத்து கேட்டார். இப்படி தனியே சந்திப்பதைப் பற்றி காங்கிரஸ்காரர்களே அதிருப்தி அடைந்திருப்பதாகவும் அதுபற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்றும் கேட்டார். “ காங்கிரஸ் கட்சி தாழ்த்தப்பட்டவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து வந்திருக்கிறது. திரு.கக்கன் அவர்களை உள்துறை அமைச்சராக்கியது. மரகதம் சந்திரசேகர் மற்றும் எல்.இளையபெருமாள் ஆகியோரை மாநிலத் தலைவர்களாக நியமித்தது. அதன் தொடர்ச்சியாகவே இப்போது ராகுல் காந்தியும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் தர விரும்புகிறார் என நினைக்கிறேன். இப்படி ஒரு தேசிய கட்சி தாழ்த்தப்பட்டவர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது நல்லதுதான். அதைப் பார்க்கும் மற்ற மாநிலக் கட்சிகள் தாங்களும் அப்படிச் செய்தாகவேண்டும் என்று எண்ணக்கூடும்.அது அந்த மக்களுக்கு நன்மை பயப்பதாகவே இருக்கும்.” என நான் சொன்னேன்.

நல்லவர்கள் அரசியலில் ஈடுபடவேண்டும் என்ற ராகுலின் கருத்துபற்றிய எனது எதிர்வினையை ஹலோ எஃப் எம் வானொலியில் கேட்டார்கள். “ நல்லவர்கள் என்பதற்கு அவர் என்ன விளக்கம் வைத்திருக்கிறாரோ தெரியவில்லை. படித்தவர்கள், மேல்தட்டு வகுப்பைச் சேர்ந்தவர்கள்- அவர்களைத்தான் அவர் நல்லவர்கள் என்று கருதமாட்டார் என நம்புகிறேன். நாட்டுப்பற்று மிக்கவர்கள். எளிமையாக இருப்பவர்கள். மக்களுக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொள்பவர்கள்.அப்படியானவர்கள் இப்போது அரசியலில் குறைந்துவிட்டார்கள். இதற்குத் தொண்டர்கள் மற்றும் பொது மக்களின் மனோபாவமும் மாறவேண்டும். எப்படியான வாழ்க்கை நெறியைப் பின்பற்றவேண்டும் என்பதை சங்க காலத் தமிழர்கள் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்கள். நாம் அதிகம் மேற்கோள் காட்டும் கணியன் பூங்குன்றனின் ‘ யாதும் ஊரே .. என்ற பாடலில் வரும் கடைசி வரிகள் மிகவும் முக்கியமானவை. “ பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே ‘ என்ற வரிகள் நமக்கு மிக முக்கியமான செய்தியைச் சொல்கின்றன. சிறியோரை இகழ்தல் இலமே என்பதை நாம் எல்லோருமே ஏற்றுக்கொள்வோம்.   ஆனால் பெரியோரை வியத்தலும் இலமே என்பதை அப்படி எளிதில் ஏற்க மாட்டோம். அரசியலில் மட்டுமின்றி வாழ்வின் அனைத்துத் தளங்களிலுமே இந்த பண்பு மேலோங்கி இருக்கிறது. ' ஹீரோ வொர்ஷிப் ‘ எனப்படும் தனிமனித வழிபாட்டைக் களைய வேண்டியது உடனடித் தேவை ஆகிவிட்டது. மாமனிதர்களைக் கொண்டாடுவது வேறு தனிமனிதர்களை பூஜிப்பது என்பது வேறு. பெரியோரை வியத்தல் இலமே என முடிவு செய்துவிட்டால் தானாகவே இந்த கட் அவுட் கலாச்சாரம் முடிவுக்கு வந்துவிடும்.எளிமையும் நாட்டுப்பற்றும் மக்களுக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொள்ளும் உணர்வும் கொண்டவர்கள் காங்கிரஸில் இருப்பார்கள். அத்தகையவர்களைக் கண்டறிந்து அவர்களை முன்னிலைப்படுத்த ராகுல் காந்தி அவர்கள் முன்வரவேண்டும். காங்கிரஸின் பொதுச் செயலாளராக இருக்கும் ராகுல் முயற்சித்தால் இது சாத்தியம்தான்” என நான் பதில் சொன்னேன்.

தமிழகத்தின் முதல்வராக தலித் ஒருவரை ஆக்குவோம் என ராகுலும் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும் பேசி வருகின்றனர். இது மிகவும் வரவேற்கத்தக்கதாகும். ஆனால் அவர்கள் தலித் என்ற சொல்லின் அரசியல் பரிமாணத்தைப் புரிந்துகொண்டு பயன்படுத்துகிறார்களா என்று தெரியவில்லை. வர்ணாசிரமக் கோட்பாட்ட்டை அடிப்படையாகக் கொண்ட வைதீக இந்து மதத்தை நிராகரிப்பதே தலித் அடையாளம். அதைப் புரிந்துகொள்ளவேண்டுமெனில் அவர்கள் அம்பேத்கரின் ‘ இந்துயிசத்தின் தத்துவம்’ என்ற நூலைப் படிக்கவேண்டும். சாதி ஒழிப்பை தனது குறிக்கோளாகக் கொண்டதே தலித் அடையாளம். அதன் ஆழத்தை விளங்கிக்கொள்ள அவர்கள் அம்பேதகரின் ‘ சாதி ஒழிப்பு ‘ என்ற நூலைப் படிக்கவேண்டும். அவற்றையெல்லாம் படித்தால் அவர்களுக்கு ஒரு உண்மை  புலப்படும். காங்கிரஸில் இந்து மதத்தை நிராகரிக்கிற சாதி ஒழிப்பை வலியுறுத்துகிற ' தலித்’ எவரும் இல்லை என்ற உண்மைதான் அது.காங்கிரஸில் மட்டுமல்ல இடதுசாரிக் கட்சிகள் உள்ளிட்ட எந்தவொரு அரசியல் கட்சியிலுமே ’ தலித்’ ஒருவர் இருக்க முடியாது. அதனால்தான் தனியே தலித் கட்சிகள் உருவாகி இருக்கின்றன.   அரசியல் கட்சிகளில்  தாழ்ததப்பட்டவர்கள் இருக்கலாம், ஹரிஜன்கள் இருக்கலாம், தலித் இருக்க முடியாது.
அதைத்தான் அம்பேத்கரின் மிக முக்கியமான ஆய்வு நூலான ‘ காந்தியும் காங்கிரசும் தீண்டாத மக்களுக்குச் செய்ததென்ன” என்ற நூல் எடுத்துக்காட்டுகிறது.
ஏனென்றால் அரசியல்  கட்சிகள் இந்துமதத்தை எதிர்த்துப் போராடவில்லை . சாதி ஒழிப்புக்காகப் பாடுபடவும் இல்லை . உண்மையிலேயே அரசியல் கட்சிகள் சாதி ஒழிப்பை ஏற்றுக்கொள்வார்களெனில் முதலில் தமது கட்சியில் உள்ளவர்கள் தமது பெயர்களில் சாதிப் பெயர்களை பின்னொட்டாகப் பயன்படுத்தக்கூடாது என அறிவிக்கவேண்டும்.

 காங்கிரஸ் தலைவர்கள் சாதி ஒழிப்பை ஏற்பது உண்மையென்றால் பாபு ஜகஜீவன்ராமைப் பிரதமராக விடாமல் தடுத்த பாவத்துக்குப் பிராயச்சித்தமாக அடுத்த பிரதமராக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை ஆக்குவோம் என அறிவிக்கவேண்டும்.

காங்கிரஸ் தலைவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களை வாக்கு வங்கியாகப் பார்த்து அதைச் சுரண்டலாம் என எண்ணக்கூடாது . காந்தி இன்றில்லை, அதுபோலவே காந்திகால ஹரிஜன்களும் இன்றில்லை, தமிழகத்தில் இருப்பவர்கள் விழிப்புணர்வுபெற்ற தலித்துகள்.அதை அவர்கள் புரிந்துகொண்டால் நல்லது.

2 comments:

 1. ரவிக்குமார் அவர்களே

  தமிழ்நாட்டையும், இந்தியாவையும் பெரும் அளவில் பீடித்திருக்கும் வியாதி தனிமனித துதியும் குடும்ப / வம்ச அரசியல் ஆகும்.

  தமிழ்நாட்டில் தனிமனித துதி பல வழிகளில் வெளியாகிறது , நீங்கள் சொல்லும் `கட் ஔட்` கலாசாரம், ஹீரோ ஒர்ஷிப், மனிதர்களுக்கு பட்டம் கொடுப்பது. மனிதனை மனிதனாக ஏற்க்காமல், பட்டதாரியாக ஏற்க்கும் மனப்பான்மை பகுத்தறிவிற்க்கும், மனித நேயத்திற்க்கும் புரம்பானது. அதனால்தான் தமிழ்நாட்டில் தடுக்கி விழுந்த இடத்தில் கலைஞர்களும், பாவலர்களும், மூதறிஞர்களும், நாவலர்களும், பெரியார்களும், பகலவன்களும், இன்னும் நானாவித முத்திரை தாங்கியவர்களும் உளர்.

  இந்த தனிமனித ஹீரோ ஒர்ஷிப்பின் உடன்பிறப்பு வம்ச துதி. வம்சதுதி மனப்பன்மை விவேகம், அறிவு, புத்தி, நிதானம், தீர்கதரிசனம், மக்கள் மேல் அன்பு, மக்கள்நலக் கொள்கைகள் போன்றவை நாட்டின் சில குடும்பங்களில்தான் இருக்க முடியும் என்ற மூட நம்பிக்கை, அவை சில குடும்பங்களின் சொத்து என்ற பழங்குடி மனப்பன்மை. ஒரு மனிதனை அவன் சமுதாய செயல்கள்/சிந்தனைகள் மூலம் அளவிடாமல், அவன் அல்லது அவள் எந்த குடும்பத்தில் பிறந்தவர் என்று எடைபோடுவது இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் ஜனநாயகத்தை தடம் புரள வைத்துள்ளது. இந்த `குடும்ப துதி`யின் மூல காரணம் காங்கிரஸ். அதைக் காப்பியடித்து இந்தியாவில் சில குடும்பங்கள்தான் அரசியலிலும், செல்வத்திலும் முன்னேறுகிறன.

  இந்த இரண்டு ஜனநாயக அழிப்பு போக்கையும் உங்கள் தலித அரசியல் எதிர்க்கும் என்றால், அதற்க்கு என் முழு ஆதரவு.

  மதிப்புடன்

  வன்பாக்கம் விஜயராகவன்

  ReplyDelete
 2. கட் அவுட் கலாச்சரத்தில் சிக்கித்தவிப்பது தொல்.திருமாவும்தான். வி.சியிலும் இது உச்சத்திலுமுள்ளது. துதிபாடுவது எல்லா போஸ்ட்டர்களிலும் தெரிகிறது.

  டே னியல் செளந்தரன்.
  கோவை.

  ReplyDelete