Monday, December 20, 2010

சிதம்பரத்தில் உள்ளது பௌத்த கோயிலா?

சிதம்பரம் கோயிலில் எழுத்தாளர் அருந்ததிராயுடன் ரவிக்குமார் 


( உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டிருக்கும் " மீளும் வரலாறு - அறியப்படாத நந்தனின் கதை" என்ற எனது நூலில் ஒரு அத்தியாயம் )


‘‘வெற்றரையுழல்வார் துவர் ஆடைய
வேடத்தாரவர்கள் உரை கொள்ளன்மின்
மற்றவருலகின் னவலம்மவை மாற்றகில்லார்
கற்றவர் தொழுதேத்து சிற்றம்பலம்...’’
       எனப்பாடுகிறார் திருஞானசம்பந்தர். (தேவாரம், மூன்றாவது திருமறை, பதிகம் 10)
இடுப்பில் ஆடையில்லாமல் திரிபவர்களாகிய சமணர்களின் உரைகளையும், துவர் ஊட்டிய ஆடை அணிபவர்களாகிய பௌத்தர்களது பேச்சையும் பொருட்படுத்தாதீர்கள். அவர்கள் இந்த உலகின் அவலத்தை மாற்றும் வல்லமை உள்ளவர்களல்லர். (ஆகமங்களைக்) கற்றவர்கள் தொழுது புகழுகின்ற சிற்றம்பலம் (சிதம்பரம்) மீதான விருப்பத்தால் கழலணிந்த பாதங்களை வணங்குபவர்களே உலகின் உறுதியைப் (ஆன்மலாபத்தை) பெறக்கூடியவர்கள் என்பது இதன் பொருள் (மாணிக்க வாசக முதலியார் - திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார், தருமபுர ஆதினம், 1956)
கோயில் என்பதையே சிறப்புப் பெயராகக் கொண்ட சிதம்பரத்துக்கு மேலும் பல பெயர்கள் உண்டு. பெரும்பற்றப் புலியூர் (பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே- அப்பர்) என்பது பழைய பெயராகும்.
சிதம்பரம், தில்லைவனம், தில்லை என வேறு பல பெயர்களும் உண்டு. இந்தக் கோயிலைப் பார்த்தாலே போதும் முத்தி அடைந்துவிடலாம் என்பது நம்பிக்கை. வியாக்கிரபாதர், பதஞ்சலி, உபமன்யு, வியாசர், சூதர் முதலான முனிவர்களும், திருநீலகண்டர், திருநாளைப் போவார் (நந்தன்) கூற்றுவர். கணம்புல்லர், கோச்செங்கணான், மாணிக்கவாசகர், சேக்கிழார் என்னும் சந்தானகுரவர்களும், இரணியவர்மன், சேந்தனார், பெற்றான் சாம்பானார் என்னும் அடியார்களும் வழிபட்டு சொர்க்கத்தை அடைந்த கோயிலென்றும்; பௌத்தர்களை வாதில் வென்று ஊமைப் பெண்ணை பேசச் செய்த மாணிக்கவாசகர் வாழ்ந்த கோயிலென்றும் இதனைப் பற்றி மாணிக்கவாசக முதலியார் பாராட்டிக் கூறியுள்ளார்.
இந்தக் கோயில் குறித்து பாடப்பட்ட ஏராளமான இலக்கிய நூல்கள் உள்ளன. தேவாரம், திருவாசகம், திருக்கோவை, திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருமந்திரம், கோயில் நான்மாரி மாலை, திருப்பணியர் விருத்தம், பெரிய புராணம் முதலான தமிழ் நூல்களும்; கோயில் புராணம், சிதம்பரம் புராணம், சபா நடேசபுராணம் முதலான தமிழ்ப் புராணங்களும்; சூதசம்மிகை, சிதம்பரமான்மியம், புண்டரீகபுர மான்மியம், வியாக்கிரபுர மான்மியம் முதலான வடமொழி நூல்களும் உள்ளன. இவைகளன்றி குமரகுருபரர் இயற்றிய சிதம்பரம் மும்மணிக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, சிவகாமி அம்மை இரட்டை மணிமாலை, இரட்டைப் புலவர்களால் பாடப்பட்ட தில்லைக் கலம்பகம் முதலான நூல்களும் இந்தக் கோயிலைப் பற்றி எழுதப்பட்டுள்ளன. இப்படித் தமிழில் 43 நூல்களும், வடமொழியில் 41 நூல்களும் உள்ளன. இந்த இலக்கியங்கள் மட்டுமின்றி சிதம்பரம் கோயிலின் சுவர்களில் முன்னூறு கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. இவை யாவும் இந்தக் கோயிலின் வரலாற்றை அறிந்துகொள்ள உதவக்கூடிய அடிப்படை ஆதாரங்களாக உள்ளன.
இலக்கியங்களை ஆதாரங்களாகக் கொண்டு சிதம்பரம் கோயிலின் காலத்தை அறிந்துகொள்வதில் பல தடைகள் உள்ளன. ஏனென்றால் அந்த இலக்கியங்களின் காலத்தையே அறிந்துகொள்ள முடியாதபடி இந்துக்கள் பூடகப்படுத்தியுள்ளனர். ‘‘பெரும்பாலான இந்துக்கள் வைதீகராயினும், வைதீகமற்றவராயினும், கற்றவராயினும் கல்லாதவராயினும் ஓர் அசைக்க முடியாத நம்பிக்கையை வைத்துள்ளனர். அதாவது தங்களுடைய இந்தப் புனித நூல்கள் யாவும் மிகமிகப் பழமையான காலத்தவை என்பதே அந்த நம்பிக்கை. ஒவ்வொரு இந்துவும் தம்முடைய புனித இலக்கியங்கள் தொல் பழங்காலத்தை என்று நம்புவதே தமது புனிதக் கடமையாகக் கொண்டுள்ளனரென்பதே உண்மையாகும்’’ (பாபாசோகேப் டாக்டர் அம்பேத்கர் - பேச்சும் எழுத்தும், தொகுதி 7 (தமிழ்) பக்கம் 127 அந்த உண்மைதான் சிதம்பரத்துக்கும் பொருந்துகிறது.
சிதம்பரத்தின் மகிமையை முதலில் பரமசிவன் நந்திகேசவரிடம் சொன்னதாகவும், அவர் ஸனத்குமார முனிவருக்குச் சொல்ல, அவர் வியாசருக்குச் சொல்ல, வியாசர் அதனை ஸீத முனிவருக்குச் சொல்ல அவர் அதனை நைமிசவனத்தில் இருந்த முனிவர்களிடம் சொல்வதாக சிதம்பர மஹாத்மியம் குறிப்பிடுகின்றது. (ராஜா. ஸோம. கல்யாண ஸபேச தீட்சதர் - சிதம்பர மாஹாத்மியம், (ஆண்டு குறிப்பிடவில்லை) சிதம்பரம் எட்டுமைல் சம சதுரமுள்ளதெனவும், அழகிய நான்கு கோபுரங்கள் கொண்டிருப்பதாகவும், அதில் குறிப்பிடப்படுவதால் கோபுரங்கள் கட்டப்பட்ட பின்னரே இந்த வடமொழி நூல் இயற்றப்பட்டிருக்க வேண்டும் எனக் கூறலாம்.
இப்போதுள்ள கோயிலின் அமைப்பு பற்றி முதலில் தெரிந்துகொள்வோம். இப்போதுள்ள நடராசர் கோயில் ஐம்பத்தோரு ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இதில் நான்கு கோபுரங்கள் உள்ளன. இந்த கோபுரங்கள் ஒவ்வொன்றும் 135 அடி உயரம் உடையது. ஏழு தளங்களும், பதின்மூன்று பெரிய செப்புக் கலசங்களும் கொண்டது. இந்த கோபுரங்கள் 90 அடி நீளமும், 60 அடி அகலமும் உள்ள நீண்ட சதுர அமைப்புடன் கூடிய அடிப்பகுதியை உடையவை. 36 அடி உயரம் வரை நேராகவும், கருங்கல்லாலும் கட்டப்பட்டவை. கோபுரங்களின் கீழே அமைந்துள்ள கோபுர வாசல்கள் 40 அடி உயரம் கொண்டவை. நான்கு கோபுரங்களைச் சுற்றிலும் சுமார் 30 அடி உயரமுள்ள கருங்கல்லாலான மதிற்சுவர் அமைந்துள்ளது. இது வீரப்பநாயகர் காலத்தில் புதுப்பிக்கப்பட்டதால் வீரப்ப நாயகர் மதில் என அழைக்கப்படுகிறது. இந்தக் கோயிலின் உள்ளே முக்குறுணி விநாயகர் கோயில், கற்பக விநாயகர் கோயில், சுப்பிரமணியர் கோயில், சோமசுந்தரர் கோயில், சிவகாம சுந்தரி கோயில், பாண்டிய நாயகர் கோயில் முதலான கோயில்களும் உள்ளன. (டாக்டர் ச.மெய்யப்பன் - தில்லை திருக்கோயில், மணிவாசகர் பதிப்பகம், 2002 (ஏழாம் பதிப்பு)
‘‘கைலாசத்தைவிடச் சிறந்தது. முவ்வுலகிலும் இதற்கு நிகரான கோயில் கிடையாது. அழகிய நான்கு கோபுரங்கள் என உருவமாக அமைந்துள்ளன’’ எனப் பரமசிவன் நந்திகேசவரரிடம் சொன்னதாக ‘சிதம்பர மாஹாத்மியம்’ குறிப்பிடுகிறது. அப்படி அனாதி காலத்தில் இருந்தவையாக வர்ணிக்கப்படும் அந்தக் கோபுரங்கள் எப்போது கட்டப்பட்டன என்பதைக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
தெற்குக் கோபுரம் பாண்டிய மன்னன் ஒருவனால் கட்டப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. ‘‘கோபுரவாசல் மேல் தளத்திலும் இரு அருகால்களிலும் இரட்டைக் கயல் மீன்கள் பொறிக்கப் பெற்று அவைகளின் நடுவில் செண்டும் செதுக்கப்பட்டுள்ளன. அப்படி செதுக்கப்பட்டிருந்தால் அத்திருப்பணி பாண்டியனுடைய காலத்தில் முற்றுப் பெற்றதைக் குறிக்கும். முற்றுப் பெற்றதாயின் ஒரே கயல்மீன்தான் செதுக்கப்பட்டிருக்கும். எனவே, இத் தெற்குக் கோபுரம் பாண்டியர் ஒருவரால் முதல் முதலில் கட்டப்பெற்றது என்பது உறுதியாகும்.’’
ஆனால் இது தொடர்பாக கிடைத்துள்ள வேறு இரு கல்வெட்டுகள் இக்கோபுரம் முதலாம் கோப்பெருஞ்சியங்கள் கட்டியது எனத் தெரிவிக்கின்றன. ‘‘செங்கல்பட்டு தாலுக்கா முக்தீஸ்வரர் கோயிலில் வடமேற்குப் புறச்சுவரில் செதுக்கப்பட்டிருக்கும் கல்வெட்டு கோப்பெருஞ்சிங்க தேவர்க்கு பாண்டு ஐந்தாவது தனியூர் பெரும்பற்றப்புலியூர் உடையார் திருச்சிற்றம்பல முடையார்க்கு அழகிய சீயன் அவனி ஆளப் பிறந்தான் காடவன் கோப்பெருஞ்சிங்கனேன். இந்நாயனார் கோயில் தெற்குத் திருவாசலில் சொக்கசீயன் திருநிலை ஏழு கோபுரமாகச் செய்த திருப்பணிக்கு உடலாக’’ எனத் தொடங்குகிறது. மேலும் கர்நூல் ஜில்லா மார்க்காப்பூர் தாலுக்கா திருப்புராந்தகத்தில் உள்ள நாகரியிலும், தெலுங்கிலும் வெட்டப்பட்ட கல்வெட்டு இத்தெற்குக் கோபுரம் முதலாம் கோப்பெருஞ்சிங்கனால் கட்டப் பெற்றதைக் குறிப்பிடுகின்றது. எனவே முதலில் பாண்டியர் ஒருவரால் கட்டப்பெற்றிருந்த இக்கோபுரத்தில் கோபுரவாசலின் மேல்தளம் வரை வைத்துக்கொண்டு எஞ்சிய பகுதிகளை இடித்துவிட்டு முதலாம் கோப்பெருஞ்சிங்கன் கட்டினான் என்று கொள்ளுதல் பொருத்தமுடையதாகும். (மாணிக்க வாசக முதலியார் & பக்கம் சா 0 & சா க)
மேற்குக் கோபுரம் முதலாம் ஐடாவர்மன் சுந்தர பாண்டியனாலும் வடக்குக் கோபுரம் கிருஷ்ண தேவராயராலும் கட்டப்பெற்றன. கிழக்கு கோபுரம் இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனால் கட்டப்பட்டதாகும். சிதம்பரம் நடராசரை சோழ மன்னர்கள் தமது குலதெய்வமாகக் கொண்டு சிறப்பித்து வந்துள்ளனர். ‘‘தன் குலநாயக தாண்டவம் பயிலும் செம்பொன் அம்பலம் சூழ் திருமாளிகையும்’’ என்னும் திருமழபாடிச் சிவன் கோயிலில் பொறிக்கப்பட்டுள்ள விக்கிரமசோழனின் கல்வெட்டு அதனை அறியத்தருகிறது. சோழ மன்னர்களின் முடிசூட்டு நகரங்களில் ஒன்றாக சிதம்பரம் விளங்கியதை, ‘‘தில்லைத் திருநகர்ங சிறப்புடைத்தாகத் திருமுடி சூடிய’’ எனத் தொடங்கும் திருமாணிக் குழிக் கல்வெட்டு எடுத்துக்காட்டுகின்றது.
சிற்றம்பலத்திற்குப் பொன் வேய்ந்தவனாக முதல் பராந்தக சோழன் அறியப்படுகிறான். இதனைக் குறிக்கும் கல்வெட்டு ஏதும் இல்லையென்ற போதிலும் ‘ஜிலீமீ லிணீக்ஷீரீமீ லிமீவீபீமீஸீ நிக்ஷீணீஸீt’ என்ற இருபத்தொரு இதழ்கள் அடங்கிய செப்புப் பட்டயம் உள்ளது. அது இப்போது ஹாலாந்து நாட்டில் லெய்டன் பல்கலைக்கழகத்து மியூசியத்தில் உள்ளது. அதில் ‘‘ஆதித்த சோழன் மகளாகிய முதல் பராந்தா சோழன் வியாக்கிர அக்கிரகாரத்திலுள்ள கோயிலைப் பொன் வேய்ந்தான்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. (மாணிக்க வாசக முதலியார் & பக்கம் சா அ)
இந்தக் கோயிலுடன் சோழர்கள் கொண்டிருந்த உறவு இப்படியாக இருந்தபோதிலும் இக்கோயிலோடு முதலில் தொடர்பு கொண்டிருந்த மன்னர் யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் அது பற்றிப் பல்வேறு கதைகள் சொல்லப்படுகின்றன. கி.பி. பதினொன்று அல்லது பன்னிரெண்டாம் நூற்றாண்டுகளில் இக்கோயிலில் தற்போதுள்ள சுவர்கள் எழுப்பப்பட்டு அவற்றில் கல்வெட்டுகள் பொறிக்கப்படுவதற்கு முன்னால் இக்கோயில் பற்றிய வரலாறு பெரும்பாலும் புராணங்களின் அடிப்படையிலேயே சொல்லப்படுகிறது.
கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டுக்கு முன்னால் இக்கோயிலானது தில்லை மரங்கள் அடர்ந்த ஒதுக்குப்புறமான காட்டுக்குள்ளேயே இருந்துள்ளது. அந்தக் காலத்தில் காவேரிப்படுகையானது வளர்ச்சியடையாத பகுதியாகவே இருந்துள்ளது. அப்பகுதியில் பாசன முறை பின்னரே அறிமுகமாகியுள்ளது. கொள்ளிடம் ஆறு வெட்டப்பட்ட பின்னரே தற்போது காவேரி டெல்டாவின் வடகிழக்கு மூலையில் உள்ள சிதம்பரம் வளர்ச்சிபெறத் தொடங்கியது. அதற்கு முன்னர் வணிகம், அரசியல், கலாச்சாரம் ஆகியவற்றின் மையமாக தெற்கில் மதுரை இருந்து வந்துள்ளது. வடக்கில் காஞ்சிபுரம் இருந்துள்ளது. காஞ்சிபுரம் பின்னர் பல்லவரின் தலைநகராக மாறியது. இக்கால கட்டத்தில் மதுரை, காஞ்சிபுரம் முதலான மையங்கள் சிதம்பரத்தோடு தொடர்பு கொண்டிருந்ததாகப் புராணக் கதைகள் கூறுகின்றன. சிதம்பரத்தோடு ஆரம்ப கட்டத்தில் தொடர்பு வைத்திருந்தவர்களாக ஹிரண்யவர்மன், களப்பிரர்கள், மாணிக்கவாசகர், மகேந்திர வர்மன், கோச் செங்கனான் ஆகியோர் அறியப்படுகிறார்கள். இவற்றுள் ஒருசில, இலக்கிய ஆதாரங்களால் உறுதிப்படுத்தப்படுகின்றன. இதில் களப்பிரர்கள் பற்றிய செய்தி நம் கவனத்துக்குரியதாகும்.
களப்பிரர்கள் பற்றிய குறிப்பு வேள்விக்குடிச் செப்பேடுகளில் தான் காணக்கிடக்கிறது. கி.பி. மூன்றாம் நூற்றாண்டுவாக்கில் பாண்டிய அரசை சிதைத்து சீரழித்தவர்களென களப்பிரர்களைக் கண்டித்து வேள்விக்குடி செப்பேட்டில் எழுதப்பட்டுள்ளது. பாண்டியர்களுக்கு அவர்களைப் பிடிக்க வில்லையென்றபோதிலும் களப்பிரர்கள் திறமையான ஆட்சியாளர்களாக இருந்தனர் என்பது தெரிகிறது. அக்காலத்தில் வாழ்ந்திருந்த பௌத்த அறிஞரான புத்த தத்தர் ‘‘சோழநாடு என்னும் தேரில் அவர்கள் (களப்பிரர்கள்) அச்சாக விளங்கினார்கள்’’ எனப் புகழ்ந்துரைத்துள்ளார். களப்பிரர்களில் புகழ்பெற்று விளங்கிய மன்னனான அச்சுத விக்காந்தா குறித்த புராணம் அவன் சேர, சோழ, பாண்டிய மன்னர்களை சிறைப்பிடித்ததாகக் கூறுகிறது. அத்தகைய களப்பிர மன்னர்கள் சிதம்பரத்தைத் தங்கள் தலைநகராக வைத்திருந்ததாக ஒரு செய்தியை நடராஜன் என்ற ஆராய்ச்சியாளர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். (B. Natarajan - The city of the cosmic dance, New Delhi: Orient Longman, 1974)
களந்தைய ஆண்ட களப்பிர மன்னனான குற்றுவன், சிதம்பரத்தில் இருந்த (தீட்சதர்களால்) புரோகிதர்களால் தனக்கு முடிசூட்டப்பட வேண்டுமென ஆசைப்பட்டதாக சில தகவல்கள் உள்ளன. அப்படி அவன் கேட்டபோது தில்லைவாழ் அந்தணர்கள் முடி சூட்ட மறுத்துவிட்டதாகவும், தாங்கள் சோழ அரச குடும்பத்துக்கு விசுவாசிகளென தெரிவித்து விட்டு கேரளாவுக்குத் தப்பியோடி விட்டதாகவும் அந்தப் புராணக்கதை கூறுகிறது. இறுதியில் பரமசிவனே அந்த மன்னனுக்கு முடிசூட்ட ஏற்பாடு செய்ததாகவும் அதன் பின்பு அம்மன்னன் அரசப் பதவியைத் துறந்து சைவத் துறவியாக மாறிவிட்டானென்றும் அந்தக் கதை கூறுகின்றது.
களப்பிரர்களின் தோற்றம் பற்றிப் பல்வேறு கோட்பாடுகள் உள்ளன. மதுரையை மையமாகக் கொண்டு ஆட்சி புரிந்துவந்த பாண்டிய மன்னர்களின் ஆளுகைக்கு அப்பால் சிதம்பரம் ஒரு மையமாக இருந்துள்ளது. களப்பிரர்கள் கலகத்தில் ஈடுபட்ட உள்ளூர் வாசிகளா? வட இந்தியாவிலிருந்து படையெடுத்து வந்தவர்களா? இலங்கையின் கூட்டாளிகளா? என்பது தெளிவாகத் தெரியவில்லையெனினும் அவர்கள் சிறப்புற ஆட்சி செய்தது உறுதியாகத் தெரிகிறது.
‘‘சிதம்பரம் ஒரு முக்கியமான புனிதத்தலமாக வளர்ந்ததில் களப் பிரர்கள் ஆற்றிய பங்கு என்ன என்பதும் தெளிவுபடவில்லை. களப்பிரர்கள் தமது ஆட்சியில் பிராமணர்களை ஒடுக்கியதாக வேள்விக்குடி செப்பேடு குறிப்பிடுவதையும், பௌத்த அறிஞர் புத்த தத்தர் களப்பிரர்கள் சிறந்த ஆட்சியாளர்கள் எனப் புகழ்வதையும் வைத்துப் பார்க்கும்போது களப்பிரர்கள் பௌத்தர்கள் என்பது மேலும் உறுதிப்படுகிறது. இப்படிச் சுற்றிச் சுழன்று வந்து பார்த்தால் சிதம்பரம் ஒரு காலத்தில் பௌத்த மையமாக இருந்திருக்கவும் வாய்ப்பு உள்ளது’’ எனக் குறிப்பிடுகிறார் சிதம்பரத்தில் உள்ள நடராசர் கோயிலைப் பற்றி விரிவாக ஆராய்ந்து நூலொன்றை எழுதியுள்ள பால் யங்கர். (Paul younger - The Home of Dancing Sivan, OUP 1994) ‘‘அப்படியொரு சாத்தியத்தைப் பற்றி விவாதிப்பதும்கூட பிற்காலத்தில் சிதம்பரம் பெற்றுள்ள சைவ சமய முக்கியத்துவத்தின் பின்னணியில் முட்டாள்தனமாகப் படலாம். ஆனால், பல்வேறு பௌத்த, சமண கோயில்கள் பிற்காலத்தில் இந்து வழிபாட்டு இடங்களாக மாற்றப்பட்டுள்ளன’’ என்கிறார் அவர். அந்த ஆதாரங்கள் மட்டுமல்லாது சிதம்பரம் கோயிலுடன் மாணிக்க வாசகர் கொண்டிருந்த தொடர்பும், சிதம்பரத்தின் பௌத்தத் தொடர்பு பற்றி மேலும் சில ஆதாரங்களைத் தருகின்றன.

3 comments:

 1. பாலமுது போட்டதால் சிதம்பரம் புத்த கோயில். பரவாயில்லையே. ராமர் கோயில் இடித்துதான் பாபர் மசூதி என்ற ஆர்.எஸ்.எஸ் காரனைவிட உங்கள் கண்டுபிடிப்பு மிக நன்றாக உள்ளது.

  ReplyDelete
 2. மிக அருமையான கட்டுரை
  மன்னர்களாலும் ஆட்சியாளர்களாலும்
  புத்த மடாலயங்கள் கோவில்களாக மாற்றப்பட்டதற்கு
  பல கோவில்களில் புத்தரின் வாழ்வினைத் தழுவிய
  சிற்பங்கள் சான்றாக உள்ளன என்பதை மறுக்க முடியாது

  ReplyDelete
 3. மிக அருமையான கட்டுரை
  மன்னர்களாலும் ஆட்சியாளர்களாலும்
  புத்த மடாலயங்கள் கோவில்களாக மாற்றப்பட்டதற்கு
  பல கோவில்களில் புத்தரின் வாழ்வினைத் தழுவிய
  சிற்பங்கள் சான்றாக உள்ளன என்பதை மறுக்க முடியாது

  ReplyDelete