Monday, December 20, 2010

நிறத்தைக் கரைத்த காதல்


உலகின் ஏதோ ஒரு பகுதியில் இருக்கும் ஒரு நாட்டை நாம் அறிந்திருக்க வேண்டுமென்றால் அதற்கு ஏதாவது சிறப்புத்தகுதி இருக்கும். அங்கே வரலாற்று புகழ்பெற்ற ஒரு கட்டிடம் இருக்கலாம், அல்லது, யாரோ ஒரு பெரிய தலைவர் இருந்திருக்கலாம். அல்லது சுற்றுலாத்தலமாக அது புகழ்பெற்றிருக்கலாம். ஜமைக்காவுக்கு இப்படி எந்தவொரு பெருமையும் கிடையாது. கரீபியக் கடலில் கியூபாவுக்கு தெற்கே சுமார் நூற்றைம்பது கிலோ மீட்டர் தொலைவில் மிதந்து கொண்டிருக்கும் சின்னஞ்சிறிய தீவு அது. மொத்த மக்கள் தொகை முப்பது லட்சம்கூட தேறாது.
ஜமைக்கா வெகுகாலம் வரை பிரிட்டிஷ் ஆட்சியின்கீழ் இருந்தது. 1962ல்தான் அதற்கு சுதந்திரம் அறிவிக்கப்பட்டது. இந்தியாவைப்போல அங்கு நடந்ததும் ஆட்சி மாற்றம்தான். கரும்புதான் அந்த நாட்டின் ஜீவாதாரம். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் அங்கு கொண்டுவரப்பட்ட கறுப்பின அடிமைகள் தமது ரத்தத்தைப் பாய்ச்சி விளைவித்த கரும்பும், அவர்கள் உயிரைத்தந்து உற்பத்தி செய்த பாக்ஸைட்டும், அலுமினியமும் ஜமைக்காவை வறுமையில் புதைந்துவிடாமல் காப்பாற்றி வந்தன.
கடந்த ஆண்டு ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடந்தபோது நீங்கள் ஜமைக்காவைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். நூறு மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அதற்கு முன்பான அனைத்து சாதனைகளையும் முறியடித்த உசைன் போல்ட் ஜமைக்காவைச் சேர்ந்தவர்தான். இந்த சாதனை நிகழ்த்தப்படுவதற்கு முன்பு ஜமைக்காவை உலகின் கவனத்துக்குக் கொண்டு வந்தவர் மார்லி. பாப் மார்லியின் தாய் நாடு என்றுதான் ஜமைக்காவை அமெரிக்காவில் அடையாளப்படுத்தனார்கள். அவரால் பிரபலமடைந்த ‘ரெக்கே’ ஜமைக்காவின் ட்ரம் பீட்ஸ்களை உலகெங்கும் பரவச் செய்தது.
உலகப்போரின் செய்திகள் ஒவ்வொருவரையும் நடுநடுங்க வைத்துக் கொண்டிருந்த நேரமது. ஒருபுறம் ரஷ்யாவின் செஞ்சேனை ஈட்டிக்கொண்டிருந்த வெற்றி, இன்னொருபுறம் ஜப்பான் மீது பிரிடடிஷ் விமானங்களின் குண்டுவீச்சு. ஜமைக்கா இந்த யுத்தத்தில் நேரடியாகப் பங்கேற்கவில்லை என்றபோதிலும் பிரிட்டிஷ் காலனியாக இருந்ததால் போரின் பாதிப்புகளுக்கு ஆளாகியிருந்தது. அத்தியாவசியப் பண்டங்களுக்குக்கூட பற்றாக்குறை. 1945ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆறாம் தேதி பத்தொன்பது வயதே ஆன ஸெடில்லாவுக்கு முதல் குழந்தையாக பாப் மார்லி பிறந்தார்.
ஸெடில்லாவின் வாழ்க்கை துயரம் நிறைந்தது. அவரது அப்பா ஒமேரியா அந்தப்பகுதி மக்களால் மதிக்கப்பட்ட பெரிய மனிதராக இருந்தார். முப்பது ஏக்கர் நிலம். அதில் காபித்தோட்டம், விவசாயம் என வசதியாக இருந்தவர்தான் ஒமேரியா. ஆனால் ஸெடில்லாவுக்கு அம்மா இல்லாததுதான் பெரிய குறை. ஸெடில்லா ஒன்பது வயது சிறுமியாக இருந்தபோது அவரது அம்மா இறந்து போனார். தலைவலி, வாந்தி என்று படுத்தவர் அப்படியே செத்துப்போய்விட்டார். எப்படி அந்த மரணம் நேர்ந்தது என்று கண்டறியக்கூடிய வசதியில்லாத கிராமம் அது. மந்திரவித்தைகள் தெரிந்த ஒமேரியாவும்கூட அதைக் கண்டுபிடிக்கவில்லை.
அம்மா இருந்திருந்தால் ஸெடில்லாவின் படிப்பு பாதியில் நின்றிருக்காது. ஒமேரியாவுக்கு தன் மகளின்மீது பாசம் அதிகம். படிக்க வைத்து கஷ்டப்படுத்த வேண்டாம் என்ற நல்லெண்ணத்தில் மகளை வயலுக்கு அழைத்துப் போய்விட்டார். அங்கே ஆரஞ்சுகளும், உருளைக்கிழங்குகளும் ஸெடில்லாவுக்கு விளையாட்டுப் பொருட்களாக மாறின. மரம், செடி கொடிகளோடு சேர்ந்து ஸெடில்லாவும் வேகவேகமாக வளர்ந்து செழித்து நின்றபோது ஒமேரியாவுக்கே ஆச்சர்யம். அப்படியானதொரு நாளில்தான் ஸெடில்லாவை ‘கேப்டன்’ மார்லே பார்க்க நேர்ந்தது. வெள்ளைக்காரரான ‘கேப்டன்’ நோர்வல் சிங்க்ளர் மார்லேவுக்கு வயது கொஞ்சம் அதிகம். இருவருக்குமிடையே இருந்த நிறவேற்றுமையை ஸெடில்லாவின் அழகு மறக்கச் செய்துவிட்டது போலவே, மார்லேவின் வயது பற்றிய பிரக்ஞையை ஸெடில்லாவின் இளமை மறக்கடித்துவிட்டது. ஒமேரியாவின் எதிர்ப்பையும் மீறி கேப்டன் மார்லேவை ஸெடில்லா சந்திக்க ஆரம்பித்தார். தனிமை சந்திப்பு அவரைத் தாயாக மாற்றியது. கறுப்பினத்தைச் சேர்ந்த பெண்ணை ஒரு வெள்ளைக்காரர் திருமணம் செய்து கொள்வதென்பதை நினைத்துக்கூட பார்க்க முடியாத காலம் அது. அப்படியொரு பாதகச் செயலைச் செய்தால் பெற்றோர்களின் சொத்திலிருந்து எதுவுமே கிடைகாது என்பது கேப்டனுக்கு நன்றாகவே தெரியும். ஆனால் ஸெடில்லாவை அவர் கைவிட விரும்பவில்லை.
திருமணம் முடிந்த அடுத்த நாளே ஜமைக்காவின் தலைநகருக்கு புதிய வேலையைத் தேடி கேப்டன் பயணமாகிவிட்டார். அவர் நினைத்ததுபோலவே கேப்டனின் குடும்பம் அவரைத் தலைமுழுகி விட்டது. அதற்காக ஸெடில்லாவை அவர் மறந்துவிடவில்லை. ஒமேரியாவிடம் பணம் கொடுத்து ஸெடில்லாவுக்கு வீடு ஒன்றைக் கட்டச் சொன்னார். ஒரு குன்றின்மீது கட்டப்பட்ட சிறிய அழகிய வீடு அது. அங்குதான் பாப் மார்லி வளர்ந்தார்.
பாப் மார்லிக்கு அவரது அம்மா வைத்த செல்லப் பெயர் ‘நேஸ்டா.’ பாப் மார்லி அம்மாவுக்கு பிடித்த குழந்தை. அடக்கமான பையன். அம்மா எதைச் சொன்னாலும் மறுக்காமல் செய்கிற மகன். பிற்காலத்தில் பாப் மார்லியிடம் வெளிப்பட்ட வேகத்தின் தடயங்களை அவரது சிறுபிராயத்தில் எவரும் பார்த்ததில்லை. கோபம் என்பதே அவருக்குத் தெரியாது. எல்லோரிடமும் அன்பாக இருப்பவர். அதுவும் தாத்தா ஒமேரியாவுக்கு சிறுவன் மார்லேதான் உற்ற நண்பன்.
பாப் மார்லி பிறந்து ஐந்து வயது ஆகும்வரை தனது தந்தையை அவர் பார்த்ததே இல்லை. அவருக்குத் தெரிந்ததெல்லாம் அம்மா ஸெடில்லாவும், தாத்தா ஒமேரியாவும் மட்டும்தான். அதிகாலையிலேயே விழித்து தாத்தாவோடு வயலுக்குப் போய்விடுவார் மார்லி. அங்கு கழுதைகளை விரட்டி விளையாடுவதுதான் அவருக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு. ஆடு, மாடுகள் தான் அவருக்கு நண்பர்கள். அவற்றுக்குத் தீனி வைப்பதென்றால் மார்லேவுக்கு ரொம்பப் பிரியம். சிறுவனாக இருக்கும்போதே பால் கறக்க கற்றுக்கொண்டுவிட்ட மார்லேவுக்கு பசுக்களின் மீது அலாதியான பாசம்.
பாப் மார்லிக்கு ஐந்து வயது ஆனபோது யாரும் எதிர்பாராத ஒரு நாளில் கேப்டன் மார்லி வீட்டுக்கு வந்தார். அவரை முதன் முறையாகச் சந்தித்த நாளைக்காட்டிலும் மிகுந்த மகிழ்ச்சியில் ஸெடில்லா திக்குமுக்காடிப் போனார். கறுப்பர்களை மட்டுமே பார்த்து வளர்ந்த பாப் மார்லேவுக்கு ஒரு வெள்ளைக்காரரைத் தனது அப்பா என்று ஏற்றுக்கொள்வது கஷ்டமாக இருந்தது. ஆனாலும் தனக்கும் ஒரு அப்பா இருக்கிறார் என்ற நினைவு அவரை சந்தோஷப்படுத்தியது.
‘என் மகன் ஆடு மாடு மேய்த்துக்கொண்டு வீணாகிவிடக் கூடாது. இவனைப் படிக்க வைத்து பெரிய ஆளாக்க வேண்டும். என்னோடு இவனைக் கூட்டிச் சென்று கிங்ஸ்டனில் நல்ல பள்ளியில் சேர்க்கப் போகிறேன். இவன் ஹாஸ்டலில் இருந்து படிக்கட்டும்’ என்று கேப்டன் சொன்னபோது ஸெடில்லாவால் அதை மறுக்க முடியவில்லை. ‘வெள்ளைக்காரர்கள் பொய் சொல்ல மாட்டார்கள்’ என்று நம்பிய இனத்தைச் சேர்ந்தவளல்லவா அவள். நம்மால்தான் படிக்க முடியவில்லை. நமது பிள்ளையாவது படித்துப் பெரிய ஆளாக வரட்டும் என்று அவளது தாய் மனது தூண்டியிருக்க வேண்டும். நேஸ்டாவைப் பிரிய மனமில்லாவிட்டாலும் கேப்டன் சொன்னதற்கு ஸெடில்லா சம்மதித்தாள். பாப் மார்லியை கேப்டன் மார்லிோடு அனுப்பி வைத்தாள்.
பாப் மார்லி கிங்ஸ்டனுக்குச் சென்று மாதங்கள் பல கடந்தோடி விட்டன. ஆனால் கேப்டனிமிருந்து எந்தத் தகவலும் வரவில்லை. தனது கிராமத்திலிருந்து ஜமைக்காவின் தலைநகரான கிங்ஸ்டனுக்குப் போய் வருகிறவர்களிடமெல்லாம் ஸெடில்லா விசாரித்துக் கொண்டிருந்தாள். ஜமைக்காவில் இன்று நூற்றுக்கு தொண்ணூற்றைந்து பேர் மொபைல் போன் வைத்திருக்கிறார்கள். ஆனால் சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு அங்கே தொலைபேசி என்பதே அபூர்வம்தான். கடிதம்தான் ஏழைகளுக்கு வாய்த்த ஒரே தொடர்பு சாதனம்.
கேப்டனிடமிருந்து கடிதமும் வரவில்லை, விசாரித்தவர்களிடம் செய்தி கிடைக்கவில்லை. அப்போதுதான் ஸெடில்லாவுக்கு தான் செய்த தவறு புரிய ஆரம்பித்தது. ஐந்து வயது பிள்ளையை அனுப்பி வைத்தது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்று தன்னைத்தானே அவர் சபித்துக் கொண்டிருந்தபோதுதான் தலையில் இடி விழுந்ததைப் போல அந்தச் செய்தி அவருக்குக் கிடைத்தது. கிங்ஸ்டன் நகரின் தெரு ஒன்றில் பாப் மார்லே திரிந்து கொண்டிருந்ததைத் தான் பார்த்ததாக நண்பர் ஒருவர் சொன்னார். அதற்கு மேல் ஒரு நிமிடம்கூட ஸெடில்லாவால் அங்கே நிற்க முடியவில்லை. மார்லேவைத் தேடி கிங்ஸ்டனுக்குப் புறப்பட்டார்.
நண்பர் சொன்ன அடையாளத்தை வைத்து மார்லி இருக்குமிடத்தைக் கண்டுபிடித்து அங்கே போய் கதவைத் தட்டுகிறார். கால்கள் நடுங்குகின்றன. கண்களில் கண்ணீர் மறைக்கிறது. தனது அருமை மகனின் முகத்தைப் பார்க்கும் ஆவலில் நொடியும் யுகமாக நீள ஸெடில்லா காத்திருக்கிறார். கதவைத் திறக்கிறான் சிறுவன் நேஸ்டா. உள்ளே ஒரு வயதான பெண்மணி. நாள்பட்ட நோயாளியாக இருப்பார் போலும். எழுவதற்குக்கூட அவரால் முடியவில்லை. இது யார் வீடு, மார்லி ஏன் இங்கு இருக்கிறான்?

(பாப் மார்லி - இசைப் போராளி  
நூலின் முதல் அத்தியாயம் )

2 comments:

 1. பாப் மார்லியைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள வேண்டும் என ஆர்வம் பொங்குகிறது..

  //பாப் மார்லி - இசைப் போராளி
  நூலின் முதல் அத்தியாயம்... //

  இந்த புத்தகம் எந்த பதிப்பகத்தில் கிடைக்கும் சார்...

  ReplyDelete
 2. இடது பக்கம் உள்ள விளம்பரத்தைப் பாருங்கள்.உயிர்மைப் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

  ReplyDelete