Thursday, April 21, 2011

மணற்கேணி இதழ் 5மணற்கேணி இதழ் 5 இப்போது விற்பனைக்கு வந்திருக்கிறது. 

அதில் இடம்பெற்றிருக்கும் ரவிக்குமார் கவிதைகளில் சில:
1.

மழையில் அழுத கண்ணீராய்
தடயம் காண முடியாததாயிருக்கிறது உன் நேசம்

'கடிதமில்லை கனவுகண்டு விழித்ததில்லை
பார்க்காமல் இருந்தாலும் பதற்றம் வந்ததில்லை
சந்திக்கும்போதும் சந்தோஷம் மலர்ந்ததில்லை
நீ இல்லாவிட்டாலும் இருப்பேன்'
என்கின்றாய்

அலமாரியின் சாவி தேடி
அலைமோதும்  திருடன்போல
ஒவ்வொரு தருணத்தையும்
திறந்து  பார்த்துத் தவிக்கின்றேன்

'அம்மாவின் பொய்கள்' பற்றி
சொன்னான் ஒரு கவிஞன்
அது உனக்கும் பொருந்தும்தான்
அறிவேன் என்றாலும்
சொல்லிவிடு
கண்ணீரைக் கண்ணீரென்று
காதலைக் காதலென்று

2.

கொசுபத்தியின் புகை
செங்குத்தாய் நிற்கும்
காற்றில்லாத அறையில்
உணவுத் துணுக்குகளைத் தேடிவரும்
கரப்பான் பூச்சிகளைப்போல
சூழ்கின்றன உன் நினைவுகள்
குளத்து மீன்களிடம்
சிரங்கைத் தின்னக்கொடுத்துவிட்டுக்
கண்மூடி நிற்கும் சிறுவனைப்போல்
அவற்றுக்குத் தீனியாகி
அசையாமல் கிடக்கின்றேன் .

பனியில் நமத்திருக்கிறது கூரை
படர்ந்திருக்கும் சுரைக் கொடியில்
கனக்கும் காயின் சுமைதாங்க முடியாமல்
உள்வாங்குகிறது கீற்று

3.

அப்போது வெயில் இல்லை
வியர்க்கும் விதமாக வெக்கையும் இல்லை
இரவு
ஊரின் ஒதுக்குப்புறம்
கட்டிடங்களில்  நெரிபடாத காற்று
உடைகளைக் கலைக்க தலைமுடியைக்  கலைக்க
அடையாளம் தெரியாத செடிகளை அலைக்கழிக்க
இருளின் பாதுகாப்பில்
துணிந்து உன்னை முத்தமிட்டேன்
மேலுதட்டில் படிந்திருந்த வியர்வை
கரித்தது
கண்ணீரைப் பருகியது போல
ஒருகணம் திடுக்கிட்டேன்
மறுகணம் திறந்த வாய்க்குள் நழுவிய நாவில்
தட்டுப்பட்டது உன் இதயம்
நான்
காணாமல் போனேன்

4.

தேவாலயத்தில்
ஒவ்வொருவரும்
நம்பிக்கையால் ஏற்றுகிறார்கள்
மெழுகுவர்த்திகளை

அலைக்கழியும் நாவுகளால்
மன்றாடும் மெழுகுவர்த்திகளை
கவனிக்கத்  துணிவின்றி
கூரையைப் பார்க்கிறாள்
மேரி

அங்கே
அணைந்த திரிகள்
புகையால் எழுதுகின்றன
ஆசீர்வதிப்புகளின்
படுதோல்வியை5.

ஆயிரம் ஆண்டுகள் கண்ட
கோயில்

விரல்களுக்கிடையே நழுவிய காற்றாகத்
தொலைந்த காலத்தை
எண்ணிப்பார்க்கிறான் அந்த முதியவன்

கடந்துசெல்லும் ரயிலின்
கடைசிப் பெட்டியைப் பார்ப்பதுபோல்
பார்க்கிறான்
தனது வாழ்வை

துருவேறிப் போய்விட்டன
நாளைக்கு என ஒத்திவைத்த
தேவைகள்

சிறுவயது உடைகளைப்போல்
பொருந்தாமல் போய்விட்டன
தவறவிட்ட ஆசைகள்

பறப்பதுபோல் பாவனைகாட்டிவிட்டு
திரும்ப வரும்
கோயில் புறாக்களிடம்
எதைக் கற்றுக்கொள்வது?

குழப்பத்தோடு அமர்ந்திருப்பவன்மீது
சாய்கிறது
கோபுரத்தின் நெடிய நிழல்

No comments:

Post a Comment