Tuesday, April 26, 2011

எனது வாழ்வு என்னிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டது" : முன்னாள் விடுதலைப் புலி பெண் போராளி


[ செவ்வாய்க்கிழமை, 26 ஏப்ரல் 2011, 09:39 GMT ] [ தி.வண்ணமதி ]
விடுதலைப் புலிகள் அமைப்பினது பெண்கள் அணியின் முன்னாள் உறுப்பினரான இவள் தனது வாழ்வின் அடுத்த கணத்தில் என்ன செய்வதெனத் தெரியாத நிலைமையினை முதல் முதலாக உணர்கிறாள்.

இவ்வாறு அமெரிக்காவில் இருந்து வெளியாகும் அனைத்துலக சஞ்சிகையான Time [Sunday, Apr. 24, 2011] வெளியிட்டுள்ள செய்திக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை 'புதினப்பலகை'க்காக [www.puthinappalakai.com] மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி.

நன்றி : http://www.puthinappalakai.com/view.php?20110426103702
ஒரு மணிநேரமாக இடம்பெற்ற இந்த நேர்காணலின் போது அவள் பதற்றத்துடன் தனது விரல்களைப் பிசைந்துகொண்டிருந்தாள்.

இந்த முன்னாள் விடுதலைப் புலி பெண் போராளியுடன் நாங்கள் உரையாட ஆரம்பித்தபோது அவளது கைகளில் இருந்த அழகாக மடிக்கப்பட்ட லேஞ்சி எங்களது உரையாடல் முடிவுக்கு வந்த வேளையில் ஏதோ துணிக்கத்தையினைப் போல் கசங்கியிருந்தது.

நான் அவளது உண்மைப் பெயரைப் பயன்படுத்துவதை அவள் விரும்பவில்லை. பதிலாக தன்னைச் செல்வி என அழைக்குமாறு அவள் கூறினாள்.

விடுதலைப் புலிகள் அமைப்பினது பெண்கள் அணியின் முன்னாள் உறுப்பினரான இவள் தனது வாழ்வின் அடுத்த கணத்தில் என்ன செய்வதெனத் தெரியாத நிலைமையினை முதல் முதலாக உணர்கிறாள்.

விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த பல பெண் போராளிகளைப் போலவே இவளும் தானாக அமைப்புடன் இணையவுமில்லை, கட்டாயத்தின் பெயரில் இணைக்கப்படவுமில்லை. தற்போது புலிகளின் கிளர்ச்சி என்பது இல்லையென்றாகிவிட்டது. இவர்களது இராணுவ பலம் மே 2009ன் பின்னால் சிறிலங்கா அரச படையினரால் இல்லாதொழிக்கப்பட்டுவிட்டது.

1998ம் ஆண்டு செல்வி 18 வயதினை அடைந்திருந்த வேளையில் இவளது சகோதரனைத் தேடி கிழக்கே மட்டக்களப்பிலுள்ள இவளது வீட்டுக்குப் புலிகள் வந்திருந்தார்கள். ஒரு குடும்பத்திலிருந்து ஒருவர் அமைப்பில் இணைந்திருக்கவேண்டும் என்ற கொள்கையினைப் புலிகள் கொண்டிருந்தார்கள். புலிகளின் இந்த விதி அவர்களது கட்டுப்பாட்டுப் பகுதிகள் அனைத்திலும் கடுமையுடன் அமுல்படுத்தப்பட்டது எனலாம்.

இவளது குடும்பத்தினைப் பொறுத்தவரையில் வயதில் குறைந்த சகோதரன் அமைப்பில் இணையவேண்டும் அல்லது இரண்டு மூத்த பெண் பிள்ளைகளில் ஒருவர் இணையவேண்டும்.

வயதில் மூத்தவளாக இருந்த செல்வி புலிகளமைப்புடன் இணைந்துகொள்வதற்குத் துணிந்தாள். அன்று முதல் எட்டு ஆண்டுகள் விடுதலைப் புலிகள் அமைப்புடன் இணைந்து பணியாற்றினாள். புலிகளமைப்பு சிறிலங்கா அரச படையினரின் கடுமையான அழுத்தத்திற்கு உட்பட்டிருந்த வேளையில் அவள் அமைப்பினை விட்டு வெளியேறினாள்.

இன்று விடுதலைப் புலிகள் என்றொரு அலகுமில்லை, போருமில்லை என்றாகிவிட்டது. குட்டையாக வெட்டப்பட்ட தலைமுடி மற்றும் கையில் ஆயுதம் என்பவற்றுடன் தனது இளமைக்காலத்தினைத் தொலைத்துவிட்ட செல்விக்கு தற்போது ஒரு சில தேர்வுகளே உள்ளன.

"நான் எதனைச் செய்யமுடியும். நான் போதிய கல்வியறிவினைப் பெற்றிருக்கவில்லை, பணமும் இல்லை பணியும் இல்லை" எனத் தளதளத்த குரலில் இவள் கூறுகிறாள். "எனது வாழ்வு என்னிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டது"

இலங்கைத் தீவில் கால் நூற்றாண்டுக்கும் மேலாகத் தொடர்ந்த போருக்குப் பலிக்கடா ஆகிப்போன இதுபோன்ற பெண்களின் கதைகள் இதேபோன்றவைதான்.

சிறிலங்காவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் போர் முடிவுக்குவந்துவிட்ட போதிலும் இரண்டு தரப்பிலுமுள்ள போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் இன்னமும் அமைதியின் சிறுதுளிப் பலாபலனைக் கூடப் பெறவில்லை.

"போரின் விளைவாக வெளியே தெரியாமல் பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு எதிராக தனித்துநின்றோ அன்றி கூட்டாகவும் குரல் எழுப்புவது கடினமென இவர்கள் உணர்கிறார்கள்" என பெண்களுக்கான வழிகாட்டல் அமைப்பினது அனர்த்த நிவாரண ஒருங்கிணைப்பாளர் அருந்ததி சந்திரதிலகே கூறுகிறார். போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் நாடுதழுவிய நிகழ்ச்சித்திட்டமொன்றை இந்த அமைப்பு அண்மையில் ஆரம்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

செல்வியைப் போல சந்தர்ப்ப சூழமைவாலோ அல்லது கட்டாயத்தின் பெயரிலோ புலிகளமைப்புடன் இணைந்து பணியாற்றுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்ட ஏராளம் பெண்கள் இங்குள்ளனர்.

சிறிலங்கா அரச படையினரிடம் சரணடைந்த அல்லது கைதுசெய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் 11,000 உறுப்பினர்களில் 3,000 பேர் பெண்கள். இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டிருந்த பெண்களில் அரைப் பகுதிக்கும் அதிகமானவர்கள் புனர்வாழ்வு நிகழ்ச்சித்திட்டங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதுதவிர போரின் இறுதிநாட்களில் இரண்டு தரப்புக்கும் இடையிலான மோதல்களின் நடுவே சிக்கி பலநூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட கணவனை இழந்தோராக்கப்பட்ட பிறிதொரு தொகுதியினர் உள்ளனர். அத்துடன் கொல்லப்பட்ட, மாற்று வலுவுடையோர் ஆக்கப்பட்ட மற்றும் காயமடைந்த இராணுவத்தினரின் மனைவிமார் குடும்பப் பொறுப்பினைச் சுமக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

"சமூகத்தின் மத்தியில் தனித்து விடப்பட்டிருக்கும் இந்த வகையினரில் அதிகமானோர் தங்களது இருபதுகளில் இருக்கும் அதேநேரம் பொருத்தமான தொழில்வாய்ப்பினையோ அல்லது தொழில்வாய்ப்பினைப் பெறக்கூடிய கல்வியறிவு மற்றும் தொழில்சார் பயிற்சிகளையோ இவர்கள் கொண்டிருக்கவில்லை" என அருந்ததி சந்திரதிலகே கூறுகிறார்.

போர் இடம்பெற்ற முன்னாள் பகுதிகளில் சிறிலங்கா அரசாங்கமும் ஐக்கிய நாடுகள் சபையும் மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம் வன்னிப் பிராந்தியத்திலுள்ள 110,000 குடும்பங்களில் 30 சதவீதமானவை பெண்களைத் தலைமையாகக் கொண்ட குடும்பங்களாகும்.

பெண்களைத் தலைமையாகக் கொண்ட குடும்பங்களில் கனகநேசன் சிவகௌரியின் குடும்பமும் ஒன்று.

2009ம் ஆண்டு ஏப்பிரலில் போர் உக்கிரமடைந்திருந்த வேளையில் இரண்டு தரப்பினருக்கும் இடையிலான மோதலில் சிக்குண்டு இவளது கணவன் உயிர் நீத்தான். இதன் பின்னர் போதிய கல்வி அறிவினைப் பெறாத 33 வயதுடைய சிவகௌரி தனது வயது முதிர்ந்த பெற்றோரையும் ஐந்து பிள்ளைகளையும் வைத்துப் பராமரிப்பதற்கு தையல் தொழில்செய்து வருகிறாள்.

கண்பாற்வையற்ற தாய், முழங்கால் பாதிக்கக்பட்ட்ட தந்தையுடன் அதிக சிரமப்படுகிறாள் இவள். அதிகளவு வேலை வரும் நாளில் வெறும் இரண்டு டொலர்களையே (200 ரூபாய்) இவளால் சம்பாதிக்க முடிகிறது. "எனது வாழ்வில் தினமும் போராட்டம்தான். வேலை எதுவுமற்ற நாளில் குடும்பம் அதிகம் அல்லலுறும்" எனத் துயரத்துடன் கூறுகிறாள்.

சிறிலங்காவினது கிழக்குப் பிராந்தியத்தில் போர் 2007ம் ஆண்டுடன் முடிவுக்கு வந்து விட்டது. கிழக்கு மாகாணத்தில் மாத்திரம் 49,000 கணவனை இழந்தோர் இருப்பதாகக் கணக்கிடப்படுகிறது. அதுவும் இவர்களில் பலர் தங்களது இருபதுகளிலும் முப்பதுகளிலும் இருக்கிறார்கள். குடும்பத்தலைவன் மடிந்துவிட்ட நிலையில் புதிய சுமைகளையும் பொறுப்புக்களையும் சுமக்கும் இந்த துணையிழந்த பெண்கள் இவ்வாறுதான் வாழவேண்டும் என இன்னமும் சமூகம் கட்டளையிடுகிறது.

"இங்குள்ள சமூகக் கட்டமைப்பினைப் பொறுத்தவரையில் முடிவுகளை எடுக்கும் அதிகாரம் ஆண்களிடமே இருக்கிறது" என்கிறார் அருந்ததி சந்திரதிலகே.

பெண்களுக்கான வழிகாட்டல் அமைப்பானது இதுபோன்ற குடும்பப் பொறுப்புக்களைச் சுமக்கும் பெண்களுக்கு தொழில்சார் பயிற்சிகளை வழங்குவதோடு சுயதொழில் திட்டங்களையும் முன்னெடுக்கிறது. தவிர, பெண்கள் தொழில்வாய்ப்பினைப் பெறுவதற்கான உதவிகளையும் இந்த அமைப்பு வழங்குகிறது.

"நாடு பூராகவும் பல்லாயிரக்கணக்கான பெண்களுக்கு இதுபோன்ற உதவிகள் தேவை என்பதை நாங்கள் மெதுவாக உணர்கிறோம்" என்கிறார் அருந்ததி. இந்தப் பெண்கள் தமக்கான தொழில்வாய்ப்பினைப் பெறுகின்றபோதும் விடுதலைப் புலிகளுடன் இணைந்திருந்தவர்கள் வேறுபட்ட கோணத்திலேயே இன்னமும் பார்க்கப்படுகிறார்கள். "இங்கு ஏராளம் பிரச்சினைகள் உள்ளன" என அருந்ததி கூறுகிறார்.

தான் எதிர்கொள்ளும் பிரச்சினை என்னவென விடுதலைப் புலிகளின் முன்னாள் பெண் போராளி செல்வியும் நன்கறிவாள். "என்னை யார் திருமணம் செய்துகொள்வார்கள்?" என்ற கேள்வியினைத் தொடுக்கிறாள் செல்வி. "எனது கிராமத்தவர்கள்கூட என்னிலிருந்து சற்று எட்ட விலகியிருக்கவே விரும்புகிறார்கள். தீண்டத்தகாத ஒருத்தியா, வேண்டப்படாத ஒரு சமூகத்திலிருந்து வந்தவளாகவே என்னை அனைவரும் பார்க்கிறார்கள்" என்கிறாள் செல்வி.

No comments:

Post a Comment