Sunday, June 26, 2011

தமிழர் புலமை மரபு: ஏற்றமும் இறக்கமும் - பேராசிரியர் கி.நாச்சிமுத்து                     தமிழர் புலமை மரபு என்று சொல்லும்போது மொழி இலக்கியம் சார்ந்த துறைகளில் மட்டுமல்லாமல் பொதுவாக எல்லா அறிவுத்துறைப் புலமை மரபைப் பற்றிய விரிந்த பொருளை மனதில் கொண்டே இங்கு சிந்திக்கப் புகுகின்றோம் .அறிவுத்துறைகளுள் இயல் பிரிவில் மொழிக்கும் இலக்கியத்திற்கும்  தொல்காப்பியரின் இலக்கண நூல் ஒர் அரிய சாதனை.இது போன்றே இசை நாடகம் போன்ற துறைகளுக்கும் அறிவியல் நூல்கள் இருந்திருக்கின்றன.அவற்றில் சிலவே தப்பி வந்திருக்கின்றன.கணக்கு தர்க்கம் தத்துவம் மருத்துவம் சிற்பம் சோதிடம் போன்ற துறைகளில் ஒரு சிலவே நமக்குக் கிடைக்கின்றன.
              கணக்கு போன்ற துறைகளில் அடிப்படையான கோட்பாட்டு நூல்கள் வடமொழியிற்போல;த் தமிழில் மிகுதியாக இல்லை,சோதிட நூல்கள் பல வடமொழி நூல்களை ஒட்டி எழுந்திருக்கின்றன.தர்க்கத்தில் மணிமேகலை நீலகேசி இன்-னும் பரபக்கம் பேசும் சைவசித்தாந்த நூல்கள் வேதாந்த நூல்கள் போன்றவற்றில் சில செய்திகள் காணப்படுவது அல்லாமல் தனித் தமிழில் அமைந்த நூல்கள்  காணப்படவில்லை.தத்தவத்தில் சைவசித்தாந்தம்(பதினான்கு சித்தாந்த சாத்திரங்கள்) வேதாந்தம் (கைவல்ய நவநீதம்) மருத்துவத்தில் சித்த மருத்துவம்,வர்ம மருத்துவம்,மாட்டு வாகடம் போன்றவற்றில் வடமொழி நூல்களை ஒட்டி அமைந்து அவற்றிலிருந்து வேறுபட்ட வளர்ச்சிகளுடன் சித்த மருத்துவம் வர்ம மருத்துவம் போன்ற துறைகளில் தனி நூல்கள் தோன்றியுள்ளன.சிற்பம் பற்றி வடமொழி மணிப்பிரவாள நூல்கள் உள்ளன.மொத்தத்தில் தமிழ்ப் புலமை மரபில் உயர் அறிவியல் துறையில் (இலக்கணம்,நாட்டியம்,இசைஇமருத்துவம்,சோதிடம் தவிர) வடமொழியில் காணப்படுவது போன்று பல நூல்களோ கோட்பாட்டு நூல்களோ காணப்படவில்லை,தமிழ்ப் புலமை மரபில் உயர் ஆராய்ச்சித்துறையில் வடமொழியையே பயிற்சி  மொழியாகக் கொண்டிருந்திருக்கின்றனர் என எண்ணலாம்.எனினும் இசை நாட்டியம் மருத்துவம் சோதிடம் போன்ற துறைகளில் உள்ள நூல்கள் தமிழையும் அந்நிலைக்கு உயர்த்த நடந்த முயற்சிகளைக் காட்டுகின்றன.
              தமிழுக்கு முதன் முதலில் எழுத்து வடிவம் வந்தவுடன் இலக்கிய வளர்ச்சி ஏற்பட்டது போலவே பிற அறிவுத் துறைகளிலும் வளர்ச்சி ஏற்பட்டிருக்க வேண்டும்.மொழி தனித்து வளர்வதற்குரிய அரசியல் தலைமை அதற்கு மூவேந்தர் ஆட்சியில் அமைந்திருந்தது என்பதற்குத் தாமிழி அல்லது தென்பிராமியில் தமிழ் மொழி எழுதப்பட்டிருப்பது காட்டுகிறது. ஏனைய கன்னட தெலுங்குப் பகுதியில் பிராகிருதம் அல்லது வடமொழி  ஆளப்பட்டது என்பது அம்மொழிகளுக்குத் தலைமை அளிக்கும் அரசாட்சி அமையவில்லை என்பதைக் காட்டுகிறது.அல்லது அம்மொழிகள் அந்த நிலையை அடைவதற்குரிய அறிவுத் துறைப் புலமை மரபுகளை உருவாக்கிக் கொள்ளவில்லை என்று தோன்றுகிறது.
       சங்க காலத்தில் அளவை எனப்படும் தர்க்கம் முதலிய பல துறை சார்ந்த நூல்கள் தோன்றியிருந்ததாகவும் அவை கடல்கோள் முதலியவற்றால் அழிந்தன என்றும் ஒரு பழம்பாடல் கூறுகிறது.இது அன்று தமிழ் வழியான புலமை மரபின் வீழ்ச்சியைக் குறிப்பதாகலாம்.ஏனெனில் சங்க காலத்திற்குப் பின் தோன்றிய வடநாட்டுப் படையெடுப்புகள் பல்லவர் முதலிய ஆட்சி மாற்றத்தின் போது வடமொழி அனைத்திந்திய அளவில் வணிகம் சமயம் சட்டம் அரசியல் அறிவுத்துறை போன்றவற்றில் பொது இணைப்பு மொழியாக உருவெடுப்பதைப் பார்க்கிறோம்.
              இந்தக் காலகட்டத்தில் வடமொழி தமிழர்க்கு கல்வி அரசியல் சமயம் போன்ற துறைகளில் முதல் மொழியாக மாறுகிறது.தமிழ் இலக்கியம் கலை போன்ற துறைகளில் மட்டும் தன்னிடத்தைத் தக்க வைத்திருக்க வேண்டும்,பிற துறைகளில் இன்று போல் மேல் நிலை அறிவைப் பொதுநிலையில் சாதாரண மக்களுக்கு எளிமையாக எடுத்துரைக்கும் அளவில் தமிழ் பயன்பட்டிருக்கவேண்டும்.தமிழர் புலமை மரபின் அறிவுச் சேமிப்பின் இன்னொரு கருவியாக வடமொழி மாறுகிறது.இதனால் தமிழர் தம் அறிவை வடமொழி வழி ஒரு பரந்த அனைத்திந்தியப் பரப்புக்குக் கொண்டு செல்ல முடிந்தது.அத்தோடு வடமொழி வழியாக வந்த அனைத்திந்திய அறிவுச் செல்வத்தைப் பெறத் தமிழர்களால் முடிந்தது.இக்கால கட்டத்தில் யவனத்தச்சர் மகத வினைஞர் அவந்திக் கொல்லர் எல்லோரும் இணைந்து தமிழகத்தில் செயல்பட்டிருக்கும்போது வடமொழி போன்ற ஒரு பொது மொழியும் தேவையாக இருந்திருக்கும்.மேலும் வடமொழி இந்தியாவில் யாருக்கும் தாய்மொழியாக இருந்ததில்லை.எல்லோருக்கும் இரண்டாம் மொழி /இன்று ஆங்கிலம் போல ,அதனால் அதைப் பொதுமொழியா ஏற்பது எல்லோருக்கும் ஒருபடித்தாக ஏற்றதாக இருந்தது.
கிரேக்கம் முதலிய மொழிகளில் இருந்து கடன் பெற்ற சுருங்கை ஓரை போன்ற சொற்கள் வடமொழி வழிக் கடன் பெற்றதை நோக்கத் தமிழ் போன்ற மொழிகள் நேரடியாக இம்மொழிகளுடன் தொடர்பு கொள்ள வடமொழியையே நாடியிருப்பர் என்று தோன்றுகிறது.இது இன்று நாம் உலகப் பலகணியாக ஆங்கிலத்தை ஏற்றுக் கொண்டுள்ளது போன்றது.மேலும் தமிழர் உட்பட்டவர்கள்  தெ.கி.ஆசியா போன்ற இடங்களில் தம் ஆட்சி பண்பாடு இவற்றைப் பரப்ப வடமொழியையே பொது இணைப்பாகப் பயன்படுத்தியுள்ளனர் என்பதையும் இங்கு நினைத்துப் பார்க்கலாம்.
              இதன் விளைவுகள் தமிழ் போன்று தனியாண்மை பெற்ற மொழிக்குப் பெரும் சரிவுகளை ஏற்படுத்தி விட்டன.ஒன்று தமிழின் புலமை மரபில் வடமொழி சமமாகவும் அல்லது மேலாதிக்கத்துடனும் இடம் பெற்றவுடன் தமிழின் வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்பட்டது.தமிழர் அறிவெல்லாம் வடமொழியில் பதிவாகும்போது பல தமிழ் சார்ந்து உருவாயிருந்த அறிவுச் செல்வங்கள் அனைத்திந்திய அளவில் எல்லோருடைய வசதிக்காகவும் வடமொழியில் மொழிமாற்றம் பெற்று அங்கு சென்று விட்டன.பின் வடமொழி மரபிலேயே மேலே அவை வளர்க்கப் பட்டன.இசைத்துறையில் பண்ணின் தமிழ்ப் பெயர்கள் பொது வடமொழிப் பெயராக மொழிபெயர்ப்பதையும் பின்னர் அவை அங்கு அம்மொழி சார்ந்து வளர்ச்சி பெறுவதையும் இங்கே சுட்டிக்காட்டலாம்,அத்துடன் இங்கு எழுந்த வடமொழிக் கலைநூல்களிலும் ஆகம சிற்ப சாத்திர நூல்களிலும் வடமொழிக் கலைச் சொற்கள் எழுந்தாலும் அவையெல்லாம் தமிழர்களால் உருவாக்கப்பட்டவையே,இந்த நூல்களில் தமிழ்க் கலைச் சொற்களும் இடம்பெற்றாலும் பெரும்பாலும் அவை வடமொழியில் இருக்கும்.அவற்றில் பலவும் தமிழிலிருந்து பெற்ற கடன் மொழிபெயர்ப்பாக இருக்கவே வாய்ப்புள்ளது.வடமொழியில் காணப்படும் துறை சார்ந்த கலைச் சொற்களை இருமொழி வல்லவர்கள் இக்கோணத்தில் ஆராய்ந்தால் உண்மைகள் பல வெளிவரும்.
மேலும் வளமான புலமை மரபு வளரத் தேவையான பல்துறைப் பரிமாற்றம் தமிழ் வழியாக நடைபெறப் போதிய துறைகள் தமிழில் வளராததால் தமிழ் வழியான புலமை மரபின் வளர்ச்சிக்கு வடமொழி சார்ந்த அறிவும் புலமைப் பயிற்சியும்  தேவையாக இருந்தன.இதை அன்றையப் புலமை மரபைச் சேர்ந்த தமிழர் தம் வடமொழிப் பயிற்சியாலும் அதிலுள்ள அறிவுத் துறைகளில் ஏற்படுத்திக் கொண்ட பயிற்சியாலும் ஈடுகட்ட முனைந்தனர்.எனினும் புலமை மரபில் தமிழின் களங்கள் சுருங்கியதால் அறிவுத்துறைகளில் ஒரு தேக்கம் ஏற்பட்டது.தமிழை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட புலமை மரபு புத்தாக்கத்தில் பீடுநடைபோட இயலவில்லை.தமிழ் இலக்கியம் இலக்கணம் போன்ற துறைகளிலாவது தமிழ்ப் புலமை மரபைச் சார்ந்த இலக்கண மரபு தனித்தியங்க முயன்றது எனினும் வடநூல் வழித் தமிழாசிரியரும் தோன்றுகின்றனர்.தொல்காப்பியத்திற்குப் பின்னர் கி.பி.10 அளவில் வடநூல் வழி வீரசோழியம் தோன்றும் வரை  ஏறக்குறைய ஆயிரம் ஆண்டு தமிழ் இலக்கண மரபில் பெரும் படைப்புகள் தோன்றாமல் போனதற்கு அரசியல் பண்பாட்டுச் சூழலுக்கு அப்பால் புலமை மரபு தேங்கிப் போனதற்கான காரணங்கள் யாவை?தமிழ்ப் புலமை மரபு ஊக்கம் பெறுவதற்குரிய பிற துறைகள் தமிழில் வளராமற்போய் தமிழாசிரியர்கள் அத்தகையவற்றை வடமொழி வழியும் பெறாமல் போனது காரணமாகுமோ?சிவஞான முனிவர் போன்றோர் இக்கருத்தினரே.
              இந்தச் சூழலில் வடமொழிப் புலமை மரபு தமிழர்க்கும் உரிமை உடையதாக இருந்ததால் தமிழர்கள் வடமொழியிலிருந்து பல துறை சார்ந்த அறிவுகளைத் தமிழுக்கும் ஆக்கித் தமிழை வளப்படுத்த முனைந்தனர்.இது வெறும் கடன் வாங்கலாக வடமொழிப் பற்றாளர்கள் நினைத்துத் தமிழ் சார்ந்த புலமை மரபை குறைவாகக் கருதுவதோ அல்லது அது இழிவு என்று கருதித் தமிழ்ப் பற்றாளர்கள் அதை மறுப்பதோ சரியான நிலைப்பாடு அல்ல.தொல்காப்பியர் போன்றவர்கள் இலக்கணக் கொள்கைகள் ஆராய்ச்சி முறைகள் போன்றவற்றில் வடமொழி வழியாக வந்த கருத்துக்களை ஏற்றுக் கொண்டிருப்பதை இந்த முறையில் விளக்கியதால் தான் மொழிக் காழ்ப்புணர்ச்சிகள் கருக்கொண்டன.உண்மையில் அவர் நமக்கும் சொந்தமான ஆனால் வடமொழியில் பதிவான நம்மவர் கருத்துக்களையே தழுவிக் கொள்கிறார் என்று கூறவேண்டும்.குறள் போன்ற நூல்களில் அறவியல் அரசியல் உளவியல் மருத்துவவியல் போன்ற துறைசார்ந்த கருத்துக்கள் இடம்பெறுவதை இவ்வாறே நோக்கவேண்டும்,வள்ளுவர் நூலோரிடமிருந்து தொகுத்துக் கொண்ட கருத்துக்களைக் கொண்ட அடிப்படைத் தமிழ் நூல்கள் நமக்குக் கிடைக்கவில்லை.ஆனால் அவற்றிற்குரிய மூல நூல்கள் (கௌடலீயம்,காமந்தகம்) வடமொழியில் உள்ளன.இவற்றை நம் அறிவுப் பரப்பின் இரு கண்களாகப் போற்றிய தமிழ் வடமொழி என்ற இரண்டில் ஒன்றான வடமொழியிலிருந்து பெற்றுக் கொள்ளும்போது வேறுபாட்டுணர்வுக்கு இடமில்லை,இந்த இடத்தில் அன்றியும் தமிழ் நூற்கு அளவிலை ஆயினும் ஒன்றேயாயினும் தனித்தமிழ் உண்டோ என்று சாமிநாத தேசிகர் கூறும்போது வடமொழியும் நம் புலமை மரபைச் சார்ந்தது என்று வற்புறுத்துவதே நோக்கமாக இருக்கவேண்டும்.மேலும் அவர் ஐந்தெழுத்தால் ஒரு பாடை என்று அறையவே நாணுவர் என்று சொல்லும்போது தமிழுக்குச் சிறப்பெழுத்து ஐந்து என்று வீண்பெருமை பேசுபவர்களை நோக்கிய நையாண்டியாகவே கருதவேண்டும்,தமிழின் பெருமை இந்த ஐந்தெழுத்து மட்டுந்தானா?அப்படிச் சொல்வது அறிவுக்குப் பொருத்தமாக இல்லை.இதுவே என் கருத்து என்பது பட அவர் கருத்தை நாம் விளக்கலாம்.அமிழ்தினும் இனிய தமிழ்மொழி என்றும் தேவாரம் திருவாசகம் முதலிய நூல்கள் தெய்வப் பெற்றியன என்றும் பேசுபவர் தமிழை இழிவுபடுத்தும் நோக்கில் பாடியிருப்பாரா?உண்மை அறியாது உணர்வு வழிப் பிறழ உணர்ந்து கூறும் கூற்றுக்களை நையாண்டி செய்யவே இப்படிக் கூறியிருக்கவேண்டும். 
வடமொழி அறிவுமொழியாகத் தமிழர்க்கு மாறித் தமிழின் புலமை மரபுக் களங்கள் சுருங்கிய வேளையிலும் இலக்கியம் கலைத்துறைகளில் தமிழ் தள்ளாடியாவது தன் இடத்தைப் பிடித்துக் கொண்டிருந்தது.தமிழ் நாட்டில் புலமை மரபில் இருமொழியச் சூழல் தோன்றிவிட்டது.வரலாற்றுக் காரணங்களால் மொழி வழக்குகளில் ஏற்பட்ட மாற்றங்கள்.இவற்றை எல்லாம் கவனித்து இலக்கண ஆசிரியர்கள் இலக்கணம் எழுத வேண்டிய நிலை,இந்த முறையில் வீரசோழியம் முயன்றிருக்கிறது.தேங்கிப் போன தமிழ் இலக்கண மரபில் தன் வடமொழிப் பயிற்சி அம்மொழி சார்ந்து கிடைத்த பிற துறை அறிவுகள் ஆகியவற்றை அவர் தன் வயப்படுத்திப் புதுமை படைக்க நினைக்கிறார்.காஞ்சிபுரத் தமிழரான தண்டியின் அணி இலக்கணத்தை அவர் தமிழுக்கு மாற்றும்போது வடமொழி வழி வெளிப்பட்ட ஒரு தமிழரின் அறிவை மீண்டும் தமிழாக்குவதாகவே நோக்க வேண்டும்,வடமொழிக் கருத்தைப் புகுத்தியதாகக் கொள்ளலாகாது.தொல்காப்பியருக்குப் பிறகு தனித்தமிழாசிரியர் யாரும் ஆராய்ந்து அணி இலக்கண வளர்ச்சிக்கு ஆக்கம் செய்யாமற்போனது தமிழ்ப் புலமை மரபின் தேக்க நிலையையே காட்டுகிறது.
மேலும் மொழி வளர்ச்சி இருமொழியம் இரட்டை வழக்கு நிலை போன்றவற்றை ஆராய அவர் மேற்கொண்ட முரண் புடைமாற்று இலக்கண வருணனை முறை வடமொழி ,பிராகிருத இலக்கண நூல்களில் காணப்படும்முறைதான் என்பதை நோக்கும்போது மொழிக்கு அப்பாற்பட்ட இலக்கண ஆராய்ச்சி முறைகள் பரவலாக வழக்கிலிருந்ததை உணர்கிறோம்.
தமிழ் இலக்கண மரபில் தமிழில் தோன்றிய இரட்டை வழக்கு நிலையை ஏற்று அதை முறைப்படுத்தும் இலக்கண முயற்சிகள் இல்லாமையாலேயே பிற்காலத்தில் தமிழ் மொழிக் கல்வி வெறும் இலக்கிய மொழிக் கல்வியாக அமைந்து நடைமுறை மொழிக்கு ஆக்கம் சேர்க்காமல் போய் இன்றைய மொழிக் கல்வியின் தரவீழ்ச்சிக்குக் காரணமாகிவிட்டதோ என்று எண்ணவேண்டியுள்ளது.
இன்றைய அறிவியல் துறைகளின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் பொதுமைப்படுத்தல் கோட்பாட்டாக்கம் நேர்முகச் சோதனை முறைகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட விதிவருமுறையில் அமையும் ஆராய்ச்சிப் பாங்கும் ஒப்புமை ஆராய்ச்சி முறைகளும் ஆகும்.இம்முறை இன்றைய அறிவியல் நெறிமுறையாக விளங்குகிறது.இம்முறைகள் நம் நாட்டிலும் பழங்காலத்தில் இருந்தாலும் இம்முறையில் அறிவியல் துறைகளை விளக்கும் கோட்பாட்டு நூல்கள் குறைவே.இம்முறைகளில் உருவான ஆராய்ச்சிப் படைப்புகளே நமக்குக் கிடைக்கின்றன.தொல்காப்பியம் என்ற இலக்கணப் படைப்புத்தான் நமக்குக் கிடைக்கின்றதே ஒழிய அவர் தம் படைப்புருவாக்கத்திற்கு அடிப்படையாகக் கொண்ட கோட்பாடுகள்(சித்தாந்தம்,மதம்(கொள்கை) ஆய்வு முறைகள போன்றவற்றைப் பற்றி மறைமுக வடிவில் அல்லாமல் நேரடியாக ஒன்றும் நமக்குத் தெரியாது.ஆனால் இன்றைய மொழியியல் என்பது இந்திய ஒலியியல் பாணினி போன்றோரின் இலக்கண நூல்கள் போன்றவற்றை ஆராய்ந்ததால் கண்ட கோட்பாடுகள் ஆய்வு முறைகள் போன்றவற்றைப் பிழிந்தெடுத்துத் தோன்றுகிறது.இது போல நம் மொழிகளில் அறிவியல் துறைகளில் ஏன் வளர்ச்சிகள் ஏற்படவில்லை என்பது ஆராய்தற்குரியது.நம் மரபு சார் மருத்துவம் போன்றவற்றில் பழையனவன்றிப் புது முறைகள் மருந்துகள் தோன்றாதது ஏன்?இது தேக்க நிலையல்லவா?
இப்போக்கில் இன்றும் நம் அறிவுத்துறைகளில் குறிப்பாக இலக்கிய இலக்கணத்துறைகளில் அதிகம் நடைபெறவில்லை(செ.வை.சண்முகம் போன்றோர் கோட்பாட்டு நூல்கள் விதி விலக்கு).தமிழ் இலக்கண இலக்கிய ஆராய்ச்சி முயற்சிகள்   விதிவிளக்க முறையாகவே தேங்கிப் போய்விட்டதால் புத்தாக்கம் இல்லாத கிளிப்பிள்ளை மரபாக  மாறிவிட்டது,இன்றைய மொழியியல் ஆராய்ச்சியின் தொடர்புகளால் விதிவருமுறையைப் பின்பற்றும் போக்கு மொழியியல் ஆராய்ச்சிகளில் காணப்படுகிறது.ஆனால் மரபிலக்கணத்தை மட்டும் பின்பற்றுவோர் பெரிய புத்தாக்கம் எதையும் செய்யவில்லை.வெறும் விளக்கவுரைகள்தான் மிச்சம்.இன்றை மொழி இலக்கணம் இலக்கியத்திறனாய்வு போன்றவற்றில் புதுமைகள் படைக்கவேண்டும் எனில் மொழியியல் தருக்கம் தத்துவம் போன்ற துறைகளின் தொடர்பு தேவை.அதற்கேற்பத் தமிழ்க் கல்வி முறை முற்றாக மாற்றி அமைக்கப்படவேண்டும்.
       மேலே குறிப்பிட்ட இன்றைய அறிவியல் முறையின் இன்னொரு பண்பு நிகழ்வுகளின் பிழிவாக அமையும் சாரத்தைக் கோட்பாடாகப் பொதுமைப்படுத்தி அமைத்துக் கொள்வதோடு நிகழ்வுகளின் கூறுகளை நுட்பமாக ஆராய்தல் என்பது.இன்றைய வேதியியல் துறையை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.வேதிப் பொருட்களின் வேதி அமைப்பு சிறப்புப் பண்புகள் என்று நுட்பமான பகுப்பாய்வு முறைகளின் மூலம் பொருட்கள் நிகழ்வுகள் போன்றவற்றை ஆழமாகப் புரிந்து கொள்ளும்போது அத்துறை சார்ந்த தூய அறிவு நமக்குக் கிடைக்கிறது. அத்துடன் அவ்வத்துறை அறிவுகளை பயன் முறைக்குக் கொண்டுவரும் தொழில் நுட்பத்தை உருவாக்கல் என்ற முறையிலும் இன்றைய அறிவியல் தொழில் நுட்பத்தோடு கைகோர்த்து வளர்ச்சிப் பாதையில் முன்னேறுகிறது. இது போன்றே இயற்பியல் போன்ற எல்லா அறிவியல் துறைகளிலும் பிற மானிடவியல் துறைகளிலும் அறிவியல் ஆராய்ச்சி நடைபெறுகிறது.இந்த அறிவியல் தொழில் நுட்ப முறையே இன்றைய அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சிக்குக் காரணமாக இருக்கின்றது.இலக்கணம் மொழி போன்ற துறைகளில் இம்முறையில் ஆராய்ச்சிகள் நடைபெற்றதால் மொழியியல் என்ற துறை தோன்றுகிறது.இன்றைய மொழியியல் துறையில் ஒலியியல் உருபனியல் தொடரியல் சொற்பொருண்மையியல் போன்ற உள் துறைகள் வளர்ச்சிக்கு வடமொழியில் சிட்சை(ஒலியியல்) நூல்கள் பாணினி பர்த்ருஹரி போன்றவர்கள் நூல்கள் தந்த கருத்துக்களை மேலே சொன்ன அறிவியல் முறையில் ஆராய்ந்ததால் இத்துறை உருவாயிற்று என்று மொழியியல் வரலாறு கூறுகிறது.
இங்கே கவனிக்க வேண்டியது நமது நாட்டில் முற்காலத்தில் இன்றைய அறிவியல் முறையின் கூறுகள் இருந்தன என்பதும் அவற்றை நாம் மேலைக் கல்வி முறை கற்று புதுப்புது அறிவியல் துறைகளாக மாற்றுவது அதற்குத் தக்க தொழில் நுட்பத்தை உருவாக்கல் போன்ற முயற்சிகளை நாம் மேற்கொள்ளவில்லை என்பதும் ஆகும். வடமொழி இலக்கணம் தத்துவம் தர்க்க நூல்களில் காணப்படுவது போன்ற கோட்பாட்டு ஆராய்ச்சிகள் தமிழ் நூல்களில் காணப்படுவதில்லை.மேலும் அவை சார்ந்த வளர்ச்சிகளும் வடமொழி நூல்களின் தொடர்பின்றித் தமிழில் தனியாகத் தோன்றவில்லை.தமிழில் தொல்காப்பியம் போன்றவை  தமிழில் இருந்த அறிவியல் முறைகளின் விளைவாகத் தோன்றிய படைப்புகளாகும்.அவற்றை சோப்புக் கட்டி போன்ற உற்பத்திப் பொருளாகச் சொல்லலாம்,ஆனால் அது உருவாகக் காரணமாக இருந்த கோட்பாடுகள் பகுப்பாய்வு முறைகள் யாவை? இவற்றைக் கண்டுபிடிப்பதில் நம் கவனம் செல்ல வேண்டும். பி.சா.சாத்திரி, தெ.பொ.மீ, வ.ஐ.சுப்பிரமணியம், செ.வை.சண்முகம் ச.இராசாராம் குளோறியா சுந்தரமதி,இந்திரா போன்றோர் முயற்சிகள் இத்துறையில் பாராட்டத்தக்கவை.இலக்கணம் மொழியியல் துறையில் போலவே யாப்பு அணி பொருள் போன்ற துறைகளில் தொல்காப்பியர் உருவாக்கிய படைப்புக்குக் காரணமாக அவ்வத்துறைக் கோட்பாடுகள் யாவை? ஆய்வு முறைகள் யாவை என்பது பற்றிய ஆய்வுகளை நாம் மேற்கொள்ளவேண்டும்.இதற்கு வடமொழி நூலறிவு இன்றைய மேற்கத்திய அணுகு முறைகள் இவற்றில் பயிற்சி இருந்தாலே இதை மேற்கொள்ள முடியும்.
       தமிழ்ப் புலமை மரபில் வடமொழி வழி வந்த அறிவுத்தாக்கம் பற்றி நாம் கொஞ்சம் அறிவோம்.அது போன்றே தமிழரல்லாதார் பங்கு இதில் எத்தகையது?அகத்தியர்,திருமூலர் பற்றிய கதைகள் அவர்கள் பிற பகுதிகளிலிருந்து வந்து தமிழ்ப் புலமை மரபை வளப்படுத்தியதன் அடையாளங்களா?சமண முனிவர்களில் பலரும் தமிழரல்லாதாரும் இருந்திருக்கலாம்.ஆனால் ஐரோப்பியர் வரவிற்குப் பின் தமிழியல் புலமை மரபில் தமிழரல்லாதார் பங்கு வெளிப்படையாகத் தெரிகிறது.வீரமாமுனிவர் உவின்சுலோ கால்டுவெல் என்று நீளும் ஐரோப்பியப் புலமை மரபின் அறிவுப் பணிகள் தமிழியல் ஆய்வுப்போக்குகளை நம்மவர் பணிகள் வளப்படுத்தியதை விட மேம்பட்டிருப்பதை நாம் காண்கிறோம்.இன்றும் இப்போக்கு வளர்ந்து ஐரோப்பா ஜப்பான் என்று உலகெங்கும் உள்ள அறிஞர் கூட்டம் தமிழாய்வைப் பெரிதும் தமதாக்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.இன்றைய உலக மயமாதலில் அறிவியல் துறை சார்ந்த அறிவுகளும் தொழில் நுட்பமும் பிறவும் மொழி நாடு கடந்து நிற்பதைப் போல இன்றைய தமிழியல் போன்ற தமிழர் தனியாண்மை செலுத்த வேண்டிய துறைகள் நம்மை விட்டு நழுவி உலக மயமாகிவிட்டன.இங்கே நம் இருப்பையும் வலிமையையும் நிலைநாட்டவேண்டிய கடமை நமக்கு உண்டு.அதற்கு ஏற்ற கல்வி முறை பயிற்சி முறை அவை எல்லாவற்றிற்கும் மேலாகச் சரியான அணுகுமுறை போன்றவற்றை நாம் கைக்கொள்ளவேண்டியவர்களாக இருக்கிறோம்.இல்லாவிட்டால் நம் புலமை மரபு பாமரமாய் இகழ்ச்சி சொலப் பான்மை கெட்டுப் பெயரளவில் சிறுத்துப்போய்விடாதா? 

No comments:

Post a Comment