Saturday, October 15, 2011

கி.மு. 5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ்-பிராமி எழுத்துகள், நெல் மணிகள் கண்டுபிடிப்பு




First Published : 15 Oct 2011 01:41:16 AM IST

Last Updated : 15 Oct 2011 02:03:08 AM IST
புதுச்சேரி மணற்கேணி பதிப்பகம் சார்பில் நடந்த கருத்தரங்கில் பழனி அருகே உள்ள பொருந்தல் என்னும் இடத்தில் மேற்கொண்ட அகழ்வாய்வு தொடர்பாக பேசுகிறார் புதுவைப
புதுச்சேரி, அக். 14: புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கா. ராஜன் மற்றும் அவரது மாணவர்கள் இணைந்து நடத்திய அகழ்வாராய்ச்சியில் கி.மு. 5-ஆம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த நெல் மணிகள், தமிழ் - பிராமி எழுத்துப் பொறிப்பு பெற்ற மட்பாண்டங்கள், கண்ணாடி மணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

÷பழனியிலிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ள பொருந்தல் என்ற இடத்தில் இவர்கள் 4 ஈமக்குழியில் அகழ்வாராய்ச்சி செய்தனர். இதில் கிடைத்த பொருள்களின் புகைப்படங்கள் மற்றும் அப்பொருள்களின் காலவரையறை உள்ளிட்டவை குறித்த கருத்தரங்கு புதுச்சேரி மணற்கேணி பதிப்பகத்தின் சார்பில் வியாழக்கிழமை நடந்தது.
÷மணற்கேணி இதழின் ஆசிரியரும் முன்னாள் எம்எல்ஏவுமான ரவிக்குமார் தலைமை வகித்தார். அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டவை குறித்து பேராசிரியர் ராஜன் பேசியது: ÷பொருந்தல் பகுதியில் உள்ள வாழ்விடத்தில் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியில் கிடைத்த கண்ணாடி மணிகள் மெருக்கேற்றப்பட்ட அழகிய கண்ணாடி மணிகளாக இருக்கின்றன. ÷இந்த மணிகள் பல்வேறு நிறத்திலும் கிடைத்துள்ளன. சதுரங்கத்தில் பயன்படுத்தும் காய்கள், சுடுமண் பொம்மைகள், தந்தத்தில் ஆன தாயக் கட்டைகள், சுடுமண்ணில் ஆன காதணிகள், செப்புக் காசு, தங்கப் பொருள்கள் போன்ற தொல்பொருள்கள் இங்கு கிடைத்துள்ளன.
÷இந்த ஊரில் உள்ள ஈமக் காட்டில் 4 ஈமச்சின்னங்கள் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டன. இந்தக் குழிகளில் 4 கால்களைக் கொண்ட ஜாடியில் நெல் மணிகள் வைக்கப்பட்டிருந்தன. அதில் 2 ஈமக் குழிகளில் கிடைத்த நெல்மணிகள் அமெரிக்காவில் உள்ள பீட்டா அனாலிட்டிக் என்ற ஆய்வுக் கூட்டத்தில் காலக்கணிப்பு செய்யப்பட்டது. ÷இந்த அகழ்வாராய்ச்சியில் ஒரு தமிழ்-பிராமி எழுத்துப் பொறிப்பு பெற்ற பிரிமனை வைக்கப்பட்டிருந்தது. அந்த எழுத்துப் பொறிப்பு அறிஞர்களால் வய்ர என்று எழுதப்பட்டுள்ளதாகக் கண்டறிந்துள்ளனர். இந்த எழுத்துப் பொறிப்போடு கிடைத்த நெல்மணிகள் அமெரிக்காவின் ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பப்பட்டு காலக்கணிப்பு செய்யப்பட்டுள்ளது. அதில் நெல் மணிகள் கி.மு. 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று அந்த நிறுவனம் ஆய்வறிக்கை கொடுத்திருக்கிறது. அதனால் அந்த நெல்லோடு இருந்த தமிழ்-பிராமி எழுத்துகளும் அதே காலத்தைச் சேர்ந்தவை என்று உறுதி செய்யலாம்.
÷நெல்லில் தானாக விளையும் நெல், பயிர் செய்யப்படும் நெல் என்று இரண்டு வகை இருக்கிறது. இந்த அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கி.மு. 5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக அறியப்பட்டுள்ள இந்த நெல்மணிகள் எந்த வகையைச் சேர்ந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.
÷இதைக் கண்டறிய புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றும் முனைவர் அனுபாமாவும் இலங்கை நாட்டைச் சேர்ந்த முனைவர் பிரேமதிலகாவும் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர்.
÷அவர்களின் ஆய்வு மூலம் இவை பயிரிடப்பட்ட நெல் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த நெல்லின் பெயர் ஒரிசா சத்வியா இண்டிகா என்று கண்டறியப்பட்டுள்ளது என்றார் பேராசிரியர் ராஜன்.
÷புதுச்சேரி பல்கலைக் கழக முனைவர் பட்ட ஆய்வாளர் மு. செல்வகுமார் வரவேற்றார். பொருந்தல் காட்டும் தமிழின் தொன்மை என்னும் தலைப்பில் தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத்துறையின் முன்னாள் உதவி இயக்குநர் டி. சுப்பிரமணியன், வரலாற்று நோக்கில் பொருந்தல் என்னும் தலைப்பில் பிரெஞ்சு நிறுவனத்தின் பேராசிரியர் கோ. விஜயவேணுகோபால், பொருந்தல் அகழ்வாய்வும் சங்க இலக்கியமும் என்னும் தலைப்பில் பேராசிரியர் ராஜ் கெüதமன் ஆகியோரும் பேசினர்.

http://dinamani.com/edition/Story.aspx?SectionName=Tamilnadu&artid=492210&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=கி.மு.%205-ஆம்%20நூற்றாண்டைச்%20சேர்ந்த%20தமிழ்-பிராமி%20எழுத்துகள்,%20நெல்%20மணிகள்%20கண்டுபிடிப்பு

No comments:

Post a Comment