Wednesday, October 5, 2011

அணுசக்தியும் அகழ்வாராய்ச்சியும் - ரவிக்குமார்
தமிழகத்தின் தென்கோடியில் இருக்கும் ஒரு ஊர் இந்திய அளவில் கவனம் பெற்றிருக்கிறது-. கூடங்குளம். அண்ணா ஹசாரே இயக்கத்தைப் போல படித்தவர்களின் பங்கேற்போ ஊடகங்களின் ஒத்தாசையோ இல்லாமல் அங்கு மக்கள் நடத்திய போராட்டம் நாடு தழுவிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சமரசமில்லாமல், தொடர்ச்சியாக, அமைதியாகப் போராடினால் தமது பிரச்னைகளை நோக்கி அரசாங்கங்களின் கவனத்தை ஈர்க்க முடியும் என்பதைக் கூடங்குளம் மக்கள் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள். அவர்களது கோரிக்கையை ஏற்று தமிழக அரசும் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியிருக்கிறது.
கூடங்குளம் மக்களின் போராட் டம் வெற்றி பெற்றுவிட்டது என்று போராட்டக்காரர்கள் சொல்லிக்கொண்டாலும் நமது ஜனநாயகத்தில் வெற்றி தோல்வி என்பவற்றுக்கு நிரந்தரமான பொருள் எதுவும் இல்லை என்பதால் அவர்கள் சொல்வதை நாம் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அணு உலை பற்றி வீண் பயம் தேவை இல்லை என்று அணு சக்தித் துறை அதிகாரிகள் சிலர் சொல்லிவந்தார்கள். அணு சக்தித் துறையின் முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசன் ‘ஜப்பானில் ஃபுகுஷிமா அணு உலைக்கு நேர்ந்த ஆபத்து இங்கே நிகழாது. அது முதல் தலைமுறை அணு உலை. கூடங்குளத்தில் நிறுவப்பட்டிருப்பதோ மூன்றாம் தலைமுறை அணு உலை’ என்று கூறினார். இன்னும் சில அதிகாரிகள், ‘கூடங்குளம் அணுமின் திட்டத்தை நிறுத்த முடியாது. அந்த அணு உலையை இயக்குவதற்கான பூர்வாங்கப் பணிகள் தொடங்கிவிட்டன’ என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.


‘கூடங்குளம் அணுமின் திட்டம் என்பது ஆட்டொமொபைல் இண்டஸ்ட்ரி போன்றதல்ல. நீங்கள் நினைத்தால் ஸ்விட்சை ஆஃப் செய்துவிட்டுப் போய்விட முடியாது. அங்கு நிறுவப்பட்டிருக்கும் உபகரணங்களைப் பராமரிப்பதற்கேகூட அதை இயக்கியாக வேண்டும்’ என்று கூறியிருக்கிறார் ஒரு அதிகாரி. இத்தகைய அதிகாரிகள்தாம் அரசாங்கத்தின் முடிவைத் தீர்மானிக்கிறார்கள். அரசியல் தலைவர்களுக்கும் ஆட்சி செய்பவர்களுக்கும் மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய கடமை இருக்கிறது. ஆனால், நமது அதிகார வர்க்கத்துக்கு அப்படி எந்தவொரு பொறுப்பும் இல்லை. எனவே அவர்களிடம் நாம் ஈவு இரக்கத்தை எதிர்பார்க்கக் கூடாது.


‘கூடங்குளம் அணு உலையை மூட வேண்டும் எனச் சொல்வதற்கு அங்கே விபத்து ஏற்படும் என்ற பாமரத்தனமான அச்சமே காரணம். அங்கு இருக்கும் கிராமங்களைக் காலி செய்துவிடுவார்கள் என்ற வதந்தியும் ஒரு காரணம். கல்பாக்கத்தில் அணு உலைகள் அமைக்கப்பட்டு இத்தனை வருடங்கள் ஆகிவிட்டன. அங்கே விபத்தா ஏற்பட்டது?’ என்று சிலர் பேசுகிறார்கள். கல்பாக்கத்தில் உள்ள அணு உலைகளுக்கும் கூடங்குளத்தில் நிறுவப்படும் அணு உலைகளுக்கும் அடிப்படையாக ஒரு வேறுபாடு உள்ளது. கூடங்குளம் அணு உலைகள் நல்ல தண்ணீரைக் (Fresh Water) குளிர்விப்பானாக (Coolant) பயன்படுத்துபவை. இதை ‘வி.வி.இ.ஆர். 1000’ வகை எனக் குறிப்பிடுகிறார்கள். இந்த வகை அணு உலைகள் 1975 க்குப் பிறகுதான் உலகில் அறிமுகமாயின. தற்போது இருபது வி.வி.இ.ஆர். அணு உலைகள் உலகில் இயங்கி வருகின்றன. அவற்றில் ஏழு உலைகள் ரஷியாவிலும், பதினோரு உலைகள் உக்ரேனிலும், இரண்டு உலைகள் பல்கேரியாவிலும் உள்ளன. மேலும் 25 அணு உலைகள் கட்டப்பட்டு வந்தன. செர்னோபில் விபத்துக்குப் பிறகு அவற்றில் 18 அணு உலைகள் கைவிடப்பட்டு கட்டுமானப் பணி பாதியோடு நிறுத்தப்பட்டது. இந்த வகை அணு உலைகள் கடற்கரை ஓரங்களில் கட்டப்பட்டதே இல்லை. .முதல் தலைமுறையோ மூன்றாம் தலைமுறையோ இந்த வி.வி.இ.ஆர். அணு உலைகள் பாதுக்காப்பானவை அல்ல என்பதே உண்மை.


திருநெல்வேலி பகுதி பூகம்ப ஆபத்து உள்ள பகுதி. 1900 க்கும் 2000 க்கும் இடைப்பட்ட நூறு ஆண்டுகளில் அந்தப் பகுதியில் முப்பத்தாறு முறை பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. அது மட்டுமின்றி திடீர் திடீரெனப் பாறைகள் உருகிவிடும் நிகழ்வுகளும் அங்கே அடிக்கடி நடப்பதாகப் புவியியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். 2005&இல் ‘சுனாமி’ தாக்கிய நாகர்கோவில் கடல் பகுதிக்கு மிக அருகாமையில் அமைந்துள்ளது கூடங்கும். கூடங்குளம் அணு உலைகளை அமைக்கத் திட்டமிட்டபோது ‘சுனாமி’ ஆபத்து கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. பூகம்ப வாய்ப்புகள் குறித்தும் கவலைப்படவில்லை.


திருநெல்வேலிப் பகுதி ஏற்கெனவே தண்ணீர் பற்றாக்குறையுள்ளது. கூடங்குளம் அணு உலைகளுக்கான தண்ணீர் பேச்சிப்பாறை அணையிலிருந்து எடுக்கப்படும் என்றுதான் முதலில் கூறப்பட்டது. புதிதாகக் கட்டப்படவுள்ள நான்கு அணு உலைகளைச் சேர்த்து மொத்தமாக ஆறு அணு உலைகளுக்கும் நாளொன்றுக்கு 30891 க்யூபிக் மீட்டர் தண்ணீர் தேவைப்படும். அவ்வளவு தண்ணீர் பேச்சிப்பாறை அணையிலிருந்து எடுக்கப்பட்டால் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் பாலைவனம் ஆகிவிடும்.


நூறு ஆண்டுகளுக்கு முன்னால் 1906 இல் கட்டப்பட்ட பேச்சிப்பாறை அணை 1963&க்குப்பிறகு தனது முழுக் கொள்ளளவை எட்டியதே இல்லை. அந்தப் பகுதியில் போதுமான மழையும் கிடையாது. அந்தப் பகுதியில் 1901க்கும் 1989 க்கும் இடைப்பட்ட எண்பத்தெட்டு ஆண்டுகளில் பதினோரு ஆண்டுகள் கடும் வறட்சியும் 41 ஆண்டுகள் வறட்சியும் நிலவியதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது 88 வருடங்களில் 52 வருடங்கள் வறட்சி. அது மட்டுமில்லாமல் கோதையாறு ஆற்றுப்படுகையும் கூடப் போதுமான நீரின்றியே உள்ளது.


இந்த நிலையில் இருக்கிற தண்ணீரையும் அணு உலைகளுக்கு அள்ளிக்கொண்டால் பொதுமக்களின் நிலை என்ன ஆகும் என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும். தற்போது பொதுமக்கள் அந்தப் பகுதியில் பயன்படுத்தி வரும் தண்ணீரில் 38 சதவீதம் தண்ணீர் கூடங்குளம் அணு உலைகளுக்குத் தேவைப்படுகிறது. அந்தப் பகுதியில் உள்ள அனைத்துத் தொழிற்சாலைகளும் பயன்படுத்துவது போல ஐந்து மடங்கு தண்ணீர் கூடங்குளத்துக்கு வேண்டும். திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலுள்ள கால்நடைகள் அனைத்துக்கும் தேவைப்படுகிற தண்ணீரைப் போல மூன்று மடங்கு தண்ணீரைக் கூடங்குளம் அணு உலைகள் குடித்துவிடும்.


அணு உலைகள் இயங்குவதற்கு தண்ணீர் இருந்தே தீர வேண்டும் என்பதால் பஞ்சமோ, வறட்சியோ பேச்சிப்பாறை தண்ணீரில் கூடங்குளம் அணு உலைகளுக்கே முன்னுரிமை தரப்படும். அவர்கள் பயன்படுத்தியது போக மிச்சமிருக்கும் தண்ணீரைத்தான் மக்கள் பயன்படுத்த முடியும்.


அடுத்ததாக இருக்கும் ஆபத்து அணுக்கழிவுகள் பற்றியதாகும். இந்த அணு உலைகளை நம் தலையில் கட்டியிருக்கும் ரஷ்யா தந்திரமாக ஒரு காரியத்தைச் செய்திருக்கிறது. இந்த அணு உலைகளில் பயன்படுத்தி வெளியேற்றப்படும் அணுக்கழிவுகளைத் திரும்ப வாங்கிக்கொள்ள முடியாது என ரஷ்யா கூறிவிட்டது. தற்போதுள்ள இரண்டு அணு உலைகளிலிருந்து ஆண்டொன்றுக்கு 50 டன் அணுக்கழிவு வெளியேறும். தற்போது மேலும் நான்கு அணு உலைகள் உருவாக்கப்படுகின்றன. இன்னும் இரண்டு உருவாக இருக்கிறது. ஆக மொத்தம் எட்டு அணு உலைகள். அவை அனைத் திலிருந்தும் ஆண்டொன்றுக்கு 200 டன் அணுக்கழிவு வெளியேறும். அதை என்ன செய்யப்போகிறீர்கள் என்று அதிகாரிகளிடம் கேட்டால் ‘அவற்றை மறு சுத்திகரிப்பு செய்து அதிலிருந்து புளூட்டோனியத் தைப் பிரித்து எடுப்போம். மிச்சமுள்ள கழிவுகளை கான்கிரீட் தொட்டிகளில் வைத்து அங்கேயே புதைத்து விடுவோம்’ என்று பதில் சொல்கிறார்கள். இப்படித்தான் ரஷ்யாவில் சேர்த்து வைத்தார்கள். கிஷ்டிம் என்ற இடத்தில் 1957 ஆம் ஆண்டில் பெரிய விபத்து ஏற்பட்டு கதிர்வீச்சால் பயங்கரமான பாதிப்புகள் ஏற்பட்டன. அது போல இங்கும் ஏற்பட்டால் நமது கதி என்ன ஆகும்?


இப்படி நம் பிரச்னைகளை எடுத்துச் சொன்னால் ‘மின்சாரத்துக்கு எங்கே போவது?’ என்று அதிகாரிகள் கேட்கிறார்கள். பல்லாயிரம் கோடி ரூபாய்களைக் கொட்டிக் கட்டப்படுகிற அணு உலைகளிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு மிக மிகக் குறைவு. மொத்த மின் உற்பத்தியில் அணு மின்சாரத்தின் பங்கு ஐந்து சதவீதம் கூடக் கிடையாது. அனல் மின்சாரமும் புனல் மின்சாரமும் குறைந்து வருகின்றன என்பது உண்மைதான். மின் உற்பத்திக்கு மாற்று வழிகளைக் கண்டுபிடித்துத்தான் ஆகவேண்டும். அதில் மறுப்பில்லை. சூரிய சக்தி மின்சாரம், காற்றாலை மின்சாரம் போல ஆபத்தில்லாத வழிகளைக் கண்டறிவதுதான் நல்லது. அதை விட்டுவிட்டு அணு குண்டுகளை மடியில் கட்டிக்கொள்வது அறிவுடைமை ஆகாது.


தமிழக முதல்வர் அறிவியல் விவரங்களைப் புரிந்துகொள்ளக் கூடியவர். அணுசக்தி விஷயத்தில் அதிகாரிகள் சொல்வதை அப்படியே நம்பிவிடாமல் மக்கள் நலனிலிருந்து கூடங்குளம் பிரச்னையை அவர் அணுகவேண்டும். தீர்மானம் நிறைவேற்றியதோடு நின்றுவிடாமல் அந்த அணு உலைகளை நிரந்தரமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.


=================================


தமிழ்ச் சமூகத்தைப்போல வரலாற்றைப் பற்றி கவலைப்படாத சமூகம் உலகில் வேறு எங்குமே இருக்காது. நமது தொன்மையைப் பற்றி வாய்கிழியப் பேசுவோம், ஆனால் அதை நிரூபிக்கக்கூடிய ஆதாரங்களையெல்லாம் நாமே அழியவிடுவோம். வரலாற்றுக்கு ஆதாரமாக இருப்பவற்றுள் முக்கியமானது கல்வெட்டு. இந்தியாவில் கிடைத்திருக்கும் கல்வெட்டுகளில் பாதிக்கு மேற்பட்டவை தமிழ்நாட்டில் கிடைத்தவைதாம். அவற்றை முழுமையாகப் படி எடுப்பதற்கோ, படி எடுத்தவற்றைப் பதிப்பிப்பதற்கோ நாம் போதிய அக்கறை காட்டியதில்லை. அதைவிடப் பெரிய கொடுமை அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கல்வெட்டுகள் இருக்கும் குன்றுகளெல்லாம் கல் குவாரி உரிமையாளர்களால் உடைத்து நொறுக்கப்பட்டு வருகின்றன. கோயில்களில் இருக்கும் கல்வெட்டுகளும்கூட புனரமைப்புப் பணிகளின்போது சிதைந்து போகின்றன. அரிய ஓவியங்களின் மீது வெள்ளை அடிப்பதும் சிமென்ட் பூசுவதும் நமது வழக்கமாகிவிட்டது.


இந்தியாவில் கிடைத்திருக்கும் எழுத்து வடிவங்களில் காலத்தால் மிகவும் பழைமையானது சிந்துவெளியில் கிடைத்த எழுத்துகள்தான் என்று தொல்லியல் அறிஞர்கள் கூறுகின்றனர். அவற்றை முழுமையாக எவரும் படித்துப் பொருள் சொல்லவில்லை. என்றாலும், அதில் திராவிட மொழியின் கூறுகள் கலந்திருப்பதை அஸ்கோ பர்போலா என்ற அறிஞர் எடுத்துக்காட்டியிருக்கிறார். அதற்கு அடுத்த கட்டத்தைச் சேர்ந்தவையாகக் கருதப்படுபவை ஒரு விதக் குறியீடுகளாகும். அவையும் படித்து அறியப்படவில்லை. அதற்கு அடுத்ததாகப் பயன்பாட்டில் இருந்த எழுத்து முறையை பிராமி எழுத்து முறை என்று குறிப்பிடுகிறார்கள். ‘புத்தமத ஜாதகக் கதைகள், பிராமியைத் தோற்றுவித்தவர் புத்தர் என்று கூறிக்கொள்ள, சமணர்கள் அவர்களது முதல் தீர்த்தங்கரரான ரிஷபதேவர் தமது மகள் பிராதமி பெயரில் உருவாக்கியதே பிராமி என்றழைக்க, இந்துக்களோ பிரம்மா தோற்றுவித்ததால் பிராமி எனப் பெயர் பெற்றது என்று கூறிக்கொள்கின்றனர்’. பிராமியை உருவாக்கியது யார் என்பதில் இப்படிப் பல்வேறுபட்ட கருத்துகள் இருந்தாலும் தென் இந்தியாவில் பிராமி எழுத்து முறை அசோகனால் அறிமுகப்படுத்தப்பட்டது என்றும், எனவே கி.மு. 3&ஆம் நூற்றாண்டுக்குப் பிறகே தமிழ்நாட்டில் எழுத்து வடிவம் பயன்பாட்டுக்கு வந்ததென்றும் தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் கூறிவந்தார். அசோகன் பயன்படுத்திய எழுத்துகளுக்கும் தமிழ்நாட்டில் கிடைத்த கல்வெட்டுகளில் காணப்படும் பிராமி எழுத்துகளுக்கும் இடையே பல்வேறு வித்தியாசங்கள் இருந்ததால் இதைத் ‘தமிழ் பிராமி’ எனப் பெயரிட்டு அழைத்தார். அவருடைய நிலைபாட்டை மாற்றும் விதமாக இப்போது ஒரு ஆதாரம் கிடைத்திருக்கிறது.


பழனிக்கு அருகில் இருக்கும் பொருந்தல் என்ற இடத்தில் பேராசிரியர் கா.ராஜன் அவர்களின் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில் சில அரிய பொருட்கள் கிடைத்திருக்கின்றன. சங்க இலக்கியத்தில் குறிப்பிடப் பட்டிருக்கும் வள்ளல்களில் ஒருவனான பேகன் ஆட்சி செய்த ஊர் அது. அங்கு ஒரு மண் சாடியில் இரண்டு கிலோ அளவுக்கு நெல் கிடத்திருக்கிறது. அதை அறிவியல் ரீதியான ஆய்வுகளுக்கு உட்படுத்தியதில் அது விவசாயம் செய்து விளைவிக்கப்பட்ட நெல் என்பது தெரியவந்திருக்கிறது. அந்த நெல்லின் காலத்தை அமெரிக்காவில் இருக்கும் ஆய்வுக்கூடம் ஒன்றுக்கு அனுப்பிப் பரிசோதித்ததில் கி.மு.490 எனத் தெரிய வந்திருக்கிறது. இதன் மூலம் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் வேளாண்மை செய்து சிறப்போடு வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை நாம் அறியமுடிகிறது. இந்த அகழ்வாய்வில் இன்னொரு முக்கியமான பொருளும் கிடைத்திருக்கிறது. ஜாடிகளை வைப்பதற்குப் பயன்படுத்தப்படும் மண்ணால் ஆன புரிமனை ஒன்றை அங்கே கண்டெடுத்திருக்கிறார்கள். அதில் பிராமி எழுத்துகள் காணப்படுகின்றன. ‘வயிர’ என்று அதில் எழுதப்பட்டிருப்பதாகத் தொல்லியல் அறிஞர்கள் கூறுகின்றனர். அதே இடத்தில் கிடைத்த நெல்லின் காலம் அறிவியல் ரீதியாகக் கண்டறியப்பட்டிருப்பதால் அந்த பிராமி எழுத்தின் காலமும் அதே கி.மு 490 தான் என்பதில் சந்தேகம் இல்லை. அசோகன் காலத்துக்கு முன்பே தமிழர்கள் எழுத்து முறையை உருவாக்கிப் பயன்படுத்தி வந்தார்கள் என்ற மாபெரும் உண்மை இந்த அகழ்வாய்வால் வெளிப்பட்டிருக்கிறது.


பேராசிரியர் கா.ராஜன், தற்போதிருக்கும் முக்கியமான தமிழகத் தொல்லியல் அறிஞர்களில் ஒருவர். மைசூர்ப் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்ற அவர் துவாரகா, பூம்புகார், ராமாபுரம், பெரியபட்டினம், கொடுமணல், மயிலாடும்பாறை, தாண்டிக்குடி ஆகிய அகழ்வாய்வுகளில் பங்கேற்றவர். தமிழ்நாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொல்லியல் இடங்களைக் கண்டறிந்திருக்கும் பேராசிரியர் கா.ராஜன் இதுவரை பதினைந்து ஆராய்ச்சித் திட்டங்களை நிறைவு செய்திருக்கிறார். கேம்ப்ரிட்ஜ் பலகலைக் கழகம், லண்டன், டோக்கியோ, பாரீஸ் ஆகிய நகரங்களில் இருக்கும் புகழ்பெற்ற பல்கலைக் கழகங்கள் முதலானவற்றில் வருகைதரு பேராசிரியராக அவர் பணியாற்றுகிறார். ஆங்கிலத்திலும் தமிழிலுமாக இதுவரை எட்டு நுல்களை எழுதியிருக்கும் அவர் அறுபதுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி வெளியிட்டிருக்கிறார்.


பாண்டிச்சேரிப் பல்கலைக் கழகத்தில் அவரது துறைக்குச் சென்று நான் அவரைச் சந்தித்தபோது தன்னையே தனது ஆய்வுக்கு அர்ப்பணித்துக்கொண்ட அபூர்வமான ஒரு ஆய்வாளரைச் சந்திக்கிறோம் என்ற உணர்வே எனக்கு ஏற்பட்டது. குடும்பத்தினரைப் பிரிந்து தனது ஆய்வுகளுக்குத் துணையாக இருக்கும் ஆய்வு மாணவர்களோடு தங்கியிருக்கும் பேராசிரியர் ராஜன், அந்த மாணவர்களையும் தனது சொந்த செலவில்தான் பராமரித்து வருகிறார். தொல்லியல், அகழ்வாராய்ச்சி போன்ற துறைகளில் ஈடுபடுவதற்கு இளைய தலைமுறையினர் அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை என்பதை வருத்தத்தோடு அவர் தெரிவித்தார். ‘‘இப்போதுள்ள வசதிகளை வைத்துக்கொண்டு ஒரு இடத்தை முழுதுமாக அகழ்வாய்வு செய்து முடிக்க சுமார் இருபத்தைந்து ஆண்டுகள் ஆகும்’’ என்று அவர் சொன்னபோது தமிழ்நாட்டில் இருக்கும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த ஆயிரக்கணக்கான இடங்களை அப்படி ஆய்வு செய்ய எவ்வளவு காலம் ஆகுமென எண்ணி மலைத்துப் போனேன். இதில் அரசாங்கங்களின் உதவி மட்டுமல்ல கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் ஆகியவற்றின் பங்கேற்பும் அதிகரிக்கப்பட வேண்டும். முதல் கட்டமாகத் தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்துப் பலகலைக் கழகங்களிலும் தொல்லியல் துறைகள் உருவாக்கப்பட வேண்டும். அவை ஒவ்வொன்றும் ஒரு இடத்தைத் தேர்வு செய்து அகழ்வாய்வை மேற்கொள்ளவேண்டும். பல்கலைக் கழகங்களில் தற்போதிருக்கும் வரலாற்றுத் துறைகள், எழுதப்பட்ட வரலாறுகளைப் படித்துக் கொடுக்கும் வேலையைத்தான் பெரும்பாலும் செய்கின்றன. அங்கு பணியாற்றுகிறவர்கள் வரலாற்றுப் பாடங்களைப் போதிக்கும் ஆசிரியர்களாகவே இருக்கின்றனர். அவர்களில் வரலாற்றறிஞர் (historian) எனச் சொல்லத் தக்க எவரும் இருக்கிறார்களா என்று தெரியவில்லை. இந்த அவலநிலையை மாற்ற நமது உயர்கல்வி நிறுவனங்கள் முன்வரவேண்டும்.


பொருந்தலில் பேராசிரியர் ராஜன் செய்திருக்கும் அகழ்வாய்வைப் போல இந்தியாவின் வேறு எந்த மொழியில் செய்யப்பட்டிருந்தாலும் மிகப் பெரிய அளவில் அதைக் கொண்டாடியிருப்பார்கள். ஆனால் புதுவை மத்திய பல்கலைக் கழகத்தில் அவரது துறை அமைந்திருக்கும் கட்டடத்துக்கு அருகில் இருக்கும் தமிழ்த் துறையிலிருந்துகூட எவரும் வந்து அவரது கண்டுபிடிப்பைப் பற்றிப் பேசவில்லையாம். இதுதான் தமிழரின் தனித்துவமா??
நன்றி : http://www.suriyakathir.com/

1 comment:

  1. அணு..
    இதில் இன்னும் கொடுமை என்ன என்றால் சூரிய ஒளி சக்தி மூலம் பெரும் மின்சாரம் ஒரு உநிட் ௧௫ ரூபாய் வரும் என்கிறார்கள், கணக்கு போட்டு பார்த்தால் பராமரிப்பு செலவுடன் சேர்த்து மூன்று ரூபாய் தான் வருகிறது... மேலும் அணுக்கழிவு அதிர்ச்சியான விஷயம் என்ன என்றால் இந்த அணுக கழிவுகளை என்ன செய்வது என்று இன்னும் யோசித்துக் கொண்டிருக்கிறார்களாம்...
    அகழ்வாராய்ச்சி..
    நம் அகழ்வாராய்ச்சி துறையில் இப்பொழுது இருக்கும் ஒருவர்[ஆரியர்] இருக்கும் வரை எந்த வரலாற்று ஆவணங்களும் காக்க படப் போவதில்லை என்று என் தோழர் கூறினார்,,, ஏனெனில் ஆரிய திராவிட சான்றுகளை அழிப்பது அவர் கருத்துக்கு துணை நல்குவதாக உள்ளதாம்... என்னத்த சொல்ல?

    ReplyDelete