கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட புதுச்சேரி பள்ளி மாணவி பிரச்சனை பல்வேறு போராட்டங்களுக்குக் காரணமாகியிருக்கிறது .அதைத் தொடர்ந்து புதுச்சேரி அரசு அறிவித்த - செல் பொங்கலுக்குத் தடை, மாணவிகளுக்குத் தனிப் பேருந்து , அவர்களின் யூனிபார்மின் மீது ஓவர்கோட் - என்ற அறிவிப்பு பலரது விமர்சனத்துக்கும் ஆளாகியிருக்கிறது.
பெண்கள்மீதான பாலியல் வன்முறைகள் நிகழ பெண்களே காரணம் என்ற ரீதியில் அடிப்படைவாதிகள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆர்.எஸ்.எஸ் தலைவர் முதல் ஜெய்ப்பூர் சாமியார் வரை அப்படித்தான் பேசியுள்ளனர். பெண்களின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தி அவர்களை முடக்கிப் போடும் இவ்விதமான கருத்துகள் மிகவும் ஆபத்தானவை . புதுச்சேரி செய்தியை மடல் குழுவில் இட்டிருந்தேன். அதையொட்டி வந்த எதிர்வினைகளை இங்கே பாருங்கள் :
நாக இளங்கோவன் :
எதனாச்சும் இடக்குமடக்கான திட்டங்களைக் கூட்டத்தைக் கூட்டி
அறிவித்துவிட்டால் போதும் என்பதே அரசாங்கங்களின் போக்காக
இருக்கிறது. இதைவிட, ஆண்கள் வெளியே போகும்போது
இரும்புக் கோவணம் கட்டி, அதைப் பூட்டி, திறக்குச்சியைக் காவல்துறையிடம்
கொடுத்துவிட்டுப் போகவேண்டும் என்ற சட்டம் வந்தால் இன்னும் நல்லா இருக்கும் :-))
அரசு, ஆட்சி, அரசாங்கம் என்று போய்விட்டால் ஏற்படும் மூளைவறட்சி
ஆராயப்படவேண்டிய ஒன்று.
both the sides have inverse relationship it seems :(
தமிழறிஞர் வீ.எஸ்.ராஜம் :
புதுச்சேரியின் திட்டத்தைக் கிண்டலிக்க எனக்குத் தோன்றவில்லை. ஆண், பெண் இருவருடைய உடையிலும் மாற்றம் ஏற்படுத்தலாம் என்று தோன்றுகிறது. இப்போது இருக்கும் உடைகளையும் எப்படி ஒழுங்காக அணிவது என்று பெண்களுக்குச் சொல்லித்தரவேண்டும்!!! அந்தத் துப்பட்டாவோ என்னவோ இருக்கிறதே ... அதன் நோக்கம் என்ன, அதை எப்படி ஒழுங்காக அணியவேண்டும் என்றே பெண்களில் பலருக்கும் தோன்றுவதில்லை! கால் வீசி நடக்க வசதியாக இருக்கும் கால் உடுப்பு நல்லதே. அவசரத்தில் ஓடுவதற்கும் உதவுகிறது. ஆனால் அந்தத் துப்பட்டா இருக்கே ... அது மறைக்கவேண்டிய உறுப்புகளை மறைக்கும்படிப் பலரும் அணிவதில்லையே! கொடுமை, கொடுமை.
ஆனால் உடுப்பு மாற்றத்தோடு, அடிப்படையான மாற்றம் ஏற்படுத்தவேண்டிய தேவையும் இருக்கிறது. பாலியல் உணர்வு, ஈர்ப்பு, உணர்வும் ஈர்ப்பும் கட்டுக்கடங்காமல் போனால் உண்டாகும் கொடுமைகள், யார் யார்க்கு என்ன இழப்பு, துன்பம், துயரம் ... போன்றவை பற்றிப் பள்ளிகளில் பாடத்திட்டம் உண்டாக்கலாம். ஒருவரை ஒருவர் மதிக்கக் கற்றுக்கொடுக்கலாம். திரைப்படங்களில் ஆண் பெண்ணைக் கலாட்டா செய்யும் காட்சிகளையும், ஆண்களை ஈர்க்கப் பெண்கள் ஆட்டம் போடும் காட்சிகளையும் அனுமதிக்கக் கூடாது. தொடக்கநிலைப் பள்ளியிலிருந்தே பெண்களுக்கு ஏற்ற வகையில் தற்காப்புப் பயிற்சியை (கராத்தே, கங்ஃபூ, வர்மக்கலை .. போல) ஒரு கட்டாய பாடமாகக் கொண்டுவரவேண்டும். இப்படி, உருப்படியாக நினைத்துச் சிறிதளவாவது செயல்படுத்தலாம்.
ஒரு சிறு குறிப்பு: இங்கே அமெரிக்காவில் ஒரு சிறு குழந்தை கூட (ஆணோ பெண்ணோ) அயலவர் எவரையும் தன்னைத் தொடவிடாது. பிற்காலத்தில் rape அது இது என்று நடப்பது வேறு. தன் துணையைத் தானாகத் தேர்ந்தெடுத்துக்கொள்ளவேண்டிய கட்டாய நிலையில் நடக்கும் செய்திகள் வேறு. ஆனால் குழந்தைப் பருவத்திலேயே இந்தப் "பயிர்ப்பு" உணர்ச்சியைப் பற்றிச் சொல்லிக்கொடுக்கிறார்கள். அந்தப் "பயிர்ப்பு" எல்லாம் தமிழகத்திலும் இருந்ததுதானே. ஆனால், அது பெண்ணுக்கு மட்டும் என்று சொன்னவர்கள் மிகப் பெரிய தவறு செய்துவிட்டார்கள். கொடுமை.
கொஞ்சம் பழங்கதை பேசுகிறேன்; பேசித்தான் ஆகவேண்டும் என்று நினைக்கிறேன்.
முசிபூர் இரகுமான் (முஜிபூர் ரஹ்மான்) காலத்தில், வங்காளத்தில் கலவரம் உண்டான காலத்தில் என்று நினைக்கிறேன், நான் கல்லூரியில் தமிழாசிரியை. பெரியபுராண வகுப்பு; பிள்ளைக்கறி சமைத்த சிவனடியார் சிறுத்தொண்டர் புராணம் பாடம். சிவனடியாருக்காகத் தாய் தந்தை அறுத்துக் கறி செய்த 5-வயதுச் சிறுபிள்ளையை, "சீராளா, வாராய்" என்று அழைத்தவுடன் உயிரோடு பள்ளியிலிருந்து திரும்பினான் சிறுபிள்ளை என்று பாடம் சொல்லவேண்டியிருந்தது.
பக்தி, இலக்கிய, நயம் எல்லாம் உணர்ந்து உரைத்த பிறகு உள்ளுணர்ச்சி வெளிப்பட்டுவிட்டது; சொன்னேன்: 'உண்மையிலேயே இப்படி ஒரு கடவுள் இருந்தால் ... இப்போது வங்காளத்தில் கற்பழிக்கப்படும் ஒவ்வொரு பெண்ணின் நிலையையும் உணருவான். ஒரு பெண்ணை அவள் வேண்டாத வகையில் பார்த்து, தொட்டு, அவளைக் கற்பழிக்க முயலும் ஒவ்வோர் ஆணின் உடலும் அந்தந்த நேரத்தில் அப்படி அப்படியே மரத்துப் போகவேண்டும்; இதைச் செய்யாத கடவுள் என்ன கடவுள்?' கண்ணீரும் நெஞ்சு நெகிழ்வும் குரலை அடைக்க, நல்லவேளை வகுப்பு முடிந்தது. இடைவேளை நேரத்தில் சில மாணவியர் என்னைத் தேடிவந்து மிகவும் அன்போடும் கவலையோடும் கேட்டார்கள்: 'மிஸ், நீங்க நாத்திகரா?' எனக்குச் சிரிப்பு வந்தது. பிறகு அவர்களுக்குப் பெண்களின் கவலைக்குரிய நிலையை எடுத்துச் சொன்னேன்: சீராளனை உயிர்ப்பித்த கடவுள் இன்று இல்லை. இருக்கும் கடவுளர்க்கும் வேறு வேறு கவலைகளும் பொறுப்புகளும் இருக்கும்; கற்பழிப்புப் பற்றி என்ன கவலை? அதனால், இழிந்த நிலையில் இருக்கும் பெண்களே தங்களைக் காப்பாற்றிக்கொள்ளவேண்டும். இதுக்கெல்லாம் கடவுள் உதவமாட்டார்.
கடவுளைக் குற்றம் சொல்லி என்ன பயன்? பெரும்பாராட்டுக்குரிய நம் பண்டைத் தமிழக அரசர்களே பிற நாட்டை வென்ற செருக்கில் அந்தந்த நாட்டு மகளிரைக் "கொண்டி மகளிர்" என்ற பெயரில் கொண்டுவந்து ... பிற்காலத்தில் அவர்களைத் தேவதாசி ஆக்கியவர்கள்தாமே! பெண்ணைத் தன் இன்ப நுகர்ச்சிக்காகக் கையாளுவது தமிழினத்துக்குப் புதிதில்லையே!!!
அது கிடக்கட்டும்.
இந்தக் கால நிலையைப் பார்த்தால் ...
தலை முதல் அடிவரை, விண்வெளிப் பயணம் போகிறவர்களைப் போல ஓர் இரும்புக் கூட்டுக்குள் பூட்டிவைத்துத்தான் சில ஆண்களை வெளியே அனுப்பவேண்டும். அவனுடைய முயற்சி இல்லாமல், அவனுக்கு என்று வாய்த்த பிறவியில் கிடைத்திருக்கிற ஆணுறுப்பு மட்டுமில்லை, அவனுடைய தோளும் கைகளும் கட்டுப்படுத்தப்பட வேண்டும். இதை என் 40 வயதுக்கும் மேல் எனக்கு நடந்த ஒரு நிகழ்ச்சியின், அதுவும் மதுரை மீனாட்சி கோயிலுக்குத் தொட்டடுத்த ஒரு தெருவில் நடந்த நிகழ்ச்சியின் அடிப்படையில் வைத்துச் சொல்கிறேன். சில மருத்துவர்கள்கூடக் கேவலமாக நடந்துகொண்டிருக்கிறார்கள். எந்த வயதுப் பெண்ணையும் எந்த ஓர் அயலவனும் முறையில்லாமல் தொடக்கூடாது. அதுவும் ... தெருவில் ... 40 வயதுக்கு மேற்பட்ட ஒரு பெண்ணின் மார்பகத்தை இடித்துப் போவதனால் ... நாசமாய்ப் பாழாய்ப் போகிற ஒருவனுக்கு (இந்த வகை இழிமொழியைப் பொது மன்றத்தில் பயன்படுத்துவதற்கு அன்புகூர்ந்து மன்னிக்கவும்; பொறுக்காத, மறக்காத, ஆறாத புண்பட்ட நெஞ்சு அப்படித்தான் எழுதவைக்கிறது.) என்ன சுகம் கிடைத்ததுவோ? என் உடலைத் தொட அந்தத் தடியனுக்கு என்ன உரிமை? கத்தினேன்; என்னால் செய்ய முடிந்தது அவ்வளவே. அப்போது நினைத்தேன் ... என் புடைவையில்/ரவிக்கையில் ஒரு முள்வேலி இருந்திருந்தால் இந்தத் தடியனுக்கு ஆகா எவ்வளவு சுகமாக இருந்திருக்கும் என்று. மனதில் அவனை முள்வேலியால் சுற்றிச் சுழற்றி உருட்டிப் புரட்டிப் பார்த்தேன்; அவ்வளவே.
கல்லூரிக் காலத்தில் நானே நினைத்திருக்கிறேன் ... மருத்துவர்கள் அணிகிற மாதிரியே எல்லாப் பெண்களுக்கும் ஒரு மேலாடை இருந்தால் ... தேவையில்லாத "நோக்கு" என்பதைத் தவிர்க்கலாமே என்று.
மேலே நான் குறிப்பிட்டதுபோல ... அடிப்படை மாற்றம் வேண்டுவது எண்ணத்தில், மக்களைப் பார்க்கும் பார்வையில்.
நாக இளங்கோவன் :
அன்பின் அம்மா,
தங்கள் நேரிய கருத்துகளோடு எனக்கு முழு ஒப்புமை உண்டு. பெரியபுராணம் உட்பட.
உடை விதயத்தில் மேலும் முன்னேற்றம் செய்யலாம் என்றாலும் எனக்கு அதன்பால்
பெரிய நம்பிக்கை இல்லை. தங்கர் பச்சானின் புதினம் ஒன்று படித்தேன். பெயர் குடிமுந்திரி என்று நினைவு. 10 ஆண்டுகளுக்கு முன்னர் படித்தது. அதில், ஒருவன்
காமம் முற்றிப்போய், பசுமாட்டை வஞ்சமாக மரங்களிடைச் சிக்கவைத்துப் புணர்ந்து விடுகிறான். பல நாள் கோபத்தை உள்ளே அடக்கிக் காத்திருந்த அந்தப் பசு ஒருநாள் அவனை முட்டிக் கொன்று விடுகிறது. இது யாருக்கும் தெரியாமல் இருப்பதாகக் கதை போகும். அண்மையக் கற்பழிப்புச் செய்திகளைப் படிக்கும்போது எனக்கு இதன் நினைவுதான் வந்தது. இந்த மனித உணர்வு நோயா? ஆணவமா? விலங்கு குணமா? என்று பார்த்தால் இதன் மொத்த உருவமாகவே தெரிகிறது. ஆனால், அந்தக் கதை ஒரு செய்தியை உள்வைத்திருப்பதாகவே எனக்குப் படுகிறது. அவனின் தேவைக்கு மனிதபெண்களைத் தேடாமல் விலங்கைத் தேடிச்சென்றது - அச்சத்தின் காரணமாகவே இருக்கக்கூடும். அமெரிக்கா, சிங்கை போன்ற இடங்களில் சட்டம் சரியாக வேலைசெய்கிறது. அங்கே என்ன கல்வியைக் கொடுத்தாலும் அது முறையாகப் போய்ச்சேரும். இங்கே சூழல் மிக மோசமாக இருக்கிறது, அரசாங்கங்கள் போட்டி போட்டுக் கொண்டு எதையாவது செய்கிறார்களே தவிர, அவர்களால் அவர்களையும்
கட்டுப்படுத்திக் கொள்ள இயலவில்லை; காட்டுமிரண்டிகளையும் கட்டுப்படுத்த
இயலவில்லை. சட்டமும், காவலும் மக்களால் மக்களுக்காகச் செய்யப்படுபவைதான்.
காவல் நிலையத்திலும் வழக்குமன்றத்திலும் பிழையான நிலைகளை மக்கள் வைத்துக்கொண்டு அதே மக்கள் குமுகத்தில் வேறொரு நிலையை எதிர்பார்ப்பது
என்பது மிக முரணான விதயம். இந்த முரண்பாட்டுக்காரர்களுக்காக அப்பாவி மக்களாகிய நாம் என்னென்னவோ தற்காப்புகளைச் செய்து கொண்டே போவது
அவர்களை மேலும் மேலும் வளர்த்துவிடவே செய்கிறது என்று கருதுகிறேன்.
தில்லிப் பெண்ணழிப்பு பற்றி இந்தியாவே கதறியது. ஆனால், எண்ணிப்பாருங்கள்
அந்தக் காடையர்களில் யாரோ ஒருவன் செல்வாக்குள்ள அரசியல் கட்சியினராகவோ பெரிய அதிகாரியாகவோ இருந்திருந்தால் இந்தியாவை இந்த அளவுக்குச் சிந்திக்கவிட்டிருக்கமாட்டார்கள். ஏடுகளைத் திறந்தால் திடீர் ஞானவானாக
எங்கு பார்த்தாலும் இது போன்ற செய்திகளை எழுதுகிறார்கள்.
இன்னும் கொஞ்ச நாளில் விழா, அது இது என்று காலத்தை ஓட்டி
வேறொரு புதுச்சரவலைப் பேசிக்கொண்டிருப்பார்கள். அரசு, மக்கள்
எல்லாருமே அதற்குப் பழகிவிட்டார்கள்.
இன்றைக்கு இருக்கும் நிலையில், சட்டம் ஒழுங்காக வேலை செய்தாலே
போதும். வேறு ஏதும் புதிதாகச் செய்யவேண்டியதில்லை. அதைச்
செய்ய எந்த அரசுக்கும் துப்பு இல்லை. அப்படியே அந்தச் சட்டம்
வேலை செய்தாலும் அது சாதி, மதம் என்றவற்றையும் தாண்டி
பணத்திற்கு வேலை செய்கிறது. கோவையில் கொடுமையான
சிறுமி, சிறுவனைக் கெடுத்துக் கொன்று போட்டார்கள்.
மிகக் கேடான செயல்தான். 5 நாள்களுக்குள் கொலைகாரர்களை
காவல்துறையே சுட்டுக் கொன்று தண்டனை கொடுத்தது.
ஏனென்றால் மார்வாடி குமுகங்களின் அழுத்தம். இதே
சாதாரண மக்களுக்கு ஏற்பட்டிருந்தால் அரசும் காவல்துறையும்
கண்டு கொள்ளாது. இந்த நிலையில், கையாலாகாத இவர்களால்
நாம் எத்தனைதான் நம்மை மாற்றிக் கொள்வது? என்ற கேள்வியே
என்னுள் எழுகிறது.
இந்த மூடர்களுக்காக நாம் நம்மை மாற்றி மாற்றிக் கொள்ள
அவர்கள் முரடர்களாகவே தொடர்கின்றனர். ஆயினும்,
இதில் இருந்து மீள எனக்கு வழிதான் தெரியவில்லை.
பெரிய புராணம் பற்றி பின்னொரு முறை மேலும் பேச ஆசை. சிறுத்தொண்டர் புராணம்
உள்ளிட்ட வேறும் சில புராணங்கள் மிகவும் நெருடலானவை. சேக்கிழார்
எழுதுவதற்கு முன் பல ஆண்டுகள் ஓடி பல குழறுபடிகளின் வடிப்பாக
அவை தெரிகின்றன. சில கதைகள் சொல்லும் செய்திகள் நீங்கள் சொல்வது போல
இறைவன் தன்மைக்குச் சிறிதும் பொருத்தமில்லை. அதுவும் சிவத்திற்குச் சிறிதும்
பொருத்தமானதில்லை.
தங்களுக்கு நேர்ந்த அவலம், மிகவும் கொடுமையானது. தமிழ் நாட்டில் பல
பண்பாட்டு வழக்கங்கள் கூர்ந்து நோக்கப்படவேண்டியவை.
பெண்களிடம் மாமன்-மச்சான் விளையாட்டுகள், பள்ளி கல்லூரிகளில் மாணவ மாணவிகளுக்கு இயல்பாக வருகின்ற "ராகிங்" என்ற வன்முயற்சி, சாதிகளில்
இருக்கின்ற பெரிய-சின்ன எண்ணங்கள், எல்லாவுமே ஆயப்படவேண்டியவை.
சாதாரண திரைப்படங்களில் கூட, நகைச்சுவை, தமிழனுக்கு எப்ப வருகிறது என்றால்
கதைநாயகர், இன்னொரு கோமாளியை அடித்து, அவமானப்படுத்தினால்தான்
தமிழனுக்குச் சிரிப்பே வருகிறது என்பது நிச்சயம் மகிழத்தக்க விதயமில்லை.
தரங்கெட்ட செயல் சாதாரண நகைச்சுவையாக எண்ணி மகிழும் குமுகம்
சரியான அறிவைக் கொண்டிருக்க வாய்ப்பில்லையல்லவா?