Wednesday, January 16, 2013

இன்னொரு யுத்தம் தேவையா ?




இந்திய பாகிஸ்தான் உறவில் சட்டென்று ஒரு முறுகல் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்திய சிப்பாய் ஒருவரது தலை துண்டிக்கப்பட்ட விவகாரம் இந்திய தரப்பில்  கோபத்தைத் தூண்டியிருப்பதில் வியப்பில்லை. இரு நாடுகளுக்கும் இடையே மூன்று போர்கள் நிகழ்ந்துள்ளன. எப்போதும் சிறு சிறு சண்டைகள் எல்லையில் நடந்தபடி இருக்கின்றன. பிரிவினைக்கு முன்னும் பின்னுமாக இரு தரப்புக்கும் ஏற்பட்டிருக்கும் இழப்பு கொஞ்ச நஞ்சமல்ல .

2003 ஆம் ஆண்டு முஷரப் அரசாங்கத்துக்கும் அப்போது இந்தியாவை ஆண்ட பா.ஜ.க. அரசுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் இன்று காலாவதியாகும் நிலையில் உள்ளது. காஷ்மீர் மட்டுமின்றி இமய மலையில் உற்பத்தியாகும் நதிகளின் நீரைப் பகிர்ந்து கொள்வதிலும், சியாச்சன் பிராந்தியத்தில் எல்லை வகுப்பதிலும்கூட இரு நாடுகளுக்குமிடையே பிரச்சனை இருந்துவருகிறது. சிறிய அளவில் வர்த்தகம் மற்றும் மக்களின் போக்குவரத்து என்பவற்றில் பரஸ்பரம் சில ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டாலும் மேற்சொன்ன விஷயங்களில் இரண்டு நாடுகளுக்குமே இன்னும் தெளிவான உடன்பாடுகள் எட்டப்படவில்லை.

இப்போது எழுந்திருக்கும் பதற்ற நிலை இரண்டு நாடுகளின் ஆட்சியாளர்களுக்கும் ஆபத் பாந்தவனாக அமைந்திருக்கிறது பாகிஸ்தான் ஆட்சி தடுமாறிக்கொண்டிருக்கிறது. பிரதமரைக் கைதுசெய்ய   நிலையில் அந்நாட்டில் ஆங்காங்கே வன்முறைகள் நிகழ்ந்துவருகின்றன. ஆட்சியாளர்களின் பலவீனத்தைப் பயன்படுத்தி லஷ்கர் இ தொய்பா போன்ற தீவிரவாத அமைப்புகள் தமது பிடியை அங்கே இறுக்கியிருக்கின்றன. அங்கிருக்கும் ஆட்சியாளர்களுக்கு உதவும் விதத்தில் அந்நாட்டு ராணுவம் இப்படி எல்லையில் பதற்றத்தைத் தூண்டியிருக்கலாம்.

இந்திய ஆட்சியாளர்களும் இதை அவ்வளவு எளிதாக கை நழுவ விடமாட்டார்கள் பா.ஜ.க இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேட முற்படுகிறது என்றாலும் பல்வேறு ஊழல் புகார்களாலும் விலைவாசி  உயர்வாலும் துவண்டுகிடக்கும் காங்கிரசும் இதில் பலனடையவே பார்க்கும்.

சுருக்கமாகச் சொன்னால் எல்லையில் தற்போது ஏற்பட்டிருக்கும் பதற்றத்தை மேலும் அதிகரிக்கச் செய்து அதை அரசியல் ரீதியில் பயன்படுத்தவே இரு நாட்டு ஆட்சியாளர்களும் முயல்வார்கள் என்றே தோன்றுகிறது. அப்படி நடந்தால் அது இரண்டு நாட்டு மக்களுக்கும் மிகப்பெரிய சுமையாகவே அமையும். இரண்டு நாடுகளுமே அணு ஆயுதங்களை வைத்திருக்கின்றனஎன்பது  மட்டுமல்ல நமது கவலை. அந்த ஆயுதங்களைப் பயன்படுத்தாவிட்டாலும்கூட  மக்களுக்கு சிரமம்தான். வெறுமனே துருப்புகளை எல்லையை நோக்கி நகர்த்தவே பல கோடி ரூபாய் செலவாகும் என்னும்போது ஒரு யுத்தம் எவ்வளவு பெரிய பொருளாதார சுமையை நம் தலையில் சுமத்தும் என்பதை எண்ணிப்பார்க்கவே முடியவில்லை. கார்கில் போரின்போது   மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு சதவீத கூடுதல் வரி மூன்று சதவீதமாக உயர்ந்து இப்போதும் நம்மை நசுக்குகிறது. இன்னொரு யுத்தம் மூண்டால் நாடு தாங்காது.

இன்றைய தேவை அமைதியே தவிர யுத்தமல்ல. இதை நமது    ஆட்சியாளர்களுக்குச் சொல்லவேண்டியது நமது கடமை.

1 comment:

  1. இன்றைய தேவை அமைதியே தவிர யுத்தமல்ல._good~!

    ReplyDelete