Monday, February 11, 2013

நாடகத் திருமணம் என்ற நச்சுப் பிரச்சாரம்தர்மபுரியில் தலித் மக்களுக்குச் சொந்தமான முன்னூறு வீடுகளை எரிப்பதற்கும், பலகோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளைக் கொள்ளையடிப்பதற்கும் காரணமாக இருந்த சக்திகள் அதைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாததோடு தலித் மக்களுக்கு எதிராகப் பல்வேறு அவதூறுகளையும் பரப்பி வருகிறார்கள். தலித் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ’ஜீன்ஸ் பேண்ட், டி ஷர்ட், கூலிங் கிளாஸ்’  அணிந்துபோய் பிற சாதிகளைச் சேர்ந்த பெண்களை மயக்கித் திருமணம் செய்துகொண்டு அவர்களின் சொத்துகளைப் பறித்துக்கொண்டு விரட்டிவிடுவதாக ஒரு பொய்க் கதையைக் கூறி வருகிறார்கள்.

’தமிழ்நாட்டில் எல்லோருமே காதல் திருமணம், கலப்புத் திருமணம்தான் செய்துகொள்கிறார்கள் போலும்!’ என நினைக்கும்படியாக மருத்துவர் இராமதாசு அவர்களின் தலைமையில் செய்யப்பட்டுவரும் இந்த பொய்ப் பிரச்சாரத்தை ஊடகங்களும் பதிவுசெய்கிற நிலைமை ஏற்பட்டிருக்கிறது. ஆனால், இந்தியாவில் நடைபெற்றுவரும் திருமணங்கள் குறித்து அண்மையில் செய்யப்பட்டிருக்கும் ஆய்வு ஒன்று இந்தப் பொய்யை அம்பலப்படுத்துவதாக இருக்கிறது.

மருத்துவர் இராமதாசு அவர்களின் மகன் அன்புமணி அவர்கள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோது எடுக்கப்பட்ட தேசிய குடும்ப சுகாதார சர்வே (National Family Health Survey - NFHS) மூலம் திரட்டப்பட்ட புள்ளிவிவரங்களை அடிப்படையாகக்கொண்டே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.  http://paa2011.princeton.edu என்ற இணையதள இணைப்பில் சென்று அந்த ஆய்வை நீங்கள் வாசிக்கலாம். 

திரு. குமுதின் தாஸ்,கே.சி.தாஸ்,டி.கே.ராய் மற்றும் பி.கே.திரிபாதி ஆகிய நான்கு கல்வியாளர்கள் இணைந்து செய்திருக்கும் இந்த ஆய்வில் இந்தியாவில் சராசரியாக 10% திருமணங்கள் தமது சாதியைச் சேராத வேறொருவரோடு நடக்கும் கலப்புத் திருமணங்களாக உள்ளன எனத் தெரிய வந்திருக்கிறது. இதில் சுமார் பாதி அளவு திருமணங்களே ஒரு பெண் தனது சாதியைவிட சமூக அந்தஸ்து குறைந்த சாதியைச் சேர்ந்த ஒரு இளைஞரைத் திருமணம் செய்துகொள்வதாக இருக்கிறது. தேசிய சராசரி 10% ஆக இருக்கிறதென்றால், சமூகநீதி சிந்தனை தழைத்தோங்கும் தமிழ்நாட்டில் அதைவிட சற்று அதிக அளவில் கலப்புத் திருமணங்கள் நடக்கும் என்றுதான் நாம் நினைப்போம். அதுதான் இல்லை. இந்தியாவிலேயே கலப்புத் திருமணம் குறைவாக நடக்கும் மூன்றாவது மாநிலம் தமிழ்நாடு. இங்கே வெறும் இரண்டரை சதவீதம்தான் கலப்புத் திருமணம் நடக்கிறது என அந்த ஆய்வில் தெரியவந்திருக்கிறது. (காஷ்மீரில் 1.67% ராஜஸ்தானில் 2.36%) அதிலும் ஒரு பெண் தனது சாதியைவிட சமூக அந்தஸ்து குறைந்த சாதியைச் சேர்ந்த ஒரு இளைஞரைத் திருமணம் செய்துகொள்வது வெறும் 1.66% மட்டும்தான். ஆனால் கேரளாவில் 21% கலப்புத் திருமணம் நடக்கிறது; பஞ்சாபில் 22%.  இதில், சாதி இந்துப் பெண் ஒருவர்  தலித் சாதியைச் சேர்ந்த இளைஞரைத் திருமணம் செய்வது எவ்வளவு இருக்கும் என்பதை நீங்களே முடிவுசெய்துகொள்ளுங்கள்.

தமிழக அரசு ஐந்துவிதமான திருமண உதவித் திட்டங்களைத் தற்போது செயல்படுத்திவருகிறது.அதில் கலப்புத் திருமண உதவித் திட்டமும் ஒன்று. ” சமூக வளர்ச்சிக்கு மிகப்பெரும் தடையாக இருக்கும் சாதிய பாகுபாடுகளைப் போக்குவதற்காகவும், சாதி அமைப்பின் கேடுகளை ஒழித்து சமத்துவத்தை நிலைநாட்டுவதற்காகவும், கலப்புத் திருமண உதவித் திட்டம் செயல்படுத்தப்படுவதாக’ சமூக நலத் துறை சார்பில் தமிழக அரசால் வெளியிடப்பட்டிருக்கும் கொள்கைவிளக்கக் குறிப்பு தெரிவிக்கிறது. ” டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண உதவித் திட்டம்” என அழைக்கப்படும் இத் திட்டத்தின்மூலம் கலப்புத் திருமணம் செய்துகொள்ளும் ஒரு பெண்ணுக்கு இருபத்தைந்தாயிரம் ரூபாயும் நான்கு கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது. அந்தப் பெண் பட்டப் படிப்போ அல்லது பட்டயப் படிப்போ முடித்தவராக இருந்தால் ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.கலப்புத் திருமணம் என்பதை இரண்டு பிரிவாக தமிழக அரசு பிரித்திருக்கிறது.1. மணமக்களில் ஒருவர் தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடியினராக இருக்கவேண்டும். 2. மணமக்களில் ஒருவர் பிற்படுத்தப்பட்டவராகவோ/ மிகவும் பிற்படுத்தப்பட்டவராகவோ இருந்து இன்னொருவர் வேறு முன்னேறிய சாதியினராக இருக்கவேண்டும்.

 2012-13 ஆம் ஆண்டுக்கு இந்த ஐந்து திருமண உதவித் திட்டங்களுக்குமாக சேர்த்து 750 கோடி ரூபாயைத் தமிழக அரசு பட்ஜெட்டில் ஒதுக்கியிருக்கிறது. அந்த 750 கோடி ரூபாயில் கலப்புத் திருமண உதவித் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்டிருப்பது வெறும் எட்டு கோடி ரூபாய் மட்டுமே. அதாவது சுமார் ஒரு சதவீதம் மட்டும்தான். அந்தத் தொகையைக்கொண்டு தமிழ்நாடு முழுவதும் கலப்புத் திருமணம் செய்துகொள்ளும் சுமார் 1300 பேருக்கு மட்டும்தான் உதவி வழங்க முடியும். பெண் பட்டப் படிப்பு படிக்காதவராக இல்லாவிட்டால் அந்த எண்ணிக்கை சற்றுக் கூடலாம். மருத்துவர் இராமதாசு அவர்களின் வன்முறைப் பிரச்சாரத்தால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிற கடலூர் மாவட்டத்தில் 2011 மார்ச் முதல் 2012 மார்ச் வரை மொத்தம் 186 பேர் இந்த உதவியைப் பெற்றிருக்கின்றனர். அவர்களில் 184 பேர் தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் மற்ற இருவர் பிராமண சமூகத்தைச் சேர்ந்த பெண்கள்.வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் கூட இந்த உதவித் தொகையைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

6 comments:

 1. சொறி பிடிச்சவன் கை சும்மா இருக்காதுன்னு சும்மாவா சொன்னாங்க

  ReplyDelete
 2. // தலித் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ’ஜீன்ஸ் பேண்ட், டி ஷர்ட், கூலிங் கிளாஸ்’ அணிந்துபோய் //

  நல்ல நகைச்சுவை.

  ReplyDelete
 3. பதவி-பதிவு-கிடைக்கும் வாய்ப்பு உட்பட அனைத்தையும் தக்க முறையில் பயன்படுத்திக்கொள்ளும் தங்களைப் போன்றோர் தமிழகத்திற்குக் கிடைத்த நன்முத்துக்கள். வாழிய நீடு !

  ReplyDelete
 4. www.tn.gov.in/spc/tenthplan/CH_8_2.PDF - Cached நாடக திருமணம் என்ற நச்சு பிரசாரம் எனபது முழுக்க முழுக்க உண்மை.சாதிமறுப்பு திருமணம் செய்பவர்களில் OBC இனத்தை சார்ந்த ஆண்கள் தலித் ஆண்களை விட அதிகம் என்பதும் உண்மை.ஆனால் தமிழகத்தை விட மற்ற மாநிலங்களில் சாதிமறுப்பு திருமணங்கள் மிக அதிகம் என்று நீங்கள் எடுத்துகாட்டாக கூறும் சர்வே முட்டாள்தனமான உண்மைக்கு புறம்பான ஒன்று .
  அதில் டைம்ஸ் ஒப் இந்தியா செய்தி கூட வருகிறது. தலித் மக்களோடு கலப்பு திருமணம் செய்த திருமணங்களின் எண்ணிக்கை 3495,4205.4750 என்று முறையே வருகிறது.தமிழக அரசு சாதிமறுப்பு திருமண திட்டத்தின் கீழ் உதவி பெற்றவர்களின் எண்ணிக்கை மேலே வரும் எண்ணிக்கைகளில் மூன்றில் ஒரு பகுதிக்கும் மேல்.
  ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டத்தில் தமிழகத்தில் இந்த திட்டத்தின் கீழ் பயன் அடைந்தவர்கள் 6395 என்று அரசு குறிப்புகள் தெரிவிக்கின்றன. பத்து ஆண்டுகளுக்கு முன்பே ஆண்டுக்கு 1200 பேர் தோராயமாக தமிழகத்தில் உதவி பெற்ற நிலை இருக்கும் போது ஆந்திரமும்,மகாராஷ்ற்றமும் 1000 திருமணங்கள் மூலம் முதல் நிலை என்ற முடிவு எப்படி எடுத்தார்கள் என்று புரியவில்லை
  உங்கள் கடலூர் மாவட்ட உதவி பெற்றவர்களின் பட்டியலை பார்த்தால் தலித் பெண்களை திருமணம் செய்த பிற வகுப்பு ஆண்கள் தான் அதிகம் எனபது தெள்ளதெளிவாக விளங்குகிறது.
  அந்த சர்வே முட்டாள்தனமாக வேறு மதத்தை சார்ந்தவரை செய்து கொள்ளும் திருமணத்தை கணக்கில் எடுத்து கொள்ளாமல் ஒதுக்கி விடுகிறது.
  மதம் மாறிய தலித் மக்கள்,obc மக்கள் தமிழகத்தில் குறிபிடத்தக்க சதவீதம்.பொருளாதரத்தில் உயர்ந்த பிறகு சாதியை வெளிக்காட்டாமல் மதத்தை மட்டும் ஏற்று கொண்டு சலுகைகளை நிராகரிக்கும் மக்கள் அரசு உதவி திட்டத்தில் பயன்பெற விரும்புவதில்லை.அதனால் அரசு உதவி பெரும் தம்பதிகள் எண்ணிக்கை குறைகிறது.
  ஆசாரி,நாவிதர்,வன்னியர்,கள்ளர்,நாடார்,கௌண்டர் ,யாதவர் என அனைவரையும் மொத்தமாக ஒரே குழுவில் அடைத்து அவர்களுக்குள் நடைபெறும் திருமணங்கள் ஒரே சாதி திருமணங்கள் எனபது போல எடுத்து கொள்கிறது.கிட்டத்தட்ட 70 சதவீத மக்களை ஒரே குழுவாக ஆக்கி விட்ட பிறகு அதை தாண்டி எத்தனை சதவீதம் கிடைக்கும் இப்படி குறைவான அளவில் தமிழகத்தில் கலப்பு திருமணம் நடைபெறுவது போல திட்டமிட்டு உருவாக்க முயற்சிக்கிறது
  தமிழகத்தில் இருந்து 3411 பேர் ,கேரளாவில் இருந்து 356 பேர்,கோவில் இருந்து 15 பேர்.எந்த அடிப்படையில் என்று எந்த விளக்கமும் இல்லை..பதினைந்து பேரை வைத்து கொண்டு கோவில் 25 சதவீதத்திற்கும் அதிகம் என்று முடிவுக்கு வருவது விந்தை தான்.இட ஒதுக்கீடு குறைவாக உள்ள மாநிலம் கோவா.அனைத்து துறைகளிலும் உயர்சாதியினரின் பங்கு வெகு அதிகம்.அங்கு நாளில் ஒரு திருமணம் இட ஒதுக்கீடு பெரும் சாதிகளுக்கும்,பெறாத சாதிகளுக்கும் இடையே எனபது சாத்தியம் இல்லாத ஒன்று

  ReplyDelete
 5. 2008 ஆண்டில் இருந்து தான் பிற்பட்ட வகுப்பை சார்ந்த மக்கள் உயர்சாதியினரோடு திருமணம் செய்து கொண்டால் பண உதவி திட்டம் துவங்கியது. அதற்க்கு முன் தமிழக அரசின் சாதிமறுப்பு திருமண திட்டத்தின் கீழ் உதவி பெற்ற தமபதிகள் அனைவரிலும் இருவரில் ஒருவராவது தலித்/பழங்குடியினராக இருக்க வேண்டும்
  தலித் பெண்களை திருமணம் செய்து கொண்ட obc ஆண்களின் பட்டியலை,உயர் சாதியினரை திருமணம் செய்து கொண்ட obc ஆண்களின் பட்டியலை ஆய்வு செய்து வெளியிட்டால் இந்த பொய் பிரச்சாரங்களை எளிதில் முறியடிக்கலாம்
  சாதிமறுப்பு திருமணம் செய்து கொள்ளும் தலித் ஆண்களுக்கும்,பெண்களுக்கும் இடையே எண்ணிகையில் பெரிய வித்தியாசம் இருக்காது.ஆனால் சாதிமறுப்பு திருமணங்களுக்கு எதிராக குதிக்கும் அதிக எண்ணிகையில் இருக்கும் obc சாதிகளான வன்னியர்,முக்குலத்தோர் போன்றவற்றில் 100 ஆண்கள் வேறு சாதியில் திருமணம் செய்து கொண்டால் பத்து பெண்கள் கூட வேறு சாதியில் திருமணம் செய்து இருக்க மாட்டார்கள்.இப்படி ஒரு நிலை இருக்க வாய் கூசாமல் பொய் பிரச்சாரம் செய்யும் துணிச்சல் சாதி தலைவர்களுக்கு எப்படி வந்தது என்று புரியவில்லை

  ReplyDelete
 6. http://www.tn.gov.in/documents/tnataglance.html#SOCIAL%20WELFARE

  மொத்தமாக இந்தியாவில் தலித் மக்களுக்கும் மற்ற சாதிகளுக்கும் இடையே நடக்கும் திருமணம் என்று 3495,4205.4750 என்று கடந்த மூன்று ஆண்டுகளின் எண்ணிகையை எடுத்து காட்டி விட்டு கேரளாவில் இருவத்தைந்து சதவீதம்,கோவாவில் 26,குஜராத்தில் பத்து,ஹரியானாவில் பனிரெண்டு எனபது எந்த அடிப்படையில்.
  குறிப்பிட்ட சர்வே எடுத்து கொண்ட பல்வேறு சாதிகளின்/ இட ஒதுக்கீட்டு குழுக்களின் எண்ணிக்கை கூட தரவில்லை.இதில் முற்பட்டவர்-பிற்படுத்தப்பட்டவர் இடையே நடைபெறும் திருமணம் எத்தனை சதவீதம்,பிற்பட்ட-தாழ்த்தப்பட்ட ,தாழ்த்தப்பட்ட-முற்பட்ட என்று எந்த சதவீதமும் இல்லை.
  அவர்களே சாதிகளை மூன்றே மூன்று குழுக்களாக பிரித்து கொண்டு அதில் கூட தனி சதவீதங்களை தராமல் இப்படி முடிவுகளை வெளியிட எப்படி முடிந்தது என்று தெரியவில்லை
  தமிழக அரசின் திட்டத்தின் கீழ் பயன் அடைந்தவர்கள்2007-08 ஆண்டுக்கான ஒதுக்கீட்டில் பயன்பெற்றவர் 2265.மொத்த இந்தியாவில் நடைபெற்ற திருமணங்கள் -4205 .2.59 சதவீத தமிழகம் 4205திருமனங்களில் 2265

  ReplyDelete