Friday, February 22, 2013

2. ‘நாய்களுக்கு உணவானோம்’ஈழத்தில் நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு சாட்சிகளாய் இருந்தவர்கள் பேச ஆரம்பிக்கும்போதுதான் அதன் கொடூரம் முழுமையான அளவில் வெளியுலகுக்கு தெரியவரும். இப்போதும் சிங்கள ராணுவத்தின் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் வாய் திறந்து உண்மையைப் பேசுவதென்பது தாங்களே சாவை நோக்கி செல்வதாகத்தான் அர்த்தப்படும். உண்மையைப் பேசினால் அதற்குக் கிடைக்கும் பரிசு மரணம்தான் என்ற நிலையில் மௌனமே அவர்களுடைய மொழியாக மாறிவிட்டது. அவர்களை தேடிச் சென்று உண்மையைச் சொல்லுங்கள் என்று கேட்பவர்களிடத்தில்கூட எதையும் சொல்லக்கூடிய நிலையில் அவர்கள் இல்லை. ஏனென்றால் எல்லா இடங்களிலும் சிங்கள ராணுவத்தின் காதுகள் தாங்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருக்கின்றன என்பது முகாம்களில் வைக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு நன்றாகவே தெரியும். தொடர்ந்து அச்சுறுத்திக் கொண்டிருக்கும் மரணத்தின் குரூர விழிகளையும் தாண்டி தம்முடைய துயரக் கதையை சிலர் பேச முன்வந்திருக்கிறார்கள். அப்படியானவர்கள் சொல்லியவற்றைமனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள்’ (யூ.டி.ஹெச்.ஆர்.) வெளியிட்டுள்ள அறிக்கை பதிவு செய்துள்ளது. அதில் இடம் பெற்றுள்ள ஒரு வாக்குமூலத்தை இங்கே பார்ப்போம். ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ள அந்த வாக்குமூலத்தைத் தமிழில் தருகிறேன்:

            ‘‘கிளிநொச்சி வீழ்ந்ததற்குப் பிறகு மக்களெல்லாம் ஒருவரோடு ஒருவர் தொடர்பு இழந்து கிழக்கு திசையை நோக்கி ஓட ஆரம்பித்திருந்தார்கள். ஜனவரி மாத மத்தியில் நான் மோட்டார் சைக்கிள் ஒன்றில் விசுவமடுவுக்கு கிழக்கால் எனது நண்பர் ஒருவரைத் தேடிச் சென்று கொண்டிருந்தேன். ஒரு வீட்டின் முன்புறம் நாற்காலி ஒன்றில் ஆள் ஒருவர் உட்கார்ந்திருந்தார். அவருடைய மனைவிக்கு சுமார் நாற்பத்தைந்து வயதிருக்கும். அருகில் சமைத்துக் கொண்டிருந்தார். பக்கத்தில் இரண்டு இளம்பெண்கள் அமர்ந்திருந்தார்கள். எனது நண்பரின் முகவரியைச் சொல்லி அந்த ஆளிடம் விசாரித்தபோது, சுமார் ஐம்பது பேர் கூடியிருந்த ஒரு இடத்தை அவர் சுட்டிக்காட்டினார். அங்கே போவதற்காக நான் எனது மோட்டார் சைக்கிளை ஸ்டார்ட் பண்ணினேன். நான் மோட்டார் சைக்கிளுக்கு மண்ணெண்ணையைத்தான் எரிபொருளாகப் பயன்படுத்தி வந்தேன் என்பதால் அது ஸ்டார்ட் ஆகாமல் மக்கர் பண்ணியது. அந்த சமயத்தில் ஏதோ ஒரு சத்தம் உள்ளுணர்வின் தூண்டுதலால் அது ஒரு குண்டு என்பதைப் புரிந்து கொண்டு நான் சடாரென்று தாவி பக்கத்திலிருந்த குழிக்குள் விழுந்தேன். அருகில் பெரிய வெடிச்சத்தம் கேட்டது. சில நிமிடங்கள் கழித்து தலையை உயர்த்திப் பார்த்தேன். எனக்கு வழி சொன்ன ஆளின் கால்களுக்கிடையேதான் குண்டு விழுந்திருந்தது. அந்த ஆளை காணவில்லை. அருகில் அமர்ந்திருந்த இரண்டு பெண்களும் இறந்து கிடந்தார்கள். சமைத்துக் கொண்டிருந்த பெண்மணி வலியில் அலறிக் கொண்டிருந்தார். அவரது கால்கள் இரண்டும் குண்டு வீச்சில் பிய்த்துக் கொண்டு போயிருந்தது. அவருடைய ரத்தம் அடுப்பிலிருந்த குழம்பில் பாய்ந்து, அவருடைய கறியும் சேர்ந்து கலந்து கிடந்தது. ‘என்னை விட்டு விட்டுப் போகாதே. ஆஸ்பிட்டலுக்குக் கொண்டு போஎன்று அந்தப் பெண்மணி என்னிடம் கதறினார். நான் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லத்தான் விரும்பினேன். ஆனால், அருகாமையில் மருத்துவமனை எதுவும் கிடையாது. என்னால் முடிந்ததெல்லாம் அவர் அருகில் கொஞ்ச நேரம் நின்றதுதான். அதற்குள் அவருடைய உயிர் பிரிந்து விட்டது.

            நான் இரணபாலையில் உள்ள தேவாலயத்துக்குச் சென்றேன். அங்கு சிங்கள ராணுவத்தின் கிபிர் விமானங்கள் குண்டு வீசின. நான் ஒரு பங்கருக்குள் ஒளிந்து கொண்டேன். பதினைந்து அடிக்கு அப்பால் ஆயிரம் கிலோ எடை கொண்ட குண்டு ஒன்றை சிங்கள விமானம் வீசிவிட்டுப் போனது. அந்த குண்டு பூமியில் பெரிய பள்ளம் ஒன்றை ஏற்படுத்தியது. அது வீசப்பட்டபோது, நான் பதுங்கியிருந்த பங்கர் ஒரு தொட்டிலைப் போல ஆடியது. அதிர்ஷ்டவசமாக அந்த குண்டு வெடிக்கவில்லை. பிறகு புலிகள் அங்கே வந்து அந்த குண்டை செயலிழக்கச் செய்தார்கள். அந்த குண்டிலிருந்து 600 கிலோ வெடி மருந்தை அவர்கள் எடுத்துச் சென்றார்கள்.

            சில நாட்களுக்குப் பிறகு ஆனந்தபுரம் என்ற ஊரில் நண்பர் ஒருவர் வீட்டில் நான் அமர்ந்திருந்தேன். அப்போது சிங்கள ராணுவத்தின் விமானங்கள் குண்டு வீசுவதற்காக வருவதை பார்த்தோம். மக்களெல்லாம் திறந்த வெளியை நோக்கி ஓடினார்கள். திறந்த வெளியில் நின்று கொண்டால் அவர்களெல்லாம் சிவிலியன்கள் என்று ராணுவம் நினைத்து குண்டு வீசாமல் போய் விடுவார்கள் என்பது பொதுமக்களின் நம்பிக்கையாக இருந்தது. நானும் அங்கே ஓட முயற்சித்தேன். அப்போது எனது நண்பர் என்னைப் பிடித்து இழுத்தார். மேலே பறந்து கொண்டிருந்த விமானத்திலிருந்துஏர் பாம்கள்வீசப்பட்டன. அந்த வகை குண்டுகள் பூமிக்கு மேலேயே வெடித்துச் சிதறும் தன்மை கொண்டவை. அவை வெடித்த போது வெட்டவெளியில் நின்று கொண்டிருந்த பதினைந்து பேர் உடல் சிதறி செத்துப்போனார்கள். சில நிமிடங்களில் விமானத்திலிருந்துதாமதமாக வெடிக்கும்‘ ( ஸ்லோ பாம்) ஆயிரம் கிலோ எடை கொண்ட குண்டு ஒன்று வீசப்பட்டது. அது அருகாமையிலிருந்த கோயிலின் மீது விழுந்தது. அது விழுந்தபோது ஒரு ஆள், ஒரு ஆடு, சில பாத்திரங்கள் போன்றவையெல்லாம் ஒரு தென்னை மர உயரத்திற்கு தூக்கி வீசப்பட்டதை நான் பார்த்தேன்.

            இரணபாலையில் நான் தங்கியிருந்த போது சிங்கள விமானங்கள் நடத்திய குண்டு வீச்சால் ஏராளமான பேர் இறந்து போனதைப் பார்க்க முடிந்தது. பிப்ரவரி மாதம் பதினாறாம் தேதி அங்கு சிங்களப்படை குண்டு வீசியபோது காயம் பட்டவர்களை மீட்கிற பணியில் நானும், நண்பர்களும் ஈடுபட்டோம். குண்டு வீச்சில் கொல்லப்பட்டவர்கள் பெரும்பாலும் பெண்களும், குழந்தைகளும்தான். அவர்கள்தான் வீடுகளில் தங்கியிருந்தார்கள். ஆண்களில் பெரும்பாலோர் பங்கர்களைக் கட்டுகின்ற பணிக்காக வெளியில் சென்றிருந்தார்கள். குடியிருப்புகள் மீது வீசப்பட்ட குண்டுகள் மிகவும் பயங்கரமானவை. அவை வெடித்ததும் அந்தப் பகுதியில் காற்றில் இருக்கும் ஆக்ஸிஜனை உறிந்து கொள்ளும். அதனால் காற்றில் மிகப்பெரிய வெற்றிடம் உருவாகும். அந்தப் பகுதியிலிருக்கும் எல்லாவற்றையும் ஒரு புள்ளியைநோக்கி அது உறிஞ்சும். இதனால் சுற்றுப்புறத்தில் இருப்பவர்கள் மூச்சடைத்து செத்துப்போவது மட்டுமல்லாமல், அவர்களுடைய உடைகளெல்லாம் நார் நாராகக் கிழிந்து போய்விடும். செத்துக்கிடக்கும் உடல்களெல்லாம் நிர்வாணமாகவே கிடக்கும். அருகாமையிலிருந்த பங்கருக்குள் இளம்பெண்கள் பலர் ஒளிந்து கொண்டிருந்தார்கள். அந்த குண்டு வீசப்பட்டதில் எல்லோருமே ஒட்டுமொத்தமாக கொல்லப்பட்டார்கள். நான் அவர்களைக் கடந்து ஓடும்போது யாரோ எனது கால்களை பிடித்து இழுப்பது தெரிந்தது. திரும்பிப் பார்த்தேன். பதினாறு, பதினேழு வயதிருக்கும் ஒரு இளம்பெண் தன் இரண்டு கைகளாலும் எனது கால்களைப் பிடித்துக் கொண்டிருந்தார். அவர் கீழே கிடந்தார். அவரது இடுப்புக்குக் கீழே உடம்பு எதுவுமில்லை. கால்களுக்குப் பதிலாக இரண்டு எலும்புகள்தான் நீட்டிக்கொண்டிருந்தன. ஆனால் அவர் பேசினார். ‘‘அண்ணா, நான் உன்னுடைய தங்கையாக இருந்தால் என்னை இப்படி விட்டுவிட்டுப் போவாயா? என்னைக் காப்பாற்று’’ என்று கதறினார். என்னுடன் கூடப்பிறந்த தங்கை எவரும் கிடையாது. அவரை என்னுடைய தங்கையாகவே அப்போது நான் எண்ணிக்கொண்டேன். திகைத்துப் போய் ஒரு கணம் நின்றேன். அதற்குள் அவருடைய மூச்சு அடங்கி விட்டது. அந்த நேரத்தில் ஒரு பெண் என்னை நோக்கி கூவியபடி ஓடி வந்துக்கொண்டிருந்தார். ஒரு பத்து மீட்டர் தொலைவில் வந்திருப்பார். திடீரென்று அவர் சரிந்து விழுந்தார். கிட்டே சென்று பார்த்தேன். அவரது தலையின் பின்புறம் குண்டின் சிதறலால் பெயர்த்தெடுக்கப்பட்டிருந்தது. அங்கு சுமார் இருபத்தைந்து பெண்கள் சடலங்களாக சிதறிக் கிடந்ததைப் பார்க்க முடிந்தது.

            ஒரு நாள் நான் வலைஞர்மடம் பகுதியை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தேன். ஒரு கர்ப்பிணிப் பெண்ணை பின்னால் உட்கார வைத்தபடி ஒரு இளைஞன் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தான். அவர்களுக்கு வழி விட்டு நான் எனது வண்டியை மெதுவாக செலுத்தினேன். அவர்கள் முன்னே சென்றார்கள். சில மீட்டர் தூரத்தில் திடீரென்று அந்த மோட்டார் சைக்கிள் சரிந்து விழுவதைப் பார்த்தேன். அருகில் சென்று பார்த்தபோது, மோட்டார் சைக்கிளை ஓட்டிய கணவன் மீது சிங்கள ராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்ட குண்டு பாய்ந்திருந்தது. அந்தக் கர்ப்பிணிப் பெண் தனது கணவனை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு கெஞ்சிக் கதறினாள். அந்தப் பக்கம் போய்க்கொண்டிருந்த ஒருவர்கூட அங்கே நின்று என்னவென்று விசாரிக்கவில்லை. இந்த இளைஞனின் முகத்தில் குண்டு பாய்ந்திருந்தது. அவனது கீழ் தாடை சுத்தமாகப் பிய்த்தெறியப்பட்டிருந்தது. வாயிலிருந்து ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. அவன் உயிர் பிழைப்பான் என்ற நம்பிக்கை எனக்கில்லை. அந்தப் பெண்ணின் கதறலைப் பொருட்படுத்தாமல் தலையைக் குனிந்தபடி நான் அவர்களைக் கடந்து செல்லவே விரும்பினேன். அப்படிப் போவது எங்களுக்கெல்லாம் நன்றாகப் பழகிப்போயிருந்தது. தலையைக் குனிந்தபடி போகவில்லையென்றால் ஒளிந்திருக்கும் சிங்கள ராணுவத்தின் துப்பாக்கி சூட்டுக்கு எந்த கணமும் பலியாக நேரலாம் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் அந்த இளைஞனை நான் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல விரும்பினேன். மோட்டார் சைக்கிளில் எனது பின்புறமாக அவனை ஏற்றி என்மீது சாய்த்து வைக்கும்படி அவனது மனைவியை கேட்டேன். அவனை சுமந்தபடி நான் மருத்துவமனைக்குச் சென்று சேர்ந்தேன். இறங்கும்போதுதான் தெரிந்தது. ஏற்கனவே அவன் இறந்து போயிருந்தான்.

            ஒருநாள் காலையில் நான் போய்க்கொண்டிருந்தபோது ஒரு ஆர்பிஜி ஷெல் எனக்கு முன்னால் விழுந்து வெடிப்பதைப் பார்த்தேன். திரும்பி ஓடினேன். எதிரே வந்தவர்களிடத்தில்அங்கே போகாதீர்கள். ஆமிக்காரன் சுடுகிறான்” என்று கத்தினேன். ஆனால், எவரும் என்னைப் பொருட்படுத்தவில்லை. ஒருபுறம் குண்டுகள் விழுந்து வெடித்துக் கொண்டிருக்க, மக்கள் தங்கள்பாட்டுக்குப் போய்க்கொண்டே இருந்தார்கள். எங்கள் வாழ்க்கை அப்படி ஆகிப்போயிருந்தது. ஒருபுறம் பங்கருக்குள் குழந்தைகள் ஒளிந்திருப்பார்கள். பக்கத்தில் சில குழந்தைகள் பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருப்பார்கள். எப்போது வேண்டுமானாலும் ஒரு குண்டு விழலாம். தங்கள் உயிர் போகலாம் என்பது குழந்தைகளுக்குக்கூட நன்றாகத் தெரிந்திருந்தது. ஆனால், மரணத்தைப் பற்றி எந்த கவலையும் இல்லாமல் அவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

            மே மாதம் முதல் வாரத்தில் நான் முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்தேன். தொடர்ந்து நாங்கள் இருந்த பகுதியின்மீது சிங்கள ராணுவத்தின் குண்டுகள் பொழிந்து கொண்டிருந்தன. எங்கு பார்த்தாலும் காயம் பட்டவர்கள், உயிரிழந்தவர்கள் என்று கோரக்காட்சிகள். உணவு கிடையாது. மனிதர்கள் பங்கருக்கு உள்ளேயும், வெளியேயும் செத்துக் கொண்டிருந்தார்கள். உயிர் வாழ்வதைப் பற்றி எவருக்குமே கவலையில்லை. அங்கிருந்த மருத்துவமனை செயல்படாமல் கிடந்தது. மருந்துகளோ, மருத்துவர்களோ இல்லை. எப்போது வேண்டுமானாலும் மரணம் தாக்கலாம் என்ற நிலையில் அங்கிருந்தவர்கள் தமது உறவினர்களோடு நெருக்கமாக இருக்க விரும்பியதைப் பார்த்தேன். சாகும்போது எல்லோரும் ஒன்றாகச் சாகவேண்டும். ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து விடக்கூடாது என்பது மட்டும்தான் அங்கிருந்தவர்களின் ஒரே எண்ணமாக இருந்தது. போராளிகளுக்கும் எந்தவித வாய்ப்பும் இருக்கவில்லை. சண்டை போடுவது அல்லது சாவது என்ற நிலையில் அவர்கள் போரிட்டுக் கொண்டிருந்தார்கள். அங்குதான் நான் அதுவரை பார்த்திராத இனிமேல் ஒருபோதும் பார்க்க விரும்பாத அந்தக் காட்சியை பார்த்தேன். பசி கொண்ட நாய்கள் சுற்றிலும் சிதறிக் கிடந்த மனிதர்களின் உடல் உறுப்புகளைக் கடித்துக் குதறி தங்கள் பசியை ஆற்றிக்கொண்டிருந்தன. எங்கு பார்த்தாலும் மரணத்தின் துர்நாற்றம். அதற்கு சாவுப்பறை அடிப்பது போல குண்டுகள் தொடர்ந்து வீழ்ந்து வெடித்துக்கொண்டிருந்தன.

            மே மாதம் பதினாறாம் தேதி மாலை நாங்களெல்லாம் தப்பித்து ஓடிக்கொண்டிருந்தோம். சாலை ஓரங்களில் காயம் பட்ட போராளிகள் குவியல் குவியலாகக் கிடந்தார்கள். அவர்களில் பெரும்பாலோர் பெண்கள். அவர்களைக் காப்பாற்றுவதற்கு செஞ்சிலுவை சங்கத்தை சிங்கள ராணுவம் அனுமதிக்கவில்லை. ‘யாராவது சயனைடு கொடுத்து எங்களைக் கொன்று விடுங்களேன்என்று அந்தப் பெண்கள் கதறிக் கொண்டிருந்தார்கள். மிகவும் சிறுவயது பெண்கள் இந்த உலகத்தையோ, தங்களுடைய விதியையோ அறியாத பெண்கள். அன்றிரவு எங்காவது படுத்துத் தூங்கவேண்டும் என்று பாதுகாப்பாய் ஒரு இடத்தைத் தேடினேன். ஒரு டிராக்டர் நின்று கொண்டிருந்தது. அதன் கீழ் பாயைப் போர்த்திக் கொண்டு ஆள் ஒருவர் படுத்திருப்பதைப் பார்த்தேன். நானும் இங்கே படுத்துக் கொள்கிறேன் என்று அவரிடம் சொன்னேன். அவர் அமைதியாக இருந்தார். சரியென்று நான் அவர் அருகில் படுத்துக்கொண்டேன். காலை விழுத்தெழும்போதுதான் என்னருகில் படுத்திருந்தது ஒரு மனிதர் அல்ல. இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பே கொல்லப்பட்ட ஒருவரின் சடலம் என்பது தெரிந்தது.’’

No comments:

Post a Comment