Friday, February 22, 2013

3. இலங்கை ஒரு இனப்படுகொலை நாடு


            ஈழத்தில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையின்போது சர்வதேச நியதிகள் யாவும் மீறப்பட்டன என்பது உலகுக்கே தெரியும். போரின் கடைசி நாட்களில் இலங்கை அரசோடு புலிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையும், ஆயுதங்களைக் கைவிட முன்வந்ததையும் நாம் அறிவோம். அவர்களை வெள்ளைக் கொடியேந்தி சரணடையச் சொன்னதின்பேரில் அதை ஏற்று முன்னே சென்றவர்கள் ஈவிரக்கமில்லாமல் கொல்லப்பட்டதையும் உலக நாடுகள் அறிந்துதான் உள்ளன. பதுங்கு குழிகளுக்குள் ஒளிந்திருந்த அப்பாவி மக்கள் அப்படியே புல்டோசர்களால் புதைத்து சமாதியாக்கப்பட்டது உலகில் எங்குமே நடந்திராத பச்சைப் படுகொலையாகும். அப்படி கொல்லப்பட்டவர்கள் ஒருவர், இருவர் அல்ல. நூறு பேர் இருநூறு பேர் கூட அல்ல. ஆயிரக்கணக்கான மக்கள் அவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட மே 17ஆம் தேதிக்குப் பிறகும்கூட முள்ளிவாய்க்கால் பகுதியில் தொடர்ந்து படுகொலைகள் அரங்கேற்றப்பட்டு வந்துள்ளன. ஆங்காங்கே தப்பியோடிப் பதுங்கியிருந்த ஒன்றிரண்டு பேர்களையும்கூட விட்டுவைக்காமல் தேடித்தேடி இலங்கை ராணுவம் படுகொலை செய்திருக்கிறது.
            போரின் இறுதியில் பிடித்துச் செல்லப்பட்ட தமிழ் இளைஞர்களை நிர்வாணப்படுத்தி அவர்கள் கண்களையும், கைகளையும் கட்டி அவர்களை சுட்டுக்கொல்லும் வீடியோ காட்சிகள் சில மாதங்களுக்கு முன்னால் உலகமெங்கும் வெளியாகின. அப்போது அவையெல்லாம் பொய்யான காட்சிகள் என்று சிங்கள அரசாங்கம் மறுத்து வந்தது. ஆனால், அந்த வீடியோ காட்சிகளை அறிவியல் பூர்வமாக சோதனை செய்த .நா. சபை அது உண்மையான காட்சிதான் என்பதை இப்போது உறுதி செய்துள்ளது. .நா. சபையில் உள்ள சட்டவிரோதமான படுகொலைகள் குறித்து ஆராயும் பிரிவுக்கு பொறுப்பாயுள்ள பிலிப் ஆல்ஸ்டன் என்பவர் இதுகுறித்து சில நாட்களுக்கு முன்பு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதுமட்டுமின்றி கடந்த டிசம்பர் 18ஆம் தேதி இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்‌ஷேவுக்குக் கடிதம் ஒன்றையும் அவர் எழுதியிருக்கிறார். அதில், விடுதலைப்புலிகளின் தலைவர்கள் நடேசன், புலித்தேவன் மற்றும் ரமேஷ் ஆகியோர் அவர்களது குடும்பத்தினரோடு கடந்த மே 17ஆம் தேதி இரவு இலங்கை ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டது பற்றி உண்மை விவரங்களை தெரிவிக்குமாறு அவர் கூறியிருக்கின்றார். ‘‘இலங்கை அரசு போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவித்த நாளுக்கு முன்தினமான 2009, மே 17ஆம் தேதி நடேசன், புலித்தேவன், ரமேஷ் ஆகிய புலிகளின் மூன்று தலைவர்களும் வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதிக்கு வடக்குப் புறமாக ஒரு இடத்தில் சிக்கிக் கொண்டனர். தூதர்களின் மூலமாக அவர்கள் உங்கள் அரசைத் தொடர்பு கொண்டு இலங்கை ராணுவத்திடம் தாங்கள் சரணடைய விரும்புவதாக தெரிவித்துள்ளனர். ராணுவத்துறை செயலாளரும், உங்கள் அரசுக்கு ஆலோசகர்களில் ஒருவராக உள்ள ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் அவர்களை வெள்ளைத் துணியேந்தி வருமாறு கூறியுள்ளனர். அந்த சமயத்தில் போர் முனையிலிருந்த இலங்கை ராணுவத்தின் 58ஆவது படைப்பிரிவின் தலைவருக்கு ராணுவ ஆலோசகரிடத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. சரணடைய வந்த புலிகளின் தலைவர்கள் மூவரையும் சுட்டுக்கொல்லுமாறு அதில் கூறப்பட்டுள்ளது. மே பதினெட்டாம் தேதி அதிகாலையில் நடேசன், புலித்தேவன், ரமேஷ் ஆகிய மூவரும் வெள்ளைத் துணிகளைப் பிடித்தபடி ராணுவத்தை நோக்கி சரணடைய வந்தபோது அவர்களை இலங்கை ராணுவத்தினர் சரமாரியாக சுட்டு அவர்களைப் படுகொலை செய்துள்ளனர். அவர்களோடு வந்த அவர்களது குடும்பத்தினரையும் ராணுவத்தினர் சுட்டுக் கொன்றுள்ளனர்’’ என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ள பிலிப் ஆல்ஸ்டன், இந்த விவரங்களையெல்லாம் முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் எனவும், சம்பவம் நடத்த நேரத்தில் இலங்கை ராணுவத்தோடு சென்று கொண்டிருந்த பத்திரிகையாளர் சிலரும் இந்தத் தகவல்களை உறுதி படுத்தியுள்ளனர் என்றும் ஆல்ஸ்டன் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
            1949ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட ஜெனிவா ஒப்பந்தத்தில் இலங்கையும் கையெழுத்திட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தின் பிரிவு 3 போர்க்காலத்தில் கடைபிடிக்கப்பட வேண்டிய நியதிகள் பற்றி கூறியுள்ளது. ‘‘போரில் நேரடியாக பங்கெடுக்காதவர்கள், போரில் ஈடுபட்டுள்ள வீரர்களின் குடும்பதினர், ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைய முன்வந்தவர்கள், காயத்தாலோ, நோயாலோ பாதிக்கப்பட்டவர்கள், சிறை பிடிக்கப்பட்டவர்கள் ஆகியோர் மனிதாபமான முறையில் நடத்தப்பட வேண்டும்’’ என்று வலியுறுத்தியுள்ளது. அதுபோலவே சர்வதேச மனித உரிமை சட்டங்களும், ஆயுதங்களைக் கைவிட்டவர்களைக் கொல்லக்கூடாது என்பதை வலியுறுத்தி உள்ளன. இந்நிலையில் இலங்கையில் நடைபெற்றுள்ள இனப்படுகொலை என்பது சர்வதேச சட்டங்களுக்கும், நியதிகளுக்கும் மாறானதாக நடத்தப்பட்டுள்ளது. எனவே இதைப்பற்றி இலங்கை அரசு விளக்கமளிக்க வேண்டும் என பிலிப் ஆல்ஸ்டன் கூறியிருக்கிறார். அவர் எழுதிய கடிதத்தின் இறுதியில் மூன்று பிரச்சனைகளை வலியுறுத்தி உள்ளார். ”போரில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் உண்மைதானா? அதை நீங்கள் மறுப்பீர்களேயானால் அப்படி இனப்படுகொலை எதுவும் நடக்கவில்லை என்று ஆதாரங்களோடு உங்கள் அரசு நிரூபிக்க முன்வர வேண்டும். நடேசன், புலித்தேவன், ரமேஷ் ஆகியோரது குடும்பத்தினர் கொல்லப்பட்டது குறித்து நீங்கள் தரும் விளக்கம் என்ன? இலங்கையில் நடத்தப்பட்ட இனப்படுகொலை குறித்து நாங்கள் தெரிவித்துள்ள கருத்துக்களை பரிசீலித்து அதற்கு நீங்கள் பதில் கூறவேண்டும்” என ஆல்ஸ்டன் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
            இலங்கையில் நிகழ்ந்த இனப்படுகொலைகளுக்காக .நா. சபையே விளக்கம் கேட்டுள்ள நிலையில், .நா. சபையைச் சேர்ந்த அதிகாரிகளே இத்தகைய இனப்படுகொலைகளுக்கு காரணமாக இருந்தார்கள் என்பது போன்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. .நா. பொதுச்செயலாளரின் தலைமை காரியதரிசியாக இருக்கும் விஜய் நம்பியார் ஈழத்தில் நடந்த யுத்தத்தின் கடைசி கட்டத்தில் ஒரு சமாதானத் தீர்வை எட்டுவதற்காகப் பலரிடமும் அணுகிப் பேசி வந்தார். யுத்தத்தின் கடைசி நாட்களில் புலிகளின் மூத்த தலைவர்கள் சிலர் விஜய் நம்பியார் வழியாக சமாதானம் பேச முற்பட்டனர். அவர்கள்தான் இலங்கை ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர். புலிகளின் மூத்த தலைவர்கள் கொல்லப்பட்டதில் விஜய் நம்பியாருக்கும் பங்கு உள்ளது என பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். எனவே, அவர்மீது முதலில் .நா. சபை விசாரணை நடத்தட்டும் என்று தமிழ் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
            ஈழத்தில் இறுதி யுத்தம் முடிந்து பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும் அங்கே தமிழர்கள் கொல்லப்படுவது நின்றபாடில்லை. ‘மனித உரிமைகளுக்கான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர்கள்வெளியிட்டுள்ள அறிக்கையில் இப்போதும்கூட சிங்கள ராணுவம் இப்படி சித்திரவதை செய்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்னி டெக் என்னும் நிறுவனத்தின் இயக்குனராயிருந்த கதிர்வேலு தயாபர ராஜா என்பவர் எப்படி கொல்லப்பட்டார் என்ற விவரத்தை அந்த அறிக்கை வெளியிட்டுள்ளது. புலிகளின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த பாலகுமார் தனது மகனோடு சரணடைந்து ராணுவத்தினால் கூட்டிச் செல்லப்பட்டும் அவர் எங்கு இருக்கிறார் என்பதை ராணுவம் ரகசியமாக வைத்துள்ளது என்று குற்றம் சாட்டியிருக்கும் அந்த அறிக்கை தயாபர ராஜாவுக்கு நடந்ததை விரிவாக எடுத்துக் கூறியுள்ளது.
            வன்னி டெக் என்ற அமைப்பு சுயேட்சையாக நடத்தப்பட்டு வந்த ஒரு அமைப்பாகும். சில காலத்துக்குப்பிறகு புலிகள் அந்த அமைப்பை தமது பொறுப்பில் எடுத்துக்கொண்டனர். அதற்கு தேவையான டீசல், ஜெனரேட்டர் முதலானவற்றைப் புலிகள் வாங்கி வந்தனர். இன்னும்கூட அந்த நிறுவனம் சுதந்திரமாகவே செயல்பட்டு வந்தது. அதன் இயக்குனராக இருந்த தயாபர ராஜா தனக்கென்று சம்பளம் எதையும் வாங்கிக்கொண்டதில்லை. அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த உதயகலா என்பவரும் தயாபர ராஜாவும் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தனர். அந்த திருமணம் புலிகளுக்கு உடன்பாடாக இல்லாத காரணத்தால் அவர் தனது பதவியை விட்டு விலகி விட்டார். அந்த நேரம் புதுக்குடியிருப்பு பகுதியில் யுத்தம் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. தனது பதவியிலிருந்து விலகி மனைவியோடு வெளியேறிய தயாபர ராஜா இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். உளவுத்துறையின் விசாரணைக்கென்று அவர் அழைத்து செல்லப்பட்டார். கொழும்புவுக்கும் அதன் பின்னர் அடையாளம் தெரியாத ஒரு முகாமுக்கும் அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு தயாபர ராஜாவும், உதயகலாவும் கடுமையாக சித்ரவதை செய்யப்பட்டனர். போர் முடிந்து பல மாதங்கள் வரை அவர்கள் சித்ரவதை செய்யப்படுவதை நிற்கவே இல்லை. இடையிடையே தயாபர ராஜாவின் மனைவியான உதயகலாவின் பாட்டி அவர்களை சென்று சந்தித்து வந்துள்ளார். அவர்கள் இருவரும் சித்ரவதை செய்யப்பட்ட விவரம் அவருக்கு நன்றாகத் தெரியும். இதனிடையே கடந்த 2009 செப்டம்பர் பதினைந்தாம் தேதி தயாபர ராஜா இறந்து விட்டார். அதற்கு முன் இப்படி யாராவது இறந்தால் அவர்களை புலிகள் தான் கொன்றுவிட்டார்கள் என்று இலங்கை ராணுவம் எளிதாக பொய் சொல்லி தப்பித்து விடும். ஆனால், புலிகள் தோற்கடிக்கப்பட்டு விட்ட இன்றைய சூழலில் இலங்கை ராணுவம் பழி போடுவதற்கு யாரும் இல்லை. ராணுவத்தால் கைது செய்யப்பட்ட தயாபர ராஜா சடலமாக கண்டெடுக்கப்பட்டபோது, அவரது மார்பில் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்த காயம் இருந்தது. உதயகலா இப்போது விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். ஆனால், அவரால் நடக்கக்கூட முடியாத நிலை. அந்த அளவுக்கு அவர் சித்ரவதை செய்யப்பட்டுள்ளார்.
            இலங்கையில் தமிழ் மக்கள் தொடர்ந்து எவ்வாறு கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சாட்சியாகும். தமிழர்களின் உரிமைகளுக்காக போராடிய புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்ட நிலையில், இன்று தமிழர்களுக்கென்று பாதுகாப்பாக எவரும் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இருக்கிற தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் மும்முரத்தில் தீவிரமாக இருக்கின்றன. அங்கு அதிகாரத்துக்காக போட்டியிடும் இரண்டு கொலைக்காரர்களில் எவருக்கு வாக்களிப்பது என்பதில் அவர்கள் போட்டாபோட்டி போட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இலங்கை அரசின் இனப்படுகொலை குறித்தும், மனித உரிமை மீறல்கள் குறித்தும் உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்க வேண்டியது மிக மிக அவசியமாகும். அந்த கடமை தமிழ்நாட்டு தமிழர்களுக்கு அதிகம் உள்ளது.
            இலங்கை அரசின் மீது போர்க் குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மேற்கத்திய நாடுகள் சில முன்முயற்சி எடுத்தபோது அதை தடுத்து இலங்கை அரசை காப்பாற்றியது இந்தியாதான். இன்று மீண்டும் அத்தகைய சூழல் உருவாகியிருக்கிறது. .நா. சபையின் அதிகாரி பிலிப் ஆல்ஸ்டனின் அறிக்கைக்குப் பிறகு சர்வதேச சூழல் சற்றே மாறியிருக்கிறது. இந்த நிலையை பயன்படுத்திக் கொண்டு இலங்கை அரசின் மீது போர்க் குற்ற விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என நாம் வலியுறுத்த வேண்டும். இலங்கையை ஒருஇனப்படுகொலை செய்த நாடுஎன்று அறிவிக்குமாறு .நா. சபையை இந்திய அரசு வலியுறுத்தினால் நிச்சயமாக குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். இலங்கை பிரச்சனையை புலிகளை மட்டுமே மையமாக வைத்த அணுகிக்கொண்டிருந்த இந்திய அரசு அதே வித அணுகுமுறையை இப்போதும் தொடர்ந்து கொண்டிருப்பது வேதனைக்குரியதாகும். தற்போது இலங்கையின் ஆட்சியாளர்கள் எந்த அளவுக்கு இந்தியாவுக்கு எதிரானவர்களாக இருக்கிறார்கள் என்பது முன்பைவிட இப்போது அதிகம் தெளிவாகி உள்ளது. இந்நிலையிலேனும் இந்தியாவின் பாதுகாப்பை கருதியாவது இலங்கை ஆட்சியாளர்கள் மீது போர்க் குற்ற விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென்று இந்தியா வலியுறுத்த வேண்டும். இதற்காக தமிழ் நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள் யாவும் கட்சி பேதம் பாராமல் ஒருமித்து குரல் எழுப்ப வேண்டும்.

No comments:

Post a Comment