Wednesday, April 10, 2013

ஸ்ரீகாந்த் ஐ பி எஸ் : துயரங்களின் குறுகிய கணவாய் வழியே துணையேதுமில்லாமல் பயணம் செய்தவர்
ஐ.பி.எஸ் அதிகாரியும் எழுத்தாளருமான திரு ஸ்ரீகாந்த் அவர்கள் அந்தமானில் கார்நிக்கோபார் என்னுமிடத்தில் மாரடைப்பால் இன்று ( 10.04.2013 புதன் ) காலை  மரணம் அடைந்தார். புதுவை மாநிலக் காவல்துறையில் முதுநிலை காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய  டாக்டர் ஸ்ரீகாந்த் அவர்கள் ஐ.பி.எஸ் அதிகாரியாக பதவி உயர்வு பெற்று கடந்த 2012 மே மாதத்தில் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அங்கு போய் ஓராண்டு நிறைவெய்துவதற்கு முன்பே அவர்  மரணம் அடைந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

ஸ்ரீகாந்த் அவர்கள் இன்று காலை கார்நிக்கோபாரில் கடலோரக்  காவல் படையினருக்கு பயிற்சி அளித்துக்கொண்டிருந்திருக்கிறார். காலை  6.30 மணிக்கு அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கிறது . எனவே அவரே காரை ஓட்டிக்கொண்டு அருகில் உள்ள டாக்டர் ஒருவர் வீட்டுக்கு சென்றுள்ளார் . அங்கு முதல் உதவி சிகிச்சை அளித்துக்கொண்டிருந்த போதே அவர் திடீரென மரணம் அடைந்திருக்கிறார் . மருத்துவ வசதி போதுமான அளவில் இல்லாத  கர்நிக்கொபர் என்னும் இடத்தில் இருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டதால்  அவரைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது. அவருக்கு மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். மகன் தற்போது புனேவில் எம்.பி.ஏ படித்து வருகிறார். 

தமிழ்நாட்டில்  தற்போதைய திருப்பூர் மாவட்டத்தில் மூத்தாம்பாளையம் என்ற சிறிய கிராமத்தில் 15.02.1964 இல் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் ஸ்ரீகாந்த் . கால்நடை மருத்துவப் படிப்பை முடித்து சில காலம்  டாக்டராக பணியாற்றினார். 1990ல் மத்திய தேர்வாணையம் நடத்திய  தேர்வில் டி.பி.எஸ். அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டு புதுவை போலீஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். பின்னர் ஐ.பி க்கு மாற்றல் செய்யப்பட்டார். மத்திய உளவுத் துறையில் (ஐ.பி) பல ஆண்டுகள் பல்வேறு மாநிலங்களில் பணிபுரிந்த அனுபவம் அவருக்கு ஒரு தேசந் தழுவிய பார்வையைத் தந்தது. இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த அவர் தீவிரமானதொரு வாசகர். பொதுப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும் என்ற தாகம் கொண்டவர். பிறருக்கு உதவி செய்வதை கடமையாகக் கொண்டிருந்தவர் அவர். 

 கேட்பவர்களைக் கிறங்க வைக்கும் விதமாக சுவாரஸ்யத்தோடு எதையும் சொல்லக்கூடிய வல்லமை பெற்றவர்கள் நம் கதை சொல்லிகள். அந்த மரபின் நல்ல கூறுகளைத் தன் பேச்சில் பயன்படுத்துபவர் டாக்டர் ஸ்ரீகாந்த். அவர் பேச ஆரம்பித்தால் கேட்பவர்களுக்குக் காலம், இடம் எல்லாமே மறந்துவிடும். புதுவை மாநிலத்தில் அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் அவருக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் உண்டு. படித்தது மருத்துவமும், சட்டமும். பார்த்தது  போலீஸ் வேலை . என்றாலும் அவரது மனதில் நிறைந்திருந்தது என்னவோ ஒரு படைப்பாளியின் உத்வேகம்தான் . 
‘உங்களுக்குப் பிடித்த ஹீரோ யார்?’ என்று நமது இளைய தலைமுறையிடம் கேட்டால் அவர்களில் பெரும்பாலோர் சினிமா ஹீரோக்களைத் தாண்டி சிந்திக்க மாட்டார்கள். அது அவர்களின் தவறு அல்ல. வீரத்துக்கும் ரவுடித் தனத்துக்கும் வேறுபாடில்லாமல் போய்விட்ட காலமிது. நமது கல்வி முறையும்கூட நமது காவிய நாயகர்களை  இளைய தலைமுறைக்கு எடுத்துச்சொல்லத் தவறிவிட்டது. அதன் மோசமான விளைவுதான் இது. நாம் போற்றவேண்டிய தேசம் என்பது மலைகள், நதிகள், மரங்கள் மட்டுமே கொண்ட நிலப்பரப்பு அல்ல. அது ஒரு கொள்கை. அதை ஏற்றுக்கொள்வதே தேச பக்தி.  தேச பக்தியை வலியுறுத்தி  அவர் ஜூனியர் விகடனில் ' மறத்தல் தகுமோ '  என்ற தலைப்பில் எழுதிய தொடர் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. விகடன் பதிப்பகம் மூலம் நூலாகவும் வெளிவந்து ஆயிரக் கணக்கில் விற்பனையானது. 

ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள பல நண்பர்கள் இருப்பார்கள்.ஆனால் துயரத்தைச் சிலரோடு மட்டுமே நாம் பகிர்ந்துகொள்ள முடியும் . நான் எனது குடும்பக் கவலைகளையும் பகிர்ந்துகொள்ளக்கூடிய நண்பர்களில் ஒருவராக ஸ்ரீகாந்த் இருந்தார். காவல்துறையில் அவர் அர்ப்பணிப்போடு பணியாற்றினாலும் அவருக்கு அந்த வேலை மனதுக்கு உகந்ததாக இல்லை. ஆந்திராவில் ஒருவர் ஒரு ரூபாய்க்கு ஏழைகளுக்கு உணவு வழங்கி வருகிறாராம். அதைப் போல பாண்டிச்சேரியில் செய்யவேண்டும் என அவர் ஆசைப்பட்டார். சலவைத் தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்த சில இளைஞர் களை  ஒன்றிணைத்து 'இன்டஸ்ட்ரியல் லாண்டரி' ஒன்றைத் துவக்கினார் .அதில் அவர்களைப் பங்காளிகளாக்கி ஊக்குவித்தார். சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்ட பலருக்கு இலவசமாக சிகிச்சை பெற அவர் உதவி செய்தார்.

என்னை அந்தமானுக்கு வரச் சொல்லி   வற்புறுத்திக்கொண்டே இருந்தார். ஒரு மாதம் வந்து தங்கியிருந்து ஒரு புத்தகம் எழுதுங்கள் என்றார். அந்தமானில் இருக்கும் தமிழர்கள் படும் துயரங்கள் தொடர்பாக இரண்டு மாதங்களுக்கு முன்பு அவரிடம் பேசினேன். மீண்டும்  ஐ.பி யில் சேர்வதற்கு முயற்சித்து வருவதாகச் சொன்னவர் டெல்லிக்கு வரும்போது நேரில் சந்திப்போம் என்றார். இப்போது அவரது குரல் மட்டும்தான் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. 

புதுச்சேரியிலிருந்து மாற்றலாகிச் செல்வதற்கு முன்பு கிழக்குக் கடற்கரைச் சாலையில் பல வருடங்களாக இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி அந்த சாலை நேரடியாகப் போகும்படி ஏற்பாடு செய்தார். நேரு வீதியில் பழைய சிறைச்சாலை இருந்த இடத்தை வாகனங்கள் நிறுத்துமிடமாக மாற்றினார். புதுச்சேரிக்கு எத்தனையோ ஆளுநர்கள் வந்தாலும் புதுவை மக்கள் சேத்திலால்  காலத்தைப் பொற்காலம் என்பார்கள் அதுபோல எத்தனையோ போலிஸ் அதிகாரிகள் வந்தாலும் ஸ்ரீகாந்த் காலத்தை புதுவை மக்கள் மறக்கவே மாட்டார்கள். 

1 comment:

  1. திரு ஸ்ரீகாந்த் அவர்களின் அகாலமரணம் எனக்கு வருத்தத்தைத் தருகிறது. மருத்துவம், சட்டம், காவல் துறை, படைப்பு ஆகிய துறைகளில் சிறப்புடன் வாழ்ந்த அன்னாரின் ஆத்மா சாந்தியடைக.
    நான் திரு.ரவி குமாரின் வருத்தத்தில் பங்கு கொள்கிறேன்.
    இன்னம்பூரான்

    ReplyDelete