Monday, November 1, 2010

வரலாற்றை மதச் சார்ப்பற்ற முறையிலே குறிப்பிட







2-9-2006
வினா வரிசை எண் 148-க்கான துணை வினா

திரு. து. ரவிக்குமார்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்த வினாவை நான் மாண்புமிகு அமைச்சர் அவர்களிடத்திலே முன் அனுமதி பெற்றுதான் எழுப்புகின்றேன்.  வரலாற்றில் ஆண்டுக் கணக்கைக் குறிப்பிடுகின்றபோது, இயேசு கிறிஸ்துவை மையமாகக் கொண்டு, கி.மு.,  கி.பி. என்று குறிப்பிடுகிற வழக்கம் இருந்து வருகிறது.  ஆங்கிலத்திலே,B.C.,  A.D. . என வழங்கி வந்ததன் தமிழாக்கம்தான் இது.  ஆனால் வரலாற்றை மதச் சார்ப்பற்ற முறையிலே குறிப்பிட வேண்டுமென்ற நோக்கோடு,  இந்த வழக்கத்தை மாற்றி,  ஆண்டுக் கணக்கை,'Common Era (C.E.)',  'Before Common Era (B.C.E.)'  என்று குறிப்பிடுகிற நடைமுறை,  சர்வதேச அளவிலே, வரலாற்று அறிஞர்களால்  கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பின்பற்றப்பட்டு வருகிறது.  இது உலகமெங்கும் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறையாக மாறியுள்ளது.  எனவே, நாமும் பாட நூல்களில், வரலாற்றுப் பாடங்களை எழுதுகின்றபோது, கி.மு., கி.பி. என்பதற்குப் பதிலாக, இன்றுள்ள முறையைப் பின்பற்றி, 'பொது ஊழி', 'பொது ஊழிக்கு முன்' எனக் குறிப்பிடுவதே சரியாக இருக்கும்.  இதுபற்றி பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் விளக்கத்தைத் தங்கள்வாயிலாக அறிய விரும்புகிறேன்.
மாண்புமிகு பேரவைத் தலைவர்: மூலக் கேள்விக்குச் சம்பந்தம் இல்லாதது.
மாண்புமிகு திரு. தங்கம் தென்னரசு: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, (குறுக்கீடு) இல்லை, நான் சொல்லிவிடுகிறேன். மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,  ஆண்டுக் கணக்கைப் பொறுத்தமட்டிலே, பல  நூற்றாண்டுகளாக ஒவ்வொரு முறை பின்பற்றப்பட்டு வந்திருக்கிறது. புராணீகர்களைப் பார்த்தோம் என்றால் கலியுக வருடத்திலிருந்து கணக்கிடுகிறார்கள்.  நம்முடைய கல்வெட்டுகளிலே சாலிவாகன சகாப்தம் இருக்கிறது.  நம்முடைய முறைகளிலேகூட பார்த்தோம் என்றால், வருவாய்த் துறைக் கணக்கிலே பசலி ஆண்டு இருக்கிறது.  நம்முடைய அரசின் நடைமுறைகளிலே. திருவள்ளுவர் ஆண்டினை நாம் பின்பற்றுகின்றோம்.  ஆனால் பாடங்களிலே வருகிறபோது, நாம் இப்போது இருக்கக்கூடிய அந்தB.C. .  அல்லது A.D. . என்ற முறையைத்தான் பின்பற்றுகிறோம்.  Before Christ and  Anno Domini  -- In the year of our Lord என்று சொல்லக்கூடிய அந்த முறைதான் இப்போது வழக்கத்தில் இருக்கிறது.  மாண்புமிகு உறுப்பினர் திரு. ரவிக்குமார் அவர்கள் குறிப்பிடக்கூடிய அந்த 'Common Era'-பொது ஊழிக்கு முன்பு, பின்பு, -- என்று குறிப்பிட்டிருக்கக்கூடிய முறை, சில மேலை நாடுகளிலே இப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டு, நடைமுறையில் இருந்தாலும்கூட, நம்முடைய இந்தியத் திருநாட்டைப் பொறுத்தமட்டிலே, நம்முடைய நாட்டிலே இன்றைக்கு  ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கக்கூடிய அந்த முறை, கிறிஸ்துவுக்கு முன் அல்லது கிறிஸ்துவுக்கு பின் என்ற முறைதான் பின்பற்றப்பட்டு வந்துகொண்டிருக்கிறது.  இந்தியத் திருநாடு முழுவதும் நடைமுறையிலே, நம்முடைய நாட்டிலே பொதுவாக நடைமுறையிலே இருக்கக்கூடிய அந்தப் பழக்கம்தான், தொடர்ந்து பாடப் புத்தகங்களில் இடம்பெறும்.  எனவே, நம்முடைய நாட்டினுடைய நடைமுறைகளிலே மாறுதல் வரக்கூடிய காலங்களிலே, அது  பின்னால் வந்தால், அன்றைக்குப் பார்த்துக்கொள்ளலாமேயொழிய, இப்போது இந்த முறைதான் தொடரும் என்பதை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.  (மேசையைத் தட்டும் ஒலி)

4 comments:

  1. நல்ல முயற்சிக்கு பாராட்டுக்கள்.
    பொது ஊழி என்பது சரியல்ல. பொது ஊழி என்பது ஆபிரகாமிய ஐதீகம் மட்டுமே. பொதுகாலத்துக்கு முன் பொதுகாலத்துக்குப் பின் (பொமு பொபி) என சொல்லலாம்

    ReplyDelete
  2. அறிவார்ந்த கோரிக்கை. பாராட்டுக்கள் ரவிக்குமார்.

    வரலாறு தொடர்பான எனது எல்லாக் கட்டுரைகளிலும் பொ.மு, பொ.பி என்றே எழுதிவருகிறேன். (கூடவே அது பற்றிய பின்குறிப்பும் கொடுத்து வருகிறேன்)

    ReplyDelete
  3. If India stands by pluralism, then emphasizing only one religious interpreation should not continue.

    In the globalized world, Common Era - Before Common Era is the right way to proceed.

    Kudos to Ravikumar. We, the pluralists, stand by you.

    ReplyDelete
  4. நல்லவேளை தாங்கள் திராவிட அரசியலால் அதிகம் பாதிக்கப்பட்வில்லை; பொதுவாகவே இதுவரை பல பொது விஷயங்களில் தங்களின் அணுகுமுறை பெருமளவு நியாயமாகவே இருக்கிறது. பாராட்டுக்கள்.
    -கண்ணன்.

    ReplyDelete