Sunday, April 21, 2013

கச்சத்தீவு ஒப்பந்தமும் மீனவர் பிரச்சனையும்


               ( 2008அம ஆண்டு நான் தினமணிக்கு எழுதிய கட்டுரை )

      மீனவர்களைக் காப்பாற்றுவதற்காகத் தமிழக அரசியல் கட்சிகள் யாவும் களமிறங்கியுள்ளன.சிங்கள கடற்படையின் தாக்குதலைக் கண்டிப்பதில் போட்டிபோடும் அரசியல் தலைவர்கள் கச்சத்தீவு பிரச்சனையைப் பற்றிப் பேசவும் தவறவில்லை.ஆகஸ்டு மாதத்தில் இலங்கையில் நடக்கவிருக்கும் சார்க் மாநாட்டில் இந்தப் பிரச்சனையை மத்திய அரசு எழுப்பவேண்டும், மீண்டும் கச்சத்தீவை நாம் எடுத்துக்கொள்ளவேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
      .1974ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28ஆம் தேதி அன்று இந்திய பிரதமராக இருந்த திருமதி இந்திராகாந்தியும் இலங்கை பிரதமராக இருந்த சிறீமாவோ பண்டார நாயகேவும் செய்து கொண்ட ஒப்பந்தம்தான் முதன்முதலாக வங்கக்கடலில் இந்திய&இலங்கைக் கடல் எல்லையை வரையறுத்த நடவடிக்கையாகும். அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியாவும் இலங்கையும் தமது எல்லைக்கு உட்பட்ட பகுதிகளின் மீது முழுமையான உரிமையைப் பெற்றன. அந்த நாடுகளின் கப்பல்கள் ஒன்று மற்றொன்றின் எல்லைக்குள் சென்று வரும் உரிமை தொடர்ந்து காக்கப்படும் எனக்கூறிய அந்த ஒப்பந்தத்தின் பிரிவு ஐந்தில், ‘‘இந்திய மீனவர்களும், யாத்ரீகர்களும் கச்சத்தீவுக்கு வழக்கம்போல சென்று வரலாம். அதற்கு இலங்கையிடம் அனுமதி பெறத்தேவையில்லை’’ எனத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
​1974க்குப் பிறகு 1976 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இருபத்து மூன்றாம் நாள் இலங்கையும் இந்தியாவும் அடுத்து ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. மன்னார் வளைகுடாப் பகுதியில் கடல் எல்லையை வரையறுக்கும் ஒப்பந்தம்தான் அது. இந்தியா சார்பில் கேவல் சிங்கும், இலங்கைக்காக டபிள்யூ.டி. ஜெயசிங்கேவும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தனர். இந்த இரண்டு ஒப்பந்தங்களிலோ இவற்றுக்குப் பிறகு அதே ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி கையெழுத்தான இலங்கை, இந்திய, மாலத்தீவு ஆகியவற்றுக்கிடையேயான முச்சந்தியை வரையறுக்கும் ஒப்பந்தத்திலோ கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கக்கூடாது என்று சொல்லப்படவில்லை. இந்த ஒப்பந்தங்களுக்குப்பிறகு பரிமாறிக் கொள்ளப்பட்ட கடிதங்களில்தான் கச்சத்தீவை இலங்கைக்குத் தாரைவார்த்துத் தந்தார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் தமிழக மீனவர்கள் கச்சத்தீவுக்குச் சென்று ஓய்வெடுக்கவும், அங்கே தமது வலைகளை உலர்த்தவும், புனித அந்தோணியார் கோயில் திருவிழாவுக்குச் செல்லவும் தொடர்ந்து உரிமை பெற்றிருந்தார்கள். 1983 ஆம் ஆண்டுவரை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் அவர்கள் மீன்பிடித் தொழிலைச் செய்து வந்தனர். 83ல் ஏற்பட்ட இனக்கலவரத்தைத் தொடர்ந்து கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிப்பதற்கு இலங்கை அரசு தடை விதித்தது. அந்தத் தடை 2003 வரை தொடர்ந்தது.
​தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்படுவதும், அவர்களது மீன்களும், வலைகளும், படகுகளும் இலங்கைக் கடற்படையால் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்கதையாயின. நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அப்படித் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படும்போதெல்லாம் இந்திய அரசு இலங்கையைக் கண்டிக்கக்கூட முன்வருவதில்லை என்பது வேதனைக்குரிய செய்தியாகும். இதுவரை துப்பாக்கியால் சுட்டவர்கள் இப்போதோ கண்ணிவெடிகளை மிதக்க விட்டுவிட்டார்கள்.

      கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக இந்திய&இலங்கை அரசுகள் சில நடவடிக்கைகளை எடுத்தன. ‘கூட்டு நடவடிக்கைக்குழு’ என ஒரு குழு அமைக்கப்பட்டு அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தைகளும் நடந்தன. 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் கொழும்புவில் நடந்த ‘‘கூட்டு நடவடிக்கைக் குழு’’ கூட்டத்தில் சில முடிவுகளும் எடுக்கப்பட்டன. சர்வதேச எல்லையிலிருந்து ஐந்து கடல் மைல் வரை சென்று மீன் பிடிக்கின்ற மீனவர்களைக் கைது செய்வதில்லை எனவும், இரு நாடுகளின் சிறைகளிலும் வாடிக்கொண்டிருக்கும் மீனவர்களை விடுவிப்பது எனவும் அந்த ‘கூட்டு நடவடிக்கைக் குழு’ முடிவெடுத்தது. அதற்கு மாறாக இப்போது கண்ணிவெடிகளைப் போட்டிருப்பது மேலே கண்ட கூட்டு நடவடிக்கை குழுவின் முடிவுகளை இலங்கை அரசு மதிக்கவில்லை என்பதையே எடுத்துக்காட்டுகிறது.

No comments:

Post a Comment