மருத்துவர் ராமதாஸ் அவர்களுக்கு எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் சால்வை அணிவிக்கிறார். உடனிருப்போர் அ.கி.மூர்த்தி , கோ.க.மணி , ரவிக்குமார் 
தனி ஈழத்தை அடைவதற்காக எம்.பி. பதவியைத் துறக்கத் தயார்-திருமாவளவன்
ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 7, 2011,
சென்னை : தனி ஈழமே ஈழத் தமிழ் மக்களின் ஒரே தீர்வு. அந்தத் தீர்வை அடைவதற்காக எனது எம்.பி. பதவியையும் துறக்கத் தயார் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
தனி ஈழமே தீர்வு என்ற தலைப்பில் சென்னையில் இன்று(07.08.2011) கருத்தரங்கம் நடந்தது. இலங்கைத் தமிழ் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடந்த இந்தக் கருத்தரங்கில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டார். பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகளின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் முன்னிலை வகித்தார்.
ரவிக்குமார் பேசும்போது, ”இலங்கையில் நடைபெற்ற படுகொலைகளை போர்க்குற்றம் என்று மட்டும் பார்க்கக்கூடாது, அதுவொரு இனப்படுகொலை. சமமான இரண்டு தரப்புகளுக்கு இடையே நடப்பதுதான் போர். ஆனால் வல்லரசுகளான சீனா, ரஷ்யா, அமெரிக்கா, இந்தியா அகியவற்றின் துணையோடு, அரசு என்ற சர்வதேச அங்கீகாரத்தோடு இலங்கையின் பேரினவாத சிங்கள அரசின் ராணுவம் மேற்கொண்ட தாக்குதல் போர் அல்ல. அது இனப் படுகொலை. முள்ளிவாய்க்காலில் ஒரே நாளில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்கள் அவர்களெல்லாம் தமிழ் இனத்தில் பிறந்த ஒரே காரணத்துக்காகக் கொல்லப்பட்டார்கள். போரிட முடியாத முதியவர்கள், போரை விரும்பாத பெண்கள், நடப்பது இன்னதென்று புரிந்துகொள்ள முடியாத குழந்தைகள் அங்கே ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். அங்கு நடந்தது போர்க்குற்றம் என்பதை ஒப்புக்கொண்டால் இரண்டு தரப்பினருமே குற்றவாளிகள் ஆவார்கள். தற்காப்புக்கென ஆயுதம் தாங்க நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள் தமிழர்கள் இதை நாம் வலியுறுத்த வேண்டும். இப்போதும் அங்கு இன ஒடுக்குமுறை தொடர்கிறது. தமிழர்கள் சிங்களம் படிக்கவேண்டும், சிங்களவர்கள் தமிழ் படிக்கிறோம் என புதிய எமாற்றுத் தந்திரத்தை இலங்கை அரசு இப்போது கையாள்கிறது. தமிழர்களின் பாரம்பரியத் தாயகத்தில் சிங்களக் குடியேற்றம் நடக்கிறது. தமிழ் எம்.பிக்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு ஏற்பாடு நடக்கிறது. மொழி,நிலம்,அரசியல் உரிமை ஆகிய அனைத்தும் பறிக்கப்படுகின்றன. அதைத் தடுத்து நிறுத்த நாம் ஒன்றிணைந்து வலுவாகக் குரலெழுப்பவேண்டும்” என்றார்.
கூட்டத்தில் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன், ஈழத் தமிழர்களின் போராட்ட அரசியல் வரலாற்றை விவரித்தார்.அவர்கள் எவ்வாறு ஆயுதம் ஏந்திப் போராட நேர்ந்தது என்பதையும் விளக்கினார். “ அன்று ஈழத் தமிழ் இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கியது இந்தியா. ஜெயவர்த்தனே காலத்தில் இலங்கையை மிரட்டுவதற்காகத் தமிழருக்கு உதவுவதுபோல நடித்தது. இந்தியாவால் பயிற்றுவிக்கப்பட்ட போராளிக் குழுக்கள் பல அவர்கள் சொன்னபடி கேட்டு நடந்தபோது இந்தியாவுக்கு நாங்கள் கைப் பாவைகளாக இருக்கமாட்டோம் என்று துணிச்சலோடு சொன்னவர்கள் புலிகள். தமிழர்களைக் காப்பாற்றுகிறோம் என்ற பெயரில் இலங்கைக்குச் சென்ற இந்திய அமைதிப்படை அங்கு தமிழர்களுக்கு எதிராக நடந்துகொண்டது. ஜானி உட்பட பலரைக் கொன்றது. புலேந்திரன், குமரப்பா உள்ளிட்ட போராளிகள் சயனைடு அருந்திச் சாவதற்குக் காரணமாகியது. பிரபாகரன் அவர்களைப் பிடிப்பதற்காகப் பலமுறை முயற்சித்தது. அப்படித்தான் அங்கே இருக்கும் புலிகள் இந்தியப் படையை எதிர்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.”
”தமிழ் ஈழமே தீர்வு என்று இந்த நேரத்தில் நாம் உரக்க முழங்குவதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. தமிழ் ஈழத்தைப் பற்றி யாரும் பேசமாட்டார்கள். தமிழ் ஈழக் கோரிக்கையை யாரும் முன் வைக்க மாட்டார்கள். ஏதேனும் ஒரு தீர்வைச் சொன்னால் அதை ஒப்புக்கொண்டு அங்கே உள்ளவர்கள் அடிபணிந்து கிடப்பார்கள் என்கிற மமதை சிங்கள இனவெறி ஆட்சியாளர்களிடம் உருவாகியிருக்கிறது. அவர்களின் ஆணவத்திற்கு, மமதைக்கு சம்மட்டி அடி கொடுக்கிற வகையில் இந்த கருத்தரங்கம் நடைபெறுகிறது.”
”தமிழர்களின் துயரத்திற்கு தமிழ் ஈழம் அமைந்தால் தான் தீர்வு கிடைக்கும். பல ஆயிரம் தமிழர்களை ரத்த வெள்ளத்தில் கொன்று குவித்த ராஜபக்சே கும்பல் மீது போர்க் குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். காங்கிரஸ், பாஜக என மத்தியில் ஆட்சிக்கு வந்த எந்தக் கட்சியும் தமிழ் ஈழம் அமைவதை விரும்பவில்லை.கட்சி எதுவாக இருந்தாலும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் ஏற்படவில்லை. தனித் தமிழ் ஈழத்திற்காக எனது எம்.பி. பதவியையும் கூட துறக்கத் தயாராக இருக்கிறேன். தமிழ் ஈழத்தை அடைய வேண்டும் என்பதற்காகவே பாமகவுடன் கை கோர்த்துள்ளேன். இந்தக் கோரிக்கைக்காக நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம்” என்றார்.
இறுதியாகப் பேசிய மருத்துவர் ராமதாஸ் அண்மைக்காலங்களில் உலகில் உருவாகியிருக்கும் புதிய நாடுகளைப் பட்டியலிட்டார். அத்தகைய நாடுகள் புதிதாக உருவாகும்போது ஏன் தமிழ் ஈழம் மலரக்கூடாது என்று அவர் கேட்டார். “ ஈழமே தீர்வு என்கிற நாங்கள் ஒரு தரப்பாக இருக்கிறோம். ஒன்றுபட்ட இலங்கைக்குள்தான் தமிழ் மக்கள் வாழவேண்டும் என்பவர்கள் இன்னொரு தரப்பாக இருக்கட்டும். வெளிப்படையாக விவாதிப்போம். எவர் வேண்டுமானாலும் வந்து சொல்லட்டும். தமிழ்நாட்டில் ஈழப் பிரச்சனைக்காகப் பேசுவதற்கு முழு தகுதியுடைய கட்சிகள் பாட்டாளி மக்கள் கட்சியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும்தான். இனிமேல் திராவிடக் கட்சிகளை நம்பவேண்டாம். தைலாபுரம் தோட்டத்தில் என்னை சந்திக்க வந்தபோது தம்பி திரும்மாவிடத்திலும் தம்பி ரவிக்குமாரிடத்திலும் ஒரு தகவலைச் சொன்னேன். ஈழத் தமிழர்கள் அழிவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார் ஒரு தலைவர். அவரை தமிழ்மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள் . அந்தத் தலைவர் யாரென்பது உங்களுக்கெல்லாம் தெரியும்” என்று மருத்துவர் ராமதாஸ் பேசினார்.
சுமார் ஐந்தாண்டுகால இடைவெளிக்குப் பிறகு தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் மீண்டும் செயல்படத் தொடங்கியிருக்கிறது.அதன் முதல் நிகழ்ச்சியாக இந்த கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் தமிழ் உணர்வாளர்களும், பா.ம.க மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தொண்டர்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.
மதிப்பிற்குரிய ரவிக்குமார் அவர்களுக்கு,
ReplyDeleteதுணிச்சலான பல செய்திகளை முன்னெடுத்து வைத்திருக்கிறீர்கள். இவை தமிழகத்தில் பொதுவரங்குகளில் பேசப்படாத செய்திகள். இவற்றை நாடாளுமன்றத்திலும் பதிவு செய்ய வேண்டும். பதவியைத் துறப்பது என்பது எளிது. நடுவணரசைத் தட்டிக் கேட்கத் தமிழகத்தில் தற்போது முடிகிறது. அதிமுக உறுப்பினர்கள் தில்லியிலும் பதிவு செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். வி.சி.யும் கேட்க வேண்டும்.
ஆளுங்கட்சிக் கூட்டணியில் இருக்கும்போதே அவர்களைக் குறை சொல்வது எளிதல்ல. இனப்படுகொலைக்கு இந்தியாவும் துணை சென்றிருக்கிறது என்பது என்பது மிகப் பெரிய குற்றச்சாட்டு. இதற்கு விடையளிக்க இந்திய அரசை நாடாளுமன்றத்தில் வற்புறுத்த வேண்டும். இனப்படுகொலைக்குக் கூட்டாளியாக இருந்த காங்கிரசுக் கூட்டணி அரசு பதவி விலக வேண்டும்.
கூட்டணியிலிருந்து கொண்டே குறை சொல்லிக் கொண்டே இருப்பது பா.ம.க.வின் தந்திரம். பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்ற பாசாங்குத் தனமான செயல்கள் அக்கட்சியை இன்று செல்லாக்காசாகி விட்டன. விடுதலைச் சிறுத்தைகள் பா.ம.க.வோடு இணைந்திருப்பது கவலையளிக்கிறது. வி.சி.யின் நிலைப்பாடு என்ன? காங்கிரசு-திமுக கூட்டணியிலிருந்து விலகியாயிற்றா?
அடுத்த செயல்பாடுகள் என்ன? இவற்றையும் பதிவிடுங்கள்.
எதிர்பார்ப்புடன்,
மணி மு. மணிவண்ணன்
//“ அன்று ஈழத் தமிழ் இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கியது இந்தியா. ஜெயவர்த்தனே காலத்தில் இலங்கையை மிரட்டுவதற்காகத் தமிழருக்கு உதவுவதுபோல நடித்தது. இந்தியாவால் பயிற்றுவிக்கப்பட்ட போராளிக் குழுக்கள் பல அவர்கள் சொன்னபடி கேட்டு நடந்தபோது இந்தியாவுக்கு நாங்கள் கைப் பாவைகளாக இருக்கமாட்டோம் என்று துணிச்சலோடு சொன்னவர்கள் புலிகள். தமிழர்களைக் காப்பாற்றுகிறோம் என்ற பெயரில் இலங்கைக்குச் சென்ற இந்திய அமைதிப்படை அங்கு தமிழர்களுக்கு எதிராக நடந்துகொண்டது. ஜானி உட்பட பலரைக் கொன்றது. புலேந்திரன், குமரப்பா உள்ளிட்ட போராளிகள் சயனைடு அருந்திச் சாவதற்குக் காரணமாகியது. பிரபாகரன் அவர்களைப் பிடிப்பதற்காகப் பலமுறை முயற்சித்தது. அப்படித்தான் அங்கே இருக்கும் புலிகள் இந்தியப் படையை எதிர்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.” //
ReplyDeleteஅன்பின் திரு.இரவிக்குமார் அவர்களுக்கு,
மேற்கண்ட காங்கிரசுக்கட்சியின் நயவஞ்சகத்தை பலரும் அறியவில்லை. குறிப்பாக 1980களில் பிறந்து இன்றைக்கு 30களில் இருக்கும் இளைஞர்களில் பெரும்பான்மையோர் அறியவில்லை. இந்த இளைஞர்களுக்கு ஈழம் என்றாலே தொலைக்காட்சிகளிலும், ஏடுகளிலும் தமிழக, இந்திய அரசுகள் செய்த போலிப் பிரச்சாரமே மனதில் இருக்கிறது. இதுபோன்ற உண்மைச் செய்திகள் அவர்களைச் சென்றடைந்தால் அவர்கள் விழிப்படைவார்கள்.
திருமா அவர்களும் பதவியைத் துறப்பது சரியல்ல. இன்னும் இரண்டாண்டுகளுக்கு மேல் காங்கிரசு தாங்காது. இப்போதே நலிவடையத் துவங்கிவிட்டது. இந்த நிலையில் தமிழர்களின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும். அதற்குத் திருமா பதவியில் இருக்க வேண்டும் என்பதே எனது கருத்து.
அன்புடன்
நாக.இளங்கோவன்
அன்புள்ள ரவிக்குமார்,
ReplyDeleteமிக அருமையாகவும் துல்லியமாகவும் கருத்துகளை நறுக்கென
சொல்லியிருக்கின்றீர்கள்!
இந்த இனப்படுகொலை இன்னும் போதிய
அளவில் உணரப்படாமல் இருக்கின்றது.
ஈழத் தமிழர்களுக்கு நேர்ந்த
பேரவலம் அரசியல், மொழி, மதம் மீறிப் பரவலாக அறியப்படவேண்டும்.
அறத்தீர்வு கீட்டுதல் வேண்டும். இருப்பவர்கள் வாழ்வில்
அமைதி திரும்பவேண்டும்.
அன்புடன்
செல்வா