Tuesday, June 30, 2015

எனது கல்லூரி ஆசிரியர் : எஸ்.கோவிந்தராஜன்



" நீங்க என்ன டிகிரி பண்ணுனீங்க?" என்று யாராவது கேட்டால் நான் சற்றுத் தயக்கத்தோடுதான் பதில் சொல்வேன். ஏனென்றால் 'டூரிசம்' என்று ஒரு பட்டப் படிப்பு இருந்ததைப் பலபேர் அறிந்திருக்க மாட்டார்கள். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பு இருந்தகாலத்தில் அப்படியொரு டிகிரி இருந்தது. 

உயர்நிலைப் பள்ளி இறுதித் தேர்வில் நான் பாஸ் செய்தபோது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புகுமுக வகுப்பு படிக்கவேண்டும் என்பதுதான் எனது விருப்பமாக இருந்தது. என் தாய் மாமா மகன் எங்கள் வீட்டிலிருந்துதான் படித்தார். அவர் கடலூர் கலைக் கல்லூரியில் பியுசி சேர்ந்து படித்து ஃபெயிலாகி வீட்டில் இருந்தார். அவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை என்னை ஹாஸ்டலில் சேர்த்துப் படிக்கவைக்கவேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தார். 

என் அம்மாவுக்கோ என்னைவிடவும் தம்பிப் பிள்ளையான அவர்மீதுதான் பிரியம் அதிகம். தனக்குக் குழந்தை பிறக்காதபோது அவரை ஒரு தத்துப் பிள்ளைபோல எடுத்து அம்மா வளர்த்து வந்தார். என் விருப்பத்தைவிடவும் என் மாமா மகனான அவர் சொல்வதற்கே அம்மாவிடம் செல்வாக்கு அதிகம். அதனால் எனக்கு அண்ணாமலையில் பியுசி சேர இடம் கிடைத்தபோதிலும் நான் சற்றும் விரும்பாத பூம்புகாருக்கு அருகே மேலையூர் என்ற கிராமத்தில் இருந்த ஒரு தனியார் கலைக் கல்லூரியில் சேர்க்கப்பட்டேன். அந்த ஒரு வருடம் என்னுள் ஏற்படுத்திய தாக்கத்தைத் தனியே எழுதவேண்டும். 

பியுசியில் சயன்ஸ் குரூப் எடுத்துப் படித்திருந்தாலும் அங்கு கிடைத்த மோசமான அனுபவங்கள் இனிமேல் சயன்ஸ் குரூப்பே வேண்டாம் என்ற முடிவுக்கு என்னைத் தள்ளிவிட்டன. பட்டப் படிப்புக்கு அண்ணாமலையில் விண்ணப்பிக்கும்போது அந்த ஊசலாட்டம் என்னைப் பாடாய்ப் படுத்தியது. பிஎஸ்சி அக்ரிக்கும் ஜியாலஜிக்கும் விண்ணப்பங்களை வாங்கிப் போட்டேன். ஆனாலும் அதைப் படிக்கும் விருப்பம் எனக்கு இல்லை. ஏதாவது ஆர்ட்ஸ் குரூப்புக்கு விண்ணப்பிக்கலாம் என எண்ணம் வந்தது. என்ன படிக்கலாம் என அட்மினிஸ்ட்ரேடிவ் பில்டிங்கில் ஒட்டியிருந்த டைம் டேபிள்களை பார்த்துக்கொண்டே வரும்போதுதான் டூரிசம் என்ற பட்டப் படிப்புக்கான டைம்டேபிள் கண்ணில்பட்டது. அதில் என்னைக் கவர்ந்த விஷயம் அந்தப் படிப்புக்கு பிற்பகலில் வகுப்புகள் இல்லை என்பதுதான். உடனே அதற்கும் ஒரு விண்ணப்பம் போட்டேன். முதலில் டூரிசத்துக்கு அட்மிஷன் வந்தது. சேர்ந்துவிட்டேன். அதன் பிறகு ஜியாலஜி படிக்க அட்மிஷன் வந்தது. நான் போகவில்லை. 

டூரிசம் படித்த மூன்று வருடங்கள் என்னுள் ஏற்படுத்திய தாக்கம் அதிகம். இப்போது நான் தொல்லியல், கலை வரலாறு, கல்வெட்டியல் என அலைந்து திரிய அப்போது விரிவுரையாளராக இருந்த எஸ்.ஜி என மாணவர்களிடையே அறியப்பட்ட எஸ்.கோவிந்தராஜன் அவர்களே முதன்மையான காரணம். பணி ஓய்வு பெற்று அவர் புதுச்சேரியில் வசிப்பதால் இப்போதும் அவரோடு தொடர்பில் இருக்கிறேன். பேராசிரியர் சம்பகலட்சுமியின் மாணவர் அவர். சோழர்கால கட்டடக் கலையில் தேர்ச்சி பெற்றவர். அவரது வகுப்புகளைக் கேட்டால் வகுப்பறைகளுக்கு அப்பால் நாம் படிக்கவேண்டியதன் அவசியம் புரியும். மாலை வகுப்பு இல்லை என்பதால் டூரிசம் சேர்ந்த நான் மாலை நேரம் முழுவதையும் நூலகத்தில் கழிக்க அவரது வகுப்புகள் காரணமாயின. கோயில் கட்டடக்கலை குறித்த என் நூலை அவருக்கு சமர்ப்பணம் செய்யவிருக்கிறேன். மாணவன் ஆசிரியருக்கு ஆற்றும் நன்றி! 


No comments:

Post a Comment