Thursday, June 11, 2015

டி .எஸ்.சுப்ரமணியன் என்ற அபூர்வ சேர்க்கை


ஊடகங்கள் அதிகம் கண்டுகொள்ளாத துறைகளில் ஓன்று தொல்லியல். அந்தத் துறை குறித்து ஆழமான கட்டுரைகளை வெளியிட்டால் அவற்றைப் படிப்பவர்கள் குறைவு என்பதால் நாளேடுகள் அத்தகைய கட்டுரைகளைப் பிரசுரிக்கத் தயங்குவதுண்டு. ஆனால் தி இந்து நாளேடு அதில் ஒரு விதிவிலக்கு. கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தொல்லியல் துறைசார்ந்த முக்கியமான கட்டுரைகளை அது வெளியிட்டுள்ளது. அதே நிறுவனத்திலிருந்து வெளிவரும் ஃ பிரண்ட்லைன் பத்திரிக்கை இன்னும் ஒருபடி மேலே சென்று வண்ணப் புகைப்படங்களோடு அருமையான கட்டுரைகளை பிரசுரித்திருக்கிறது. அந்தக் கட்டுரைகளையெல்லாம் எழுதுபவர் ஒருவர்தான். அவர் பெயர்
டி.எஸ்.சுப்ரமணியன்.

தொல்லியல்துறை சார்ந்த  அறிஞர்கள் ஐராவதம் மகாதேவன் முதல் பேராசிரியர் ராஜன் வரை அவரை அறியாதவர்கள் எவரும் இருக்க முடியாது.தமிழ்நாட்டில் புதிதாக ஒரு கல்வெட்டு கிடைத்தாலும்  ,அகழ்வாய்வு நடந்தாலும் அது  டி .எஸ்.எஸ் க்குத் தான் முதலில் தெரிவிக்கப்படும். அவர் வெறும் ரிப்போர்ட்டர் அல்ல, அந்தத் துறையில் இருக்கும் ஆய்வாளர்கள் அளவுக்கு ஆழமான அறிவு கொண்டவர்.

டி .எஸ்.சுப்ரமணியன் அக்கறை செலுத்தும் இன்னொரு துறை அணுசக்தி. அந்தத் துறை குறித்து எழுதக்கூடிய ஞானம் கொண்ட பத்திரிகையாளர்கள் மிக மிகக் குறைவு. அணுசக்தித் துறையின் மிக உயர் அதிகாரிகள் எல்லோரையும் அவர் பேட்டி கண்டு எழுதியிருக்கிறார். அப்படியான நுட்பமான அதே சமயம் பிரச்சனைக்குரிய துறை குறித்து எழுதும் பத்திரிகையாளர்கள் பெரும்பாலும் நிர்வாகம் என்ன சொல்கிறதோ அதையே பதிவுசெய்பவர்களாக இருப்பார்கள். ஆனால் டி .எஸ்.எஸ் அப்படியானவர் அல்ல. அணுசக்தி பற்றிய விமர்சனக் கருத்துகளையும் பதிவுசெய்பவர்.

தற்போது ஃ பிரண்ட்லைன் பத்திரிகையின் அசோசியேட் எடிட்டராக அவர் இருக்கிறார். அவரோடு எனக்கு அறிமுகம் ஏற்பட்டு சுமார் பதினைந்து, இருபது  ஆண்டுகள் இருக்கும். எப்போது பேசினாலும் அன்பு மாறாமல் நலம் விசாரிப்பார். அவர் எழுதிய கட்டுரையைப் பாராட்டி ஒரு வார்த்தை சொன்னால் பத்துமுறை அதற்கு நன்றி சொல்வார். இன்னுமொரு வியப்பளிக்கும் விஷயம் அவருக்கு கராத்தே மேல் இருக்கும் ஈடுபாடு.

ஒரு கட்டுரையை அவர் எழுதுவதற்கு எவ்வளவு சிரத்தை எடுத்துக்கொள்வார் என்பது அவரை அறிந்தவர்களுக்குத் தெரியும். சுமார் நாற்பது ஆண்டு கால  இதழியல் அனுபவம் இருந்தாலும் இப்போதுதான் வேலைக்கு சேர்ந்த ஒரு புதிய பத்திரிகையாளர் போல கடமை உணர்வோடு அவர் வேலை செய்வதைப் பார்க்கும்போது வியப்பாக இருக்கும்.

அணுசக்தித் துறை தொடர்பாக அவர் எழுதிய கட்டுரைகளை அங்கீகரித்து Indian Nuclear Society அவருக்கு 2011 ஆம் ஆண்டுக்கான INS Outstanding Service Award விருது வழங்கி கௌரவித்திருக்கிறது. ஆனால் தொல்லியல் துறை தொடர்பான அவரது பங்களிப்புகள் இன்னும் பெரிய அளவில் அங்கீகரிக்கப்படவில்லை. இத்தகையவர்களைத் தமிழக அரசு விருது வழங்கி அங்கீகரிக்கவேண்டும்.

டி.எஸ்.சுப்ரமணியன் எழுதியிருக்கும் தொல்லியல்,அணுசக்தி தொடர்பான கட்டுரைகளில் தேர்ந்தெடுத்த கட்டுரைகளை நூலாகக் கொண்டுவரவேண்டும். அதற்கு அனுமதி அளித்தால் மணற்கேணி சார்பிலேயே அதை வெளியிட நான் தயாராக இருக்கிறேன்.


No comments:

Post a Comment