Saturday, August 15, 2015

சாதி நோயாளிகளை மீட்டெடுப்போம்!

விழுப்புரம் மாவட்டம் சேஷசமுத்திரத்தில் தமது தெருவிலிருக்கும் அம்மன் கோயிலுக்கு மரத்தால் தேர்செய்து அதில் சாமியை வைத்து ஊர்வலம்விட முயன்றதற்காக தலித் மக்களின் ஐந்து வீடுகளை சாதி வெறியர்கள் எரித்துள்ளனர். காவலுக்கு இருந்த போலீஸாரையும் தாக்கிக் காயப்படுத்தியுள்ளனர். விவரம்

அறிந்ததும் எமது தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்கள் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் பேசி தலித் மக்களின் வீடுகளை எரித்தவர்கள் மீதும் கலவரத்தில் ஈடுபட்டவர்கள்மீதும் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார். 

தற்போது கூடுதல் எண்ணிக்கையில் போலீஸார் அங்கு அனுப்பப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

சேஷசமுத்திரம் பிரச்சனை நான்கு ஆண்டுகளாக இருந்துவருகிறது. சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி இதுவரை தேர் இழுக்க அனுமதி மறுத்துவந்த விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் தலித் மக்களின் பல்வேறு அறவழிப் போராட்டங்களுக்குப் பிறகு இந்த ஆண்டுதான் தேர் இழுக்க அனுமதி தந்தது. நாளை (16.08.2015)தேர்த் திருவிழா நடக்கவிருந்த நிலையில் இந்தத் தாக்குதல் நடந்திருக்கிறது. அந்தத் தேரும் எரிக்கப்பட்டிருக்கிறது. 

சாதி வெறியை முதலீடாக வைத்து எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கத் திட்டமிட்டுள்ளவர்கள் அதற்காகக் கடந்த நான்கு ஆண்டுகளாக வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். வடமாவட்டங்களில் 1980 களில் அவர்கள் நடத்திய வன்முறை வெறியாட்டத்துக்கும் இப்போது நிகழும் வன்முறைகளுக்கும் பண்புரீதியான வேறுபாடு ஒன்று உள்ளது. அப்போது இட ஒதுக்கீடு என்ற சமூகநீதிக் கோரிக்கை அவர்களிடம் இருந்தது. இன்று ஆட்சியைப் பிடிக்கவேண்டும் என்ற அதிகார வெறி மட்டுமே இருக்கிறது. அதுமட்டுமின்றி சாதிவெறிக்கு சாதகமான வகுப்புவாத சூழலும் இங்கே ஒப்பீட்டளவில் வலுப்பெற்றிருக்கிறது. 

தமிழ்நாட்டில் கடந்த இரண்டு வாரங்களாக தன்னெழுச்சியாகக் கிளர்ந்தெழுந்த மது ஒழிப்புப் போராட்டங்களாலும், மக்களிடையே உணர்வுபூர்வமாக உருவாகியிருக்கும் ஒற்றுமையாலும் அரசியல் களத்தில் ஓரங்கட்டப்பட்ட அந்த சக்திகள் சாதிவெறியைத் தூண்டி மக்களைப் பிரித்து மோதவிட்டு அரசியல் ஆதாயம் அடையப் பார்க்கின்றன. இதைத் தடுத்து நிறுத்தாவிட்டால் தமிழகத்தின் அமைதியை அவர்கள் நாசம் செய்துவிடுவார்கள். இதைத் தமிழக அரசு உணரவேண்டும். 

தலித் மக்கள் சாதித் தளையிலிருந்து விடுதலைபெற வேண்டுமென்றால் சாதிவெறி நோயால் பீடிக்கப்பட்டிருப்பவர்களையும் அதிலிருந்து மீட்டெடுக்கவேண்டும். குடிநோயாளிகளைக் குணப்படுத்தாமல் மது ஒழிப்பு முழுமைபெறாது. அதைப்போலவே சாதிநோயாளிகளைக் குணப்படுத்தாமல் சாதி ஒழிப்பு முழுமை பெறாது. இந்த அறிவு முதிர்ச்சியை அம்பேத்கரும் எழுச்சித் தமிழரும் தலித் சமூகத்துக்கு வழங்கியுள்ளனர். அதனால், சாதிவெறி என்னும் நஞ்சை ஒருபோதும் அவர்களிடம் செலுத்தமுடியாது.

No comments:

Post a Comment