Monday, August 10, 2015

பெண்கள் அர்ச்சகராவதற்குத் தடையாக இருப்பவர்கள் யார்? - ரவிக்குமார்இன்று (11.08.2015) தி இந்து ஆங்கில நாளேட்டில் Wife,Mother,Lawyer,Priest என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. அந்தக் கட்டுரை அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கும், பெண்கள் அர்ச்சகராக்கப்படுவதற்கும் தடையாக இருக்கும் பழமைவாத சக்திகளை விமர்சிப்பதற்குப் பதிலாக சமூக சீர்திருத்தத்தை முன்னெடுப்பவர்களைக் குறை கூறுகிறது. பெண்களுக்கு உரிமை அளிக்கும் விஷயத்தில் அவர்கள் மௌனம் சாதிப்பதாகக் குற்றம் சாட்டுகிறது. அவர்கள் மௌனம் காப்பது பெண்களுக்கு உரிமை தரப்படக்கூடாது என்பதற்காக அல்ல, பழமைவாதிகளின் பிடி நீதித்துறையின்மேல் இன்னும் வலுவாக இருப்பதைப் பார்த்த அச்சத்தால் தான். 

அம்பேத்கரின் ' இந்து சட்ட மசோதாவை' சட்டமாக்க விடாமல் தடுத்த சக்திகள்தான் இப்போதும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தையும் தடுத்து நிறுத்தியுள்ளன. இந்த ஆபத்தை சுட்டிக்காட்டாமல் சமூக சீர்திருத்தத்தை முன்மொழிபவர்களை விமர்சிப்பது பழமைவாதிகளுக்குத் துணைபோவதாகவே முடியும். 

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டபோது அந்த சட்டத்தை வரவேற்று தமிழக சட்டமன்றத்தில் பேசிய நான் ‘‘இந்து அறநிலையத்துறைக்கு உட்படாத கிராமக் கோயில்களுக்கும்கூட இந்தச் சட்டம் பொருந்தக்கூடியதாக அமைக்கப்பட வேண்டும். அதுமட்டுமல்லாமல் பெண்களும் அர்ச்சகராவதற்கு இந்தச் சட்டத்தில் வகை செய்யப்பட வேண்டும்’’ எனக் கோரிக்கை விடுத்தேன். அன்றைய முதல்வர் கலைஞரை சந்தித்தும் வேண்டினேன். ' இந்த சட்டத்தையே செயல்படுத்த விடாமல் தடை செய்யப்பார்க்கிறார்கள். பெண்களையும் உள்ளடக்கினால் அதையே காரணமாகக் காட்டி இந்த சட்டத்தைத் தடுத்துவிடுவார்கள் . முதலில் இந்த சட்டம் நடைமுறைக்கு வரட்டும். அதன் பின்னர் அந்தத் திருத்தத்தைச் செய்வோம்" என அவர் பதிலளித்தார். 

இந்து நாளேட்டில் கட்டுரை எழுதியவர்களும் அதில் கருத்து கூறியிருப்பவர்களும் இந்தப் பிரச்சனையில் மிகவும் புரட்சிகரமான ஒரு நீதிமன்றத் தீர்ப்பை சுட்டிக்காட்டத் தவறிவிட்டனர். பெண்களை அர்ச்சகர்களாக நியமிப்பதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி கே. சந்துரு வழங்கிய தீர்ப்பு அது. " இந்தியாவின் தென் பிராந்தியங்களில் அமைந்துள்ள உப பண்பாடுகளைச் சேர்ந்த தெய்வங்கள் மனு ஸ்மிருதியின் தளைகளிலிருந்து விடுபட்டவையாகும். எனவே பெண்ணை வீட்டு வேலைகளோடு மட்டுமே அடக்கி வைத்திருக்கும் நிலைமை இங்கு எழவில்லை. புகழ் பெற்ற தத்துவ அறிஞர் ஒருவர் குறிப்பிட்டதுபோல பெண்கள்தான் இந்த பிரபஞ்சத்தின் பாதியை ஆண்டுகொண்டிருக்கிறார்கள். மனிதகுலம் முன்னேறிச் செல்லவேண்டுமென்றால் அது ஆண், பெண் என்ற இரண்டு கால்களாலும் நடந்தால்தான் சாத்தியம். கடவுளின் சன்னதிகள் ஆண், பெண் பாகுபாடுகளிலிருந்து விடுபட்டு சுதந்திரமானவையாக விளங்க வேண்டும்" என்று அந்தத் தீர்ப்பில் நீதிபதி கே. சந்துரு குறிப்பிட்டிருக்கிறார். அந்தத் தீர்ப்பை கட்டுரையாளர்களோ கருத்து சொன்னவர்களோ அறிந்திருப்பதாகத் தெரியவில்லை. அந்தத் தீர்ப்பைப்பற்றி 
26.09.2008 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் ' தீர்ப்பு அல்ல நீதி' என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றையும் நான் எழுதியிருக்கிறேன். 

தற்போது உச்சநீதிமன்றத்தில் அனைத்துசாதியினரும் அர்ச்சகராகலாம் சட்டம் குறித்த விசாரணை முடிந்து தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. அதை வெளியிடவேண்டும் என சமூகநீதியில் அக்கறையுள்ளோர் வலியுறுத்தவேண்டும். 

http://m.thehindu.com/opinion/op-ed/wife-mother-lawyer-priest/article7522954.ece

No comments:

Post a Comment