Friday, January 1, 2016

மாசடைந்த காற்று:

டெல்லியின் தடுப்பு நடவடிக்கையை சென்னையிலும் அமல்படுத்தவேண்டும்
~~~~~~~~~

காற்று மாசு உயிருக்கு ஆபத்தான மட்டத்தை எட்டிவிட்ட காரணத்தால் கடந்த சில ஆண்டுகளாக டெல்லியில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இன்றுமுதல்  ஒற்றைப்படை இலக்கம் கொண்ட வாகனங்களை ஒரு நாளிலும் இரட்டைப்படை இலக்கம் கொண்ட வாகனங்களை மறுநாளிலும் இயக்கவேண்டும் என்ற டெல்லி அரசின் ஆணை நடைமுறைக்கு வந்துள்ளது. இப்படிச் செய்ததால் இன்று நடுப்பகல் அளவில் கணக்கிட்டபோது காற்று மாசு கணிசமாகக் குறைந்திருக்கிறது என டெல்லி மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

காற்று மாசின் அளவைப் பொருத்தவரை டெல்லியைவிட சென்னையின் நிலை மோசம் என்பதை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. சென்னை மாநகரின் காற்றில் சல்பர் டை ஆக்ஸைடும் கார்பன் மோனாக்ஸைடும் அதிக அளவில் கலந்திருக்கின்றன என்று தெரியவந்துள்ளது. ( இந்த செய்திக் கட்டுரையில் அது தொடர்பான விவரங்கள் உள்ளன- http://m.thehindu.com/news/national/the-quality-of-air-you-breathe-in-chennai-is-worse-than-in-delhi/article7422559.ece ) 

நிலக்கரியைப் பயன்படுத்தி அனல்மின்சாரம் தயாரிப்பதன்மூலமும் வாகனப் புகையின் மூலமும் காற்றில் சல்பர் ஆக்ஸைடு அதிகரிக்கிறது. கார்பன் மோனாக்ஸைடும் வாகனப் புகையால்தான் காற்றில் அதிகரிக்கிறது. இந்த மாசுகளால் மூச்சுத் திணறல் உள்ளிட்ட சுவாசக் கோளாறுகள் உண்டாகும். ஆஸ்துமா நோயாளிகளுக்கு உயிரிழப்புகூட நேரலாம். 

சென்னை மாநகரின் காற்று மாசைக் கட்டுப்படுத்த எந்தவொரு தீவிர நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. டீசல் வாகனங்களைக் கட்டுப்படுத்துதல், ஐடி முதலான நிறுவனங்களுக்கு வேலைக்குச் செல்பவர்கள் தனித்தனி வாகனங்களில் செல்லாமல் நிறுவனப் பேருந்தில் செல்வதையோ அல்லது ஒரே காரில் பலர் சேர்ந்துசெல்வதை ஊக்குவித்தல்; பொதுப் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துதல்; அரசு அலுவலகங்களை சென்னையின் புறநகர்ப் பகுதிகளுக்கு மாற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படவேண்டும். 

சென்னை மாநகரை நீரால் அழியவிட்டவர்கள் அது காற்றால் அழியாமல் காப்பாற்றுவார்களா? 



No comments:

Post a Comment