Wednesday, January 13, 2016

பொது மயானம்: தமிழக அரசு கர்னாடக உதாரணத்தைப் பின்பற்றவேண்டும் - ரவிக்குமார்


தோழர்களே!

தமிழ்நாட்டில் ஊடகங்களெல்லாம் தமிழ்நாட்டின் முதன்மையான பிரச்சனையாக ஜல்லிக்கட்டைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போது திருநாள்கொண்டசேரியில் நடந்த அநீதியைக் கண்டித்து நாம் இங்கே கூடியிருக்கிறோம்.

அங்கே இறந்துபோன முதியவரின் சடலத்தை யாருடைய தனிப்பட்ட வீட்டின் வழியாகவும் எடுத்துப்போக தலித் மக்கள் முயற்சிக்கவில்லை. பொதுப்பாதையின் வழியாகத்தான் எடுத்துப்போக விரும்பினார்கள். அதை சாதியவாதிகள் தடுத்ததால் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி அதற்கு அனுமதியும் பெற்றார்கள். நீதியரசர் சுந்தரேஷ் அவர்கள் " பொதுப்பாதை வழியாக அந்த சடலத்தை எடுத்துச்செல்ல காவல்துறை பாதுகாப்பு வழங்கவேண்டும்' எனத் தெளிவாகக் கூறியிருக்கிறார். " நாங்கள் அவர்களுக்குத் தனியே பாதைபோட்டுத் தருகிறோம். அதற்காக இருபத்தோரு லட்சம் ரூபாயை ஒதுக்கிவிட்டோம். மார்ச் மாதத்துக்குள் பாதை அமைக்கிறோம்' எனத் தமிழக அரசின் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவித்தார்கள். அதை நீதிமன்றம் ஏற்கவில்லை. பொதுப்பாதையின் வழியாக எடுத்துச்செல்ல பாதுகாப்பு கொடுங்கள் என்று நீதியரசர் உறுதியாகக் கூறிவிட்டார். ஆனால் ' நீதிமன்றம் சொன்னாலும் நாங்கள் கேட்கமாட்டோம், நீதிமன்ற அவமதிப்பு வந்தாலும் பரவாயில்லை  சாதியவாதிகளைத் திருப்திபடுத்துவதே எங்கள் வேலை' என்ற போக்கில் காவல்துறை செயல்பட்டிருக்கிறது.

ஒரு முதியவரின் சடலத்தை நான்கு நாட்கள் நாறடித்து வயல் வரப்புகளின் வழியாக போலீசே சுமந்துசென்ற கேவலம் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் நடந்திருக்காது. கடந்த ஐம்பது ஆண்டுகளாகத் தமிழ்நாட்டை மாறிமாறி ஆட்சிசெய்த திமுகவும் அதிமுகவும் செய்திருக்கும் சாதனை இதுதான்.

தமிழக காவல்துறை அப்பட்டமாக நீதிமன்றத்தை அவமதித்திருக்கிறது. இதை நீதிமன்றம் அறிந்திருக்கும்.எனவே வழக்கு தொடுத்தவரே மீண்டும் வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கவேண்டும் எனக் காத்திருக்காமல் உயர்நீதிமன்றம் தானே முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடைமுறையைத் துவக்கவேண்டும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் சாதி அடிப்படையிலான பாகுபாட்டை ஏற்கவில்லை. தீண்டாமையைக் கடைபிடிப்பது குற்றமென சட்டம் போட்டிருக்கிறோம். ஆனால் அரசாங்கமே சாதிக்கொரு மயானம் என்று உருவாக்குகிறது. அரசாங்கமே தனித்தனி மயானப் பாதைகளை அமைக்கிறது. இது அரசியல் சட்டத்துக்கு எதிரானது இல்லையா? அரசாங்கமே தீண்டாமையைக் கடைபிடிப்பது சட்டவிரோதமில்லையா? இதை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்துமா?

அண்டை மாநிலமான கர்னாடகாவில் இப்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. அங்கே சிறப்பானதொரு நடவடிக்கையை எடுத்திருக்கிறார்கள். கர்னாடகாவில் இருக்கும் மயானங்களை அரசே கையகப்படுத்தி கடந்த 2014 ஆம் ஆண்டில் அரசாணை வெளியிட்டிருக்கிறார்கள். இனி ஒரு கிராமத்துக்கு ஒரு மயானம்தான் என அறிவித்துவிட்டார்கள். காங்கிரசுக்கு இருக்கும் சமத்துவ உணர்வு இங்கே ஆள்கிறவர்களுக்கும் இல்லை ஆண்டவர்களுக்கும் இல்லை. தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியை அமைப்போம் என்கிறார். அப்படி ஆட்சி அமைத்தால் கர்னாடகாவைப்போல இங்கும் பொது மயானங்களை அமைப்போம் என அவர் அறிவிக்கவேண்டும்.

கர்னாடக அரசு இன்னொரு காரியத்தையும் செய்திருக்கிறது. பல்வேறு நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான மயான நிலங்களை மீட்டிருக்கிறது. தமிழ்நாட்டிலும் அப்படி செய்யவேண்டும். கிராமம்தோறும் குடியிருக்க பட்டா கேட்டு ஆயிரக்கணக்கானவர்கள் மனு போட்டிருக்கிறார்கள். வீடுகட்ட நிலம் இல்லை எனக் கைவிரிக்கும் தமிழக அரசைக் கேட்கிறேன், சாதிக்கு ஒரு மயானத்தை ஒதுக்குவதற்குமட்டும் நிலம் இருக்கிறதா? பொது மயானம் அமைத்தால் பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலம் அரசாங்கத்துக்குக் கிடைக்குமில்லையா? அதைப் பயனுள்ள காரியங்களுக்குப் பயன்படுத்தலாமில்லையா? நில ஆக்கிரமிப்பாளர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறும் தமிழக அரசு மயான ஆக்கிரமிப்பாளர்கள்மீது நடவடிக்கை எடுக்கவேண்டாமா?

பொது மயானம் வேண்டும் என்ற கோரிக்கையை நாம் இப்போது புதிதாகக் கேட்கவில்லை. 2010 ஆம் ஆண்டில் தமிழக சட்டப்பேரவையிலேயே இந்தக் கோரிக்கையை எழுப்பியிருக்கிறோம். ' சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் சென்னை முதலான பெரு நகரங்களில் மின்மயானங்கள் அமைக்கப்படுவதாக அன்றைய திமுக அரசு அறிவித்தபோது, " நகரங்களைவிடவும் கிராமப்புறங்களில்தான் மின் மயானங்களின் தேவை அதிகம் உள்ளது. இது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது மட்டுமல்ல சாதிப் பாகுபாடுகளைக் களைவதற்கும் உதவக்கூடியது. எனவே கிராமம்தோறும் பொதுவான மின்மயானங்களை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்" என நான் வலியுறுத்தினேன்.

இப்போது தேர்தல் நெருங்குகிறது, தலித் மக்களின் ஓட்டுகளை வாங்கும் நோக்கத்திலாவது பொது மயானங்களை அமைத்துத்தர தமிழக அரசு முன்வரவேண்டும் என வலியுறுத்துகிறேன்.

(திருநாள்கொண்டசேரியில் தலித் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டித்து 12.01.2016 அன்று காலை விசிக சார்பில் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆற்றிய உரையின் சுருக்கம்)

No comments:

Post a Comment