Showing posts with label cell phone. Show all posts
Showing posts with label cell phone. Show all posts

Thursday, June 2, 2011

‘செல்’ லும் கொல்லும்?




செல் போன்களில் எடுக்கப்படும் ஆபாச காட்சிகள் மாணவர்களிடையே எம்.எம்.எஸ் மூலம் பரப்பப்படுவது குறித்து அடிக்கடி நாளேடுகளில் வெளியாகும் செய்திகளால் பதற்றமடைந்திருந்த பெற்றோர்கள் இப்போது கொஞ்சம் ஆறுதல் அடைந்திருக்கிறார்கள்.பள்ளிகளுக்கு செல்போனை எடுத்துவரக் கூடாது எனத் தமிழக அரசு விதித்துள்ள தடை பலரிடமிருந்தும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.சமீபமாகத் தமிழக அரசு பிறப்பித்த ஆணைகளில் எதிர்க் கட்சிகளின் விமர்சனத்துக்கு ஆளாகாதது இதுமட்டும்தான் என்று சொல்லலாம். எஸ்.எம்.எஸ், கேம்ஸ், பாட்டு,காமிரா போன்ற செல்போனின் கூடுதல் வசதிகளால் மாணவர்களின் கவனம் திசை திருப்பப்பட்டு அவர்கள் சீரழிவதாகக் கவலைப்பட்டவர்கள் இப்போது நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள்.இந்த சிறப்பான ஆணையை வெளியிட்டதற்காகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்களை மனமாரப் பாராட்டுவோம்.
 சமீபத்தில் கர்நாடகாவிலும்கூட இதேபோன்ற தடை நடைமுறைக்கு வந்துள்ளது. அங்கு மாணவர்கள் மட்டுமல்லாது ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களும்கூடப் பள்ளிகளுக்கு செல்போன்களைக் கொண்டுவரக் கூடாது என்று உத்தரவு போட்டிருக்கிறார்கள்.மீறினால் அவை பறிமுதல் செய்யப்படும் என்றும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் மட்டுமல்ல அமெரிக்காவில்கூடப் பள்ளிகளில் இவ்விதமான தடை உள்ளது. அங்கே பள்ளி நுழைவாயிலில் ‘மெட்டல் டிடெக்டரை’ வைத்து செல்போன்களைக் கைப்பற்றுகிறார்கள். செல்போன்கள் மட்டுமின்றி ஐ போடுகள் உள்ளிட்ட அனைத்துவிதமான எலெக்ட்ரானிக் சாதனங்களும் பள்ளிகளில் தடை செய்யப்பட்டுள்ளன.இந்தக் கட்டுப்பாட்டை இரண்டுமுறை மீறினால் செல்போன் பறிமுதல் செய்யப்படும் என்கிறது நியூயார்க் மாகாணச் சட்டம்.முதலில் இதற்கு அங்கே கடும் எதிர்ப்பு வந்தது,பின்னர் அடங்கிவிட்டது.
இந்தியாவில் செல்போன் உபயோகம் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருவதை நாம் அறிவோம். 2006 மே மாதத்தில் 10 கோடியாக இருந்த செல்போன் இணைப்பு செப்டம்பர் 2007இல் 20 கோடியைத் தாண்டிவிட்டது. 2010ஆம் ஆண்டில் இது ஐம்பது கோடியை எட்டிவிடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. புதிதாக செல்போன் இணைப்புப் பெறுபவர்களில் பெரும்பாலோர் இளைஞர்கள், மாணவர்கள் ஆவார்கள். ஆகஸ்ட் 2007 புள்ளிவிவரப்படித் தமிழ்நாட்டில் உள்ள செல்போன் இணைப்பு ஒரு கோடியே முப்பத்து இரண்டு லட்சமாகும். இது தவிர சென்னை மாநகர எல்லைக்குள் மட்டும் சுமார் 54 லட்சம் இணைப்புகள் உள்ளன.
செல்போன்களில் காமிரா வசதி ஏற்படுத்தப்படட பிறகு அதனால் புதிது புதிதாக பிரச்சினைகள் முளைக்கத் தொடங்கிவிட்டன. மெமரி கார்டில் ‘ஆபாசப் படங்களை’ப் பதிவுசெய்து மாணவர்களுக்கு விற்பது ஒரு தொழிலாகவே உருவெடுத்துவருவதைச் செய்திகள் புலப்படுத்துகின்றன. சமீபத்தில் பண்ருட்டி என்ற சிறு நகரத்தில் இந்த வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த ஒரு கும்பல் பிடிபட்டது.மாநகரங்களில் மட்டுமின்றி இந்த சமூகத் தீங்கு சிற்றூர்களுக்கும் பரவிவருவதையே இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.
செல்போனைப் பயன்படுத்துவதால் ஒழுக்கரீதியான பிரச்சினை மட்டும்தான் உருவாகிறது என்று எண்ணுவது தவறு. அது உடல் நலத்தைப் பாதிக்கும் என்றும் பல்வேறு ஆய்வுகள் புலப்படுத்தியுள்ளன. உலக சுகாதார நிறுவனம் இது குறித்து ஏழு ஆண்டுகளுக்கு முன்பே சில வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. செல்போன்களின் அடிப்படையாக இருக்கும் ரேடியோ அலைகள் எக்ஸ்ரே கதிர்களைப் போலவோ அல்லது காமா கதிர்களைப் போலவோ தீங்கு விளைவிப்பவை அல்ல என்று கூறியுள்ள அந்த நிறுவனம் 1997 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட ஆய்வு ஒன்றில் ரேடியோ அலைகளால் புற்று நோய் வரும் வாய்ப்பு அதிகரிப்பதாகத் தெரியவந்ததாகவும் அதன்மீது கூடுதல் ஆராய்ச்சிகள் நடந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.தொடர்ந்து செல்போன்களை உபயோகிப்பதால் மூளை செயல்பாட்டிலும் தூங்கும் முறைகளிலும் மாற்றம் ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரித்திருப்பதையும் உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியிருக்கிறது.செல்போனின் அபாயம் முழுதாகத் தெரியாத போதிலும்கூட “எலக்ட்ரோ மேக்னடிக்” கதிர்வீச்சால் உடல்நலத்துக்கு ஏற்படும் தீங்குகள் குறித்து முன்னெச்சரிக்கையாகச் சில நெறிகளை உருவாக்கிக் கொள்ளுமாறு உலக நாடுகளை அது கேட்டுக்கொண்டிருக்கிறது. அதனடிப்படையில் கனடா, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகள், ஜப்பான், சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் நெறிமுறைகளை உருவாக்கியுள்ளன. ஆனால் இதுவரை இந்தியாவில் அப்படி எந்தவொரு நெறிமுறையும் உருவாக்கப்படவில்லை. இப்போதுதான் டெலிகாம் துறைக்கு உட்பட்ட “டெலிகம்யூனிகேஷன் என்ஜினியரிங் சென்டர்” (ஜிணிசி) வழிகாட்டு நெறிமுறைகளுக்கான ஒரு வரைவைத் தயாரித்திருக்கிறது.
செல்போன்களை விடவும் செல்போன் டவர்கள்தான் மிகவும் ஆபத்தானவை.செல்போன்களிலிருந்து வெளிப்படும் ரேடியோ அலைகளைவிட இந்த டவர்களிலிருந்து வெளிப்படும் அலைகள் அதிக சக்திவாய்ந்தவை.அதனால்தான் ‘மேக்ரோ ஆன்டெனா’ என அழைக்கப்படும் அந்த டவர்களைப் பள்ளிகள், மருத்துவமனைகள் ஆகியவற்றுக்கு அருகில் அமைக்கக் கூடாது; குடியிருப்புப் பகுதிகளில் அமைக்கக் கூடாது; அந்த டவர்களுக்கு அருகில் அதற்கான பணியாளர்கள்கூட அதிகநேரம் வேலை செய்ய அனுமதிக்கக் கூடாது எனப் பல்வேறு நிபந்தனைகள் இந்த வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
செல்போன்களை உபயோகிப்பது குறித்தும் அதில் சில யோசனைகள் கூறப்பட்டுள்ளன. பதினாறு வயதுக்கு உட்பட்ட சிறுவர்களின் திசுக்கள் மிகவும் மென்மையாக இருக்கும் என்பதால் மொபைல் போன்களைப் பயன்படுத்துவதால் அது எளிதில் பாதிக்கப்படும். எனவே பதினாறு வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் மொபைல் போனைப் பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும் என்று அந்த வரைவு அறிக்கை தெரிவிக்கிறது.இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ’இண்டிபென்டன்ட் எக்ஸ்பர்ட் குரூப் ஆன் மொபைல் போன்ஸ்’(இஎக்ம்ப்) என்ற குழு தயாரித்தளித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள வழிகாட்டுதல்களிலிருந்து மேற்கண்ட தகவல்களை நமது டெலிகாம் துறையினர் எடுத்தாண்டுள்ளனர்.
.செல்போனைப் பயன்படுத்தும்போது எவ்வளவு எலெக்ட்ரோ மேக்னட்டிக் கதிர்வீச்சு நமது உடலில் உள்வாங்கப்படுகிறது என்பதை எஸ்.ஏ.ஆர் (sஜீமீநீவீயீவீநீ ணீதீsஷீக்ஷீஜீtவீஷீஸீ க்ஷீணீtமீ)என்ற அளவீட்டால் குறிக்கிறார்கள்.ஒரு குறிப்பிட்ட செல்போனின் எஸ்.ஏ.ஆர் அளவு எவ்வளவு என்பதை ஒவ்வொரு மொபைல் போனின் திரையிலும் பதிவுசெய்ய வேண்டும் என்றும் வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அனுமதிக்கப்பட்ட அளவு 2 ஷ்/ளீரீ என்பதாகும்.நாம் பயன்படுத்தும் பெரும்பாலான செல்போன்கள் இந்த அளவுக்கு உட்பட்டே இருக்கின்றன.அதனாலேயெ இந்த செல்போன்கள் பாதுகாப்பானவை எனக் கூறிவிடமுடியாது.ஏனென்றால் செல்போனிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு அதனால் மட்டுமே தீர்மானிக்கப் படுவதில்லை.குறைவான எஸ்.ஏ.ஆர் உள்ள போன்கூட அதிக அளவு கதிர்வீச்சை வெளிப்படுத்த வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
செல்போனை உபயோகிப்பவர்கள் அதிக நேரம் தொடர்ந்து பயன்படுத்தக்கூடாது,நேரடியாக போனைக் காதில் வைத்துப் பேசுவதைவிட ஹெட் போனைப் பயன்படுத்துவது நல்லது என உலக சுகாதார நிறுவனம் கூறியிருக்கிறது.செல்போனில் தொடர்ந்து பேசும்போது உருவாகும் வெப்பம் செவியின் கேட்கும் சக்தியை பாதிக்கும்.சிக்னல் பலவீனமாக இருக்கும்போதும், அறைக்குள்ளிருந்து பேசும்போதும் செல்போனிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு அதிகமாகிறது.எனவே அப்படியான நிலைகளில் செல்போனைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும் எனவும் அது தெரிவித்துள்ளது.செல்போனைப் பயன்படுத்தாத நேரங்களில் ஸ்விட்ச் ஆஃப் செய்துவைப்பது நல்லது எனவும் அந்த அறிக்கை கூறுகிறது.
பேஸ்மேக்கர்,ஹியரிங் எய்டு முதலிய கருவிகளைப் பயன்படுதுபவர்கள் செல்போன்களை அதிகம் பயன்படுத்தக்கூடாது.மருத்துவமனிகலில் செல்போனைப் பயன்படுத்தினால் அங்குள்ள உபகரணங்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் எனவும் அந்த வரைவு அறிக்கையில் கூறியுள்ளனர்.இந்த நெறிமுறைகள் இன்னும் நமது நாட்டில் நடைமுறைக்கு வரவில்லை. அதற்குள்ளாகவே இதற்கு மொபைல் கம்பெனிகள் எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கிவிட்டன.இவற்றை ஏற்க முடியாது என அந்த கம்பெனிகள் கூறிவருகின்றன.
செல்போன்களால் வரும் ஆபத்துகளைப் பார்க்கும்போது பள்ளிகளில் மட்டுமல்லாது பொதுவாகவே சிறுவர்கள் செல்போன், ஐ போட் முதலான எலக்ட்ரானிக் சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும் விதமான கட்டுப்பாடுகளை நமது நாட்டிலும் கொண்டுவருவது நல்லது எனத் தோன்றுகிறது. இது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும். டெலிகாம் என்ஜினியரிங் சென்டரின் வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு செல்போன் கம்பெனிகளின் டவர்கள் அமைக்கப்பட்டுள்ளனவா என்பதைப் பொதுமக்கள் கண்காணிக்க வேண்டும்.குடியிருப்புகளின் மாடிகளிலெல்லாம் இப்போது செல்போன் டவர்கள் நிறைந்துள்ளன.இது மிகவும் ஆபத்தானதாகும்.அவற்றின் கிழே அதிக அளவில்கதிர்வீச்சு காணப்படுகிறது.எனவே அப்படி அமைக்கப்பட்டுள்ள டவர்களை அகற்றிப் பாதுகாப்பான இடங்களில் அவற்றை அமைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செல்போன் டவர்களை மருத்துவமனைகளுக்கு அருகிலும்,பள்ளிகளின் அருகாமையிலும் கண்டிப்பாக அமைக்கக்கூடாது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.நூறு வாட் வரை சக்திகொண்ட இத்தகைய டவர்கள்வெளிப்படுத்தும் ரேடியோ அலைகள் பக்கவாட்டுத் திசையில் அகன்று பரவக்கூடியவை.எனவே அத்தகைய டவர்கள் அமைக்கப்பட்டுள்ள இடங்களைச் சுற்றிலும் பாதுகாப்பாக முள்கம்பி வேலி அமைத்து எச்சரிக்கை செய்யும் விதமாக அறிவிப்புப் பலகையும் வைக்கப்படவேண்டும் என அந்த நிறுவனம் கூறியுள்ளது.
செல்போன்களைத் தடை செய்யும்போது மாணவர்களின் படிப்பு பாழாகிறது,அவர்கள் கெட்டுப் போகிறார்கள் என்பதுபோன்ற காரணங்களை விடுத்து உடல் நலத்தை மையப்படுத்தி அரசு நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்.அப்படிஇந்தப் பிரச்சனையை அணுகினால் செல்போன்களைத் தடை செய்வதைவிடவும் செல்போன் டவர்களை முறைப்படுத்துவதே முதன்மையானது என்பது புரியவரும்.தற்போது நமது நாட்டில் செல்போன் தொழிலில் முதலீடு செய்துள்ள பன்னாட்டு நிறுவனங்கள் தத்தமது நாடுகளில் இத்தகைய நெறிமுறைகளைக் கடைபிடிக்கின்றன.ஆனால் இங்கே மட்டும் எந்தவொரு விதிமுறைக்கும் கட்டுப்பட மறுக்கின்றன.இங்குள்ள மக்களின் உடல் நலம் குறித்து அவர்களுக்கு எப்படி அக்கறை ஏற்படும்?அதை நமது அரசாங்கம்தான் வலியுறுத்தவேண்டும்.
தொழில்நுட்ப வளர்ச்சியின் அனுகூலங்களை மக்களிடம் கொண்டுவந்து சேர்ப்பது நல்லதுதான். ஆனால் அதில் உள்ள அபாயங்கள் குறித்த எச்சரிக்கை அரசுக்குத் தேவை. இப்போதும்கூட கணிசமான அளவுக்கு படிப்பறிவு இல்லாத மக்களைக் கொண்டிருக்கும் நமது நாட்டில் தொழில்நுட்ப வசதிகளின் அனுகூலத்தை மட்டுமின்றி அபாயத்தையும் எடுத்துச் சொல்லவேண்டியது அரசின் கடமை.இன்றுள்ள மொபைல் கம்பெனிகளுக்கு லாபம் மட்டுந்தான் குறிக்கோள். இதில் கவனமாக இருக்க வேண்டியது அரசாங்கம்தான்.
 பள்ளிகளில் செல்போன் தடை என்பது அரசு மேற்கொள்ளும் நடவடிக்கையில்  முதல்படியாக இருக்கட்டும். மக்களின் உடல்நலத்தில் அக்கறை வைத்து செல்போன் நிறுவனங்களை முறைப்படுத்தும் அடுத்தடுத்த நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். பாதுகாபில்லாத இடங்களில் டவர்களை அமைத்துள்ள செல்போன் நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசு முன்வரவேண்டும்.அதற்கான நிர்ப்பந்தத்தை விழிப்புணர்வு கொண்ட மக்கள்தான் ஏற்படுத்த வேண்டும்.

(20.10.2007 அன்று ஜூனியர் விகடனில் எழுதிய கட்டுரை.)