பெண்கள் மீதான வன்முறை குறித்த விவாதங்களின்போது ’ கற்பழிப்பு’ என்ற சொல்லைப் பயன்படுத்துவது பற்றியும் சிலர் முற்போக்காகக் கருத்துகளைக் கூறிவருகின்றனர். கற்பழிப்பு என்ற சொல்லைப் பயன்படுத்தும்போது கற்பு என்ற கருத்தாக்கத்தை நாம் ஏற்றுக்கொள்வதாகிறது, எனவே வன்புணர்ச்சி என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும் என்று அவர்கள் சொல்கிறார்கள். கற்பு என்ற கருத்தாக்கம் பற்றிய விவாதங்கள் பலகாலமாக நடந்துவருகின்றன. கற்பு என்பதை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைப்பது பற்றியும் அலுப்பூட்டும் அளவுக்குப் பேசிவிட்டோம்.
கற்பு என்பதற்கு வேர்ச்சொல் ஆராய்ச்சி செய்யுமளவுக்கு நான் மொழியியல் வல்லுனன் அல்ல. தமிழ்ப் பேரகராதியைத் தேடினால் சிலப்பதிகாரத்துக்குப் பிறகுதான் அந்த சொல் நம் இலக்கியங்களில் புழக்கத்துக்கு வந்திருப்பதாகத் தெரிகிறது.அறக்கற்பு மறக்கற்பு என்பவை குறித்தும்கூட நம் இலக்கியங்கள் பேசியிருக்கின்றன. ஆனால் தற்காலத்தில் அவற்றை நாம் பயன்படுத்துவதில்லை.கல்வியில் தேர்ச்சிகொண்டவனை ‘கற்பன்’ என்று பதிற்றுப் பத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்தப் பொருளிலும் நாம் இப்போது கற்பு என்ற சொல்லைப் பயன்படுத்துவதில்லை.
மனித உரிமை அமைப்பில் பல ஆண்டுகளாக செயல்பட்டவன் என்ற முறையிலும் இதுகுறித்த சட்டங்களை ஓரளவு அறிந்தவன் என்ற முறையிலும் இந்த சொல்லைப் பயன்படுத்துவது குறித்து நான் ஒரு நடைமுறையைப் பின்பற்றிவருகிறேன். ஒரு கொடுமை நடந்திருப்பது குறித்து எழுதும்போது நான் கற்பழிப்பு என்ற சொல்லையே பயன்படுத்துகிறேன். ஏனெனில் அந்தச் சொல்லைப் பயன்படுத்தி ஒரு குற்றத்தைக் குறிப்பிடும்போது அதைக் கேட்பவர்களிடம் ஏற்படும் தாக்கம் வன்புணர்ச்சி/ பாலியல் வல்லுறவு போன்ற சொற்களைப் பயன்படுத்தி அதை விவரிக்கும்போது ஏற்படுவதில்லை.வன்புணர்ச்சி /பாலியல் வல்லுறவு என்ற சொற்கள் நேரடியாக பெண் குறிக்குள் ஆண் குறியை நுழைக்கும் செயல்பாட்டை மட்டுமே குறிப்பிடுகின்றன. அப்படிச் செய்தால் மட்டும்தான் ரேப் என்று சட்டமும் சொல்கிறது. ஒற்றைப் பரிமாணம் கொண்ட அந்த விளக்கம் பெண்ணின் உறுப்புக்குள் ஒரு போலிஸ்காரன் தனது லட்டியைச் செருகுவதை ரேப் என்று ஒப்புக்கொள்வதில்லை. வக்கிரம் பிடித்த ஜென்மங்கள் பெண் உறுப்பில் பாட்டிலைச் செருகுகிறார்கள், கம்பியைச் செருகுகிறார்கள். கையை நுழைக்கிறார்கள். அதுவெல்லாம் இப்போதிருக்கும் சட்டத்தின்படி ரேப் என்பதில் அடங்காது. வன்புணர்ச்சி/பாலியல் வல்லுறவு என்ற சொற்களும் இந்தச் செயல்களை விளக்காது. இதனால்தான் இப்போது ரேப் என்ற சொல்லுக்கான விளக்கத்தை இந்தக் கொடூரச் செயல்களையெல்லாம் உள்ளடக்கும்விதமாக விரிவுபடுத்தவேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் அரசாங்கத்தை வலியுறுத்திவருகின்றனர்.
கற்பழிப்பு என்று சொல்லும்போது அதைக் கேட்கும் ஒருவருக்கு கற்பு என்ற கலாச்சார சுமைகொண்ட கருத்தாக்கம் நினைவுக்கு வருவதில்லை, மாறாக சீரழிக்கப்பட்ட ஒரு பெண்ணின் பிம்பம்தான் நினைவில் வரும். ஆனால் வன்புணர்ச்சி / பாலியல் வல்லுறவு என்னும்போதோ அந்தச் செயல்தான் நமக்கு நினைவில்வரும். அது அவ்வளவாக நம்மில் கோபத்தைத் தூண்டுவதில்லை. கற்பு என்ற சொல் நம்மிடம் இருந்தாலும் ஒரு பெண்ணின் சம்மதமில்லாமல் அவளைப் பலவந்தமாகப் புணர்வதைக் குறிக்க நேரடியான தமிழ்ச் சொல் எதுவும் இப்போதைக்குப் புழக்கத்தில் இல்லை. ரேப் என்பதன் மொழிபெயர்ப்பாகத்தான் நாம் கற்பழிப்பு என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோமே தவிர கற்பு என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் அல்ல.
இவை என் கருத்துகள். இதுகுறித்துச் சிறந்த விளக்கத்தை யாரேனும் முன்வைத்தால் அதை நான் ஏற்றுக்கொள்ளத் தயாராகவே இருக்கிறேன்.