Friday, December 21, 2012

தொடரும் கற்பழிப்புகள் : தேவை சமூக விழிப்புணர்வு


தூத்துக்குடி மாவட்டம் கிளாக்குளத்தைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவி புனிதா படுகொலை செய்யப்பட்டிருப்பது, டெல்லியில் ஓடும் பேருந்தில் நடந்த பாலியல் வல்லுறவு ஆகியவை குறித்து ஹலோ எஃப் எம் ரேடியோவுக்கு இன்று(22.12.2012) காலை நான் அளித்த பேட்டி : 

இத்தகைய குற்றங்களைத் தடுப்பதற்கு அரசாங்கம் பல்வேறு சட்டங்களை உருவாக்கியிருக்கிறது. ஆனால் அவற்றை நடைமுறைப் படுத்துகிற காவல்துறையும் நீதித்துறையும் அதில் போதிய கவனம் செலுத்தவில்லை என்பதைத்தான் தொடர்ந்து அதிகரித்துவரும் குற்றங்கள் காட்டுகின்றன.சட்டங்களை இயற்றுவதால் மட்டும் இத்தகைய குற்றங்களைத் தடுத்துவிட முடியாது. பெண்களின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை சமூகத்தில் ஏற்படுத்தவேண்டும். டெல்லி சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கிரிமினல் பின்னணி கொண்டவர்கள் அல்ல. அவர்களை இத்தைகைய செயலில் ஈடுபடச் செய்தது எது எனப் பார்க்கவேண்டும். நமது திரைப்படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகளை அனுமதிக்காமல் கட்டுப்படுத்தவேண்டும். இப்போது மாணவர்களுக்கு இலவசமாக மடிக்கணினி வழங்கப்படுகிறது. அவற்றைப் பெறுகிற பலர் இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள். அங்கு ஏராளமான ஆபாச இணைய தளங்கள் உள்ளன. அவற்றைப் பார்ப்பதால் அவர்களுக்கு வக்கிர உணர்வு அதிகரிக்கிறது.

நான் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தபோது சீனாவில் செய்திருப்பதுபோல ஆபாச இணைய தளங்களைக் கட்டுப்படுத்த இந்திய அரசும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினேன். தற்போது இணைய  தளக் குற்றங்கள் செய்பவர்களையும் குண்டர் சட்டத்தில் கைதுசெய்யும் விதமாக அந்த சட்டத்தில்  திருத்தம் செய்யப் போவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இதைச் செய்ய முனைபவர்கள் ஆபாச இணைய தளங்களைக் கட்டுப்படுத்த ஏன்  நடவடிக்கை எடுக்கக்கூடாது?

கடந்தமுறை ஆட்சியிலிருந்தபோது எஸ்.சி எஸ்.டி பிரிவினர் தொடர்பான சட்டங்கள் மற்றும் பெண்கள் தொடர்பான சட்டங்கள் ஆகியவை குறித்து அரசு அதிகாரிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் திட்டத்தை இன்றைய முதல்வர் செயல்படுத்தினார். பெண்கள் தொடர்பான அந்தத் திட்டத்துக்கு முன்னாள் காவல்துறை அதிகாரி திலகவதி அவர்கள்தான் பொறுப்பாக இருந்தார். அந்தத் திட்டத்தை மீண்டும் தமிழக அரசு செயலபடுத்தவேண்டும்.

பள்ளிகளில் பாடத் திட்டத்துக்கு அப்பால் பெண்கள் உள்ளிட்ட நலிந்த பிரிவினரின் உரிமைகள் தொடர்பாக மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு ஐம்பது சதவீதம் இட ஒதுக்கீடு கொடுத்தால் மட்டும் போதாது அங்கும்  இத்தகைய பிரச்சாரம் செய்யப்படவேண்டும்.

1 comment:

  1. நீங்களே `கற்பழிப்பு` என்ற பதத்தைப் பாவிக்கலாமா..

    ReplyDelete