Sunday, March 30, 2014

தேர்தல் பிரச்சார காலத்தைக் குறைக்கலாமா?



நேற்று இரவு(30.3.2014) பிரச்சாரம் முடிந்து சாப்பிடும் நேரத்தில் தேர்தல்முறை குறித்து விவாதம் வந்தது. எங்கள் தலைவர் சில கருத்துகளை முன்வைத்தார்: "தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து எத்தனையோ ஆலோசனைகள் சொல்லப்பட்டுவருகின்றன. தேர்தலில் நடக்கும் முறைகேடுகள், வன்முறை எல்லாவற்றுக்குமே ஊற்றுக்கண் தேர்தல் பிரச்சாரம்தான். எவ்வளவுதான் தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகளை விதித்தாலும் தேர்தல் பிரச்சார காலத்தைக் குறைக்கவில்லையென்றால் தேர்தல் செலவைக் கட்டுப்படுத்தமுடியாது." என்றார். அமெரிக்காவில் நடப்பதுபோல பிரச்சாரத்தை மாற்றி அமைக்க வழி இருக்கிறதா என்றும் விவாதித்தோம். 


எனக்குத் தோன்றும் யோசனைகள்: 


1. வேட்புமனு தாக்கல் முடிந்து வேட்பாளர்கள் பட்டியல் இறுதிசெய்து அறிவிக்கப்பட்ட பிறகே பிரச்சாரம் செய்ய அனுமதிக்கவேண்டும். 


2. சட்டமன்றத் தேர்தலுக்கு இரண்டு நாட்கள் மக்களவைத் தேர்தலுக்கு ஒருவாரம் பிரச்சார காலம் இருந்தால் போதும். 


3. காட்சி/அச்சு ஊடகங்களை பிரச்சாரத்துக்கு அதிகம் பயன்படுத்தலாம்.


4. மக்களவை தொலைக்காட்சி சேனலை முதன்மையான பிரச்சார ஊடகமாகப் பயன்படுத்தவேண்டும். 


5. போட்டியிடும் வேட்பாளர்கள் தமது பிரச்சாரத்தை பத்து நிமிடப் படமாகத் தயாரித்து தேர்தல் ஆணையத்திடம் வழங்கவேண்டும். சென்சாருக்குப் பிறகு அதை மக்களவை டிவியில் ஒளிபரப்பவேண்டும். உள்ளூர் சேனல்களையும் பயன்படுத்தலாம். 


6. மக்களவை உறுப்பினருக்கான தேர்தல் செலவு இருபத்தைந்து லட்சமாகக் குறைக்கப்படவேண்டும். 


7. தேர்தல் பிரச்சாரத்தில் ஃப்ளக்ஸ் போர்டுகள் வைப்பதையும் , தோரணங்கள் கட்டுவதையும் முற்றாகத் தடைசெய்யவேண்டும். 

Saturday, March 29, 2014

ஆயிரம் வாக்குகளைவிடவும் மதிப்பு வாய்ந்தது



இன்று திருவள்ளூரில் பாஸ்டர் திரு. மாத்யூ விக்டர் என்பவரை சந்தித்து ஆதரவு கேட்பதற்காகச் சென்றிருந்தோம். அவரது வீட்டின் கூடத்துச் சுவரில் நிறைய ஓவியங்கள் ஒட்டப்பட்டிருந்தன. இவையெல்லாம் யார் வரைந்தவை எனக் கேட்டேன். தனது மகள் வரைந்தவை எனப் பெருமையோடு ஒரு சிறுமியை அறிமுகப்படுத்தினார். அவரது கையைக் குலுக்கிப் பாராட்டினேன். உடனே அந்த சிறுமி உள்ளே ஓடிச்சென்று பூக்கள் நிரம்பிய சிறு கூடை ஒன்றை எடுத்துவந்து எனக்குப் பரிசளித்தார். அதுவும் கலைநயம் மிக்கதாக இருந்தது. அதையும் அவரே தயாரித்திருந்தார். " உங்களுக்கு என்ன படிக்க விருப்பம்? " எனக் கேட்டேன். " டாக்டர்" என்றார். " சாந்தம் தவழும் உங்கள்  முகத்தைப் பார்த்தாலே பாதி வியாதி குணமாகிவிடும்" என்று வாழ்த்தினேன். 


இன்றைய நாளை அர்த்தமுள்ளதாக்கிய அந்தச் சிறுமிக்கு நன்றி! ' குழந்தைகளால் ஆளப்படும் நாடு' குறித்து அண்மையில் நான் எழுதிய கவிதை நினைவுக்கு வந்தது. 


தேர்தல் போல சுயமரியாதைக்குச் சவால் விடும் ஒன்று வேறெதுவும் இருக்க முடியாது. அங்கு எந்த அளவுக்கு நீங்கள் சுயமரியாதையை விட்டுக்கொடுக்கிறீர்களோ அந்த அளவுக்கு மற்றவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். ' பொது வாழ்க்கையில் மானம் பார்க்கக்கூடாது' என்பதைப் புரிந்திருந்தாலும்கூட இந்த நடைமுறை வலிக்கவே செய்கிறது. இன்றைய ரணத்துக்கு இந்தக் குழந்தையின் அன்பு மருந்திட்டது! தேர்தல் முடியும் வரை தினம் இப்படி ஒரு குழந்தையை சந்தித்தால் போதும். இதுவே இன்றைய பிரார்த்தனை! 


Friday, March 28, 2014

நிஸார் கப்பானியின் கவிதை 4 தமிழில் : ரவிக்குமார்


ஒரு மனிதன் காதல் வயப்படும்போது
எப்படி பழைய சொற்களைப் பயன்படுத்தமுடியும்?
ஒருவன்மீது
வேட்கைகொண்ட பெண்  
மொழியியலாளர்களோடும் 
இலக்கண ஆசிரியர்களோடும் 
கிடக்கமுடியுமா?

என் காதலியிடம் நான் 
எதுவும் சொல்லவில்லை
காதலின் அடைமொழிகள் அனைத்தையும்
ஒரு பெட்டியில் நிரப்பினேன் 
மொழிகள் எல்லாவற்றிலுமிருந்தும்
வெளியேறினேன்

நிஸார் கப்பானியின் கவிதை 3 தமிழில்: ரவிக்குமார்


விளக்கைவிட முக்கியமானது வெளிச்சம்

ஏட்டைவிட முக்கியமானது கவிதை

உதடுகளைவிடவும் முக்கியமானது முத்தம்

நம் இருவரைவிடவும் முக்கியமானவை 

நானுனக்கு எழுதிய கடிதங்கள்

உனது அழகை

எனது பைத்தியத்தை

ஊரார் அறிய அவைதான்

ஆவணங்கள்

நிஸார் கப்பானியின் கவிதை தமிழில்: ரவிக்குமார்


உன்னைப்பற்றி அவர்களிடம் சொன்னதேயில்லை
ஆனால் 
என் கண்களுக்குள் நீ நீராடுவதைப் பார்த்திருக்கிறார்கள். 
உன்னைப்பற்றி அவர்களிடம் சொன்னதேயில்லை 
ஆனால் 
என் எழுத்துகளில் உன்னைப் பார்த்திருக்கிறார்கள் 

நேசத்தின் நறுமணத்தை
ஒளித்துவைக்கமுடியாது

நிஸார் கப்பானியின் கவிதை தமிழில்: ரவிக்குமார்



நான் சொற்களால் உலகை வெல்வேன்
தாய்மொழியை
பெயர்ச்சொல்லை வினைச்சொல்லை
வாக்கியத்தை
துடைத்தெறிவேன் உற்பவங்களை
நீரின் சங்கீதத்தை நெருப்பின் செய்தியைக் கொண்ட
புதியதொரு மொழியால் 
எதிர்வரும் யுகத்துக்கு ஒளியைக் கொடுப்பேன்
காலத்தை உன் கண்ணில் நிறுத்துவேன் 
கணத்தை காலத்திலிருந்து பிரிக்கும் கோட்டை அழிப்பேன்

Wednesday, March 26, 2014

புத்துளி'சம்பத் 'நாஞ்சில்' சம்பத் ஆன கதை!

'


நாஞ்சில் சம்பத் என இப்போது அறியப்படும் சம்பத் முன்னர் அவர் பிறந்த ஊரான புத்துளி சம்பத் என்றே அழைக்கபட்டாராம். இந்தத் தகவலை ஆவடி நாசர் இன்று சொன்னார். 

" 1987 ஆம் ஆண்டு சம்பத்தை அழைத்து ஆவடியில் கூட்டம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருந்தோம். அப்போது நானும் அண்ணன் மதுராந்தகம் ஆறுமுகமும் நாஞ்சிலாரைப் பார்ப்பதற்காக அவரது வீட்டுக்குப் போயிருந்தோம். அவருக்கு அப்போது ஒருவர் சிகை திருத்திக்கொண்டிருந்தார். அப்போது அண்ணன் ஆறுமுகம் அவர்கள் என்னை அச்சகத்துக்குப் போய் போஸ்டர் ரெடியாகிவிட்டதா என்று பார் எனச் சொன்னார். அதைக் கேட்ட நாஞ்சிலார் ' என்ன போஸ்டர்? எனக் கேட்க ' புத்துளி சம்பத் கூட்டம் போடுகிறோம் என அவர் பாதில் சொன்னார். ' அவன் நம்ம ஊர் பையனாச்சே! நல்லா பேசுவான். அவன் பேரை நாஞ்சில் சம்பத்னு போடுங்க. அவன்கிட்ட நான் தான் அப்படி போடச்சொன்னேன்னு சொல்லுங்க' என்றார் நாஞ்சிலார். ஏற்கனவே போஸ்டர் அச்சாகிவிட்டது. என்றபோதிலும் நாஞ்சில் சம்பத் என்று போட்டு மூன்று பிட் போஸ்டத் அடித்து அமர்க்களமாக அந்த கூட்டத்தை நடத்தினோம். அதிலிருந்து அந்த பெயரே நிலைத்துவிட்டது" என்று அந்தக் கதையை சொன்னார் நாசர். 

இன்று ஆவடியில் நாஞ்சில் சம்பத் வந்து அதிமுகவுக்குப் பிரச்சாரம் செய்துவிட்டுப் போயிருக்கிறார். அந்த கூட்டத்தில் இருநூறுபேர்கூட இல்லையாம்!