Monday, January 27, 2014

டைம்ஸ் நவ் டிவியில் ராகுலின் நேர்காணல்



நேற்றிரவு டைம்ஸ் நவ் டிவியில் ஒளிபரப்பான ராகுலின் நேர்காணல் எதிர்காலப் பிரதமராகக் கட்டியெழுப்பப்படும் ராகுலின் பிம்பத்துக்கு வலுசேர்ப்பதாக அமையவில்லை. எந்தக் கேள்வி கேட்டாலும் அவர் கிளிப்பிள்ளைபோல ஆர்டிஐ, பெண்களுக்கு அதிகாரம், இளைஞர்களுக்கு அதிகாரம், லோக்பால்- என சில வார்த்தைகளையே திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அவர் பேசுவதைப் பார்க்கும்போது பரிதாப உணர்வே மேலிட்டது. 


அர்னாப் கோஸ்வாமியின் கேள்விகள் மிகவும் சாதாரணமாக, மேலோட்டமாக இருந்தன. ஆனால் அந்தக் கேள்விகளையும்கூட ஆழமான பொருளை நோக்கி இழுத்துச் சென்றிருக்கமுடியும். ஆனால் அதற்கான ஆற்றலும் அறிவும் ராகுலிடம் இருப்பதாகத் தெரியவில்லை. 


நமது அரசியல் கட்டமைப்பிலும்,நடைமுறையிலும் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டுமென அவர் விரும்புகிறார் எனத் தெரிகிறது.அதற்கான பரிதவிப்பை மட்டுமே அவரிடம் நாம் பார்க்கமுடிகிறது.


கருத்தியல் தெளிவில்லாமல் இப்படியான பரிதவிப்புமட்டுமே கொண்டவர்கள் காலப்போக்கில் வலதுசாரிகளாக வீழ்ச்சியடைவதைத் தவிர்க்கமுடியாது. அதற்கான அறிகுறிகள் ராகுலிடம் தென்படுகின்றன. 


ராகுலின் நேர்காணலை கேலிசெய்துஒதுக்கிவிட்டுப் போக நான் விரும்பவில்லை. அவர் குறிப்பிட்ட சில பிரச்சனைகள் முக்கியமானவை:


1. பாஜக அதிகாரத்தை மையப்படுத்த விரும்புகிறது, ஆனால் அதைப் பரவலாக்குவதே முக்கியம்.

2. இந்த நாட்டை வழிநடத்த ஒரு தலைவரை முன்னிறுத்துவது அதிகாரக் குவிப்புக்கே வழிவகுக்கும்.

3. பெண்களுக்கு அதிகாரம் வழங்கப்படாதவரை நாடு முன்னேற முடியாது. 

4. நமது அரசியல் அமைப்பு மூடுண்டதாக இருக்கிறது.அதில் திறப்புகளை ஏற்படுத்தவேண்டும். 


இதற்கெல்லாம் தீர்வுகளை காங்கிரஸ் கட்சியும் ராகுலும் வழங்கவேண்டும் என நாம் எதிர்பார்க்கக்கூடாது. நாம் இந்தக் கேள்விகளைப் பரிசீலித்துத் தீர்வுகளை முன்மொழியவேண்டும்

Sunday, January 26, 2014

எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணனைப் பார்த்தேன்



இன்று(26.1.2014) பிற்பகல் ராமச்சந்திரா மருத்துவமனைக்குச் சென்று அங்கு சிகிச்சைபெற்றுவரும் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் அவர்களைப் பார்த்தேன். கடந்த வாரம் பேராசிரியர் பாரதி அவர்கள் தி இந்து தமிழ் நாளேட்டில் அவரைப் பற்றி எழுதியிருந்த கட்டுரையைப் படித்துவிட்டுப் பேராசிரியர் கல்யாணி எனக்கு ஃபோன் பண்ணினார். மிகவும் நலிவுற்ற நிலையில் ராஜம் கிருஷ்ணன் மருத்துவமனையில் இருப்பதைப் பற்றி என்னிடம் வருத்தத்தோடு சொன்னார். கல்யாணிக்கு ராஜம் கிருஷ்ணனின் எழுத்தைப் பற்றித் தெரியாது. நீதிபதி சந்துரு அவர்களின் துணைவியார் எழுதிய கட்டுரை என்பதால் ஏற்பட்ட ஆர்வம். 26 ஆம் தேதி திருமணம் ஒன்றுக்காக சென்னை செல்லவேண்டியிருந்ததால் அன்று ராஜம் கிருஷ்ணனைப் பார்ப்பதாகத் திட்டமிட்டுக்கொண்டோம். அதன்படி இன்று அதிகாலை புதுவையிலிருந்து புறப்பட்டு திண்டிவனத்தில் கல்யாணியை அழைத்துக்கொண்டு சென்னை போனேன். திருமணத்தை முடித்துவிட்டு மருத்துவமனைக்குச் செல்லும்போது சுமார் மூன்று மணி ஆகிவிட்டது. அங்கு பணியாற்றும் தம்பி சரவணனை ஃபோன் பண்ணி வரச்சொன்னேன். பொது வார்டில் சேர்க்கப்பட்டிருந்த ராஜம் கிருஷ்ணன் அவர்களைக் கண்டுபிடிப்பது எங்களுக்கு சிரமமாக இருக்கவில்லை. வார்டில் இருந்த நர்ஸ் ஒருவர் எங்களை அவரது படுக்கைக்கு அருகில் அழைத்துச் சென்றார். துணியாலான ஒரு பந்தைப்போல அவர் படுக்கையில் கிடந்தார். முகம் மட்டும் களையோடு இருந்தது. நாங்கள் எங்களை அறிமுகபடுத்திக்கொண்டோம். ஆனால் அதை அவர் புரிந்துகொண்டதுபோலத் தெரியவில்லை. ஒரு வாக்கியத்தை நாங்கள் பேசி முடித்ததும்  நாங்கள் பேசியதன் கடைசி வார்த்தையை மட்டும் அவர் திருப்பிச் சொன்னார். நர்ஸிடம் அவரது உடல்நிலை குறித்து விசாரித்தேன். கால்கள் செயலிழந்துவிட்டன. 

தூக்கிச் சென்றுதான் குளிக்க வைக்கிறார்கள். திட உணவு சாப்பிட முடிகிறது. அந்த மருத்துவமனையில் பணியாற்றும் ஒருவர்தான் அவரைப் பராமரிக்கிறார் என்று சொன்ன நர்ஸ் அவரால் படிக்க முடியும் என்றார். கல்யாணி அவரைப் பற்றிய கட்டுரை வெளியாகியிருந்த தி இந்து நாளேட்டைத் தனது கைப் பையில் தேடினார். பலவிதமான நாளேடுகளும் இருந்தன. அந்த நாளேடு மட்டும் இல்லை. அது கிடைக்காததால் திகசி எழுதிய புத்தகம் ஒன்றை எடுத்து அவரிடம் கொடுத்தார். கண்ணாடியில்லாமல் கண்களுக்கு நெருக்கமாக வைத்து அதை ராஜம் கிருஷ்ணன் படிக்க முயற்சித்தார். அவரால் படிக்க முடிகிறதா என்பதை அவரது முகபாவத்திலிருந்து தெரிந்துகொள்ளமுடியவில்லை. அந்த நூலை அவரிடமே விட்டுவிட்டு நாங்கள் புறப்பட்டோம். 


ராஜம் கிருஷ்ணன் சாகித்ய அகாதமி விருது உட்படப் பல விருதுகளை வாங்கியவர். சில ஆண்டுகளுக்கு முன்னர் அவரது நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவருக்கு மூன்று லட்ச ரூபாய் பரிவுத் தொகைவழங்கப்பட்டது. தனது கணவர் இறந்ததற்குப் பிறகு முதியோர் இல்லத்தில் தங்கியிருந்தார் என அறிந்தேன்.  அவர் எழுதிய ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை தமிழ்ப் புத்தகாலயம் தான் வெளியிட்டிருக்கிறது. அந்த ராஉஅல்டி தொகை மட்டுமேகூட அவர் கௌரவமாக வாழ்வதற்குப் போதுமானதாக இருந்திருக்கும். 


அவரைப் பார்த்தபோது நோயைவிடக் கொடுமையானது முதுமை என்று நினைத்துக்கொண்டேன். அவருக்கு 89 வயதாகிறது. அந்த வயதுடைய பலர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் அது பொது விதி அல்ல. 


பள்ளி ஒன்றை நடத்தவேண்டும் என்பது என் நெடுநாள் கனவு. ஆனால் அண்மைக்காலமாக முதியோர் இல்லம் ஒன்றை நடத்தவேண்டும் என்ற எண்ணம் என்னுள் மேலோங்கிவருகிறது. ராஜம் கிருஷ்ணனைப் பார்த்தபோது நன்றாக நடமாடிக்கொண்டிருக்கும்போதே நாம் இறந்துவிடவேண்டும் என்ற விருப்பம்தான்  ஏற்பட்டது.

Wednesday, January 22, 2014

தீண்டப்படாத தியாகம்

ஜனவரி 25ஐ மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளாக நினைவுகூர்வது சரியா? 


எந்தவொரு போராட்டத்திலும் முதலில் களப்பலியானவரை நினைவுகூர்வதுதான் வழக்கம். ஆனால் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் அந்த வழக்கம் கடைபிடிக்கப்படவில்லை. அதற்குக் காரணம் சாதி தான். 


இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முதலில் களப்பலியானவர் தலித் சமூகத்தைச் சேர்ந்த நடராசன். போராட்டத்தில் ஈடுபட்டபோது 1938 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி அவர் சென்னையில் கைதுசெய்யப்பட்டு ஏழரை மாதங்கள் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். அங்கு அவர் சித்திரவதை செய்யப்பட்டதால் உடல் நலிவுற்று 1939 ஜனவரி 15 ஆம் நாள் மரணமடைந்தார். 


தியாகத்திலும் தீண்டாமை பார்க்கும் தமிழர்கள் நடராசனின்  மரணத்தை நினைவுகூர்வதில்லை. அவரது பெயரை முதலில் சொல்வதற்குக்கூட மனமற்ற தமிழர்கள் அவருக்குப் பிறகு உயிர்நீத்த தாளமுத்துவின் பெயரை முதலில் சொல்லி அப்புறம்தான் நடராசன் எனக் குறிப்பிடுகிறார்கள். ஏனென்றால் தலித்துகளை அவர்கள் தமிழர்களாகவே கருதுவதில்லை. 

இந்த வரலாறு மொழிப்போராட்டம் குறித்து 9 ஆண்டுகளுக்கு முன்னர் நான் எழுதிய 'தீண்டப்படாத தியாகம் ' என்ற சிறு நூலில் இடம்பெற்றுள்ளது


Monday, January 20, 2014

தீர்ப்பா ? நீதியா?



வீரப்பன் கூட்டாளிகள் எனக் குற்றம் சாட்டப்பட்ட அப்பாவித் தமிழர்கள் நால்வர் உள்ளிட்ட 15 மரணதண்டனைக் கைதிகளின் தண்டனையைக் குறைப்பது பற்றி நாளை (21.1.2014) உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கவிருக்கிறது. தலைமை நீதிபதி திரு சதாசிவம் அவர்களது அமர்வுதான் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தீர்ப்பை வழங்கப்போகிறது. 


கருணைமனுக்களின்மீது முடிவெடுக்க நீண்டகாலம் எடுத்துக்கொள்ளப்பட்டது என்ற காரணத்தின் அடிப்படையிலேயே இந்த வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வாதமும் நிராகரிக்கப்பட்டால் தூக்கிலிடப்படுவது தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. அந்த வழக்கை கவனித்துக்கொண்டிருக்கும் நண்பர் ஜூலியஸ் சற்று முன்னர் என்னிடம் பேசினார். அவருக்குத் தைரியம் சொன்னேன் என்றாலும் இன்னும் எனக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. சிறைக் கொட்டடிகளில் அந்த அப்பாவிகள் இந்த இரவை எப்படிக் கடத்திக்கொண்டிருப்பார்களோ தெரியவில்லை. ஒரு நிமிடம் அவர்களாக நம்மைக் கருதிப்பார்த்தால் அந்தக் கொடுமை நமக்குப் புரியும். 


நாளை நண்பகலுக்குள் தீர்ப்பு வெளியாகிவிடும். எனக்குக் கடவுள் நம்பிக்கையில்லை. ஆனாலும் அவர்களது தண்டனை குறைக்கப்படவேண்டும் என மனதுக்குள் வேண்டிக்கொள்கிறேன். 


தலைமை நீதிபதியாக இருக்கும் திரு சதாசிவம் அவர்கள் இன்னும் சில காலத்தில் ஓய்வுபெறப் போகிறார். அவர் நாளை வழங்கப்போகும் இந்தத் தீர்ப்புதான் ராஜிவ் கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் பேரறிவாளன் உள்ளிட்டவர்களது விதியையும் தீர்மானிக்கப்போகிறது. அவர் வாதங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்குகிறவராக இல்லாமல் நீதி வழங்குபவராக இருக்கவேண்டும். மரணதண்டனையை ஒழிப்பதுகுறித்து அவர் தனது தீர்ப்பில் உறுதியானதொரு கருத்தை வெளியிட்டால் ஒரு தமிழன் என நானும் பெருமிதம் கொள்வேன்.

Tuesday, January 14, 2014

புகழ்பெற்ற தலித் கவிஞர் நாம்தேவ் தாசல் காலமானார்

புகழ்பெற்ற தலித் கவிஞரும் மகராஷ்டிராவில் தலித் பேந்தர்ஸ் இயக்கம் உருவாகக் காரணமாக இருந்தவர்களில் ஒருவருமான நாம்தேவ் தாசல் நேற்று காலமானார் என்ற செய்தியறிந்து துயருற்றேன். எதிர்ப்பின் கோபத்தை மட்டுமல்ல அழகையும் எடுத்துச் சொல்பவை அவரது கவிதைகள். உலகளாவிய எதிர்ப்புக் கவிதை மரபில் இந்திய தலித் கவிதைகளுக்கென ஒரு இடத்தைப் பெற்றுத் தந்தவர் அவர். அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். நான் மொழிபெயர்த்த அவரது கவிதை ஒன்றை இங்கே தருகிறேன்: 


நாம்தேவ் தாசலின் கவிதை


அம்மா! உனது மகன், குழந்தையல்ல

அவன் இந்த யுகத்தின் புரட்சியினுடைய புத்திரன்

அவனால் பார்க்கமுடியும் இந்த அநீதியை, தானே ஒரு 

பாதிக்கப்பட்ட மனிதனாயிருந்து.


அரசாங்க யந்திரத்தை, வாழ்க்கை முறைகளை, உழைப்பின் வலிமையை

நிலக்கரியும், இரும்பும் தரும் சுரங்கங்களை? கிடங்குகளை, தொழிற்சாலைகளை

அங்கே இருக்கும் பாதுகாப்பை.

பணத்துக்கும் உணவுக்கும் கிடைக்கும் உத்திரவாதத்தை.

எனது முகமோ புழுதியில் புதைகிறது

அவை யாவற்றிலுமிருந்து பிரிக்கப்பட்டு.....

பதினெட்டாம் நூற்றாண்டில்

மனிதகுலம் தலைகீழாய்ப் புரட்டிப்போடப்பட்டது.


ஆனால் இன்று அவற்றை நீ அறியமாட்டாய்

உனக்குத்தெரியாது அடிமை

வியாபாரிகளை, அவர்களது நாடுகளை

உனக்குத் தெரியாது


1793ன் ஜனவரி 21ஐ

ஆயிரக்கணக்கான மக்கள் முன்பாக கில்லட்டின் உயர்ந்து

பதினான்காம் லூயி மன்னனின் தலை உருண்டதை

உனக்குத் தெரியாது

வரலாற்றில் நிகழ்ந்த கொடூரமான கொலைகளை


1848ன் புரட்சிகர யுத்தமும்

உனக்குத் தெரியாது.....


பெபூஃபைத் தெரியாது, கொண்டு வந்த 

சுதந்திரஜோதியையும் உனக்குத் தெரியாது.....


இருபதாம் நூற்றாண்டு

உனது மகனுக்குப்

பார்¬வையைத் தந்துள்ளது....


சுரண்டலைத்தெரியும் எனக்கு, என்னை நான்


இழந்ததும் தெரியும்

நான் ஒரு சாத்தானாகிவிட்டேன்.....




Sunday, January 12, 2014

சிறுமி போட்ட கோலம்




மார்கழி மாதத்திலும் வெறிச்சோடிக்கிடக்கும் வாசல்களைப் பார்க்கும்போது இன்றைய தலைமுறைப் பெண்களுக்குக் கோலம் போடத்தெரியுமா  என்று எனக்கு சந்தேகம் வரும் . இத்துடன் இருக்கும் படம் எனது நண்பரின் மகள் அனுப்பியது. ஆறாம் வகுப்பு படிக்கும் அவர் தான் போட்ட கோலத்தைப் படமெடுத்து அனுப்பியிருந்தார். இதைப் பார்த்ததும் பழைய நினைவுகளில் மூழ்கிப்போனேன். 


கோலம் போடுவதைப் பார்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். மார்கழியின் அதிகாலைக் குளிரில் இருள் பிரியா நேரத்தில் கறுத்துத் தெரியும் நீர்தெளித்த வாசலில் விரல்களின் இடுக்கிலிருந்து நூலாய் இழையும் அரிசி மாவில் நெய்யப்படும் கோலம்- அதன் அழகே அழகு. சிறு வயதில் அக்கா கோலம் போட்டு முடிப்பதற்காகக் கையில் பரங்கிப் பூக்களுடன் காத்திருப்பேன். அதிகாலை கருக்கலில் போய் பரங்கிப்பூ பறிக்கும்போது பாம்பு இருக்குமென அம்மா அச்சத்தோடு எச்சரிப்பார். 


இன்று, எங்கள் வீடிருந்த இடம் மண்மேடாய்க் கிடக்கிறது. நூறு ஆண்டுகளைத் தொட்டு சிதிலமடைந்து கிடந்த வீடு பாம்புகளின் வசிப்பிடம் ஆகிவிட்டது. அதனால் பிரித்தேன் கட்டுவதற்குப் பண வசதியில்லை. அண்மையில் ஊருக்குப் போயிருந்தபோது கோலம் போட்ட வாசலும் அலங்கோலமாகக் கிடந்தது. ஒரு சாவுக்காகப் போயிருந்தேன். வீட்டை நினைத்துத்தான் அழுகை வந்தது. வீடும் இல்லை, அக்காவும் இல்லை, கோலமும் இல்லை. 






Saturday, January 11, 2014

UNHRC கூட்டமும் இந்திய பொதுத் தேர்தலும்

ஐநா மனித உரிமைக் கவுன்சிலின் 25ஆவது கூட்டம் மார்ச் 7ஆம் தேதி தொடங்கி 28 வரை நடக்கவிருக்கிறது. விவாதத்துக்கென நிரல் படுத்தப்பட்டிருக்கும்  74 பொருள்களில் 23 ஆவதாக இலங்கைப் பிரச்சனை இடம்பெற்றிருக்கிறது. அதைவைத்துப் பார்த்தால் 14 ஆம் தேதிக்குமேல் அது விவாதத்துக்கு வரலாம். இந்தக் கூட்டத்தில் மீண்டும் அமெரிக்கா ஒரு தீர்மானத்தைக் கொண்டுவருவதற்கான தயாரிப்பில் இருக்கிறது. 


திருமதி நவநீதம்பிள்ளை குறிப்பிட்ட காலக் கெடு முடியப்போகிறது. அதையேதான் பிரிட்டிஷ் பிரதமர் கேமரூனும் காமன்வெல்த் மாநாட்டின்போது சொல்லிவிட்டு வந்தார். 

ஆனால் இலங்கை அரசு எந்தவொரு உருப்படியான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. எனவே இம்முறை சர்வதேசப் போர்க்குற்ற விசாரணையை நோக்கியே அமெரிக்கத் தீர்மானம் இருக்கும் எனத் தெரிகிறது. 


ஐநா மனித உரிமைக் கவுன்சில் கூட்டம் நடக்கும் நேரத்தில் இந்தியாவில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்திருக்கும். தமிழ்நாட்டின் தேர்தல் களத்தில் ஈழத்தமிழர் பிரச்சனை முக்கிய இடம் வகிக்கும் என்பதில் சந்தேகமில்லை. 


அமெரிக்காவை முந்திக்கொண்டு ஐநா மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இந்தியாவே சர்வதேச விசாரணைக்கான தீர்மானத்தைக் கொண்டுவந்தால் மட்டுமே தமிழக தேர்தல் களத்தை காங்கிரஸ் சந்திக்க முடியும். இல்லாவிட்டால் அது தமிழ்நாட்டில் தனது கோஷ்டிகளுக்குள்ளாகவே கூட்டணி அமைத்து திருப்திபட்டுக்கொள்ள வேண்டியதுதான்.