Sunday, January 26, 2014

எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணனைப் பார்த்தேன்



இன்று(26.1.2014) பிற்பகல் ராமச்சந்திரா மருத்துவமனைக்குச் சென்று அங்கு சிகிச்சைபெற்றுவரும் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் அவர்களைப் பார்த்தேன். கடந்த வாரம் பேராசிரியர் பாரதி அவர்கள் தி இந்து தமிழ் நாளேட்டில் அவரைப் பற்றி எழுதியிருந்த கட்டுரையைப் படித்துவிட்டுப் பேராசிரியர் கல்யாணி எனக்கு ஃபோன் பண்ணினார். மிகவும் நலிவுற்ற நிலையில் ராஜம் கிருஷ்ணன் மருத்துவமனையில் இருப்பதைப் பற்றி என்னிடம் வருத்தத்தோடு சொன்னார். கல்யாணிக்கு ராஜம் கிருஷ்ணனின் எழுத்தைப் பற்றித் தெரியாது. நீதிபதி சந்துரு அவர்களின் துணைவியார் எழுதிய கட்டுரை என்பதால் ஏற்பட்ட ஆர்வம். 26 ஆம் தேதி திருமணம் ஒன்றுக்காக சென்னை செல்லவேண்டியிருந்ததால் அன்று ராஜம் கிருஷ்ணனைப் பார்ப்பதாகத் திட்டமிட்டுக்கொண்டோம். அதன்படி இன்று அதிகாலை புதுவையிலிருந்து புறப்பட்டு திண்டிவனத்தில் கல்யாணியை அழைத்துக்கொண்டு சென்னை போனேன். திருமணத்தை முடித்துவிட்டு மருத்துவமனைக்குச் செல்லும்போது சுமார் மூன்று மணி ஆகிவிட்டது. அங்கு பணியாற்றும் தம்பி சரவணனை ஃபோன் பண்ணி வரச்சொன்னேன். பொது வார்டில் சேர்க்கப்பட்டிருந்த ராஜம் கிருஷ்ணன் அவர்களைக் கண்டுபிடிப்பது எங்களுக்கு சிரமமாக இருக்கவில்லை. வார்டில் இருந்த நர்ஸ் ஒருவர் எங்களை அவரது படுக்கைக்கு அருகில் அழைத்துச் சென்றார். துணியாலான ஒரு பந்தைப்போல அவர் படுக்கையில் கிடந்தார். முகம் மட்டும் களையோடு இருந்தது. நாங்கள் எங்களை அறிமுகபடுத்திக்கொண்டோம். ஆனால் அதை அவர் புரிந்துகொண்டதுபோலத் தெரியவில்லை. ஒரு வாக்கியத்தை நாங்கள் பேசி முடித்ததும்  நாங்கள் பேசியதன் கடைசி வார்த்தையை மட்டும் அவர் திருப்பிச் சொன்னார். நர்ஸிடம் அவரது உடல்நிலை குறித்து விசாரித்தேன். கால்கள் செயலிழந்துவிட்டன. 

தூக்கிச் சென்றுதான் குளிக்க வைக்கிறார்கள். திட உணவு சாப்பிட முடிகிறது. அந்த மருத்துவமனையில் பணியாற்றும் ஒருவர்தான் அவரைப் பராமரிக்கிறார் என்று சொன்ன நர்ஸ் அவரால் படிக்க முடியும் என்றார். கல்யாணி அவரைப் பற்றிய கட்டுரை வெளியாகியிருந்த தி இந்து நாளேட்டைத் தனது கைப் பையில் தேடினார். பலவிதமான நாளேடுகளும் இருந்தன. அந்த நாளேடு மட்டும் இல்லை. அது கிடைக்காததால் திகசி எழுதிய புத்தகம் ஒன்றை எடுத்து அவரிடம் கொடுத்தார். கண்ணாடியில்லாமல் கண்களுக்கு நெருக்கமாக வைத்து அதை ராஜம் கிருஷ்ணன் படிக்க முயற்சித்தார். அவரால் படிக்க முடிகிறதா என்பதை அவரது முகபாவத்திலிருந்து தெரிந்துகொள்ளமுடியவில்லை. அந்த நூலை அவரிடமே விட்டுவிட்டு நாங்கள் புறப்பட்டோம். 


ராஜம் கிருஷ்ணன் சாகித்ய அகாதமி விருது உட்படப் பல விருதுகளை வாங்கியவர். சில ஆண்டுகளுக்கு முன்னர் அவரது நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவருக்கு மூன்று லட்ச ரூபாய் பரிவுத் தொகைவழங்கப்பட்டது. தனது கணவர் இறந்ததற்குப் பிறகு முதியோர் இல்லத்தில் தங்கியிருந்தார் என அறிந்தேன்.  அவர் எழுதிய ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை தமிழ்ப் புத்தகாலயம் தான் வெளியிட்டிருக்கிறது. அந்த ராஉஅல்டி தொகை மட்டுமேகூட அவர் கௌரவமாக வாழ்வதற்குப் போதுமானதாக இருந்திருக்கும். 


அவரைப் பார்த்தபோது நோயைவிடக் கொடுமையானது முதுமை என்று நினைத்துக்கொண்டேன். அவருக்கு 89 வயதாகிறது. அந்த வயதுடைய பலர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் அது பொது விதி அல்ல. 


பள்ளி ஒன்றை நடத்தவேண்டும் என்பது என் நெடுநாள் கனவு. ஆனால் அண்மைக்காலமாக முதியோர் இல்லம் ஒன்றை நடத்தவேண்டும் என்ற எண்ணம் என்னுள் மேலோங்கிவருகிறது. ராஜம் கிருஷ்ணனைப் பார்த்தபோது நன்றாக நடமாடிக்கொண்டிருக்கும்போதே நாம் இறந்துவிடவேண்டும் என்ற விருப்பம்தான்  ஏற்பட்டது.

No comments:

Post a Comment