” மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைப் பார்க்கும்போது உங்களுக்குள் அது கோபத்தை உண்டாக்குகிறது, அப்போது நீங்கள் சும்மா இருப்பது அவமானம்.நீங்கள் ஏன் எழுதுகிறீர்கள் என சிலர் என்னிடம் கேட்கிறார்கள். நான் அவமானப்படாமல் இருப்பதற்காக எழுதுகிறேன். நான் வேறெதற்காகவும் எழுதவில்லை, அவமானப்படாமல் இருக்கவேண்டும் என்பதற்காக மட்டும்தான் எழுதுகிறேன். ஒவ்வொருமுறை நான் எழுதும்போதும் இனிமேல் இதைச் செய்யக்கூடாது என எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன். ஆனால் எனது உடம்புக்குள் அதைக் கட்டுப்படுத்தி வைக்கவே முடியாது என்று தோன்றுகிறது. நான் எழுதுகிறேன், அது மிகப்பெரிய ஆறுதல்.எழுத்தாளராக இருக்கும் உங்களுக்கு ஒன்று தெரியவருகிறது, அதன்பிறகும் நீங்கள் மௌனமாக இருந்தால் அது செத்துப்போவதற்குச் சமம். பல்வேறு அச்சங்களுக்கு இடையே எழுதாமல் இருப்பதைவிட எழுதுவதையே நான் தெரிவுசெய்கிறேன்.” என்று பேசியிருக்கிறார் அருந்ததி ராய். ( From a speech at the Earth at Risk conference)
அருந்ததி சொல்லியிருக்கும் முறை வேண்டுமானால் புதிதாக இருக்கலாம், கருத்து நமக்குப் பழக்கமானதுதான். அநீதியைக் கண்டு மௌனமாக இருக்கக்கூடாது என்ற கருத்தை நாம் நீண்ட நெடுங்காலமாகக் கேள்விப்பட்டே வருகிறோம். மௌனமாக இருக்கக்கூடாது துணிவோடு பேசவேண்டும் என்பது சரிதான். ஆனால் அது மட்டுமே எதிர்ப்பின் ஒரே வடிவம் அல்ல. ஆதிக்கவாதிகள் நம்மை மௌனமாக்க முயற்சிக்கும்போது இந்த யுக்தி செல்லுபடியாகும். ஆனால் அதே ஆதிக்கவாதிகள் பேச்சை/ எழுத்தை எல்லையின்றி பெருகச் செய்யும்போது இந்த யுக்தி அதிகாரச் செயல்பாட்டுக்கு ஆதரவாக முடிந்துவிடக்கூடும். அங்கே மௌனம் ஒரு ஆயுதமாக இருக்கலாம்.
அதிகாரத்தின் இந்த இருவேறுபட்ட அணுகுமுறையை நாம் புரிந்துகொள்வது அவசியம். சமூக வலைத் தளங்கள் பெருகிவிட்ட இன்றைய சூழலில் ஒன்று தெரியவந்து அதன்பின்பும் மௌனமாக இருக்கிறார்கள் என்பதல்ல பிரச்சனை. ஒன்று தெரியவருவதற்கு முன்பே அதைப்பற்றி எழுத/ பேச ஆரம்பித்து விடுகிறார்கள். அதுதான் இப்போதைய பிரச்சனை. கட்டற்ற இந்த வெளிப்பாடு ஒரு விஷயம் தோன்றும்போதே அதைப் பழகிப்போன ஒன்றாக உணர வைக்கிறது.அதனால் அதைப்பற்றிய எதிர்ப்பை அழித்துவிடுகிறது.ஏனெனில் இப்போது புத்தகங்களை பிம்பங்கள் வெற்றிகொண்டுவிட்டன. இது பிம்பங்களின் யுகம். கல்வியறிவு பெற்றவர்கள், பெறாதவர்கள் என்ற பேதம் மட்டுமல்ல ஆதிக்கவாதிகள் ஒடுக்கப்படுபவர்கள் என்ற பேதமும்கூட இப்போது தெளிவில்லாமல் ஆக்கப்பட்டுவிட்டது.
இதுகுறித்து றெஜி டெப்ரே சொல்வதை நாம் பரிசீலித்துப் பார்க்கவேண்டும்.அவர் இடதுசாரிச் சார்புகொண்ட எதிர்ப்பியங்கள் உருவானதற்கும் அச்சு ஊடகங்களின் இயக்கத்துக்குமான இணைப்பைச் சுட்டிக்காட்டுகிறார். ”சோஷலிஸ இயக்கம் குறிப்பிட்டதொரு வரலாற்றுத் தருணத்தில் தோற்றம் கொண்டது. 1864 இல் லண்டனில் முதலாவது அகிலம் அமைக்கப்பட்டது; 1866 இல் கல்விக்கான கூட்டமைப்பு பாரிஸில் உருவாக்கப்பட்டது; 1867 இல் ரோட்டரி அச்சகம் கண்டுபிடிக்கப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டின் பாட்டாளி வர்க்கம் மூன்று அபிலாஷைகளைக் கொண்டிருந்தது. அறியாமையை ஒழிக்கவேண்டும்; வறுமையை ஒழிக்கவேண்டும், ஒருவருக்கொருவர் உதவி செய்யவேண்டும். இவற்றுள் முதன்மையானது அறியாமைக்கு எதிரான போராட்டம். அது அச்சுப் பிரதிகளை அடிப்படையாகக் கொண்டது. பாட்டாளி வர்க்க இயக்கத்தில் வாய்மொழிப் பண்பாட்டுக் கூறுகளும் பங்களிப்புச் செய்திருக்கின்றன என்றாலும் அது பெரும்பாலும் எழுத்தையே அடிப்படையாகக் கொண்டிருந்தது. பாட்டாளி வர்க்கம் தனது கூட்டு ஞாபகத்தை அடுத்தடுத்த தலைமுறைக்குக் கடத்த அச்சு ஊடகத்தையே பெரிதும் நம்பியிருக்கிறது. அதன் கருத்தியல் பெருமளவில் அச்சில்தான் பொதித்து வைக்கப்பட்டிருக்கிறது (Regis Debray, Socialism and Print, 2007)
கார்ல் மார்க்ஸ் , லெனின், மாஒ சே துங் முதலான பாட்டாளி வர்க்கத்தின் தத்துவ மேதைகள் எழுதியவை இப்போது மக்கள் திரளால் வாசிக்கப்படுபவையாக இல்லை. அவை மிகக் குறைந்த எண்ணிக்கையில் அச்சிடப்பட்டு மிகச் சிலரால் வாசிக்கப்படுபவையாக மாறிவிட்டன. இது பிம்பங்களின் யுகம், இங்கே ஹீரோக்களின் இடத்தை ‘ ஸெலிப்ரிட்டிகள்‘ ஆக்கிரமித்துக்கொண்டுவிட்டார்கள். குடிமகன் என்பவன் வெறும் நுகர்வோனாக்கப்பட்டுவிட்டான்.
அருந்ததி அச்சு ஊடகக் காலத்தின் நினைவில் பேசியிருக்கிறார். இதுவோ காட்சி / இணைய ஊடகக் காலம். இங்கு நூறு படைப்புகள் எழுதப்படலாம்.ஆனால், எழுதப்படும்போதே அவை இணையத்தில் கரைந்து மறைந்து போய்விடும்.
No comments:
Post a Comment