Sunday, December 9, 2012

குரங்கு இருந்தால்தான் இனி தேங்காய் பறிக்க முடியும்?





சில மாதங்களுக்கு முன்னால் நாகை மாவட்டத்தில் இருக்கும் எனது கிராமத்துக்குச் சென்றிருந்தேன். ஊருக்குப் போனால் எங்கள் தோப்பிலிருந்து எப்போதும் இளநீர் கொண்டுவந்து தருவார்கள். அங்கிருந்து புறப்படுவதற்குள் கொஞ்சம் தேங்காய் பறித்துத் தருவார்கள். ஆனால் இப்போதெல்லாம் அப்படியான உபசரிப்பு நடப்பதில்லை. ஊரில் தென்னை மரம் ஏற ஆள் கிடப்பதில்லை.

இன்று  பிபிசி தமிழோசையில் ஒரு செய்தி படித்தேன். தமிழகத்தில் தென்னை மரம் ஏறுபவர்களுக்கு குறைந்தபட்ச கூலி மரத்துக்கு இரண்டு ரூபாய் பத்து காசுகள் அல்லது குறைந்தபட்ச தினக்கூலி 126 ரூபாய் என்று தமிழக அரசின் தொழில் மற்றும் வேலைவாய்ப்புத் துறை பரிந்துரைத்துள்ளதாம்.ஆயிரம் தேங்காய்களை மட்டை உரிக்க 150 ரூபாய் கூலி என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது எனவும் அதில் குறிப்பிட்டிருந்தார்கள். குறைந்தபட்ச ஊதிய சட்டத்தில் புதிய ஊதிய அளவுகளை சேர்க்கும் வகையில் ஒவ்வொரு தொழில்துறைக்கும் மாநில அரசுகள் குறைந்தபட்ச ஊதியத்தை அவ்வப்போது நிர்ணயித்து வரவேண்டும்.அந்த அடிப்படையில் தேங்காய் பறித்தல் தொழிலுக்கு தமிழக அரசு தற்போது நிர்ணயித்துள்ள கூலி அளவுகள் இவையெனத் தெரிகிறது.

இதைப்பற்றி கருத்து தெரிவித்திருந்த ஒருவர் : "அரசுக்கு யதார்த்தம் புரியவில்லை. தொழிலின் யதார்த்தங்களில் இருந்து அரசும் அதிகாரிகளும் எந்த அளவுக்கு விலகியிருக்கிறார்கள் என்பதை இந்த குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம் காட்டுவதாகத் தெரிவித்திருக்கிறார்.மரத்துக்கு 12 ரூபாய்க்குக் குறையாமல் மரம் ஏறிகளுக்குக் கூலி கொடுக்க வேண்டும் என்பதே இன்றைய கள நிலவரம் . அதேபோல மட்டை உரிக்க தேங்காய்க்கு 45 காசுகள் கூலி கொடுக்கப்பட்டுவருகிறது “ என  அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

தென்னை மரம் ஏறுவதற்கு குரங்குகளைப் பழக்கி வைத்துப் பயன்படுத்துவதாக ஒரு செய்தியில் படித்தேன். பெரிய தோப்பு வைத்திருப்பவர்கள் அப்படிச் செய்யலாம். ஐந்து , பத்து மரங்களை வைத்திருப்பவர்கள் என்ன செய்வது ? குடம்பத்தைக் காப்பாற்றுவதற்கே பாடாய்ப் படும் விவசாயிகள் இன்றைய காலத்தில் வீட்டில் ஒரு குரங்கையும் வைத்துக் காப்பாற்றுவதென்றால் அது சாமான்யமாக நடக்கிற காரியமா?

1 comment:

  1. வீட்டுக்கு ஒரு குரங்கு! வீட்டுக்குள்ளே இருக்கும் குரங்குகளை என்ன செய்வது?!
    -அம்பை

    ReplyDelete